ஜோ பைடனின் மேற்காசிய விஜயமும் ஈரானின் அணுவாயுத அரசியலும் | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

ஜோ பைடனின் மேற்காசிய விஜயமும் ஈரானின் அணுவாயுத அரசியலும்

உலக அரசியலின் போக்கு அமெரிக்க தலைமையிலான மேற்கு எதிர் சீன-ரஷ்ய தலைமைகளிலான கீழைத்தேய அணி என்ற நியமம் வலுவடைந்து வருகின்றது. சமகாலத்தில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மேற்கு ஆசிய நாடுகளுக்கான விஜயமும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடைய துருக்கி, ஈரான் என்பவற்றுடனான எதிர்கால உடன்பாட்டுக்கான தகவல்களும் சீனா, ரஷ்யா, ஈரானுக்கிடையிலான துறைமுகங்களை இணைக்கும் உடன்பாட்டுக்கான உரையாடல்களும் சமகாலப்பகுதியில் முதன்மை பெறுகின்றன.. மேற்கு ஆசியா நோக்கி பெரு வல்லரசுகள் பொருளாதார இராணுவ நலன்களை கட்டமைக்கும் தளத்தில் அரசியல் உரையாடல்களை மேற்கொண்டு வருகின்றன. இக்கட்டுரை ஜோ பைடனின் மேற்கு ஆசிய விஜயத்தின் அரசியலை தேடுவதாக அமைய உள்ளது.

 

அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கை நிச்சயமற்ற உலகத்தை அதிக முரண்நகையை வெளிப்படுத்துவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இந்திய வழி என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். இதனையே அமெரிக்க ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி ஜோ பைடன் அடையாளப்படுத்துகின்றார். அதாவது, குடியரசுக்கட்சியின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மேற்காசிய அணுகுமுறைக்குள்ளாலேயே ஜோ பைடனின் நகர்வுகளும் இடம்பெறுகின்றன. ஜோ பைடன் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் அணுகுமுறைக்கூடாக அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கையை மேற்காசியாவைப்  பொறுத்து வகுத்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஈரான் விடயத்தில் பதவிக்கு வந்த ஆரம்ப காலத்தில் ஓரளவு ஓபாமாவின் அணுகுமுறைகளை பின்பற்றுபவராக காணப்பட்டாலும், படிப்படியாக இஸ்ரேலின் செல்வாக்குக்குள்ளால் மேற்காசியாவை கையாள ஆரம்பித்துள்ளது என்பதை வெளிப்படுத்தியிருந்தார். அத்தகைய நகர்வின் முழுமையான வடிவத்தை மேற்காசிய விஜயத்தில் இஸ்ரேலுக்கு அவர் மேற்கொண்ட விஜயம் முழுமைப்படுத்தியுள்ளது. 2020செப்டம்பர்- 15இல் இஸ்ரேல், ஐக்கிய அரபு எமிரேட் மற்றும் பஹ்ரைனை ஒன்றிணைத்து டொனால்ட் ட்ரம்ப் ஆப்ரகாம் உடன்படிக்கையை மேற்கொண்டு அரபு நாடுகள் மத்தியில் இஸ்ரேலை பலப்படுத்த திட்டமிட்டிருந்தார். இவ்வுடன்பாட்டின் பிரகாரம் பொருளாதாரம், வர்த்தகம், இராணுவ, தொழில்நுட்ப பரிமாற்றங்களை இந்நாடுகளுக்கிடையில் வளர்த்தெடுக்கும் விதத்தில் அவ்வுடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியையே  பேணுகின்ற விதத்தில் ஜோ பைடனும் செயற்பட முனைகின்றார். இஸ்ரேலை மையப்படுத்தி இஸ்ரேலுக்கூடாக மேற்காசிய அரசியலை அமெரிக்கா கையாள முனைகின்றமையே அவரது மேற்காசிய விஜயத்தில் இஸ்ரேலை முதல் தரையிறக்கமாக தேர்ந்தெடுத்தமை உணர்த்தி நிற்கிறது.

