ஈழத்து இலக்கியப் பரப்பில் பிரகாசித்தவர் நாவேந்தன்..! | தினகரன் வாரமஞ்சரி

ஈழத்து இலக்கியப் பரப்பில் பிரகாசித்தவர் நாவேந்தன்..!

'நற்றமிழுக்கு ஒரு நாவேந்தன்' எனப் புகழ்பெற்றவர் நாவேந்தன். ஈழத்து இலக்கியப் பரப்பில் ஐந்து தசாப்தங்களுக்கு மேலாகச் சுடர்விட்டுப் பிரகாசித்தவர். 

சிறுகதை, கவிதை, நாடகம், நாவல், கட்டுரை, விமர்சனம் எனப் பல்துறைகளிலும் அவர் எழுதிக் குவித்தவை ஏராளம். 

தமிழகத்திலும், ஈழத்திலும் பத்திரிகைகள், சஞ்சிகைகள் பலவற்றிலும் அவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. அவற்றில் சிலவே நூலுருப்பெற்றன. 

நாவேந்தன் பன்முகத்தன்மை வாய்ந்தவர். நாடறிந்த நல்லதோர் பேச்சாளராகத் திகழ்ந்தவர். அற்புதமான எழுத்தாளர். சிறந்த தொழிற்சங்கவாதி. ஆளுமைமிக்க அதிபர். 

'நாவேந்தன், தமிழகத்துத் தலைசிறந்த பேச்சாளர் வரிசையில் வந்த ரா. பி. சேதுப்பிள்ளை, நாவலர் சோமசுந்தர பாரதியார், அண்ணாதுரை போன்றோரின் வழியில், இலங்கையில் அழகுதமிழில் எளிமையாகப் பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில் ஆற்றொழுக்காகப் பேசும்பாணியில் ஒரு முன்னோடியாக விளங்கியவர். 

தமிழரசுக் கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அதன் இளைஞர் அணி முக்கியஸ்தராகக் கட்சிக் கொள்கைகளைப் பரப்பித் தமிழ் உணர்வும் தமிழ்த் தேசியவாதமும் வட கிழக்குப் பகுதிகளில் பட்டி தொட்டிகளிலெல்லாம் பரவும் வகை செய்தார். 

சுதந்திரன் பத்திரிகையில் ஆஸ்தான எழுத்தாளராகப் பல புனைபெயர்களில் பொருள் மிகுந்த கருத்துக்களை அள்ளித் தெளித்தவர். 

இவர் நடத்திய 'சங்கப்பலகை' என்ற பத்திரிகையில் 'நக்கீரன்' என்ற பெயரில் நாவேந்தன் எழுதிக் குவித்தவை எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் முன்வைத்த வாதங்களையெல்லாம் தவிடுபொடியாக்கும் தர்க்க முறையான வாதத்திறன் கொண்டவையாக அமைந்திருந்தன. 

அரசியல் எதிராளிகள் நாவேந்தன் மீது கொண்டிருந்த அச்சமும் நியாயமானதே. 

தமிழ்த் தேசிய வாதம் இன்று உண்மையாக வளர்ச்சியுற்று அகில உலகக் கவனத்தை ஈர்த்ததுடன் தென்னாசியாவில் ஒரு உறுதியான கருத்திற் கொள்ள வேண்டிய சக்தியாக வளர்ந்துள்ளதென்றால் அதில் நாவேந்தனுக்கும் ஒரு முக்கிய இடமுண்டு.' 

இவ்வாறு தனது கல்லூரிக் காலம் முதல் நாவேந்தனை நன்கறிந்த பேராசிரியர் சோ. சந்திரசேகரன் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

புங்குடுதீவைப் பிறப்பிடமாகக்கொண்ட நாவேந்தன் தமிழரசுக் கட்சியின் ஆரம்பகால உறுப்பினர். 

இவரது இயற்பெயர் திருநாவுக்கரசு. மாணவப் பருவத்திலேயே 'கோப்பாய்க் கோமான்' வன்னியசிங்கத்தினால் கட்சியில் சேர்க்கப்பட்டு 'நாவேந்தன்' எனப் பாராட்டுப் பெற்றவர். 

கட்சியின் இளந்தலைவர்களில் ஒருவராக மதிக்கப்பட்டவர். தீவுப்பகுதியில் தமிழரசுக் கட்சியை முதன்முதலில் அறிமுகப்படுத்தியவர். 

