இலங்கையின் அரசியலில் பதற்றம் நிறைந்த நாட்கள்! | தினகரன் வாரமஞ்சரி

இலங்கையின் அரசியலில் பதற்றம் நிறைந்த நாட்கள்!

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட எட்டாவது ஜனாதிபதியாகப் பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஷ மக்கள் எதிர்ப்புக் காரணமாக தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நேற்றுமுன்தினம் பதவியேற்றுள்ளார். புதிய ஜனாதிபதியொருவர் நியமிக்கப்படும் வரை ரணில் விக்கிரமசிங்க அப்பதவியை வகிப்பார்.

ஜனாதிபதியாகப் பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியிருந்த நிலையில், அவருடைய பதவிவிலகல் கடிதம் கடந்த 14ஆம் திகதி இரவு தனக்குக் கிடைத்ததாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வெள்ளிக்கிழமை காலை அறிவித்திருந்தார்.

இதற்கமைய கடந்த 14ஆம் திகதியுடன் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியிலிருந்து விலகியுள்ளார். அரசியலமைப்பிற்கு அமைய ஜனாதிபதி பதவிக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேரடியாகப் பதில் ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

இலங்கை வரலாற்றில் இது புதியதொரு அத்தியாயமாகப் பதியப்படுகிறது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையின் கீழ் பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னரே பதவியை இராஜினாமாச் செய்த முதலாவது ஜனாதிபதி என்ற பெயரையும் கோட்டாபய ராஜபக்ஷ பெற்றுள்ளார்.

இவருடைய காலத்தில் எடுக்கப்பட்ட சில தவறான தீர்மானங்கள் மற்றும் உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இலங்கையிலும் உருவெடுத்த சிக்கல்களால் அவர் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டது.

இதற்றை அடிப்படையாகக் கொண்டே கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. கடந்த 9ஆம் திகதி ஆயிரக்கணக்கானவர்கள் கொழும்பில் ஒன்றுகூடி நடத்திய பாரிய ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைமை ஏற்பட்டது.

இந்த நிலையில் கோட்டாபயவின் பதவி விலகல் கடிதம் சபாநாயகருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தே புதிய ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. ஜனாதிபதி பதவியில் வெற்றிடம் ஏற்பட்டால் அதனை நிரப்புவது தொடர்பான விடயங்கள் அரசியலமைப்பின் 40ஆவது சரத்து மற்றும் 1981ஆம் ஆண்டின் 02ஆம் இலக்க சட்டத்துக்கு அமைய முன்னெடுக்கப்படும். இதற்கு அமையவே பிரதமராகவிருந்த ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாகப் பதவியேற்றுள்ளார்.

சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய ஜனாதிபதிப் பதவி வெற்றிடமான திகதிக்குப் பின்னர் இயன்றளவு விரைவாகவும், எச்சந்தர்ப்பத்திலும், அத்திகதியிலிருந்து ஒரு மாதத்திற்குப் பிந்தாமலும் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட வேண்டும். இதற்கமைய இந்த வெற்றிடம் ஏற்பட்டு மூன்று நாட்களுக்குள்ளாகப் பாராளுமன்றத்தைக் கூட்டுவதற்கு அழைப்பு விடுப்பதாகச் செயற்படுதல் வேண்டும் என்பதுடன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் அத்தகைய கூட்டத்துக்கென நிர்ணயிக்கப்படும் திகதியையும், நேரத்தையும் பாராளுமன்றத்தின் உறுப்பினர்களுக்கு அறிவிக்க வேண்டும்.

அவ்வாறு பாராளுமன்றம் கூடும்போது ஜனாதிபதிப் பதவியில் வெற்றிடம் ஒன்று ஏற்பட்டுள்ளது எனச் செயலாளர் நாயகம் பாராளுமன்றத்துக்கு அறிவிப்பார்.   இதற்கமைய நியமனங்கள் அவரால் பெற்றுக் கொள்ளப்படுவதற்கான திகதியையும் நேரத்தையும் அவர் நிர்ணயிப்பதுடன், கூட்டத் திகதியிலிருந்து 48மணித்தியாலங்களுக்கு முந்தாததும், ஏழு நாட்களுக்குப் பிந்தாததுமான ஒரு திகதியாக அது இருக்க வேண்டும். இதற்கு அமையவே சனிக்கிழமை (16) கூடிய பாராளுமன்றத்தில் ஜனாதிபதிப் பதவி வெற்றிடம் குறித்து அறிவிக்கப்பட்டது.

இது தவிரவும், குறித்த சட்டமூலத்துக்கு அமைய நியமனங்கள் பெற்றுக் கொள்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட திகதியன்று பாராளுமன்றம் கூட வேண்டும் என்பதுடன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவத்தாட்சி அலுவலராகவும் செயலாற்றுவார்.

ஜனாதிபதிப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கென எவரேனும் உறுப்பினரின் பெயரை முன்மொழிய விரும்பும் ஒவ்வோர் உறுப்பினரும், அவர் எந்த உறுப்பினரின் பெயரை முன்மொழிய விரும்பகிறாரோ, அந்த உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட்டால் ஜனாதிபதி பதவியில் அவர் சேவை செய்ய விருப்புடையவராகவுள்ளார் எனக் கூறும் எழுத்திலான சம்மதத்தை அத்தகைய உறுப்பினரிடமிருந்து முன்னர் பெற்றுக் கொண்டிருத்தல் வேண்டும்.

