ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க: மக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட அப்பழுக்கற்ற ஜனநாயகவாதி; நிர்வாகி | தினகரன் வாரமஞ்சரி

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க: மக்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட அப்பழுக்கற்ற ஜனநாயகவாதி; நிர்வாகி

சரியோ பிழையோ, தீர்மானம் எடுக்கப்படவேண்டிய தருணத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டேயாக வேண்டும். அவ்வாறு தீர்மானத்துக்கு வராதவன் ஏமாளியாகவே இருப்பான் என்பார்கள். கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் நாம் உரிய சமயத்தில் உறுதியான தீர்மானம் எடுக்கத் தவறியதால் எதை எல்லாம் கோட்டை விட்டிருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளலாம். அல்லும் பகலும் தெருக் கல்லாய் இருந்துவிட்டு அதிர்ஷ்டம் இல்லை என அலட்டிக் கொண்டான் என்ற பழைய எம்.ஜி.ஆர் படப்பாடலை இங்கே நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும். வீழ்ந்து கிடக்கும் இந் நாடும் மக்களின் பொதுவான மனப்பான்மையும் முற்றிலுமாக திருந்தா விட்டால், புது இரத்தம் பாய்ச்சப்படவிட்டால் மீண்டெழுவது மிகக் கஷ்டமாகவே இருக்கப்போகிறது.

இந்த வகையில் புதிய ஜனாதிபதியாகப் பதவியேற்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து கற்றுக்கொள்வதற்கு பல விஷயங்கள் உள்ளன.

ரணில் விக்கிரமசிங்க தேர்ந்த அரசியல்வாதி. பொருளாதாரம் தெரிந்தவர். அரசு நிர்வாகம் அவருக்கு அத்துப்படி. வாத விவாதங்களில் வெகு சூரர். அமைச்சராகவும் ஆறு தடவைகள் பிரதமராகவும் பதவி வகித்தவர். மேற்குலகு என இலங்கையரால் அறியப்படும் முன்னேறிய நாடுகளுடன் நெருக்கமான உறவு கொண்டிருக்கும் ஒரு முதலாளித்துவவாதி. தனக்கு அரசியலில் ஏற்படும் தொடர் தோல்விகளால் துவண்டு போகாமல் கொண்ட கொள்கையில் பற்று மாறாதவர். கட்சியில் இருந்து பலர் விலகிச்சென்ற போதும் துவண்டு விடாதவர். கடந்த தேர்தலில் அவரது ஐ.தே.க. கட்சி ஒரு இடம்கூட வெல்ல முடியாமல் காணாமல் போனதோடு அவரும் தன் கொழும்பு தொகுதியில் தோற்றுப் போனார்.

எனினும் தனது கட்சிக்குக் கிடைத்த ஒரே ஒரு தேசிய பட்டியல் வாய்ப்பை பயன்படுத்தி பாராளுமன்றத்துக்கு வந்த அவரை பின்கதவால் வந்தவர் என்ற பரிகாசம் தொடர்ந்தாலும் அவர் கவலைப்படவில்லை. தனி ஆளாக நின்று வீழ்ந்த கட்சியை நிமிர்த்தி பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டிய அவசியம் அவருக்கு இருந்தது. அவரை நம்பியிருந்தவர்கள் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதற்காகவே காத்திருந்தார்கள்.

'த பிரின்ஸ்' என்ற அரசியல் நூலை எழுதிய மாக்கியவெலியாக இருக்கட்டும்; அர்த்த சாஸ்திரத்தை படைத்த சாணக்கியனாக இருக்கட்டும், இருவருமே அரசியல் என்பது சூது விளையாட்டைப் போன்றது. தருணங்களைப் பயன்படுத்துபவனே வெற்றி பெறுகிறான் என்றெழுதியுள்ளார்கள். மகாபாரதமும் அதையே சொல்கிறது. இது, அரசியல் வரலாற்றில் சாகாவரம் பெற்ற ஒரு உத்தி. அதை புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகக் கச்சிதமாக கையாண்டிருக்கிறார். அவர் தனி ஒரு மனிதராக பாராளுமன்றம் வந்தார். கோட்டாபய அரசாங்கம் மக்கள் எழுச்சியால் அதிர்ந்து நின்ற பொழுதில் பிரதமரான மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக நேர்ந்தது. அடுத்த பிரதமராக யாரை நியமிக்கலாம் என்ற கேள்வி எழுந்தபோது ராஜபக்ஷமாருக்கு மிதவாதியாகவும் பாதுகாப்பானவராகவும் தெரிந்தவர் ரணில் விக்கிரமசிங்கவே. ஆனால் அச் சமயத்தில் பாராளுமன்றத்தில் தனியாளான அவர் பிரதமர் பதவியை ஏற்பது என்பது கடும் சவாலான விஷயம். ஆனால் அவரது அரசியல் அனுபவமும் துணிச்சலும், சந்தர்ப்பத்தை கை நழுவ விடாமல் பயன்படுத்த வேண்டும் என்ற சாணக்கியமும் அப் பதவியை ஏற்கத் தூண்டியிருக்க வேண்டும்.