1951 -ம் ஆண்டளவில் முதன்முதலில் புங்குடுதீவில் கட்சியின் இரு பொதுக்கூட்டங்களை ஒழுங்குசெய்து நடாத்தியவர். இக்கூட்டங்களில் தந்தை செல்வா, தலைவர் வன்னியசிங்கம், அமிர்தலிங்கம் ஆகியோர் உரையாற்றினர். 

கட்சியின் மத்திய குழு உறுப்பினராகச் செயற்பட்டார். 

1952 -ம் ஆண்டுத் தேர்தல் நெருங்கிய நேரம் தந்தை செல்வாவின் கடிதத்தோடு கொழும்பிலிருந்து வந்து இவரைச் சந்தித்த சட்டத்தரணி வி. நவரத்தினத்தை ஆதரித்து தீவகத்தில் தீவிர பிரசாரம் செய்தார். 

அக்காலம் பெரும் தனவந்தரும் தீவகத்தில் செல்வாக்குச் செலுத்தியவருமான அல்பிரட் தம்பிஐயாவை எதிர்த்து யாரும் பிரசாரம் செய்யமுடியாத சூழ்நிலையில் இவர் துணிந்து நண்பர்கள் ஒரு சிலரின் உதவியோடு கட்சிக்குப் பிரசாரம் செய்து தலைவர்களின் பாராட்டுக்களைப் பெற்றார். 

தலைவர் வன்னியசிங்கம் தன் மகன்போல இவரைக் கவனித்து ஊக்குவித்தார் என அன்று கட்சிக்காரர் கூறியுள்ளனர். 

1956தேர்தலில் சட்டத்தரணி வீ. ஏ. கந்தையா தீவகத்தில் போட்டியிட்டபோது அவருக்காகத் தீவிரப் பிரசாரத்தை முன்னெடுத்தார்.  

வீ. ஏ. கந்தையா மகத்தான வெற்றி பெற்றார்.  

நன்றி மறவாத கந்தையா எம். பி. இறுதிவரை இவருடன் மிகுந்த நட்புடனிருந்தார். 

1954 -ம் ஆண்டு யாழ் வந்த பிரதமர் கொத்தலாவலைக்குக் கட்சி வாலிப முன்னணி சார்பில் அமிர்தலிங்கம் தலைமையில் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்தபோது பொலிசாரின் கடுந்தாக்குதலுக்குட்பட்டுக் காயமடைந்தார். 

1958 -ம் ஆண்டு கட்சித் தலைவர்கள் கைதாகியவேளை இவர் உடுவிலில் சுன்னாகம் பொலிசாரால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். 

மந்திரி ஏ. பி. ஜயசூரியா யாழ் வந்தபோதும் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுப் பொலிசாரின் தாக்குதலுக்குள்ளானார். 

1960ஆண்டுத் தேர்தலில் உடுவில் தொகுதியில் மூத்த உறுப்பினர் என்ற வகையில் போட்டியிட விண்ணப்பித்தபோதிலும் கட்சி கேட்டு;க்கொண்டதற்கிணங்க நண்பர் தர்மலிங்கம் போட்டியிடச் சம்மதம் தெரிவித்தார். 

தீவக மக்கள் அதிகம் வாழும் கிளிநொச்சித் தொகுதியில் போட்டியிடுமாறு கட்சி கேட்டுகொண்ட போதிலும் தனிப்பட்ட காரணங்களால் அதனை மறுத்துக் கட்சிப் பணியாற்றினார். 

நண்பர் தர்மலிங்கத்திற்கு வாக்குறுதியளித்தபடி அவரது ஒவ்வொரு கூட்டத்திலும் கலந்துகொண்டு உரையாற்றிப் பிரசாரம் செய்தார். இறுதிவரை அவர்களது நெருங்கிய நட்பு நீடித்தது. 

1961 -ல் சத்தியாக்கிரகத்தில் தீவிர பங்கெடுத்தார். 

இவர் சத்தியாக்கிரகப் போராட்டம் குறித்து எழுதிய கட்டுரையை, இவரின் நண்பராக விளங்கிய கவியரசு கண்ணதாசன் தனது 'தென்றல்' (08. - 04. - 1961) பத்திரிகையில் முதல் பக்கக் கட்டுரையாகப் பிரசுரித்துக் கௌரவித்தார். 

இக்கட்டுரையை இராம. அரங்கண்ணல் எம். எல். ஏ. தமது 'அறப்போர்' வார இதழில் மறுபிரசுரஞ்செய்து வெளியிட்டார். 

இவற்றைப் பார்வையிட்ட தமிழரசுத் தலைவர்கள் நாவேந்தனைப் பெரிதும் பாராட்டினர். 