அதுமட்டுமன்றி இஸ்ரேலில் நிகழ்ந்த உரையாடலில் ஜோ பைடன் கருத்து தெரிவிக்கையில்,  இஸ்ரேல்-அமெரிக்க உறவின் நீண்டகால வரலாற்றையும் உலகம் இன்று எதிர்நோக்கியுள்ள சவால்களையும் முதன்மைப்படுத்தியதோடு அமெரிக்க-இஸ்ரேலிய உறவானது இரு நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதோடு பிராந்திய அமைதியையும் உறுதிப்பாட்டையும் பலமான பிராந்திய பாதுகாப்பையும் உத்தரவாதப்படுத்தும் எனக் குறிப்பிட்டார். அதனூடாக மேற்காசிய பிராந்தியத்தில் இஸ்ரேலின் முக்கியத்துவத்தையும் அதன் வகிபாகத்தையும் வெளிப்படுத்தியதோடு ஈரானின் அணுவாயுத செறிவூட்டல் முயற்சிகளுக்கு எதிரான நகர்வுகள் பற்றிய உரையாடல்களை வெளிப்படுத்தியிருந்தார். இரு நாட்டுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட உடன்பாடுகளின் போது ஈரானின் அணுவாயுதம் பற்றிய நடவடிக்கைகளை முற்றாக நிராகரிப்பதாகவும், அதெற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் இருநாட்டு தலைவர்களும் வெளிப்படுத்தியிருந்தனர். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மேற்காசிய விஜயத்தின் உள்நோக்கத்தினை விரிவாக தேடுவது அவசியமானதாகும்.

முதலாவது, இஸ்ரேலின் உள்நாட்டு அரசியல் ஸ்திரமற்று இருக்கின்ற சந்தர்ப்பத்தில் ஜோ பைடன் மேற்காசிய விஜயத்தில் முதல் தெரிவாக இஸ்ரேல் அமைந்திருக்கின்றது. இதனூடாக இஸ்ரேலை பலப்படுத்துதல் நெருக்கடிமிக்க காலப்பகுதியிலும் இஸ்ரேல் பலமான அரசாக விளங்க வேண்டும் என்பதில் கரிசனை கொள்ளும் போக்கு அமெரிக்காவிடம் காணப்படுகின்றது. இஸ்ரேலை பலப்படுத்துவதனூடாகவே ரஷ்ய-சீனா மேலாதிக்கத்தை மேற்காசிய பிராந்தியத்தில் மட்டுப்படுத்த முடியுமென அமெரிக்கா கருதுகின்றது. இஸ்ரேலுக்கும் ரஷ்யாவுக்கும் உள்ள உறவை கடந்து அமெரிக்கா இஸ்ரேலுடன் நெருக்கமான வெளியுறவுக்கொள்கையை கட்டமைத்து வருகின்றது.

இரண்டாவது, இஸ்ரேலுக்கு மாத்திரமின்றி அமெரிக்காவுக்கும் ஈரானின் அணுவாயுத வளர்ச்சி அபாயமானது என்பது தெரிந்த கொள்ளக்கூடிய விடயம். 1979ஈரானிய புரட்சிக்கு பின்னர் அமெரிக்காவால் ஈரானுடன் ஒரு நெருக்கமான உறவை ஏற்படுத்த முடியவில்லை. இதனடிப்படையிலேயே ஈரானிய இராணுவ வளர்ச்சியும் அணுவாயுத பரிசோதனைகளும் மேற்காசியாவின் வல்லரசாக எழுச்சிபெற்றுவிடும் என்ற அச்சம் இஸ்ரேலும் அமெரிக்காவுக்கும் உண்டு. ஈரானின் அணுவாயுதம் உலகிற்கு அச்சுறுத்தலாக அமையுமென்ற பிரச்சாரம் இஸ்ரேல் சார்ந்தும் அமெரிக்கா சார்ந்துமே பெரிதும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதனாலேயே ஜோ பைடன் ஈரானின் அணுவாயுத வளர்ச்சிக்கு எதிராக தொடர்ச்சியான பொருளாதார தடைகளையும் இராணுவ இலக்குகளையும் இராணுவ தளபதிகளையும் அணுஉலை மீதான தாக்குதல்களையும் நிகழ்த்தி வருகின்றது. ஜோ பைடனது மேற்காசிய விஜயத்தின் பிரதான நோக்கம் ஈரானிய அணுவாயுதத்தை முற்றாக தகர்த்து அழிப்பதாகும்.

மூன்றாவது, இத்தகைய ஈரான் மீதான தாக்குதலை முன்னகர்த்தும் இஸ்ரேல் தொடர்ச்சியாக ஆயுத தளபாடங்களையும் தொழில்நுட்ப திறன் வாய்ந்த தாக்குதல் விமானங்களையும் உற்பத்தி செய்து பரிசோதித்து வருகிறது. அதற்கான ஒத்துழைப்பை அமெரிக்கா வழங்குவதும், இருநாடுகளும் இணைந்து அத்தகைய துல்லியமான தூரநோக்கு இராணுவ ஆயுத தளபாடங்களையும் தயாரிக்கும் முயற்சியில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இதனூடாக இஸ்ரேல் வலுவான இராணுவ ரீதியிலான மற்றும் ஆயுத ரீதியிலான வளர்ச்சி நிலையினை எட்டுவதற்கு முயலுவதோடு மேற்காசிய அரசியலில் இராணுவ வியூகத்துக்குள் மேலும் தீவிரப்படுத்த திட்டமிடுகின்றது.