அவர் பதவிக்கு வந்த பின்னர் நாளாந்தம் ஏறு முகமாக இருந்த டொலர் ஸ்திர நிலையை அடைந்தது. பங்குச் சந்தை ஏறுமுகம் காட்டியது. சர்வதேச நாணய நிதியம் ஆரம்ப பேச்சுவார்த்தைகளை கொழும்பில் நடத்தியது. அமெரிக்க ராஜாங்க அமைச்சு அதிகாரிகள் கொழும்பு வந்து சென்றனர். காலிமுகத்திடல் போராட்டம் வலுவிழந்தது.

தற்போது பெட்றோல், டீசல், எரிவாயு வரிசைகள் பெருமளவில் இல்லை. உலக வங்கி உதவியுடன் எரிவாயு கப்பல்கள் வந்து கொண்டிருக்கின்றன. நாட்டின் பண வீக்கம் அதிகரித்துச் செல்லும் அதேசமயம் பொருளாதார வீழ்ச்சியில் எந்த நம்பிக்கையான சமிக்ஞையும் தென்படவில்லை என்பது உண்மையானாலும் ஆறு மாத காலத்துக்குள் நம்பிக்கை ஏற்படுத்தும் மாற்றங்கள் வரலாம் என்பது மத்திய வங்கி ஆளுநரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த நிலையிலேயே, பாராளுமன்றத்தில் எவருமே எதிர்பாராவகையில் 134வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாகவும் தெரிவாகியுள்ளார் இந்த அரசியல் வித்தகர். மக்களால் நிராகரிக்கப்பட்டவர் எவ்வாறு ஜனாதிபதியாகலாம் என்ற கேள்வி இருந்தாலும், சந்தர்ப்பங்களை மிகச் சரியாக பயன்படுத்துபவனே சரியான அரசியல்ஞானி என்பதற்கு அமைய ஸீரோவில் இருந்து ஹீரோவான ரணில் விக்கிரமசிங்க பாராட்டுக்குரியவரே.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலில் வாய்ப்புகளைத் தவறவிட விரும்பாதவர் என்பது உண்மையானாலும் அவரது செல்வாக்கு சிங்கள மக்கள் மத்தியில் ஏற்றத் தாழ்வுகளைக் கொண்டது. அவர் வெள்ளைக்காரரைப் போன்றவர்; மேட்டுக்குடி மனிதர், சோஷலிசத்துக்கு எதிரானவர்; கோட் சூட் காரர்; புரியும்படி பேசத் தெரியாதவர்; யதார்த்தம் விளங்காதவர் எனப் பல்வகையான விமர்சனங்களை சிங்கள மக்கள் முன்வைக்கிறார்கள். இவை அனைத்தும் மக்களிடமிருந்து அவரை கொஞ்சம் அந்நியப்படுத்தத்தான் செய்கின்றன.

பிரச்சினை என்னவென்றால் தொடர்ச்சியாக மக்கள் அரசியல்வாதிகளினால் ஏமாற்றப்பட்டு வந்துள்ளதோடு இலங்கை அரசியல்வாதி என்பவர் இப்படித்தான் இருக்க வேண்டும்; இப்படித்தான் பேசிப்பழக வேண்டும் என்றொரு மாயை இலங்கை தேசிய அரசியலில் வெற்றிகரமாக கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதுதான்.

 தனிச்சிங்கள சட்டம் கொண்டுவரப்பட்டதில் தவறு கிடையாது. ஆனால் ஆங்கிலத்தையும், விரும்புவோர் தமிழையும் கற்கலாம் என்றிருந்த ஒரு சூழலை இச்சட்டம் முற்றிலுமாக குலைத்துப் போட்டு விட்டது. பெரும்பாலான சிங்களவருக்கு இன்றைக்கும் ஆங்கிலம் வராது. சமாளிக்கும் அளவில் தான் அவர்களின் ஆங்கில அறிவு உள்ளது.