அவ்வாறு சம்மதத்தைத் தெரிவித்த உறுப்பினர்கள் அன்றைய தினம் பாராளுமன்றத்திற்கு சமுகமளித்திருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது பற்றிய திகதிகளை சபாநாயகர் அறிவித்திருந்தார். இதற்கமைய எதிர்வரும் 19ஆம் திகதி வேட்புமனுக்கள் கோரப்படவிருப்பதுடன், 20ஆம் திகதி புதிய ஜனாதிபதி ஒருவரை பாராளுமன்றத்தின் ஊடாகத் தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும்.

புதிய ஜனாதிபதிப் பதவிக்கு பதவிக்கு உறுப்பினர் ஒருவரின் பெயர் மட்டுமே முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டிருந்தால் அவர் அந்தகைய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளாரென செயலாளர் நாயகம் பாராளுமன்றத்துக்கு அறிவிப்பார். ஒன்றுக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் அவ்வாறு முன்மொழியப்பட்டு, வழிமொழியப்பட்டு இருப்பின் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நேரத்திலிருந்து நாற்பத்தெட்டு மணித்தியாலங்களுக்குப் பிந்தாத ஒரு திகதியில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என சட்டம் குறிப்பிடுகிறது. புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கு இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும். தெரிவத்தாட்சி அலுவலரினால் வாக்குச் சீட்டுக்கள் வழங்கப்பட்டு வாக்களிப்பு இடம்பெறும். வாக்களிப்பு பூர்த்தியடைந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி பெற்றவர் அறிவிக்கப்படுவார்.

இருவருக்கு இடையில் அல்லது அதற்கும் மேலான எண்ணிக்கை கொண்ட வேட்பாளர்களுக்கிடையில் சமமான வாக்குகள் காணப்பட்டால் குறைந்த வாக்குகள் பெற்றவரின் வாக்குகள் நீக்கப்பட்டு அதில் இரண்டாவது விருப்பத் தெரிவு மற்றையவர்களுக்கு வழங்கப்படும். இவற்றின் அடிப்படையிலேயே புதிய ஜனாதிபதி தேர்வு செய்யப்படுவார்.

சட்ட மற்றும் அரசியலமைப்பின் ஏற்பாடுகள் இவ்வாறிருக்கும் நிலையில், புதிய ஜனாதிபதியாக யாருடைய பெயர்களை முன்மொழிவது என்பது தொடர்பில் அரசியல் கட்சிகள் மத்தியில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுனவின் சுயாதீனக் குழுவினர் உள்ளிட்டவர்கள் புதிய ஜனாதிபதி மற்றும் புதிய பிரதமர் தொடர்பான கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளனர். அதேநேரம், தற்பொழுது ஆளும் கட்சியாக இருக்கும் பொதுஜன பெரமுன கட்சியும் தமது சார்பில் ஜனாதிபதி பதவிக்கு ஒருவரின் பெயரை முன்மொழியலாம் என்றும், சில வேளைகளில் தற்போதைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பெயரையே அவர்கள் முன்மொழியக் கூடும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

அவ்வாறான பட்சத்தில் தற்பொழுது காணப்படும் பெரும்பான்மையைப் பயன்படுத்தி அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மறுபக்கத்தில் சஜித் பிரேமதாச மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன. எவ்வாறு இருந்தாலும் பாராளுமன்றத்தில் உள்ளவர்களே தற்போதைய பிரச்சினைகளுக்கு இடைக்காலத் தீர்வொன்றை வழங்க முடியும். குறிப்பாக சர்வகட்சி அரசாங்கமொன்று அமையப்பட வேண்டும் என்றும், பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகள் யாவும் இதில் பங்கெடுக்க வேண்டும் என்ற விடயமும் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வருகின்றன.

தற்பொழுது தோன்றியிருக்கும் அரசியல் சூழலில் அதற்கான வாய்ப்புக்களை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அரசியல் கட்சிகள் தமது சுயலாப சிந்தனைகளைக் கைவிட்டு குறுகிய காலத்துக்காவது ஒற்றுமையுடன் நாட்டை தற்போதைய பிரச்சினைகளிலிருந்து வெளிக்கொணர்வதற்கு ஒன்றுபட்டு செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.

அதேநேரம், யார் புதிய ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றாலும் எரிபொருள், எரிவாயுத் தட்டுப்பாடு, விலைவாசி அதிகரிப்பு உள்ளிட்ட மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வொன்றை முன்வைக்க வேண்டும். இதனையே போராட்டக்காரர்களும் நாட்டு மக்களும் சட்டவாக்கத்தைச் சேர்ந்தவர்களிடம் எதிர்பார்க்கின்றனர். அத்துடன், மக்கள் போராட்டத்துடன் புதியதொரு அரசியல் கலாசாரமொன்றும், ஊழல் நிறைந்த ஆட்சிமுறையும் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே பலருடைய எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

சம்யுக்தன்

Comments