ஊடகத்துறையில் உலகம் போற்றும் லோகேந்திரலிங்கம் | தினகரன் வாரமஞ்சரி

ஊடகத்துறையில் உலகம் போற்றும் லோகேந்திரலிங்கம்

உலகெங்கும் சிதறுண்டு வாழ்கின்ற ஒட்டுமொத்த தமிழினமும் தனித்துவமான மிடுக்குடன் மதிக்கப்படுவதற்கு காரணமாக இருப்பவர்களில் புலம்பெயர் தமிழர்கள் பிரதானமானவர்கள் என்ற கருத்தில் தவறு கிடையாது. இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய பிரதேசங்களிலிருந்து மேற்கு நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்றுள்ள தமிழர்களில் பெரும்பாலானவர்கள் அந்நாடுகளில் பலவிதத்திலும் செல்வாக்கு மிகுந்தவர்களாகவே வாழ்கின்றார்கள்.

1983இனவன்செயலாலும், அதனைத் தொடர்ந்து சுமார் முப்பது வருடங்களாக நீடித்த உள்நாட்டுப் போர் காரணமாகவும் உயிர்ப் பாதுகாப்பு கருதி மேற்குலகம் நோக்கிப் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் தமது சொந்தபந்தங்களையும், உடைமைகளையும் தாயகத்தில் கைவிட்டுச் சென்ற அதேவேளை, தங்களது தாயகத்தில் நிம்மதியாக வாழ முடியவில்லையே என்ற ஏக்கத்தைச் சுமந்தவர்களாகவே அந்நாடுகளில் அடைக்கலம் பெற்றனர்.

தாயகம் பற்றிய ஏக்கம் அவர்களது உள்ளத்தை விட்டு என்றும் நீங்கப் போவதில்லை. புலம்பெயர் தமிழர்களில் பலர் தங்களது கல்வியறிவினாலும், பணபலத்தினாலும் அந்நாடுகளின் சமூகத்தில் மேன்மையானவர்களாக விளங்குகின்றனர்.

அந்நாடுகளின் அரசியலைத் தீர்மானிக்கின்ற சக்தியாகவும் செல்வாக்குப் பெற்று விளங்குகின்றனர். அதேசமயம் ஊடகத்துறையிலும் அவர்கள் சாதனைகள் புரிகின்றனர்.     அந்த வகையில் புலம்பெயர் தமிழர்களின் ஊடகத்துறை சாதனையாளராக

ஏற்றுக் கொள்ளத்தக்கவர் கனேடிய மண்ணில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கின்ற ‘உதயன்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியரான ஆர். என்.லோகேந்திரலிங்கம் ஆவார். இலங்கைத் தாயக மண்ணில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற ஒருவர், உலகத் தமிழினமே கூர்ந்து நோக்குமளவுக்கு கனடாவில் பத்திரிகையொன்றை வெற்றிகரமாக கடந்த சுமார் கால்நூற்றாண்டு காலத்துக்கு மேலாக நடத்திக் கொண்டிருக்கிறாரென்றால் அவரது திறமையினால் ஈட்டிய சாதனையே அதுவாகும்.

கனடா மண்ணில் கடந்த முப்பது வருட காலத்துக்கு மேலாக ஊடகத்துறையில் பிரகாசித்து வருகின்றார் லோகேந்திரலிங்கம். ‘சூரியன்’ பத்திரிகையில் சில வருடங்கள் தொடர்ந்த அவரது ஊடகப் பயணம், அதன் பின்னர் ‘உதயன்’ பத்திரிகையில் வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கின்றது.

லோகேந்திரலிங்கத்தின் உயிர்மூச்சு ஊடகத்துறைதான் என்றால் அது மிகையாகாது. பல்வேறு சவால்களையும் வெற்றி கொண்டு புலம்பெயர் தேசத்தில் மாத்திரமன்றி முழுஉலகிலும் ‘உதயன்’ பத்திரிகைக்கு மதிப்புமிக்க முகவரியைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றார் அவர். ஊடகத்துறையின் வாயிலாக உலகெங்கும் தமிழ் அன்பர்கள் குழாமொன்றை ஏற்படுத்திக் கொண்டுள்ளதுடன், அவலத்தில் வாழ்கின்ற மக்களுக்கான துயர்துடைக்கும் பணிகளிலும் ஈடுபாடு கொண்டு செயற்பட்டு வருகின்றார் லோகேந்திரலிங்கம்.

கவிப்பேரரசு வைரமுத்து ‘நட்பின் நாயகன்’ என்ற பட்டத்தை லோகேந்திரலிங்கத்துக்கு சூட்டி மகிழ்ந்ததை இவ்விடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாகும். தமிழர்களால் மாத்திரன்றி கனேடிய அரசியல் பிரமுகர்களினாலும் பெரிதும் மதிக்கப்படுபவர் அவர். கனேடிய பிரதமர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அந்நாட்டு அரசியல்வாதிகளின் நெருக்கமான நட்புக்கு உரியவர் அவர்.

ஊடகவியலாளருக்குரிய அதிமுக்கிய தகைமை மொழியாளுமை ஆகும். இலக்கண சுத்தமும், சொல்வளமும், படைப்பாற்றலும் அடங்கிய மொழியாளுமை இல்லாத ஒருவரால் ஊடகத்துறையில் பிரகாசிக்க இயலாது. இவ்வாறான ஒட்டுமொத்த மொழியாளுமையும் கொண்டவர் லோகேந்திரலிங்கம். தமிழில் மாத்திரமன்றி ஆங்கிலத்திலும் அதேவித புலமை கொண்டவர். அதனால்தான் கனேடிய மண்ணில் பல்வேறு மொழிபேசும் சமூகங்களுடனும் நட்புறவைப் பேணியவாறு பத்திரிகையொன்றைக் கட்டியெழுப்ப அவரால் முடிந்தது.

 இந்த இருபத்தாறு ஆண்டுகளில் உதயன் விழாவை மிகச் சிறப்பாக நடத்தி வந்திருக்கிறார் அவர்; இந்த விழாவின் ஊடாக இலங்கை, இந்தியா மற்றும் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் இருந்தெல்லாம் கலைஞர்களையும் கல்விமான்களையும் அழைத்து வந்து நிகழ்வை பெருமைப்படுத்தியிருக்கிறார். இத்தகைய செயல்களின் மூலம் தமிழினத்தின் கலைப்பாலமாகவே அவர் திகழ்ந்து வருகின்றார்.

அதேசமயம் இந்தியாவில்  இருந்து வெளிவரும் ‘நந்தவனம்’ சஞ்சிகையை கனடாவில் வெளியிடும் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டு இலைமறைகாயாக இருக்கும் பலரை  வெளியுலகத்திற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். பல்வேறு நாடுகளில் இருக்கும் பலருக்கு விருதுகள் கிடைப்பதற்கும் லோகேந்திரலிங்கம் காரணமாக இருந்திருக்கிறார்.

கலைஇலக்கிய, ஊடகத்துறையில் 50 வருட காலத்தைக் கடந்துள்ள ஊடக அன்பர் லோகேந்திரலிங்கம் தமிழுலகுக்கு கிடைத்துள்ள அரும்பெரும் பொக்கிஷம் ஆவார். அவரது பணி மேலும் தொடர வேண்டுமென பொன்விழா ஆண்டில் வாழ்த்துவோம்!

Comments