மொழி என்பது ஒரு அறிவு. அதிக மொழிகளை கற்று வைத்திருப்பது ஒரு செல்வம். அது வருமானத்தையும் தேடித்தரும் என்ற சிந்தனைக்கான வாய்ப்புக்கே இச்சட்டம் இடம் தரவில்லை. அச்சட்டம் அமுலுக்கு வந்து ஐம்பது வருடங்கள் கழிந்த பின்னரேயே ஆங்கிலத்தின் அவசியத்தை சிங்கள இளைய தலைமுறை புரிந்து கொள்ளத் தொடங்கியிருக்கிறது. எனினும் சிறுபான்மையினர் மத்தியில் காணப்படும் அளவுக்குக் கூட அவர்கள் மத்தியில் ஆங்கிலத்தில் ஆர்வம் இன்னும் முழுமையாக ஏற்படவில்லை. சிங்களம் தெரிந்திருந்தால் இலங்கையில் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும் என்றிருக்கையில் ஏன் ஆங்கிலம் படிக்க வேண்டும்? எதற்கு தமிழ் அவசியம் என்ற மனவோட்டம் அச் சமூகத்தில் இன்றைக்கும் உள்ளது.

அரசியல்வாதி என்றால் அவர் தேசிய உடை அணிந்தவராக இருக்க வேண்டும். சிங்களத்தில் நன்றாக பேசத் தெரிந்திருக்க வேண்டும். உணவுகளை குறைந்த விலைக்கு அல்லது இலவசமாக வழங்க முன்வர வேண்டும். தமிழர்களைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இருக்கக் கூடாது. எவை சாத்தியப்படாதோ அவற்றை சாத்தியப்படுத்துவேன் எனப் புளுகத் தெரிந்திருக்க வேண்டும்.

இவை எல்லாம் ஒருவருக்கு அத்துப்படி என்றால் அவரை 'எங்கள் அரசியல்வாதி'யாக ஏற்றுக் கொள்ளும் தன்மை மக்களிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் மாற்றம் வேண்டும் என்று சொல்கிறார்களே, அந்த மாற்றங்களில், அரசியல்வாதி தொடர்பான மக்களின் பொது எண்ணத்தில் மாற்றம் முழுமையாக ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதும் உள்ளடக்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பாக மக்கள் கருத்துகள் பெரும்பாலும் மாய உலகில் நின்று உருவாக்கப்பட்டவையே. ஏன் கோட் சூட்? வெள்ளைக்காரன் நெஷனல் உடுத்துகிறானா? என்றெல்லாம் விதண்டா வாதம் எழுப்பப்படுகிறது. ஐரோப்பியரின் உடைகள் அவர்களின் கால நிலையோடு சம்பந்தப்பட்டவை. மேற்கத்திய பாணி, ஆடை அணிதல் என்பது போர்த்துக்கேயர் காலத்தில் இருந்தே ஆரம்பித்த ஒன்று, அப்படி விமர்சிப்பவர்களும் 'ஆரிய சூட்' அணிந்து இருக்கிறார்கள்? இலங்கையில் ஆண்களில் 95சதவீதமனோர் ஷர்ட், டிரவுசர் அணிபவர்கள்தான். உயர் பதவி வகிக்கும் அனைவருமே கோட்சூட் அணிபவர்கள்தான், அது இலங்கையில் ஒரு கௌரவமான உடையாகவும் 'நெஷனல் டிரஸ்' என்பது அதிகம் படிக்காத கிராமவாசிகள், நாட்டு வைத்தியர் போன்றோரின் உடையாகவும் சிங்கள மக்களால் பார்க்கப்படுகிறது என்பதே உண்மை.

ஒரு அரசியல்வாதி நடையுடை பாவனைகள் மூலம் தீர்மானிக்கப்படுவது மிக மோசமான நடைமுறை. எந்தவொரு மனிதரையும் அவரது செயல்கள், சிந்தனைகள், செயற்பாட்டுத்திறன் என்பனவற்றை வைத்தே தீர்மானிக்க வேண்டுமே தவிர அவரது தோற்றப் பொலிவை வைத்து அல்ல. தமிழகத்தில் புரட்சிகமான மாற்றங்களையும் சிந்தனைகளையும் கொண்டுவந்த காமராஜர் போதிய படிப்பறிவற்றவர். தமிழகத்தில் கல்விப் புரட்சியை அவர்தான் கொண்டு வந்தார். தமிழ் மொழிக்கு ஏற்றம் தந்த சி.என். அண்ணாதுரை படித்தவர்தான். ஆனால் மிகமிக எளிமையானவர்.

