கவிதை உணர்வும் தூண்டுதலும் பிறப்பிலிருந்தே இருக்கவேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

கவிதை உணர்வும் தூண்டுதலும் பிறப்பிலிருந்தே இருக்கவேண்டும்

திரைப்பட  இயக்குநர், தயாரிப்பாளர் என பரவலாக அறிமுகமாகி இருந்தாலும் கவிஞர் எனும்  அழகிய முகம் கொண்டவர் என்.லிங்குசாமி.  2001-ஆம் ஆண்டில் ‘ஆனந்தம்’ திரைப்படத்தின் மூலமாகத்  தமிழ்த் திரையுலகிற்குள்  காலடி எடுத்து வைத்தவர்.  ரன், பையா, சண்டைக்கோழி   என பல வெற்றிப்படங்களைத்  தந்தவர். கடந்த 30ஆண்டுகளாக ஹைக்கூ கவிதைகளை  வாசித்துக்கொண்டும், ஹைக்கூ கவிதைகளில் மனம் தோய்ந்து எழுதி வருகிறார். லிங்கூ, செல்ஃபி    எடுத்துக்கொள்கிறது மரம், என இரு ஹைக்கூ நூல்களைப் படைத்துள்ளார். இவரது  கவிதைகள் பல  மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. கல்லூரிப் பாடத் திட்டத்திலும் இடம்பெற்றுள்ளன. ஹைதராபாத்தில் ‘தி வாரியார்’ படத்திற்கான வேலைகளில் இருந்தவர்,  விடிகாலை  நேரத்தில் உரையாடிய கணங்களே கவிதையாக இருந்தன. இனி, கவிஞரும் ஹைக்கூம் நீங்களும்...

உங்களுக்குள் ஒரு கவிஞன் இருப்பதை எப்போது கண்டுகொண்டீர்கள்?

நம் உடலுக்குள் உயிர் இருப்பது மாதிரி, நமக்குள் எந்த கணத்தில் கவிதை வந்தது என்று பிரித்து ஆராய்ச்சியெல்லாம் செய்யவே முடியாது. நாள், நட்சத்திரம் குறித்து வைத்துக்கொண்டு இந்த நாளில் கவிஞனானேன் என்று யாராலும் சொல்ல முடியாது.

நாம் பிறந்தது முதலே நம்முடைய பேச்சு, நமது இயல்பு, ரசனை, வாசிப்பு எல்லாமே சேர்ந்துதான் நம்மைக் கவிஞனாக்குகிறது. சிறுவயதில் எங்கள் உறவினர் வீட்டில் தங்கி, நான் படித்துக்கொண்டிருந்த சமயமது. அப்போது நான் எது பேசினாலும் ‘இவன் என்ன எடக்கு மடக்கா பேசுறானே..!’ என்று சொல்வார்கள். நான் பேசுவதன் தன்மை புரியாமல் அப்படிச் சொல்வார்கள். அப்பவே நாம ஏதோ புதுசா பேசியிருக்கோம்னு தானே அர்த்தம்.

கவிதை உணர்வும் தூண்டுதலும் ஒருவனுக்கு இயல்பாகவே பிறப்பிலிருந்தே இருந்திருக்க வேண்டும். அம்மாவின் கருவிலிருக்கும்போதே கவிதை விதை நமக்குள் ஊன்றப்பட்டு விடுகிறது என்று நான் உணர்கிறேன்.

நான் கவிதை என்று எழுதி, அது ஒரு பத்திரிகையில் பிரசுரமான காலம் என்றால் 1991என்று சொல்வேன். பிறப்பிலேயே ஒருவன் கவிஞனாக இருந்தால் மட்டுமே ஒரு வரியாவது எழுத முடியுமென்று நம்புகிறேன்.

தொடக்கக் காலத்தில் புதுக்கவிதைகள் எழுதிக்கொண்டிருந்த உங்களை ஹைக்கூ ஈர்த்தது  எப்போது?   

நான் ஆரம்பத்தில் கூட நீண்ட கவிதைகளை நிறைய எழுதியதில்லை. முதன்முதலாக ‘செருப்பு’ எனும் தலைப்பில் நீண்ட கவிதையொன்றினை எழுதினேன். சில பிரசுரமாகாத நீண்ட கவிதைகளும் என்னிடம் இருந்தன. ஆனால் -    ‘இஸ்திரி போடும்

தொழிலாளி வயிற்றில்     சுருக்கம்’ எனும் கவிதையை எழுதிய பிறகு, சுருக்கமான ஹைக்கூ கவிதை வடிவம் மனசுக்கு ரொம்ப நெருக்கமாச்சு. கவிக்கோ அப்துல்ரகுமான் அய்யா, அறிவுமதி அண்ணன், எழுத்தாளர் சுஜாதா இவர்களெல்லாம்  அதுக்கு முக்கியமான காரணம்னு சொல்லலாம்.    