நான்காவது, ஜோ பைடனின் சவூதி அரேபியாவுக்கான விஜயம் மனித உரிமைவாதிகளாலும் சமூக ஆர்வலர்களாலும் அதிகம் விமர்சிக்கப்படுகிறது. தேர்தல் பிரச்சாரக்காலத்தில் ஜோ பைடன் ஒடுக்கப்படும் இராச்சியமாக சவூதி அரேபியாவை விழித்து கொண்ட நிலையிலிருந்து மூலோபாய உறவுள்ள நாடென்று முன்மொழிய முயல்கின்றார். ரஷ்யா மேற்கு நாடுகளுக்கு எரிவாயு மற்றும் பெற்றோலியத்தை ஏற்றுமதி செய்வதை நிறுத்தியதன் பிரகாரம் எழுந்த நெருக்கடி அமெரிக்காவிற்கும் அதன் உள்நாட்டு பொருளாதாரத்திற்கும் பாரிய பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளது. அதனாலேயே ஜோ பைடன் சவூதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தியை அதிகரிப்தற்கான விண்ணப்பத்தோடு ஊடகவியலாளர் ஜமால் ஹாசோமியின் படுகொலைக்கு பின் முகம்மது பின் சல்மானை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் பைடனுக்கு ஏற்பட்டுள்ளது. அரசியல் பொருளாதார தேவைகளுக்காக நாடுகளின் வெளியுறவுக்கொள்கைகள் நிச்சயமற்ற தன்மைக்குள் நகர்ந்து வருகின்றன. சவூதி அரேபியாவை முன்னிறுத்தி நேட்டோ விவகாரத்தில் துருக்கியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது போல் பெற்றோலியம் மற்றும் எண்ணெய் வளத்துக்காக சவூதி அரேபியாவோடு அமெரிக்க ஜனநாயக கட்சி கைகோர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஐந்தாவது, எல்லாவற்றையும் கடந்து அமெரிக்க ஆட்சியாளர்கள் மேற்காசியாவை கையாளவும் உலகத்தை ஏமாற்றவும் பலஸ்தீனத்தை எப்போதும் பயன்படுத்தி வருகின்ற நிலையைக் காண முடிகின்றது. 1947ஆம் ஆண்டிலிருந்து அனைத்து அமெரிக்க ஜனாதிபதிகளும் பலஸ்தீனத்தின் சுயாட்சிக்கு உத்தரவாதம் கொடுக்கும் மரபை பின்பற்றி வருகின்றனர். அந்த வரிசையில் ஜோ பைடனும் பலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸுடன் இரு நாட்டுக்குமான நட்புறவு பற்றிய விடயத்தை மேற்கொள்வாரென எதிர்பார்க்கப்படுகின்றது. அவரது விஜயத்தின் முக்கியத்துவம் ஈரான் சார்ந்தும் சவூதி அரேபியா பெற்றோலிய வளம் சார்ந்தும் முதன்மைப்படுத்தப்பட்டதேயன்றி பலஸ்தீன தேசத்தின் பாதுகாப்பு சார்ந்தோ அல்லது பாலஸ்தீன தேசத்தின் அங்கீகாரம் சார்ந்தோ கட்டமைப்படவில்லை என்பது அவரது மேற்காசிய விஜயத்தின் திட்டமிடல் மூலம் வெளிப்படுத்தப்படுகிறது. இது தொடர்ச்சியற்ற பலவீனமான உலகத்தை ஏமாற்றும் செய்முறையாகவே காணப்படுகின்றது.

எனவே, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மேற்காசிய பயணம் அமெரிக்க உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் எதிர்நோக்கிவரும் அரசியல்பொருளாதார இரா ணுவ நெருக்கடிகளை கையாள்வதாகவே தெரிகிறது. அதிலும் குறிப்பாக, ஈரானின் அணுவாயுத செறிவூட்டலை முடிவுக்கு கொண்டு வருவதனூடாக இஸ்ரேலை பலப்படுத்துவதும் அதனூடாக அமெரிக்காவின் மேற்காசிய இருப்பை உறுதிப்படுத்துவதும் நோக்கமாக உள்ளது. ரஷ்ய-சீனா-ஈரான் உறவு அமெரிக்காவிற்கும் மேற்குக்கும் மட்டுமன்றி இஸ்ரேலுக்கும் ஆபத்தானதொன்றாக கணிக்கப்படுகிறது. இதனால் இஸ்ரேலுடனான அமெரிக்க நட்புறவு தொடர்ச்சியானதாகவும் முறியடிப்பு மூலோபாயத்தை கொண்டதாகவும் விளங்குகின்றது.

கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments