"பயன்படுத்தப்படாத பெருந்தோட்ட காணிகளை அரசே பொறுப்பேற்று பகிர்ந்தளிக்க வேண்டும்" | தினகரன் வாரமஞ்சரி

"பயன்படுத்தப்படாத பெருந்தோட்ட காணிகளை அரசே பொறுப்பேற்று பகிர்ந்தளிக்க வேண்டும்"

தரிசு நிலங்களை பெருந்தோட்டத் தொழிலாளருக்கு பகிர்ந்து கொடுப்பதன் மூலம் எதிர்பார்க்கப்படும் உணவுப் பஞ்சத்தை தவிர்க்கக் கூடியதாக இருக்கும் என்ற தகவல் வெளியானதில் இருந்து பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் முதல் தகவலை வெளியிட்டதோடு அரசு மௌனமாகிவிட்டது. எனவே இந்த விவசாயம் தொடர்பாக விஷய ஞானமும் அனுபவமும் கொண்ட வி. புத்திரசிகாமணியிடம் கேட்டோம். அவர் கூறியதை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.

மலையகத் தோட்டப்பகுதியில் கடந்த 30வருடங்களுக்கு மேலாக தரிசு காணிகள்பற்றி பேசப்பட்டு வருகின்றது. இக் காணிகளை தோட்டப்பகுதியில் வேலையற்று இருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு வழங்கப்பட வேண்டுமா? அல்லது தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டுமா என்பது பல தடவைகள் பேசப்பட்ட ஒரு தலைப்பு. கிட்டத்தட்ட 40ஆயிரம் ஹெக்டயர் காணி இப்படி தரிசுக்காணிகள் என்ற அடிப்படையில் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு கீழ் வருகின்றன.  

இந்தத் தரிசு காணிகள் விவசாயத்திற்கு தகுதியற்றவை. பாறைகள் நிறைந்த, மிகச் சரிவான, விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட முடியாத காணிகளே தரிசு, பயனுக்கு உதவாத காணிகளாக அறியப்படுகின்றன. சிறிது காலம் சென்றபின் இந்த நிலத்தை வெற்றுக் காணியாக வைத்திருந்தால் சிறிது காலம் சென்றபின் விவசாயம் செய்வதற்கு உகந்ததாக தரிசு காணிகள் என்றும் கொல்கின்றார்கள். ஆனால் நிர்வாகங்கள் இந்தக் காணிகள் விவசாயம் செய்வதற்கு உகந்த இடமல்ல என்றே கூறிவருகின்றன.  

மலையக அரசியல்வாதிகள் குறிப்பிடுவது பயன்படுத்துவதற்கு பொருத்தமற்ற தரிசு காணிகளை அல்ல. தோட்டங்களில் பல்வேறு காரணங்களின் பேரில் பயன்படுத்தப்படாமல் விடப்பட்டு, காடாகவும், நிலம் சுரத்தற்றுப் போனதாகவும் காணப்படும் காணிகளையே பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் என்கிறார்கள்.  தொழில் இல்லாத இளைஞர் யுவதிகளுக்கோ அல்லது தொழிலாளர்களுக்கோ இக் காணிகளை பிரித்து வழங்க தோட்ட நிர்வாகங்கள் விரும்புவதில்லை. எனவே ஜனாதிபதியும் பிரதமரும் இந்தக் காணிகளை தோட்டத் தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுக்க வேண்டுமானால் முதல் வேலையாக அரசாங்கம் இந்தக் காணிகளை கையகப்படுத்தி விவசாயம் செய்வதற்கும் பண்ணை வளர்ப்புக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும்.  

புத்திரசிகாமணி மலையக பெருந்தோட்டத்துறையில் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் கொண்டவர். எனவே இப் பயன்படுத்தப்படா காணிகள் பற்றி அவரிடம் பேசியபோது மேற்கண்டவாறு அவர் கூறினார். 

