காற்றேணி ஏறி கடல் மீதாடி நிலா பிடிக்கும் கவிதைகள்.. | தினகரன் வாரமஞ்சரி

காற்றேணி ஏறி கடல் மீதாடி நிலா பிடிக்கும் கவிதைகள்..

கடல் கடந்து ஒருநாள்   என் காதுக்கோர் அழைப்பு வந்தது.    கனத்த இரவு அது.

அப்போது கண் பூக்கும் ஒரு நீள் பயணத்தில் கருஞ்சாலை முதுகில் காற்றில் உளி செதுக்கியபடி காரோட்டிக் கொண்டிருந்தேன் என் குழந்தைகளோடு.

அந்நேரம் என் காதுரசிய அந்தக் குரல் புதிது அந்தத் தமிழ் புதிது. அந்த உச்சரிப்பு புதிது. அதில் வழிந்த அன்பு புதிது. அந்த இனிப்புக் குரலுக்குச் சொந்தக்காரர் இனிய சகோதரர் ஈரக் கவிஞர் எங்கள் ஈழ தேசத்தின் கவிஞர் ,  .வி.மைக்கல் கொலின்.

எனக்கும் அவருக்கும் இடையேயான நட்பு ஏழாண்டுகள் இதய முடுத்திய ஒன்று.

அதுசோழன் பிசிராந்தைச் சொந்தம். இதோ! கண்காணும் முன்பே  என் காதோர வீதிகளில் குரல் திருவிழா. அந்த திருகோணமலைத் தமிழிலும் மட்டக்களப்பு மகரந்தத்திலும் வவுனியாக் காட்டுப் பறவை போல வாயூறலாயிற்று என் நெஞ்சு. மைக்கல் சொன்னார்' என் இனிய பட்டாம்பூச்சிக்கு' என்ற     என் கவிதை நூலுக்கு உங்கள் அணிந்துரை வேண்டும் கவிஞரே.

தருகிறேன் தாமதமாகும் காலம்    பரவாயில்லையா என்றேன்.

ஆனால் பத்து நாளினுள் என்ற நான் சில மாதங்கள் சிறைசெய்து கொண்டேன். காரணம் என் அலுவல் என் பணிச் சுமை என் இலக்கிய முன்னெடுப்புகள் இப்படி நிமிடச் சூரியன்களின் நெற்றிகளுள் நெருக்கப்படும்  என் நீல விதானத்தின் நிமிடக் கொடுமைகள் நெருப்பின் சாம்பல் சிறகுகளொத்தவை.  கருப்பையின் அவஸ்தை வலிகள் கொண்டவை.

இப்படிப்பட்ட என் தாமதத்தில் கூட சற்றேனும் சலிப்புறாத மைக்கல் என் தமிழ் வளர்த்த வாழ்த்துக்குரியவராகிறார் சீயோன் மலை கொடுத்த வார்த்தைக்குரியவராகிறார். சரி.  நூல் குறித்த என் பார்வைக்கு வருகிறேன்.

கால்காசு செலவில்லாமல்  காற்றேணி ஏறி கடல்  மீதாடி நிலா பிடித்துத் தொங்கிய நித்திலம்பூ அனுபவம் உண்டா உங்களுக்கு.

இதோ! அப்படிப்பட்ட ஒரு பேரனுபவத்தை அழகான இந்நூலில் நான் பெற்றிருக்கிறேன்.

காயாம் பூக்களும் கோங்கம் பூக்களும் கடைவிரித்தக் குறிஞ்சி மலைக்காட்டுள் அருவி நீராடி அடை'தேன்' களவாடிகுருவி போல் பறந்த குதூகலம் கொண்டதுண்டா நீங்கள்.

இதோ! அத்தகைய தேனானுபவத் தென்றலில் திணறத் திணற திருவிழா கொண்டாடிய தேவாமிர்த ருசியை இந்தக் கவிதை நூலில் கண்டடைந்து கரைந்துபோய் நான் நிற்கிறேன். மழைக்காற்று வீசும் ஒரு மந்த மாருதப் பொழுதில் கதிர்களில் பால்பிடித்த வயலோரங்களில் காலாற வரப்பேறி பொடிநடை போட்டதுண்டா நீங்கள்.

இதோ! அவ்வாறான ஒரு புதிய திக்குமுக்காடலைஆழமான இந்தக் கவிதை நூலில் பெரும்பாலான வரிகளில் பிழியப் பிழிய  பிரபஞ்ச ரகசியம் வழிய வழியவட்டிலில் வாரி வாயொழுகத் தின்றிருக்கிறேன் நான்.

ஒருபக்கம் மழை மறுபக்கம் வெயில் இரண்டுக்கும் நடுவே ஒரு வானவில்லாகி  வாழ்ந்ததுண்டா நீங்கள்.

இதோ!   இந்தக் கவிதைநூல் வாசித்த போது என் சாலைகளெங்கும் நிறச் சேலைகளின் நீள ஓவியங்கள்கரம் பிடித்தெனக்கு கள்ளூற்றிக் கொடுத்தன.

