அரசியல் சாணக்கியம் புரிந்து கொள்ள திராணியற்ற ‘தமிழின ஏகபிரதிநிதிகள்!’ | தினகரன் வாரமஞ்சரி

அரசியல் சாணக்கியம் புரிந்து கொள்ள திராணியற்ற ‘தமிழின ஏகபிரதிநிதிகள்!’

இலங்கை அரசியலில் சிறுபான்மையின அரசியல் கட்சிகளின்வகிபாகம் தொன்றுதொட்டு தீர்மானம் மிக்க சக்தியாகக்காணப்பட்டு வருகின்றது. பிரித்தானிய காலனித்துவத்திலிருந்து இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னரான அரசியல்நகர்வுகளில் தமிழ், முஸ்லிம் கட்சிகள் செயற்பாட்டு அரசியிலில்தீவிரமாக செயற்பட்டு வந்துள்ளன என்பதை மறக்க முடியாது.

எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க பிரதமராக இருந்த காலத்தில் தந்தை செல்வா போன்ற சிறுபான்மை அரசியல் தலைவர்கள் அப்போதைய அரசுக்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொண்டிருந்தமை, அதன் பின்னரான காலப் பகுதியில் தமிழ்க் கட்சி பிரதான எதிர்க்கட்சியாகச் செயற்பட்டிருந்தமை போன்ற பல்வேறு சம்பவங்களை இதற்கு உதாரணமாகக் கூற முடியும்.

சுதந்திர இலங்கையில் அண்மித்த காலம் வரை ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு பிரதான கட்சிகளுமே மத்தியில் ஆட்சியமைக்கும் சக்திகளாகக் காணப்பட்டன. கடந்த ஒரு தசாப்தத்துக்கு உட்பட்ட காலத்திலேயே சுதந்திரக் கட்சியின் அடியொற்றி வந்தவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பொதுஜன பெரமுன கட்சி ஆட்சியமைக்கும் அரசியல் சக்தியாக மாறியிருந்தது.

பிரதான தேசியக் கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வரும் போது குறிப்பாக தமிழ் அரசியல் கட்சிகள் அப்போதிருக்கும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு தமது ஆதரவு யாருக்கு என்பதைத் தீர்மானித்து வந்துள்ளன. ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் என வரும் போது எந்தத் தரப்பினருக்கு ஆதரவு வழங்குவது என்பதை தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தாமாகவே தீர்மானித்துக் கொள்வர்.

ஜனாதிபதித் தேர்தல்களை எடுத்து நோக்குகையில், 2005ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிக்க விடாது எல்.ரி.ரி.ஈயினர் தடுத்தமையால் தமிழ் அரசியல்வாதிகளால் இது தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியாது போனது.

எனினும், அதன் பின்னர் 2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவுக்கும், 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவுக்கும், 2020ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறங்கிய சஜித் பிரேமதாசவுக்கும் ஆதரவு வழங்க அநேகமான சிறுபான்மைக் கட்சிகள் தீர்மானம் எடுத்திருந்தன.

குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில் பாராளுமன்றத்தில் அதிக ஆசனங்களைக் கொண்டுள்ள அரசியல் கூட்டணியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதில் அடங்குகிறது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அப்போதைய அரசாங்கத்தை ஆதரிப்பதற்கு முடிவெடுத்திருந்தது. நல்லாட்சி அரசாங்கம் பல்வேறு இக்கட்டான சவால்களுக்கு முகங்கொடுத்திருந்த போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பானது அரசுக்குக் கைகொடுத்திருந்தது.

மைத்திரிபால சிறிசேன பிரதமர் பதவியில் மாற்றத்தைக் கொண்டு வந்த வேளையில் பாராளுமன்றத்தில் குழப்பம் ஏற்பட்டபோது, அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்கும், அதன் பின்னர் நல்லாட்சி அரசாங்கத்தினால் கொண்டுவரப்பட்ட வரவுசெலவுத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கும் தமிழ்க் கூட்டமைப்பினர் நிபந்தனையற்ற ஆதரவுகளை வழங்கியிருந்தனர்.

இவ்வாறு ஆதரவு வழங்கும் போது அரசியல் கைதிகளின் விடுதலை, அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களை நிபந்தனையாக முன்வைத்திருந்தாலும் அவற்றை நிறைவேற்றியிருப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்பட்டன. இருந்தாலும் தமிழ் மக்கள் நலன்களைப் பொறுத்தவரை மிகவும் குறைந்தளவு பலன்களையே அக்காலத்தில் பெற்றுக் கொள்ளக் கூடியதாகவிருந்தது.

இவ்வாறான சூழ்நிலையில் கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமாவைத் தொடர்ந்து வெற்றிடமான ஜனாதிபதி பதவிக்கு பாராளுமன்றத்தின் ஊடாக புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்றமையை நாம் அறிவோம்.

இதில் பதில் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் முன்மொழியப்பட்ட டலஸ் அழகப்பெரும, ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக ஆகியோர் போட்டியிட்டனர்.

போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரும் தமக்கு ஆதரவு கோரும் முயற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். இது தொடர்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட பெரும்பாலான சிறுபான்மைக் கட்சிகள் எதிர்க்கட்சித் தலைவரினால் முன்மொழியப்பட்ட பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்திருந்தன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷவை நிராகரித்திருந்த சிறுபான்மைக் கட்சிகளே இப்போது மீண்டுமொரு பொதுஜன பெரமுன வேட்பாளரை ஆதரிக்கும் முடிவை எடுத்திருந்தன.

இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை டலஸ் அழகப்பெரும மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் நேரடியாகச் சென்று சந்தித்து ஆதரவு கோரியிருந்தனர்.

இது விடயத்தில் தமிழ்க் கூட்டமைப்பினருக்கிடையில் இருவேறு நிலைப்பாடுகள் காணப்பட்ட போதும், ஒரு சிலருடைய விருப்பிற்கு அமைய டலஸ் அழகப்பெருமவை ஆதரிக்கும் நிலைப்பாடு எடுக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இவ்வாறு ஆதரவு வழங்கும் தீர்மானம் எடுக்கப்பட்ட போதும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் டலஸ் அழகப்பெரரும தரப்பிடமிருந்து கூட்டமைப்பினர் எவ்வித உறுதிமொழிகளையும் பெற்றுக் கொண்டிருக்கவில்லையென்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டிருந்தது.

அதேநேரம், கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தமிழ்க் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர் ஒருவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டு வந்திருந்த போதும் தற்போது அந்த அரசியல்வாதி இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் முரண்பட்டுக் கொண்டிருப்பதையும் காணக் கூடியதாகவுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒரு சில உறுப்பினர்கள் ரணில் விக்கிரமசிங்கவுடன் பாராளுமன்றத்திலும் முரண்பட்டுக் கொண்டுள்ளனர். இவ்வாறானவர்களின் விருப்புக்களே தமிழ்க் கூட்டமைப்பு டலஸ் அழகப்பெருமவை ஆதரிக்கும் முடிவை எடுப்பதற்குத் தள்ளியிருக்கலாம் என்ற பார்வையும் காணப்படுகிறது.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக மக்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்து செயற்படும் பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குக் காணப்படுகிறது. தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பால் தங்களது சமூகம் தொடர்பிலான கூட்டுப்பொறுப்பு அவர்களுக்கு உண்டு என்பதையும் மக்களின் பிரதிநிதிகளாகிய அவர்கள் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும்.

மறுபக்கத்தில் ஜனாதிபதிப் பதவிக்குப் போட்டியிட்டவர்களுக்கு ஆதரவு வழங்கும் விடயத்தில் ஒரு சில வெளிநாட்டு அரசுகளின் அழுத்தங்கள் இருந்தததாகக் கூறப்பட்டாலும், அது எந்தளவுக்கு உண்மை என்பது உறுதியாகத் தெரியவில்லை.

இவ்வாறான பின்னணியில் பாராளுமன்றத்தில் நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க அதிகூடிய வாக்குகளைப் பெற்று நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்களை ஆதரிக்கும் விடயத்தில் தமிழ்க் கூட்டமைப்பின் தீர்மானம் வேறாக இருந்த போதும், வடக்கிலிருந்து தெரிவு செய்யப்பட்ட இரு கட்சிகளின் தலைவர்கள் கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்தியிருப்பதாகவே தெரிகிறது.

எனவே, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொள்பவர்கள் தமது சொந்த விருப்புவெறுப்புக்களுக்கு அப்பால் நடைமுறைச் சாத்தியமாக செயற்பட்டு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் தீர்மானங்களை எதிர்காலத்திலாவது எடுக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் விருப்பாகும்.

அதேசமயம் சுதந்திர இலங்கையின் வரலாற்றில் எதிர்ப்பு அரசியல் நடத்துவதே தமிழ்க் கட்சிகளின் பாரம்பரியம் என்றாகி விட்டது. நிறைவேற முடியாத வாக்குறுதிகளை மக்களுக்கு முன்பாக வைத்து காலத்தை வீணடிப்பதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் கொள்கையென்று வடக்கு, கிழக்குத் தமிழ் மக்கள் கருதுவதை தமிழ்க் கூட்டமைப்பு இனிமேலாவது கவனத்தில் கொள்வது அவசியம்.

நாட்டின் அரசியல் தலைமை மாற்றங்களுக்கேற்ப சிறுபான்மையினத்தின் ஏனைய கட்சிகள் தங்களது முடிவுகளை மாற்றிக் கொண்டு தங்களது இனத்தின் முன்னேற்றத்துக்காகச் செயற்படுவது பாராட்டத்தக்க விடயமாகும். அவ்வாறான அரசியல் சாணக்கியத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்காலத்திலாவது கடைப்பிடித்தாலேயே தமிழ் மக்களுக்கு விமோசனம் ஏற்படும். இல்லையேல் தமிழினத்தின் தலைவிதியானது எதிர்ப்பு  அரசியலிலேயே எக்காலமும் நிலைத்து நிற்கும் என்பதுதான் உண்மை.

 

Comments