நீங்கள் எழுதிய முதல் ஹைக்கூ எது? அது இதழில் வெளியானபோது உண்டான பரவசத்தைப் பகிர்ந்துகொள்ளலாமா?   

இப்போது நினைத்தாலும் அந்த நாள் எனக்குப் பரவசத்தைத் தருவதாக இருக்கிறது. எனது முதல் கவிதை வெளியான ‘ஆனந்த விகடன்’ இதழில் இருந்த விளம்பரங்களையும் கூட வாசித்து முடித்தேன். அந்த இதழைப் பூஜை அறையில் வச்சாச்சு. படிக்கத் தெரியாதவங்க கிட்டேக்கூட காட்டியாச்சு. படத்தோட பாட்டு ஒன்றில் சொல்கிற மாதிரி, வீட்டிலுள்ள ஆடு, மாடு, கோழி எல்லார்க்கிட்டேயும் சொல்லியாச்சு.

அந்தப் பரவசம் சொல்லில் அடங்காதது. ‘உங்கள் கவிதை பிரசுரமாகியிருக்கிறது’ என்று  வந்த கடிதமும், கூடவே வந்த 30ருபாய் மணியார்டரும் என் வாழ்வில் மறக்கவே முடியாதது. அந்தப் பகுதியிலிருந்த பல கவிஞர்களும், ‘கவிதையை நீ லட்டர்ல எழுதி அனுப்பினீயா இல்லை இன்லேண்ட் கவர்ல எழுதி அனுப்புனீயா?’ன்னு கேட்டாங்க. நானும் ஒரு பெரிய கவிஞரா என்னை நினைச்சுக்கிட்டு, “எதுல அனுப்புறோம்ங்கிறது முக்கியமில்லை; எதை அனுப்புறோம்ங்கிறது தான் முக்கியம்” சொன்னேன். லவ் பண்ணின பொண்ணுக்கிட்டே நேரடியாக கொடுக்க தைரியமில்லாம, அவகூட வர்ற தோழி கிட்டே புக்கை கொடுத்தது எல்லாமே பரவச நிலைதான். என்னோட முதல் படம் ‘ஆனந்தம்’ வெளியான போது என்ன பரவசத்திலே இருந்தேனோ, அதே நிலைதான் என்னோட முதல் கவிதை பிரசுரமான அன்றும் இருந்தது.

நெருக்கடிமிக்க திரைத்துறையில் இயக்குநராக, தயாரிப்பாளராக இருக்கும் உங்களுக்கு ஹைக்கூ எழுதும் அமைதியான மனநிலை எப்படி வாய்க்கிறது? 

ஹைக்கூ எழுதும் மனநிலையை நான் என்னுள் தக்க வைத்து இருப்பதினால்தான் என்னால் இவ்வளவு வேலைகளையும் பார்க்க முடிகிறது என்பேன். அதுதான் ஆதாரமாக இருக்கிறது.

ஹைக்கூவின் கிளை வடிவங்களான சென்ரியு, லிமரைக்கூ, லிமரிக்சென்ரியு , ஹைபுன்  ஆகிய   வடிவங்களில்  நீங்கள்  எழுதுவதில்லையே... ஏன்?

நான் இரண்டு வரிகளில், மூன்று வரிகளில் எழுதிவிட்டால் அது ஹைக்கூ என்று இன்னமும் நம்பிக் கொண்டிருக்கிறேன். நான் எழுதிய கவிதைகளில் ஹைக்கூவின் பல வடிவ கவிதைகளும் இருக்கக்கூடும். பெயர் தான் மாறுபடுகிறதேயொழிய எல்லாமே கவிதைகள்தான். இன்னும் சொல்லப்போனால் ஜப்பானிய ஹைக்கூவின் உண்மையான இலக்கணத்தோடு யாருமிங்கே ஹைக்கூ எழுதுவதில்லை. நான் எழுதியிருக்கும் இந்த நூறு கவிதைகளில் யாராவது ஹைக்கூ அளவுகோலை வைத்துப்பார்த்தால், இரண்டு, மூன்று ஹைக்கூ தேறலாம். ஆனால், நமக்கு நாம் எழுதுவது ஹைக்கூ தான். அந்த நம்பிக்கையோடுதான் எழுதிக் கொண்டிருக்கிறோம்.

ஜென் தத்துவத்தில் மனம் ஒன்றிப்போகிறவராக இருக்கிறீர்கள்.  இந்த மனநிலைக்கு வர     உங்களுக்குத் தூண்டு தலாக இருப்பது எது?

