நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு நம்பிக்கையைத் தந்துள்ள அரசியல் மாற்றம்! | தினகரன் வாரமஞ்சரி

நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு நம்பிக்கையைத் தந்துள்ள அரசியல் மாற்றம்!

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட எட்டாவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் அரசியல் வரலாற்றில் மக்கள் பிரதிநிதிகளின் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது ஜனாதிபதிஎன்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

இதற்கு முன்னர் ஜனாதிபதியாகப் பதவி வகித்த ஆர். பிரேமதாசவின் மறைவைத் தொடர்ந்து டி.பி. விஜேதுங்க பாராளுமன்றத்தின் மூலம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தாலும், அவர் வாக்கெடுப்பு இன்றி மக்களின் பிரதிநிதிகளின் ஏகமனதான தீர்மானத்தின் ஊடாகவே தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இருந்த போதும் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுத் தெரிவு செய்யப்பட்டு வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

ஜனாதிபதியாகப் பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஷ மக்களின் எதிர்ப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து பதவி விலகியதும் ஏற்பட்ட வெற்றிடத்துக்குப் புதிய ஜனாதிபதி ஒருவரை பாராளுமன்றத்தின் மூலம் தெரிவு செய்ய வேண்டி ஏற்பட்டது.

அரசியலமைப்பு மற்றும் 1981ஆம் ஆண்டு 2ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்துக்கு அமைய பாராளுமன்றத்தின் மூலம் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்படும் வரை பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

ஜனாதிபதிப் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டதும் கூடிய விரைவில் புதிய ஜனாதிபதி ஒருவர் பாராளுமன்றத்தின் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இதற்கமையவே புதிய ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கு வேட்புமனுக்கள் கோரப்பட்டதுடன், ரணில் விக்கிரமசிங்க, டலஸ் அழகப்பெரும மற்றும் அநுரகுமார திஸாநாயக ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டன.

ஆரம்பத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஜனாதிபதிப் பதவிக்காகப் போட்டியிடுவதாகக் கூறப்பட்ட போதும், இறுதி நேரத்தில் டலஸ் அழகப்பெருமவுக்குத் தனது ஆதரவை வழங்கி போட்டியிலிருந்து அவர் விலகிக் கொண்டார்.

சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதற்கிணங்க வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் முயற்சிகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டிருந்தன.

பொதுஜன பெரமுன கட்சியினர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியும் அதன் பங்காளிக் கட்சிகளுடன் இணைந்து, பொதுஜன பெரமுனவிலிருந்து விலகி எதிர்க்கட்சியில் சுயாதீனமாக இயங்கும் விமல் வீரவன்ச, கம்மன்பில போன்றவர்கள் உள்ளடங்கலான குழுவினரும் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஆரம்பத்தில் எவருக்கும் ஆதரவு வழங்குவதில்லையென்ற நிலைப்பாட்டிலிருந்து வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தது. அதேநேரம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு வழங்குவதாகத் தீர்மானித்தது.

தமிழ், முஸ்லிம் கட்சிகள் உள்ளிட்ட பல தரப்பினரதும் ஒத்துழைப்பு டலஸ் அழகப்பெருமவுக்கு என அறிவிக்கப்பட்டது.

இவ்வாறான நிலையில், கடந்த புதன்கிழமை மிகவும் பரபரப்பாகப் பாராளுமன்றம் கூடியிருந்தது. பாராளுமன்றத்தின் ஊடாக வாக்கெடுப்பை நடத்தி ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் வரலாற்று நிகழ்வுக்காக இலங்கை மாத்திரமன்றி உலகின் பல நாடுகளும் எதிர்பார்த்திருந்தன. சட்ட விதிகளுக்கு அமைய வாக்கெடுப்புப் பணிகளுக்கு பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவத்தாட்சி அலுவலராகச் செயற்பட்டிருந்தார்.

சபா மண்டபத்தில் பாராளுமன்ற செயலாளர் தலைமையிலான அதிகாரிகளுக்குத் தனியான மேசை போடப்பட்டிருந்ததுடன் அவர்களுக்கு முன்னால் வாக்குப் பெட்டி வைக்கப்பட்டிருந்தது. பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் முதல் எழுத்துடன் கூடிய கையொப்பம் இடப்பட்ட வாக்குச் சீட்டு ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரின் பெயரும் அழைத்து வழங்கப்பட்டது.

பெயர் அழைக்கப்படும் போது ஒவ்வொரு உறுப்பினரும் சபைக்கு நடுவில் வந்து வாக்குச் சீட்டைப் பெற்று மறைவான பகுதியில் தமது வாக்கைப் பதிவு செய்து வாக்குப் பெட்டியில் வாக்குகளை இட்டனர். அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் உறுப்பினர்களான குமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் வாக்களிப்பதிலிருந்து விலகியிருந்தனர். இதற்கமைய 223பேர் வாக்களித்திருந்தனர். இதில் இரு உறுப்பினர்கள் சுகவீனமாக இருந்த போதும் சபைக்கு வந்து தமது வாக்குகளைப் பதிவு செய்திருந்தனர்.

வாக்களிப்பு முடிவடைந்ததும் வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெற்றன. வாக்கு எண்ணும் செயற்பாட்டைக் கண்காணிப்பதற்கு வேட்பாளர்களின் சார்பில் பிரதிநிதிகளை நியமிக்க முடியும். இதற்கமைய ரணில் விக்கிரமசிங்கவின் பிரதிநிதியாக ஹரீன் பெர்னாண்டோவும், டலஸ் அழகப்பெருமவின் பிரதிநிதியாக டிலான் பெரேராவும், அநுரகுமார திஸாநாயக்கவின் பிரதிநிதியாக விஜித ஹேரத்தும் வாக்கு எண்ணும் பணிகளைப் பார்வையிட்டனர்.