அண்ணாவின் கோட்பாடுகள் தான் இன்றைக்கும் தமிழகத்தின் அடிநாதம். தந்தைபெரியார் கல்லாதவர். ஆனால் தமிழர் மத்தியில் பெரிய அளவில் சிந்தனை மாற்றத்தை தோற்றுவித்தவர்.

ரணில் விக்கிரமசிங்க அடிப்படையில் ஒரு சட்டத்தரணி. இலங்கை மற்றும் உலக அரசியலை துறைபோகக் கற்றவர். அறிவாளி. ஒரு நாட்டை நடத்துவதற்கான எல்லா தகுதிகளும் கொண்டவர். ஆனால் ஏற்கனவே மக்களுக்கு அணிவிக்கப்பட்டிருக்கும் மாய மூக்குக் கண்ணாடி வழியாகவும் ஏற்படுத்தப்பட்டிருக்கும் பிம்பங்கள் வழியாகவும் பார்த்துப் பார்த்தே பழகிப்போன வாக்காளர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க என்ற அரசியல்வாதி தங்களுக்கு ஏற்புடையவராக இருக்க மாட்டாரோ என்ற எண்ணத்தையே தோற்றுவித்து வந்துள்ளது.

முன்னர் சர்.ஜோன் கொத்தலாவலையை மக்கள் அப்படித்தான் பார்த்தார்கள். டட்லி சேனநாயக்க ஹார்த்தாலுக்கு முகம் கொடுக்க முடியாமல் 1953இல் பதவி துறந்ததும் பிரதமர் பதவிக்கு வந்தவரே ஜோன் கொத்தலாவல. வெளிப்படையாகக் கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடிய திறமையான நிர்வாகி. எனினும் 1956பொதுத் தேர்தலில் அவரது ஐ.தே.கட்சி தோல்வியடைந்தது. ஏனெனில் பண்டாரநாயக்க முன்வைத்த சிங்களம் மட்டும் சட்டம் மற்றும் சிங்கள பௌத்தவாதம் சாதாரண மக்களை ஈர்த்தது. அன்றைய மக்களுக்கு பொருளாதார அபிவிருத்தி பற்றிப் பேசினால் புரியாது. சிங்களம், தமிழரின் உரிமை கோரிக்கை, பௌத்தம் என்றால் தெளிவாகப் புரியும். என்பதை புதுக் கட்சியை ஆரம்பித்திருந்த எஸ்.டபிள்யூ. ஆர்.டீ. பண்டாரநாயக்க தெரிந்து வைத்திருந்தார். 1956தேர்தலில் பண்டாரநாயக்க வெற்றிபெற்றார். அவரது வருகையின் பின்னரேயே தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீவிரமடையத் தொடங்கி இனக்கலவரமாகவும் வெடித்தது.

இங்கே இன்னொரு விஷயத்தையும் குறிப்பிட வேண்டும். கோட் சூட் அணிந்த வௌ்ளைத்துரை என சாதாரண மக்களால் அறியப்பட்ட ஜோன் கொத்தலாவல, இந்த இலங்கை அரசியல் நமக்கு சரிபட்டு வராது என்று லண்டனில் தங்கி விட்டார்.

தன் இறுதிக் காலத்தில், 1977ஜே.ஆர். ஜயவர்தன அரசின் போது அவர் கொழும்பு திரும்பியது. சக்கர நாற்காலியில். தன் மரணத்தின் பின்னர் இரத்மலானையில் அமைந்துள்ள 48ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட தனது கந்தவல தோட்டத்தையும் தன் வீட்டையும் இராணுவ பயிற்சி நிலையம் ஒன்றை உருவாக்கு முகமாக அரசிடம் நன்கொடையாக வழங்கினார் கொத்தலாவல. 1980ம் ஆண்டு கொத்தலாவல இராணுவ கல்விக் கல்லூரி ஆரம்பமானது. இன்று ஜெனரல் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகமென அது அழைக்கப்படுகிறது.

மக்களால் வெள்ளைத்துரை என ஏளனமாக அழைக்கப்பட்ட அவர்தான் தன் சொத்துகளை மக்களுக்காக எழுதிவைத்த ஒரே அரசியல்வாதி!

