பாராளுமன்றத்தைப் பலப்படுத்துவதே இன்றைய காலத்துக்கான உகந்த தீர்வு! | தினகரன் வாரமஞ்சரி

பாராளுமன்றத்தைப் பலப்படுத்துவதே இன்றைய காலத்துக்கான உகந்த தீர்வு!

இலங்கையில் தற்பொழுது நிலவு கின்ற நெருக்கடிகளுக்குத் தீர்வு காணுமாறு வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அமைதியான முறையில் மக்கள் போராடுவதற்கு அரசியலமைப்பின் ஊடாக அதிகாரம் வழங்கப்பட்டுள்ள போதும், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடைமுறைச் சாத்தியமான வழிகள்குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது.

இலங்கையைப் பொறுத்த வரையில் பாராளுமன்ற ஜனநாயகத்தைக் கொண்ட மக்கள் பிரதிநிதித்துவ முறைமையே கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே இதன் அடிப்படையிலேயே பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் உடனடியாகத் தேர்தலொன்றுக்குச் செல்ல முடியாது என்பதால், பாராளுமன்றத்தில் தற்பொழுது பிரதிநிதித்துவத்தை வழங்குகின்ற அரசியல் தலைவர்களைக் கொண்டதாகவே தீர்வுகள் தேடப்பட வேண்டும்.

‘ஜனநாயகத்தின் தூண்கள்’ என வர்ணிக்கப்படும் நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம் மற்றும் நீதித்துறை ஆகியன ஒன்றுடனொன்று இணைந்தவாறு செயற்பட வேண்டும். இவற்றுக்கிடையில் இணைப்புக்கள் காணப்பட்டாலும், ஒவ்வொன்றும் தமது தனித்துவத்தை இழக்காமல் இயங்குவதே நாட்டுக்கு ஆரோக்கியமானதாக அமையும். நிறைவேற்று அதிகாரம் மேற்கொள்ளும் அனைத்துத் தீர்மானங்களுடனும் சட்டவாக்கம் இணங்கிப் போக வேண்டிய கட்டாய தேவை இல்லை.

இருந்த போதும் சட்டவாக்கம் கூடி எடுக்கின்ற தீர்மானத்துடன் இணங்கிச் செல்ல வேண்டிய கடப்பாடு நிறைவேற்று அதிகாரத்துக்கு உள்ளது. இந்த அடிப்படையில் தற்போதைய நாட்டு நிலைமையை நோக்கினால் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் பொறுப்பு பாராளுமன்றத்துக்கு உள்ளது.

எனவே, சட்டவாக்கம் எனப்படும் பாராளுமன்றம் தன்னைப் பலப்படுத்துவதற்கான முயற்சிகளை எடுப்பது காலத்தின் தேவையாகும். பாராளுமன்றத்தைப் பொறுத்த வரையில் சட்டவாக்கம், நிதி முகாமைத்துவம், மேற்பார்வை போன்றவை பிரதான செயற்பாடுகளாகும். இதில் மேற்பார்வை அல்லது கண்காணிப்புப் பணிகளைப் பாராளுமன்றத்தில் உள்ள பல்வேறு குழுக்கள் மேற்கொண்டு வருகின்றன.

அதிலும் குறிப்பாக கோப் குழு என அறியப்படும் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, கோபா குழு என அறியப்படும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு, அரசாங்க நிதி பற்றிய குழு என்பன பிரதானமாக கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்கின்றன.

‘கோப்’ குழுவானது வருமானம் ஈட்டும் அரசாங்க பொறுப்பு முயற்சி நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் அவற்றின் செயலாற்றுகையை அடிப்படையாகக் கொண்டு அந்நிறுவனங்களை கண்காணிப்பது இதன் பணியாகும். குறிப்பாக அந்நிறுவனத்தில் இடம்பெற்ற மோடிகள் மற்றும் முறைகேடுகள் என்பன விசாரணைகளின் போது வெளிப்படும்.

அண்மைக் காலமாக முக்கிய அரசாங்க நிறுவனங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பல இக்குழுவின் ஊடாக வெளிப்பட்டன. அதேபோலவே ‘கோபா’ குழுவின் ஊடாகவும் நடத்தப்படும் விசாரணைகளில் பல முறைகேடுகள் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. அதேபோல அரசாங்க நிதி பற்றிய குழுவானது நிதி சம்பந்தமாக பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட வேண்டிய சட்டமூலங்கள், ஒழுங்குவிதிகள், கட்டளைகள் போன்றவற்றை ஆராய்ந்து அனுமதிக்கிறது. இதன் அனுமதியைப் பெற்ற பின்னரே அவற்றை சபையில் இரண்டாவது மதிப்பீட்டுக்கு எடுத்துக் கொள்ள முடியும்.

இருந்தபோதும், இந்தக் குழுக்களில் வழங்கப்படும் பரிந்துரைகள் சரியான முறையில் நிறைவேற்றப்படுகின்றனவா என்பதை நேரடியாகக் கண்காணிப்பதற்கோ அல்லது பரிந்துரைகளை நிறைவேற்றாத நிறுவனங்களுக்கு எதிராக மேலதிக நடவடிக்கைகள் எடுப்பதற்கோ எவ்விதமான கட்டமைப்பும் இல்லை.

குறிப்பாக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரம் இந்தக் குழுக்களுக்கு இல்லையென்பதால் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளை விசாரணைகளின் போது பங்கேற்கச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனினும், இதற்கு இதுவரை ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை.

இவ்வாறான பின்னணியிலேயே கோப் குழு, கோபா குழு, அரசாங்க நிதி பற்றிய குழு மற்றும் பொதுமனுக்கள் பற்றிய குழு ஆகியவற்றுக்கு மேலும் அதிகாரங்களை வழங்கும் வகையில் நிலையியற் கட்டளைகளைத் திருத்தும் யோசனை அண்மையில் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன அதனை சமர்ப்பித்திருந்தார். இந்த விடயம் நிலையியற் கட்டளைகள் குறித்த குழுவில் கலந்துரையாடப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. இது தொடர்பில் ஏற்கனவே கவனம் செலுத்தப்பட்டிருப்பதுடன். விரைவில் இதற்கான அனுமதி பாராளுமன்றத்தில் வழங்கப்படவுள்ளது.

இது இவ்விதமிருக்க, அரசாங்கத்தின் கொள்கைத் தயாரிப்புக்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பாராளுமன்றத்தில் அமைக்கப்படும் துறைசார் மேற்பார்வைக் குழுக்களின் தேவை பற்றியும் கருத்தாடல்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக பாராளுமன்றத்தில் எவ்வித பதவிகளையும் வகிக்காத பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கலான உறுப்பினர்களைக் கொண்டதாக இந்தக் குழு காணப்படும்.

ஆராயப்படும் விடயம் தொடர்பில் நிபுணத்துவம் பெற்ற தரப்பினரை அழைத்து அவர்களின் கருத்துகளையும் பெற்றுக் கொள்வதற்கான அதிகாரம் இந்தக் குழுக்களுக்கு உள்ளது.

அது மாத்திரமன்றி ஆராயப்படும் விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று நேரில் கண்காணிப்பதற்கான அதிகாரங்களும் இக்குழுக்களுக்கு உள்ளது. எனவே, இவ்வாறான குழுக்களை மீண்டும் செயற்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கருத்துக்களையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் குறிப்பிட்டிருந்தார். இந்தக் குழுக்களை மீண்டும் செயற்பாட்டுக்குக் கொண்டு வருவது குறித்து ஆராயும் பொறுப்பு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் வழங்கப்பட்டுள்ளது. அவருடைய அறிக்கை மிக விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, பாராளுமன்ற ஜனநாயகத்தைக் கொண்ட நாட்டில் பிரச்சினைகளை இந்தக் கட்டமைப்பின் ஊடாகத் தீர்ப்பதே பொருத்தமானதாக இருக்கும். இதற்குத் தேவையான அடிப்படை மாற்றங்கள் மற்றும் உரிய தேவைகளைப் பாராளுமன்றத்தின் ஊடாகவே ஏற்படுத்த வேண்டும். நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள சூழ்நிலையில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகளே இதற்கான தீர்வுகளையும் முன்வைக்க வேண்டும். இதற்கான அழுத்தங்களை மக்கள் வெளியிலிருந்து கொடுக்க முடியுமே தவிர, பாராளுமன்றத்துக்கு வெளியே தீர்வுகளைக் கொண்டுவர முடியாது என்பதே யதார்த்தம்.

பி.ஹர்ஷன்

Comments