தியானம் தான்.

தமிழ்ச்சூழலில்  இன்றைக்கு எழுதப்படும் ஹைக்கூ கவிதைகளைப் பற்றிய     தங்களின் மதிப்பீடு என்ன?

தொடர்ந்து ஹைக்கூ கவிதைகளை வாசித்துக் கொண்டிருப்பவன் நான். தற்போது நடத்திய கவிக்கோ நினைவு ஹைக்கூப் போட்டியில் 50ஹைக்கூ கவிதைகளைத் தேர்வுசெய்ய வாசித்த போது ஒரு நம்பிக்கை வந்தது. நிறைய கவிஞர்கள் சிறந்த ஹைக்கூ கவிதைகளை எழுதப் போகிறார்கள் என்ற எண்ணமும் உண்டானது. மிக

அற்புதமா சில கவிஞர்கள் எழுதியிருக்காங்க. இன்றைய சூழல் நல்லாவே இருக்கு. அதை இன்னும் பெரிதாகக் கொண்டு செல்வதற்கான வேலைகளைச் செய்ய வேண்டுமென்கிற ஆசை எனக்குள்ளிருக்கிறது.

ஹைக்கூவில் வெளிப்படும் காட்சிப்பூர்வ மான அழகியல் பதிவுகள், உங்களின் திரைப்ப டக் காட்சி அமைப்புகளிலும் வெளிப்படும் கணங்கள் குறித்து சொல்லுங்களேன்?

என் படத்தில் வரும் பாடல்களில் இடம்பெறும் மேண்ட்டேஜ்கள், குட்டிக்குட்டி டயலாக்குகள்  எல்லாமே ஹைக்கூவா இருக்கும். என்னோட டயலாக் பேட்டன் கூட சின்னதா நறுக்குன்னு  ஹைக்கூ வடிவத்திலே தான் வருது.    ‘ரன்’ படத்தில் வரும், ‘விட்ற மாட்டியே; விட்டா உசிரை விட்டுருவேன்’ டயலாக் மாதிரி நிறையவே என்னோட படங்கள்ல வரும். ஹைக்கூ எழுதிறதாலே எனக்கு அந்த மாதிரியான பேட்டன் தான் வருதுன்னு நம்புறேன். ஹைக்கூ நமக்குள்ளே இருக்கிறதுனாலே என்னோட டயலாக்லேயும் அதுதான் வெளிப்படுது. ஒரு ஆக்‌ஷன் படத்தைக்கூட ஒரு லவ்வப்பிலா, எல்லாரும் உட்கார்ந்து பார்க்கிற மாதிரி எடுக்கிறது, ஒரு புக்குக்குள்ளே அரிவாள் வைச்சு எடுக்கிற ஒரு ஷாட் வைக்க ஹைக்கூ எழுதிறவங்களால மட்டும்தான் முடியும்னு நம்புறேன்.  

முகநூல் குழுக்களில் ஹைக்கூ எனும் பெயரில் எழுதப்படும் கவிதைகளைப் படிக்கும் சூழல்       எப்போதாவது அமைந்திருக்கிறதா?    

பேஸ்ஃபுக்ல நான் ஆக்டிவ்வா இல்லே. அதனால அவற்றை படிப்பதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை.

தங்களின் முதல் ஹைக்கூ நூலான ‘லிங்கூ’வுக்கு கிடைத்த வரவேற்பு எப்படியிருந்தது?

2013-இல் என்னோட முதல் ஹைக்கூ நூலான ‘லிங்கூ’வை ‘ஆனந்த விகடன்’தான் வெளியிட்டது. அந்த நூல் ஆங்கிலம், மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது, கல்லூரிப் பாடத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளது. ரொம்ப முக்கியமான நண்பர்கள், அந்த ஹைக்கூ நூலைப் பயணங்களில் படிச்சிட்டுப் போறதா சொல்வாங்க. ஹைக்கூவில் தொடர்ந்து இயங்கிக்  கொண்டிருக்கிற மு.முருகேஷ் தொடங்கி, ஹைக்கூவில் ஈடுபடுகிற முக்கியமான பலர் பேசினாங்க. அறிவுமதி அண்ணன், கலாப்ரியா, வைரமுத்து, கே.பாலசந்தர், ஷங்கர் மாதிரியான ரொம்பவே முக்கியமானவங்க அந்த நூலைப் பாராட்டிப் பேசியிருக்காங்க. முதல் நூல் எனக்கும் மறக்க முடியாத நூல்.

கேள்விகள்:
கவிஞர் மு.முருகேஷ்

Comments