சட்டமும் ஒழுங்கும் சீர்குலையலாகாது! | Page 5 | தினகரன் வாரமஞ்சரி

சட்டமும் ஒழுங்கும் சீர்குலையலாகாது!

இலங்கையில் மக்கள் ஆரம்பித்த போராட்டங்களில் சற்றுத் தணிவு நிலைமையை அவதானிக்க முடிகின்றது. ஆனால் நாட்டில் அரசியல் பதற்றம் இன்னுமே தணிந்ததாகத் தெரியவில்லை. நாட்டின் அரசியல் களமானது ஒவ்வொரு கணமும் புதிய புதிய மாற்றங்களுடனேயே நகர்ந்து கொண்டிருக்கின்றது. அரசியலில் அடுத்த நிமிடம் எத்தகைய திருப்பம் நிகழுமென்பதை ஊகிக்க முடியாதவாறு சமீப நாட்களாக பரபரப்பு தொடருகின்றது.

அரசாங்கம் பதவியிலிருந்து விலகும் வரை போராட்டத்தைக் கைவிடப் போவதில்லையென மக்கள் ஆரம்பித்த போராட்டங்கள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. கோட்டாபய ராஜபக்‌ஷ தனது ஜனாதிபதி பதவியைத் துறந்து விட்டார். ஆனாலும் ஆர்ப்பாட்டக்காரர்களின் கோரிக்கை முழுமையாக நிறைவேறவில்லை என்பதால் போராட்டங்கள் இன்னமும் தொடர்கின்றன.

பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் பெற்றதன் பின்னர் இலங்கையின் வரலாற்றில் முன்னெப்போதுமே சந்தித்திருக்காத பொருளாதார நெருக்கடியினால் மக்களுக்கு ஏற்பட்ட அவலங்கள் எல்லைமீறிச் சென்றதனாலேயே இவ்வாறானதொரு மக்கள் போராட்டம் திடீரென்று வெடித்தது. அன்றாட வாழ்க்கையை நகர்த்திச் செல்ல இயலாத கட்டமொன்று உருவெடுத்த வேளையில், மக்கள் போராட்டக் களத்தில் இறங்கினர்.

இத்தகைய துரதிர்ஷ்ட சூழ்நிலையானது இலங்கைக்குப் புதியதாக இருக்கலாம். ஆனால் உலகின் பல நாடுகளின் வரலாற்றில் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தாங்க முடியாத நெருக்கடியின் அடுத்த கட்டம் பெரும்பாலும் இவ்வாறுதான் திசைமாறுவதுண்டு. எமது தாய்நாடு சந்தித்திருப்பதும் அவ்வாறாதொரு அவலமே ஆகும்.

ஜனாதிபதிப் பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ஷ விலகியுள்ளதால் பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நேற்றுமுன்தினம் பதவியேற்றுள்ளார். அப்பதவியானது புதிய ஜனாதிபதியொருவர் தெரிவு செய்யப்படும் வரையான தற்காலிக ஏற்பாடாகும். எனினும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் ஓயவில்லை. இந்நிலையில் நாட்டின் அரசியல் கொந்தளிப்பு விரைவில் முடிவுக்கு வர வேண்டுமென்பதே அனைத்துத் தரப்பு மக்களின் இன்றைய வேண்டுதலாக இருக்கின்றது. அன்றாட பாவனைப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம், எரிபொருள் நெருக்கடி, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு போன்றவற்றால் மக்கள் கடந்த சில மாதங்களாக பெரிதும் நொந்து போயுள்ளனர். எனவே இன்றைய துன்பம் விரைவில் முடிவுக்கு வந்தால் போதுமென்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.

மறுபுறத்தில் நோக்குகின்ற போது, மக்களது போராட்டத்தின் பிரதிகூலமான விளைவுகளையும் நாடு இப்போது சந்திக்க வேண்டியுள்ளது. ஆர்ப்பாட்டங்கள் எல்லைமீறிச் செல்கின்ற சந்தர்ப்பங்களில் மோதல்களும், வன்முறைகளும் உருவெடுப்பதைக் காண முடிகின்றது. அரச உடைமைகள் சேதமாக்கப்படுவதையும், நாட்டின் சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற பொலிசாரும் பாதுகாப்புப் படையினரும் இம்சைக்குள்ளாக்கப்படுவதையும் நேரில் காண்கின்றோம்.

அதேசமயம், சாதாரண அப்பாவிப் பொதுமக்களும் ஊடகவியலாளர்களும் தாக்குதலுக்குள்ளான சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. இவையெல்லாம் வன்மையாகக் கண்டிக்கத்தக்க சம்பவங்களாகும். அதே போன்று ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் அலரி மாளிகை போன்ற தொல்பொருள் அடையாளச் சின்னங்களுக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசித்த பின்னர் அங்குள்ள உடைமைகளுக்கு பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

நாட்டின் புராதன அடையாளங்கள் பாதுகாக்கப்பட வேண்டியவையாகும். அதேபோன்று நாட்டின் சட்டதிட்டங்களும், பாரம்பரிய கீர்த்தியும் பாதுகாக்கப்படுவது அவசியம். நாட்டின் அமைதி சீர்குலைந்து, சட்டமும் ஒழுங்கும் மக்கள் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி விடுமோவென்ற அச்சம் சாதாரண மக்கள் மத்தியில் நிலவுவதை இவ்விடத்தில் சுட்டிக்காட்டாமலிருக்க முடியவில்லை.

அரசியலும் ஆட்சியதிகாரமும் மாற்றமடைந்து செல்வது வழமை. ஆனால் நாட்டின் அமைதியும், ஒழுங்கும் சீர்குலையும் படியாக நிலைமை மாறிவிடலாகாது என்பதே மக்களின் வேண்டுதலாக உள்ளது.

Comments