புசல்லாவ பஸ் விபத்தில் இருவர் நசுங்கிப் பலி! | தினகரன் வாரமஞ்சரி

புசல்லாவ பஸ் விபத்தில் இருவர் நசுங்கிப் பலி!

புஸ்ஸலாவ புரடொப் பாதையை பயன்படுத்தும் மக்கள் தொகை மிகப்பெரியது. சுமார் 12தோட்டப்பகுதிகளையும் இரண்டு கிராமங்களையும் சேர்ந்த 30ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர்.  

இப்பாதை புஸ்ஸலாவ நகரில் இருந்து றஸ்புக்வரையில் 21கிலோமீட்டர் தூரம் வரை நீண்டுள்ளது. புரடொப் பொதுவாகவே போராட்டம் ஆர்ப்பாட்டம் என்பனவற்றிக்கு ​பெயர்போன பகுதி.  

போக்குவரத்து தொடர்பான 100கும் மேற்பட்ட போராட்டங்கள், ஆர்பாட்டங்கள், உபவாசங்கள் கடந்த 20வருடகாலப்பகுதியில் இடம் பெற்று வந்துள்ளன.  

இப்பாதையில் அரச போக்குவரத்து பஸ்சேவை நீண்டகாலமாக இடம்பெற்று வந்துள்ளது. கடந்த 15வருடங்களாக இ.போ.ச பஸ்சேவை, பாதை சேதம். போக்குவரத்து செய்ய முடியாது என்ற காரணங்களின் பேரில் தன் சேவையை நிறுத்திக் கொண்டது.  

இதன் பின்னர் சுமார் 15வருடகாலமாக தனியார் பஸ்சேவையே இடம்பெற்று வருகிறது. சுமார் 20வருடங்களுக்கு மேலாக இப்பாதை நீர் பாயும் பாதையாகவே இருந்தது. ஒரு குழியில் சக்கரம் விழுவதில் இருந்து தப்ப முயலும்போது இரண்டு குழியில் விழும்! பல போராட்டங்களுக்கு மத்தியில் இப்பாதையில் இந்த தனியார் பஸ்சேவை இடம்பெற்று வந்தது.  

புரடொப் பாதையை சீர்செய்வதாகக் கூறியே சிலர் பாராளுமன்ற உறுப்பினர்களாயினர். போக்குவரத்துக்கும் அதிகஷ்ட பிரதேசமாகத் திகழும் இவ்விடம் வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. இராவணணின் புஷ்பக விமானம் இறங்கியதாக கூறப்படும் சமதரை புல்வெளியும் இங்குதான் உள்ளது. உலக முடிவு என்ற Worlds End இங்கிருந்து சமீபம்.  

இங்குள்ள பாடசாலைகளுக்கு புசல்லாவ நகரில் இருந்தே ஆசிரியர்கள் வருகின்றனர். இந்த 12தோட்டப் பகுதிகளிலும் சதொச கூட்டுறவு கடை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.  

வைத்தியசாலைகள் இங்கே இல்லை. இதனால் மக்கள் புசல்லாவ நகருக்கு கட்டாயம் வந்து சென்றே ஆகவேண்டும். 9ஆம், 10ஆம் திகதிகளில் தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டதுமே பொருள் கொள்வனவில் ஈடுபடுவர். கடந்த 9ஆம்,10ஆம் திகதிகளில் வாகன போக்குவரத்துகள் இல்லாததால் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.  

12ஆம் திகதி எப்படியும் மக்களுக்கு மருந்துகள் வாங்கவும் வீட்டுக்கு பொருட்கள் வாங்கவும் மேலும் பல தேவைகளுக்காகவும் காலை ஏழுமணிக்கு எல்லாம் பாதைக்கு வந்து 9.00மணிவரை காத்திருந்து தேங்காய் மூட்டைகளாக பஸ்சில் ஏறி பயணிக்கத் தொடங்கினர். அது மேடும் பள்ளமுமான மலைப்பாதை. ஒரு இறக்கத்தில் பஸ் கடும் வேகமாக சென்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் ஒருபக்க டயர் பாதையை விட்டு விலகி வடிகானில் இறங்கவே பஸ் பக்கச் சுவர் போன்ற மண் மேட்டில் சாய்ந்து நின்றது.  

ஐயோ அம்மா என ஒரே அழும்குரல் ஒப்பாரி! பஸ்சில் கூட்டம் அதிகம் என்பதால் மிதிபலகையில் பயணித்தவர்களில் இருவர் சாய்ந்த மண் மேட்டுக்கும் பஸ்சுக்கும் இடையில் அகப்பட்டு நசுங்கிப்போனார்கள்.  

பலர் ஜன்னல் வழியாக பாய்ந்து வெளியேறினர். பஸ்சின் முன்பக்க முகப்பு கண்ணாடியை பஸ்சாரதி உடைத்து உள்ளிருப்பவர்களை வெளியே போகும்படி சொல்லிக் கொண்டிருந்தார். ஏனெனில் இரண்டு இறங்குவழிகளிலும் அடைபட்டுக் கிடந்தன.  