தமிழ்க்குரல், சங்கப்பலகை, நாவேந்தன், ஆகிய பத்திரிகை - சஞ்சிகைகளின் ஆசிரியராக விளங்கியவர்.  

தமிழன், நம்நாடு ஆகிய பத்திரிகைகளின் வெளியீட்டில் முக்கிய பங்களித்தவர். 

நான் ஒரு பிச்சைக்காரன், தலைவர் வன்னியசிங்கம், சிறீ அளித்த சிறை, வாழ்வு (சிறுகதைத் தொகுதி) தெய்வமகன் (சிறுகதைத் தொகுதி) சிலப்பதிகாரச் செந்நெறி, மாவட்ட அபிவிருத்திச் சபைகளை பகிஸ்கரிப்பது ஏன்..?, மானவீரன் கும்பகருணன், மரியாள் மக்தலேனா (காவியம்) யோன் ஸ்கடர் - நாடகம், யோன் ஸ்கடர் - வரலாறு, பெருநெருப்பு ஆகிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். 

'வாழ்வு' சிறுகதைத் தொகுதி இலங்கை சாகித்திய மண்டல விருதினை (1964) பெற்றது. 

யாழ்ப்பாணத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஸ்தாபகராகவும் அதன் முதற் செயலாளராகவும் பணியாற்றியவர். 

ஆசிரியர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதில் முன்னின்று உழைத்தவர். 

முதலாந்தர அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றபின் யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று மாநகரசபையின் பதில் முதல்வராகவும் சிறிது காலம் பணியாற்றியவர். 

ஆயுததாரிகளின் அச்சுறுத்தலால் அப்பதவியைத் துறந்தவர்.  2000 -ம் ஆண்டு யூலை 10 -ம் திகதி 67 -வது வயதில் சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார். 

'பொலிசாரின் குண்டாந்தடித் தாக்குதலுக்கு ஆளாகிச் செங்குருதி சிந்தினார்கள் எத்தனையோ வாலிபர்கள்.  

அச்சிறு கூட்டத்தில் எங்களுடன் செந்தமிழுக்காக இரத்ததானம் செய்த தோழர் நாவேந்தன் நான்கு ஆண்டுகளின் பின் தமிழுக்காகச் சிறையும் சென்றார் என்றால் எவரும் ஆச்சரியப்பட முடியாது. 

அவர் வழிச் செல்ல ஆயிரம் ஆயிரம் வீரர்களைத் தமிழன்னை பெற்றெடுப்பாளென்றே நம்புகிறேன்.' - அ. அமிர்தலிங்கம் எம். பி. (1959).  'நாவேந்தன் எழுத்து, நாடகம், அரசியல் என்பனவற்றிலெல்லாம் முழுமூச்சாக ஈடுபட்டார்.  தமிழரசுக் கட்சியின் மேடைகளில் கொஞ்சும் தமிழிலும் குமுறும் நடையிலும் கட்சிக் கொள்கைகளை அள்ளி வீசினார். 

கொஞ்சும் தமிழும் குமுறும் நடையும் அவருடைய பிரயோகங்களாகும்.' - கலாநிதி எஸ். ஜெபநேசன். 

'நாவேந்தன் மொழியாற்றலில் ஒரு 'கொம்பனாகவே' என்றுமிருந்தார். அந்த இறுமாப்பும் வீறாப்பும் அவரைவிட்டு இறுதிவரை அகன்றதேயில்லை. அவரது பணிகள் பன்முகத்தன்மை வாய்ந்தவை.' - தினகரன் பிரதம ஆசிரியர் ஆர். சிவகுருநாதன். 

'நாவேந்தன் மறைவு பன்முகப்பட்ட நமது இலக்கியப் பரப்புக்கு ஏற்பட்ட இழப்பாகும்.  எழுத்தாளன் என்ற நிலையில் பேணப்பட வேண்டிய பல எழுத்துக்களை நாவேந்தன் விட்டுச்சென்றுள்ளார்.' - பேராசிரியர் கா. சிவத்தம்பி. 

'கரும்பூறும் நறும்பாகும் கற்கண்டும் 

 கனிரசமும் கலந்தொன்றாய் 

அரும்போதின் தேனமுதோ அலைகடலின் 

 திருவமுதோ அன்றி வீணை 

நரம்போதும் இன்னிசையோ என வியந்து 

 நயந்து கடல்மடை திறந்தாலென்ன 

வரும்போது அவன் பேச்சில் இறும்பூது 

 எய்தாதார் யாருமில்லை..' 

நாவேந்தன் நினைவுகள் மக்கள் மத்தியில் நீடித்து நிலைக்கும்..!  

பத்மபாரதி

Comments