நாட்டின் பொருளாதார வீழ்ச்சி வேளையில் ஜனாதிபதி பொறுப்பேற்றுள்ள பெரும் சவால்! | தினகரன் வாரமஞ்சரி

நாட்டின் பொருளாதார வீழ்ச்சி வேளையில் ஜனாதிபதி பொறுப்பேற்றுள்ள பெரும் சவால்!

களனி தொகுதியின்ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளராக1970ஆம் ஆண்டு அரசியல்பயணத்தை ஆரம்பித்தரணில் விக்கிரமசிங்கஇலங்கையின் நிறைவேற்றுஅதிகாரம் கொண்டஎட்டாவது ஜனாதிபதியாகப்பதவியேற்றுள்ளார்.

பியகம தேர்தல் தொகுதி ஆசனத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி முதலாவது தடவையாகப் பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டு சரியாக 45வருடங்களின் பின்னர் (1977ஜுலை 21) அவர் ஜனாதிபதியாகியுள்ளார். அது மாத்திரமன்றி இலங்கையில் அதிக தடவைகள் பிரதமர் பதவியை வகித்தவர் என்ற பெருமையையும் அவருக்குக் காணப்படுகிறது. 

1970ஆம் ஆண்டு களனி தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளராக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்த அவர், பின்னர் பியகம தொகுதியின் அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

1977ஆம் ஆண்டில் முதன் முறையாக பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட அவர், ஜே.ஆர். ஜயவர்தன அரசின் அமைச்சரவையில் இளம் அமைச்சராக இருந்ததுடன் இளைஞர் விவகாரம் மற்றும் தொழிற்துறை அமைச்சராக அப்போது கடமையாற்றினார். 28வயதில் வெளிவிவகார பிரதியமைச்சராக நியமிக்கப்பட்ட அவர், பின்னர் இளைஞர் விவகாரம், கல்வி மற்றும் தொழில், விஞ்ஞான மற்றும் தொழிநுட்பம் போன்ற கபினட் அமைச்சு பதவிகளை வகித்தார்.

1989மார்ச் 06முதல் 1993மே 07வரையான காலப் பகுதியில் பாராளுமன்ற சபை முதல்வராக பணியாற்றிய ரணில் விக்கிரமசிங்க, 1994முதல் 2001வரை மற்றும் 2004முதல் 2015வரை இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக பதவி வகித்துள்ளார்.

அவர் முதன் முறையாக 1993மே மதம் 07ஆம் திகதி பிரதமராக தெரிவு செய்யப்பட்டதுடன் 1994ஓகஸ்ட் 19வரை அந்தப் பதவியை வகித்தார். அவர் இலங்கையில் அதிக தடவை பிரதமராக பணியாற்றியவராக (5தடவை) வரலாற்றில் பதிவாகியுள்ளார்.

இரண்டாவது முறையாக 2001டிசம்பர் 09ஆம் திகதி முதல் 2004ஏப்ரல் 06ஆம் திகதி வரையும், மூன்றாவது முறையாக 2015ஜனவரி 09முதல் 2015ஓகஸ்ட் 17வரையும், நான்காவது முறையாக 2015ஓகஸ்ட் 17முதல் 2018ஒக்டோபர் 26வரையும், ஐந்தாவது முறையாக 2018டிசம்பர் 16முதல் 2019நவம்பர் 21வரையும் பிரதமராக பதவி வகித்துள்ளார்.

கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரான ரணில் விக்கிரமசிங்க பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்டு சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதுடன், இலங்கை பல்கலைக்கழகமொன்றில் பட்டம் பெற்று இந்நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்ட ஒரே ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அவர் 1980முதல் 88வரை கல்வி அமைச்சராக பணியாற்றினார். தொலைதூர ஆங்கில ஆசிரியர் பயிற்சி எனப்படும் டெலின் ஆசிரியர் பயிற்சி, பூரண கால தொலைதூர சேவை ஆசிரியர் பயிற்சி, பாடசாலைகளுக்கான பகலுணவு, மீப்பே அழகியல் நிறுவனத்தை ஆரம்பித்தல், முறைசாரா கல்வியை விரிவாக்குதல், ஆசிரியர் பற்றாக்குறைக்கு தீர்வாக மாவட்ட ஆசிரியர் சேவையை ஆரம்பித்தல், ஆசிரியர் சேவையை 60வயது வரை நீடித்தல், பிக்குகளுக்கான ஆசிரியர் பயிற்சி, பாடசாலை அபிவிருத்தி சங்கங்களை ஆரம்பித்தல், பாடசாலை மேற்பார்வை அலகுகளை உருவாக்குதல், பாடசாலை திட்டமிடல் அலகு, இலவச பாடப்புத்தக விநியோகம், வலயக்கல்வி அலுவலகங்களை நிறுவுதல், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் மாணவர் ஆலோசனை சேவையை ஆரம்பித்தல் என்பவற்றை அவரது கல்வி மறுமலர்ச்சிகளாக குறிப்பிடமுடியும். 

அதற்கு மேலதிகமாக ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்குவதற்கு கல்விக் கல்லூரி முறைமையை ஆரம்பித்த ரணில் விக்கிரமசிங்க, 1988இல் 09தேசிய கல்விக் கல்லூரிகளை ஆரம்பித்தும் மற்றும் கல்வி ஆய்வுக்காக தேசிய கல்வி நிறுவகத்தை நிறுவியும் கல்வி அமைச்சராக கல்வியில் புதிய மறுமலர்ச்சிக்கு பங்களிப்பு செய்தார்.

ஆழ்ந்த இலக்கிய ஆர்வம் கொண்ட ரணில் விக்கிரமசிங்க வரலாறு, தொல்பொருள், சட்டம், பொருளியல், பௌத்தம் மற்றும் இலக்கியம், உலகளாவிய இலக்கியம் மற்றும் சுயசரிதையில் என்பன தொடர்பில் ஆழ்ந்த அறிவு கொண்டவராவார்.

பல்வேறு மதங்கள் மற்றும் தத்துவங்கள் தொடர்பில் அதிக ஆர்வம் கொண்ட அவர் திரிபிடகம், தம்மபத, பௌத்த இலக்கியம் மற்றும் அரசியல் கோட்பாடு தொடர்பில் 'அரசியல் மற்றும் தர்மம்' எனும் புத்தகத்தை எழுதியுள்ளார்.

இதுபோன்ற திறமைகளைக் கொண்ட நிறைந்த அனுபவசாலி ஒருவர் நாட்டின் ஜனாதிபதியாகப் பதவியேற்றிருப்பதுடன், நாடு முகங்கொடுத்திருக்கும் இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீட்டெடுக்கும் பாரிய பொறுப்பு அவர் முன்னிலையில் காணப்படுகிறது.

இதற்கு ஏதுவான அமைச்சரவையையும் அவர் அமைத்துக் கொண்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாடசாலை நண்பரும், நீண்டகால அரசியல் நண்பருமான தினேஷ் குணவர்த்தன நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவையும் வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளது.

குறுகிய எண்ணிக்கையிலான இந்த அமைச்சரவை நாடு எதிர்கொண்டுள்ள சவால்களிலிருந்து மீண்டெழுவதற்கு முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்வதற்கான கூட்டுப் பொறுப்பைக் கொண்டதாக அமைந்துள்ளது.

குறிப்பாக எரிபொருள் மற்றும் எரிவாயுத் தட்டுப்பாட்டை நீக்குவது, அந்நிய  செலாவணிக் கையிருப்பை அதிகரிப்பது, விலைவாசி அதிகரிப்பைக் கட்டுப்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை ஓரளவுக்கு சுமுகநிலைக்குக் கொண்டுவருவது போன்ற பல்வேறு சவால்கள் இந்த அரசாங்கத்தின் முன்னிலையில் காணப்படுகின்றன.

மறுபக்கத்தில் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்கு எதிர்க்கட்சியில் உள்ளவர்களும் தமது அரசியல் வேறுபாடுகளை மறந்து கூட்டாக செயற்பட வேண்டிய தேவை காணப்படுகிறது.

பி.ஹர்ஷன்

Comments