சில கவிதைகளை என்னால் அள்ள முடியவில்லை. ஆனால் பல கவிதைகளினின்று என்னை மொள்ள முடியவில்லை.

நாம் கவிதை  நூல்கள் நிறைய வாசிக்கிறோம் தாம்.

ஆனால் பெரும்பாலானவைநம் நினைவு மண்டபங்களைநெய்ப்பசை போல அப்பிக் கொள்வதுண்டா இல்லையே.ஆனால் என் முதல் பார்வையிலேயே'என் இனிய பட்டாம்பூச்சிக்கு' என்றஇந்தக் கவிதை நூல்என் கண்களில் மணிபோல கட்டிக் கொண்டது என் நெஞ்சினில் பனிபோல ஒட்டிக் கொண்டது.

காரணம் கவிஞர் தன் மனங் கவர்ந்தவருக்கு  இந்தத் தாழம்பூக் கவிதைகளை  தருவித்த போதும் தன் தமிழாசிரியருக்கு இதை அவர் சமர்ப்பித்திருக்கிறார் என்ற போதே என் அன்பின் மைக்கல் என் தாழ்வார ஆகாயத்தில் தங்க நாற்காலி போட்டு சம்மணமிட்டுக் கொள்கிறார் என்றால் சற்றேனும் மிகையில்லை.

தனக்கு கற்றுத் தந்தவருக்குதான் பெற்று வந்தவற்றை  பரிசாக நீட்டுகிற பண்புக்கும் மாண்புக்கும்பெரியதொரு வாழ்த்துகள்  மைக்கல்.

இன்னொரு வியப்பும் இந்நூலில் எனக்கிருந்தது.

அது யாதெனில் இது வெறும் காதல் கவிதைகளின் தொகுப்பு மட்டுமல்ல. இதன் பல கவிதைகள் இலங்கையின் வரலாறு பேசுகிறது. இலங்கையின் இயற்கை பேசுகிறது. இலங்கையின் ஆன்மீகம் பேசுகிறது. இலங்கையின் நம்பிக்கை பேசுகிறது. இலங்கையின் அழகு பேசுகிறது

இது மட்டுமல்ல இராவண மகாராஜாவின் கீர்த்தி பேசுகிறது. அவர் வாளின் மகிமை பேசுகிறது. அவர் கட்டடக் கலையின் கம்பீரம் பேசுகிறது

இதை வாசிக்கிற போது 'மா காரின் மின்கொடி மடக்கினர் அடுக்கி மீகாரம் எங்கணும் நறுந்துகள் விலக்கிஆகாய கங்கையை அங்கையில் அள்ளிபாகாய செஞ்சொலவர் வீசுபடு காரம்'

'பொன்கொண்டு இழைத்த மணியைக் கொடு பொதிந்தமின்கொண்டு அமைத்த வெயிலைக் கொடு சமைத்தஎன்கொண்டு இயற்றிய எனத் தெரிகிலாதவன்கொண்டல் விட்டு மதி முட்டுவன மாடம்'

என கம்பன் இலங்கையைப் பேசியதெல்லாம்இதயத்தில் நிழலாடுகிறது.

இராஜ இராஜ சோழன் பற்றிஇவர் கவிதைகள் நாவாடுகிற போது

'கச்சி ஒருகால் மிதியா ஒருகாலால்தத்துநீர்த் தண்ணுஞ்சை தான் மிதியாப்-பிற்றையும் ஈழம் ஒருகால் மிதியா வருமே'

என சோழ மன்னனைப் பற்றிய முத்தொள்ளாயிரம் எல்லாம் மூளையுள் முற்றுகையிடுவதைத் தவிர்க்கவே முடியவில்லை.

இவரின் தமிழ்ப்பற்றை தமிழ்ப் பண்பாட்டை தமிழர் மீதான நேசத்தைக் காண்கிற போது

'தமிழ் எனது இருகண் பார்வைதமிழ் எனது உருவப் போர்வை தமிழ் எனது உயிரின் காப்புதமிழ் எனது உள ஏமாப்பு தமிழ் எனது உடைமைப் பெட்டி தமிழ் எனது உயர்வுப் பட்டி தமிழ் எனது உரிமை'

என தமிழின் மேன்மை பேசிய புலவர் குழந்தையின் இராவண காவியம் என் ஞாபக மண்டபங்களில் நின்று கொண்டு பூங்கொத்துகள் நீட்டத்தான் செய்கிறது.

இப்படி பல்வேறு அனுபவங்களை ஒரு கவிதைத் தொகுப்பு உற்பத்தி செய்யுமா என உயிருருக உறைந்து போகிறேன்.

ஒரு காதல் கவிதைத் தொகுப்பில் தமிழ் இனம் பற்றிதமிழ் நிலம் பற்றி தமிழ் மொழி பற்றிதமிழ்ப் பாரம்பரியம் பற்றிதமிழ்ப் பண்பாடு பற்றி இதன்முன் இந்தளவு எவரும் பேசியதாக என் கண்ணுக்கெட்டிய தூரம் வரை  தகவல்கள் இல்லை என்பதே உண்மை.

பாடலாசிரியர்
விக்டர்தாஸ்

Comments