கடந்த ஒன்பதாம் திகதி கொழும்பில் கலவரநிலை ஏற்பட்ட அன்றைய இரவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வீடு கயவர்களினால் எரிக்கப்பட்டபோது கொத்தலாவலையே நினைவுக்கு வந்தார். ஏனெனில் ரணில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தனக்கு சொந்தமான ஒரே வீடு இது மட்டுமே என்று கூறியிருந்தார். தனி மனிதர்களுக்கு சொந்தமான - அவர்கள் வசிக்கும் வீடுகளை எரிப்பது எவ்வளவு ஈனத்தனமான செயல். ரணில் தம்பதியினர் தமக்குப் பின்னர் அந்த வீடு றோயல் கல்லூரிக்கு சொந்தமாக வேண்டும் என்றும் அவரது வீட்டு நூலகம் பேராதனை பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் ஏற்பாடு செய்து வைத்திருந்தனர். அதாவது மக்களுக்கு சொந்தமாக்கப்பட்ட வீட்டையும் நூல்களையும் தான் ஆர்ப்பாட்டக்காரர்கள் எரித்திருக்கிறார்கள்!

ரணில் விக்கிரமசிங்க எளிமையான மொழியில் பேசக் கூடியவரானாலும் கண்டிப்பான ஒரு ஜனநாயகத் தலைவர். எப்போதுமே அரசியலமைப்பு, பாராளுமன்ற ஜனநாயகம் பற்றியே பேசக் கூடியவர். நல்ல நிர்வாகி எனப் பெயரெடுத்தவர். மதத்தையும் மொழியையும் வைத்து அரசியல் செய்பவர் அல்ல என்பது குறிப்பிடத்தக்க முக்கியமான விஷயம்.

ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அவர் 2024வரை பதவியில் நீடிக்க முடியும். அதற்குள் அவர் தன்னை நிரூபிக்க வேண்டும். நிரூபிப்பார் என்ற நம்பிக்கை இப்போது சிங்கள மக்கள் மத்தியில் உள்ளது. அவரை ஏற்றுக் கொள்ளாதவர்கள்கூட, இந்தச் சமயத்தில் இவர்தான் பொருத்தமானவர் என கிராமங்களில் பேசுகிறார்கள். ஏனெனில் நாட்டின் பொருளாதார நிலை அவ்வளவுக்கு மோசம்!

அவர் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வீழ்ந்து கிடக்கும் ஐக்கிய தேசிய கட்சியை மீளவும் கட்டியெழுப்பி அடுத்து வரக்கூடிய பொதுத்தேர்தலில் நம்பிக்கையுடன் போட்டியிடச் செய்ய வேண்டும். அதற்கு, இரண்டு வருட காலத்துக்குள் நாட்டின் பொருளாதாரத்தை நம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் தூக்கி நிறுத்த வேண்டும். சவால்களிலேயே மிகப் பெரிய சவாலை - Acid Test ஐ புதிய ஜனாதிபதி எதிர்கொண்டிருக்கிறார்.

இக்காலப்பகுதியைத் தமிழ்ச் சமூகம் எப்படி பயன்படுத்திக் கொள்ளப்போகிறது என்பது முக்கியம்.

புதிய ஜனாதிபதி தமிழர்களால் இனவாதியாகவோ மதவாதியாகவோ பார்க்கப்பட்டவர் அல்ல. கடந்த இரண்டரை ஆண்டுகளாக தமிழர்களின் எந்தவொரு கோரிக்கையும் அரசினால் கவனத்தில் கொள்ளப்படவில்லை. தமிழ்த் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்த பழைய நிர்வாகம் முன்வரவும் இல்லை.

இதோ இப்போது சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. ஜனாதிபதி ரணில் எப்போதுமே பேச்சுவார்த்தைக்கு தயாராகவே இருக்கக் கூடியவர். பல வந்தமான சிங்களக் குடியேற்றம், தெல்லியல், வன பாதுகாப்பு என்ற பெயர்களில் நடைபெற்றுவரும் ஊடுருவல்கள் என்பன தொடர்பாக அவருடன் பேச முடியும். இனப் பிரச்சினை தொடர்பான நம்பிக்கையூட்டும் பேச்சுகளை மறுபடியும் ஆரம்பிக்கலாம்.

இது ஒரு நல்ல சந்தர்ப்பம். வட புலத்து அரசியல் கட்சிகள் ஏன் இப் புதிய அரசியல் அமைச்சர் பதவிகளை ஏற்கக்கூடாது? எதிர்ப்பு அரசியலை இரண்டு வருட காலத்துக்கு ஒத்தி வைக்கலாம் அல்லவா? கோட்டா கோ கம ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்த் தரப்பின் ஆதரவு போதியதாகவும் வெளிப்படையாகவும் இருக்கவில்லை. அதையே ரணில் விக்கிரமசிங்கவின் புதிய ஆட்சி விடயத்திலும் கடைப்பிடித்து பாராமுகமாக இருந்து விடுவது புத்திசாலித்தனமாகாது.

அருள் சத்தியநாதன் 

 

Comments