அரசாங்கம் தரிசு எனச் சொல்லப்படும் காணிகளை சுவீகரித்து தன் கைக்குள் எடுத்துக்கொள்ள வேண்டும். தானாகவே கம்பனிக்காரர்கள் அந்தக் காணிகளை வழங்கமாட்டார்கள். இந்தக் காணிகளுக்கும் தோட்ட நிர்வாகங்கள் குத்தகை பணம் வழங்கி வருகின்றார்கள். இவ்வாறு தோட்டப் பகுதியிலுள்ள பயன்படுத்தப்படாத காணிகளை அரசாங்கம் பிரித்துக்கொடுக்க முன்வந்தால் அந்தக் காணிகளுக்கு வழங்கிய குத்தகை பணத்தை திருப்பி வழங்கும்படி தோட்டக் கம்பனிகள் அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கும். அல்லது தற்பொழுது கம்பனி நிர்வாகம் வழங்கும் குத்தகை பணத்தில் தரிசு நிலங்களுக்கான குத்தகையை குறைத்துக்கொண்டு ஏனைய காணிகளுக்கான குத்தகை பணத்தை மாத்திரம் வழங்கலாம்.  

எந்தவித நடவடிக்கையும் இல்லாமல் இந்தக் காணிகளை மக்களுக்கு பிரித்து வழங்குவோம் என்று அரசாங்கம் கூறுமானால் அது நம்பிக்கை தரும் ஒன்றல்ல. எனது அனுபவத்தின் மூலம் தான் இதைக் கூறுகிறேன். நாங்கள் கடந்த கடந்த காலங்களில் இந்த தரிசுக் காணிகளை தோட்டத் தொழிலாளர்களுக்கு பிரித்துக் கொடுங்கள் என்று கேட்டிருக்கின்றோம். ஆனால் தொழிலாளர்களுக்கு வழங்க கம்பனிகள் முன்வரவே இல்லை.  

ஒருசில நுவரெலியா மாவட்ட கம்பனித் தோட்டங்களில் பல ஏக்கர் தனியாருக்கு விவசாயம் செய்வதற்காக குத்தகைக்கு விடப்பட்டிருப்பது எனக்குத் தெரியும். அதேசமயம் தோட்ட நிர்வாகங்களால் தனியாருக்கு காணிகளை குத்தகைக்கு வழங்க முடியுமா என்ற கேள்வியும் இருக்கின்றது. அவர்கள் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் உப குத்தகைக்கு காணி கொடுக்கப்பட முடியுமா என்பதையும் பார்க்க வேண்டும்.  

அப்படி ஒப்பந்தத்தில் தனியாருக்கு உப குத்தகைக்கு கொடுக்க முடியுமானால் ஏன் தோட்டத் தொழிலாளர்களுக்கு இந்தக் காணியை கொடுக்க முடியாது என்பதையும் நாம் தேடிப் பார்க்க வேண்டும்.

மலையக அரசியல்வாதிகள், தொழிற்சங்கவாதிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் தோட்டக் கம்பனிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை இணைத்து ஒரு குழுவை அமைத்து இந்த வாய்ப்புகள் குறித்து ஆராய வேண்டும். அதற்கு மேலதிகமாக அரசாங்கம் ஒரு சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவரலாம்" என்று எம்மிடம் கூறிய புத்திரசிகாமணி அதை விவரமாகச் சொல்லத் தொடங்கினார்.  

"தரிசு காணிகளை காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கீழ் கொண்டுவரலாம். தோட்ட குடியிருப்புகள் மீதான அதிகாரம் தோட்ட நிர்வாகங்களுக்கு வழங்கப்படவில்லை. அதுதான் உண்மை. அதாவது அரச பெருந்தோட்ட யாக்கம், மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபை போன்ற நிர்வாகத்தின் கீழும் தோட்ட குடியிருப்புகள் வழங்கப்படவில்லை. அதை ஒதுக்கித்தான் வைத்திருக்கின்றார்கள். அதுபோலவே தோட்ட பயன்படுத்தப்படாத காணிகளையும் கம்பனி மேற்பார்வையிலிருந்து ஒதுக்கி நேரடியாக அரசாங்கத்தின் மேற்பார்வைக்கு கொண்டு வருவதற்கு காணி சீர்திருத்த சட்டத்தின் கீழ் திருத்தம் கொண்டுவர வேண்டும். மலையக பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளை பெற்று இத்திருத்தத்தை கொண்டுவர வேண்டும்.  

ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றைக் கூறுவார்களேயானால் அது அரசாங்கம் கூறுவதாகவே கருதப்பட வேண்டும். எனினும் எப்படி இதைச் செய்யப் போகிறோம் என்பதை எவரும் கூறவில்லை. எனவே எந்தச் சட்டத்தின் மூலம்தான் கொடுக்கப் போகிறோம் என்ற வழிவகைகளை கூறவேண்டும். காணிகளை யார் யார் பெறப் போகிறார்கள், யார் யார் தகுதியுடையவர்கள் என்று பார்க்க வேண்டும். கம்பனிகள் இந்த காணிகளுக்கு குத்தகை பணம் வேண்டும் எனக் கூறினால் மலையக அரசியல்வாதிகளும் தொழிற்சங்கவாதிகளும் தொழிற்சங்கங்களும் குத்தகைக்கு எடுத்து கூட்டுறவு அடிப்படையில் தொழிலாளர்களின் பிள்ளைகள் விவசாயம் செய்ய வழங்க வேண்டும்.  

இப்பொழுது மலையக பெருந்தோட்டப் பகுதியில் உள்ள பிரச்சினை என்னவென்றால் விவசாயம் செய்வதற்கோ தோட்ட வேலை செய்வதற்கோ இளைஞர் யுவதிகள் இங்கே தயாராக இருக்கிறார்களா? கொழும்புக்கு சென்று சுப்பர் மார்க்கட்டிலும் கொத்துரொட்டிக் கடைகளிலும் டெக்ஸ்டைல்களிலும் தொழில் செய்வதையே சுகமாக நினைக்கின்றார்கள். மற்றும் ஒருசிலர் கட்டட தொழில் செய்ய விரும்புகின்றார்கள். காரணம், கட்டட தொழில் செய்பவர்களுக்கு கிடைக்கும் சம்பளம் தோட்டத்தில் கிடைக்கும் சம்பளத்தை விட மூன்று நான்கு மடங்கு அதிகம்.  

எனவே எங்களது இளைஞர் யுவதிகள் விவசாயத்துறையை கற்றுக்கொள்வது மிகவும் அவசியம். நுவரெலியா பகுதியில் உள்ளவர்கள் விவசாயம் செய்வதற்கு விரும்புகின்றார்கள்.

இதற்கு காரணம் விவசாயத்தில் அதிக இலாபம் கிடைக்கிறது. ஆனால் கடுமையாக உழைக்க வேண்டும்.  

மேலும் இன்றைய சூழ்நிலையில் விவசாயத்தின் மூலம் இலாபம் கிடைக்கின்றதா என்பதும் கவனிக்கப்பட வேண்டியது.

இரசாயன உரம், விவசாய மருந்து வகைகள், விதைகள் ஆகியவற்றின் விலைகள் பன்மடங்காக அதிகரித்துள்ளன. இவற்றை குறைந்த விலைகளில் வழங்க அரசு முன்வர வேண்டும்.  

1500ரூபாவிற்கு வாங்கிய ஒரு மூடை யூரியா தற்பொழுது ஆயிரம் ரூபாவிற்கும் 1500ரூபாவிற்கும் விற்கப்பட இரசாயன உரம் ஒரு மூடை 20ஆயிரம் ரூபாவிற்கு விற்கப்படுகிறது. இந்தச் சூழலில் விவசாய உபகரணங்களை வேலையற்ற இளைஞர் யுவதிகள் பெற்று விவசாயம் செய்ய முன்வருவார்களா? 

எனவே பெருந்தோட்டப் பகுதிகளுக்கு சகாய விலையில் விவசாய உபகரணங்கள் பெற்றுக்கொடுக்க அரசாங்கமும் சம்பந்தப்பட்டவர்களும் நடவடிக்கை மேற்கொண்டால் பெருந்தோட்டப்பகுதியில் விவசாயத்தை பெருமளவில் அபிவிருத்தி செய்யலாம்"  என்கிறார் புத்திரசிகாமணி.    

நூரளையூரான்

Comments