அருகில் வீடன் தோட்டத்தில் தேயிலை மலையில் வேலை செய்து கொன்டிருந்வர்கள் வந்து பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர். அந்த நேரத்தில் எங்கே சாரதி என சத்தம் போட்டவாறு ஒரு கூட்டம் வர சாரதியும் நடத்துனருடன் தப்பியோடி புசல்லாவ பொலிஸில் சரணடைந்தனர்.  

பஸ்சுக்கும் மண் மேட்டுக்கும் இடையில் அகப்பட்டவர்களை எடுக்க முடியவில்லை. பல போராட்டங்களுக்கு மத்தியில் கூடிநின்ற இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் முயற்சி செய்து பஸ்சை நிமிர்த்தி பாதையில் ஏற்றினர். இருவரையும் ஒருமணித்தியாலத்திற்கு பின் வெளியில் எடுத்தனர் ஊர்மக்கள் துடித்து போனார்கள். ஏனெனில் சடலங்களாகவே அவர்களை மீட்க முடிந்தது.  

19வயதான ஒரு பிள்ளையின் தந்தையும் 38வயதான 4பிள்ளைகளின் தந்தையுமே பரிதாபமாக இறந்தவர்கள். பலருக்கு அடிப்பட்டிருந்தாலும் அவை உட்காயங்கள் பெரிதாக வெளிக்காயங்கள் தெரியவில்லை.  

இருவரது பரிதாப மரணத்தைப் பார்த்த பல நூற்றுக்கணக்கான மக்கள் அமைதி இழந்து ஆத்திரமடைந்தனர். பொறுமைகாத்த கூட்டத்திற்கும் பொங்கி எழுந்த கூட்டத்திற்கும் இடையில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது.  

நியூட்ரலில் பள்ளமான பாதையில் வந்ததால் தான் விபத்து ஏற்பட்டது என்பது தெரிய வந்தது. சம்பவத்தைக் கேள்விப்பட்டதும் அங்கு வந்த கம்பளை பொலிஸார் சம்பவ இடத்தில் விசாரணையில் இருந்தபோதே பஸ்வண்டிக்குள் புகை கிளம்பியது. மெதுமெதுவாக தீப்பரவி பஸ் எரியத்தொடங்கியது. ஆத்திரமடைந்த மக்கள் தீ மூட்டினார்களா? தீப்பற்றி கொண்டதா? எப்படியினாலும் பஸ் எரிந்து சாம்பலானது.  

வேகமாக வந்ததால் பஸ் கட்டுப்பாட்டு இழந்ததா? நியூட்ரலில் வந்ததால் ஏற்பட்ட விபத்தா? காரணம் இனிமேல்தான் தெரியவரும்.  

பெற்றோல் டீசல் இல்லை என்பதால் இன்று பல வாகனங்கள் பள்ளமான இடங்களில் நியூட்ரலில்தான் வாகனங்களை இயக்குகிறார்கள். பெற்றோல், டீசல் தட்டுப்பாடு இல்லாத காலங்களில் கூட நியூட்ரலில் வாகனங்களை செலுத்தும் பழக்கம் மலையகப் பகுதிகளில் உண்டு. பொலிஸார் முன்பு நியூட்ரலில் சென்றால் தண்டம் அறவிடுவர். எரிபொருள் தட்டுப்பாட்டின் பின் பொலிசாரின் கரிசனையும் குறைந்தது விட்டது.   பெற்றோல், டீசல் இல்லை என பஸ்காரர்கள் சும்மா இருந்துவிடவும் முடியாது. பினேன்ஸ் கட்ட வேண்டும், தனது குடும்ப செலவைப் பார்க்க வேண்டும் என்று தனது தொழிலை தொடர்கின்றனர். இந்நிலையில் இச் சாரதி நியூட்ரலில் வந்திருக்கக் கூடும் என்றாலும் இதற்கு விஞ்ஞான பூர்வமான ஆதாரங்கள் இல்லை.   என்ஜினை நிறுத்திவிட்டு முச்சக்கர வண்டிகள், பஸ்கள், லொறிகள் என்பனவும் நியூட்ரலில் செல்வதை இயல்பாக காணலாம்.   இந்த புரடொப் பஸ்விபத்துக்கான காரணம் எதுவாக இருந்தாலும் பெறுமதிமிக்க இரண்டு மனித உயிர்களை காவு கொண்டிருக்கிறது.   அதிகமான பயணிகளுடன் பஸ் பயணித்ததாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. ஒரு பஸ்ஸை விட்டால் அடுத்த இரண்டு மணித்தியாலங்களுக்கு பாதையில் ஒரு பஸ் கூட வருவதில்லை. எனவே கூரைமீது ஏறியாவது மக்கள் பயணிக்கத்தான் செய்வார்கள்.    

தெல்தொட்டை நவராஜா
(புகைப்படங்கள் : தெல்தொட்டை தினகரன் நிருபர்) 

Comments