வாக்குகள் ஒவ்வொன்றாக ஆராயப்பட்டு எண்ணப்பட்டன. அளிக்கப்பட்ட 223வாக்குகளில் 4வாக்குகள் நிராகரிக்கப்பட்டன. இதற்கமைய அளிக்கப்பட்ட செல்லுபடியான 219வாக்குகளில் அரைவாசிக்கு மேல் பெற்றுக் கொண்டவர், அதாவது 110வாக்குகளுக்கு மேல் எடுத்தவர் வெற்றி பெறுவார் என்ற நிலை ஏற்பட்டது.

வாக்குகள் எண்ணப்பட்டு முடிந்ததும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் அதனை அறிவித்தார். இதற்கமைய ரணில் விக்கிரமசிங்கவுக்கு 134வாக்குகளும், டலஸ் அழகப்பெருமவுக்கு 82வாக்குகளும், அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 3வாக்குகளும் அளிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. டலஸ் அழகப்பெருமவை விட 52மேலதிக வாக்குகளைப் பெற்று ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெற்றார்.

செயலாளர் நாயகத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, "நாம் அனைவரும் பிரிந்து செயல்படும் காலம் முடிந்து விட்டது, இனிமேல் அனைவரும் ஒன்றாக சேர்ந்து பயணிக்க வேண்டும். நாட்டின் இளைஞர்கள் இன்று இந்த அமைப்பில் மாற்றத்தைக் கோருகின்றனர். இன்று உலகில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவற்றுக்கு முகம் கொடுத்து நாம் முன்னோக்கி செல்ல வேண்டும். அதற்காக நாம் புதிய வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டும். மக்கள் எங்களிடம் பழைய அரசியலை கேட்கவில்லை. இந்தப் பாராளுமன்றம் ஒன்றிணைந்து புதிய அரசியல் முறையை பணியை நிறைவேற்ற வேண்டும் என்று நான் விசேடமாக கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டார்.

"நாம் அனைவரும் ஒன்றிணைந்து புதிய நடைமுறையொன்றை கொண்டுவர வேண்டும் என்று நான் டலஸ் அழகப்பெருமவிடம் கேட்டுக் கொள்கிறேன். எனது நண்பர் அனுரகுமார திஸாநாயக்கவிடமும் இதே கோரிக்கையை முன்வைக்கிறேன். அத்துடன், எனது நண்பர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடமும் இந்தக் கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றேன்.

இன்று நாம் அனைவரும் ஒன்றிணைந்து புதிய நடைமுறை ஒன்றைக் கொண்டு வருவோம். அதைப் பற்றித்தான் நாம் கலந்துரையாட வேண்டும். அதேபோன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் உட்பட அனைவரிடமும் இதே கோரிக்கையை முன்வைக்கிறேன். எமது பாராளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம், விக்னேஸ்வரன் ஆகியோரிடமும் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்ற இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறேன்.

அதேபோன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ அவர்களிடமும் கட்சியின் சார்பில் இதே கோரிக்கையை முன்வைக்கின்றேன். அதேபோன்று இங்கு வந்துள்ள எமது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடமும் இதே கோரிக்கையை முன்வைக்கின்றேன். இப்போது நாம் பிரிந்திருந்தது போதும். நாம் ஒன்றாக இணைந்து கலந்துரையாடி ஒன்றாக செயற்படுவோம். நான் நாளை முதல் உங்கள் அனைவருடனும் கலந்துரையாட விரும்புகின்றேன்" எனக் கூறினார்.

இதன் பின்னர் ஜனாதிபதிப் பதவிக்குப் போட்டியிட்ட டலஸ் அழகப்பெரும மற்றும் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரும் பாராளுமன்றத்தில் தமது கருத்துக்களை முன்வைத்தனர். நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள நெருக்கடியான சூழலில் இருந்து மீண்டு வருவதற்குத் தேவையான நடவடிக்கைகளைப் புதிய ஜனாதிபதி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் இங்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. பாராளுமன்றத்திலேயே தனது பதவிப் பிரமானத்தைச் செய்து கொள்வதற்கு விரும்புவதாகவும் ரணில் விக்கிரமசிங்க சபாநாயகரிடம் சபையில் அறிவித்திருந்தார்.

இதற்கமைய கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றக் கட்டத் தொகுதியில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்துக்கு அருகிலுள்ள மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. மிகவும் எளிய முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் சிலர் கலந்து கொண்டிருந்தனர். பாராளுமன்றத்தைப் பலப்படுத்தி, ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைப்பதற்குப் பாராளுமன்றம் செயற்பட வேண்டும் என்றும், இதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்புடன் பங்களிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டிருந்தார்.

நாடு கடந்த சில மாதங்களாக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றது. மக்கள் துன்பத்தின் எல்லைக்கே சென்று விட்டனர். இந்நிலையில் புதிய ஜனாதிபதி பதவியேற்றமையானது நம்பிக்கை எதிர்பார்ப்புகளை பல தரப்பினர் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் அனுபவமும்,ஆற்றலும், பொருளாதார நிபுணத்துவமும் மிக்கவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னேற்றமான மாற்றங்களைக் கொண்டு வருவாரென்பதே அந்த எதிர்பார்ப்பாகும்.

சம்யுக்தன்

Comments