அரசியல் ஸ்திரத்தன்மை இன்றேல் சர்வதேச உதவிகள் பெறுவது ஐயம்! | தினகரன் வாரமஞ்சரி

அரசியல் ஸ்திரத்தன்மை இன்றேல் சர்வதேச உதவிகள் பெறுவது ஐயம்!

இலங்கை பொருளாதார ரீதியாகஎதிர்கொண்டுள்ள பல்வேறு சவால்கள்காரணமாக மக்கள் நாளுக்கு நாள்சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.குறிப்பாக சமையல் எரிவாயு உட்பட எரிபொருட்களுக்குநிலவுகின்ற கடுமையான தட்டுப்பாடு காரணமாக மக்களின் அன்றாட செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எரிபொருளை நாட்டுக்குள் போதுமான அளவு கொண்டு வருவதற்கான பிரயத்தனங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனைப் பெற்று நெருக்கடி நிலைக்குத் தற்காலிக தீர்வொன்றைக் காண்பதற்கான ஆரம்பகட்டப் பேச்சுக்கள் இடம்பெற்றுள்ளன. அப்பேச்சுகள் இலங்கைக்கு சாதகமாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அரசியல் ரீதியான ஸ்திரத்தன்மைக்கான அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்படுவதுடன், மத்திய வங்கியில் காணப்படும் அரசியல் தலையீடுகள் இல்லாமல் செய்யப்பட வேண்டியதன் முக்கியத்துவத்தை சர்வதேச நாணய நிதியம் சுட்டிக் காட்டியுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் மாத்திரமன்றி பல்வேறு தரப்பினரும் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்பட வேண்டியமை தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய தேசிய அரசாங்கமொன்று உருவாக்கப்பட வேண்டியது தொடர்பில் கடந்த சில மாதங்களாகக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கான கருத்தாடல்களும், கட்சிகளுக்கிடையில் கலந்துரையாடல்களும் இடம்பெற்று வந்த நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியை ஏற்று தற்போதைய அரசாங்கம் உருவாகியது. இதற்கு முன்னர் பிரதமராகவிருந்த மஹிந்த ராஜபக்ஷவும் அவருடன் அமைச்சரவையில் இருந்தவர்களும் பதவி விலகி புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு இடமளித்திருந்தனர்.

அரசாங்கத்தை அமைக்குமாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்திக்கும், மற்றுமொரு எதிர்க்கட்சியான தேசிய மக்கள் சக்திக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அழைப்பு விடுத்திருந்தார். இந்த அழைப்பினை எவரும் நேரடியாக ஏற்றுக் கொண்டிராத நிலையில், ஜனாதிபதி பதவி விலகினால் மாத்திரமே அரசாங்கத்தைப் பொறுப்பேற்க முடியும் என அவர்களில் சிலர் கூறியிருந்தனர்.

இவ்வாறான பின்னணியில் பிரதமர் பதவியை ஏற்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க முன்வந்தார். இவருக்குப் பதவி வழங்கத் தீர்மானித்திருந்த நிலையில், தானும் பதவியேற்பதற்குத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்திருந்தார். சஜித் பிரேமதாச தாமதமாகவே தனது கருத்தை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்கவுக்குப் பிரதமர் பதவி வழங்கப்பட்டது.

அவர் பதவியேற்ற ஒரு சில மாதங்களே கடந்துள்ள நிலையில் பொருளாதார சிக்கல்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

அதேநேரம், நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்து இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை பாராளுமன்றத்தைத் தெளிவுபடுத்தி வரும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கத்தைப் பொறுப்பேற்க ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக தயார் எனில் தனது பிரதமர் பதவியை இராஜினாமாச் செய்யத் தயார் எனவும் கூறியிருந்தார்.

யாராக இருந்தாலும் நாட்டின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்க வேண்டும் என்பதே தற்போதைய தேவையாக உள்ளது என அவர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளித்த ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க, ஆறு மாதங்களுக்கு அரசாங்கத்தைப் பொறுப்பெற்று நடத்துவதற்குத் தயார் என்றும், அதன் பின்னர் பொதுத் தேர்தலொன்றுக்குச் சென்று மக்கள் ஆணையைப் பெற்றவர்கள் ஸ்திரமான அரசாங்கத்தை ஏற்படுத்த முடியும் என்றும் கூறியிருந்தார்.

இது இவ்விதமிருக்க, மீண்டும் தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்களும், பேச்சுவார்த்தைகளும் ஆரம்பமாகியுள்ளன.  குறிப்பாக சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இருவருக்கும் இடையில் தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான இணக்கப்பாடும் எட்டப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக அரசாங்கத்திலிருந்து விலகி தற்பொழுது எதிர்க்கட்சியில் சுயாதீனமாகச் செயற்படும் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட 10அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பாராளுமன்றத்தில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். இது விடயத்தில் இணைக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் வழிநடத்தல் குழுவொன்றும் அமைக்கப்பட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் தமது அரசியல் வேறுபாடுகளைக் கைவிட்டு ஓரணியாக இணைந்து செயற்பட வேண்டும் என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. குறிப்பாக பாராளுமன்றத்தின் ஊடாக இதற்கு ஏதாவது தீர்வு எட்டப்படும் என மக்கள் கடந்த மூன்று மாதங்களாக எதிர்பார்த்திருந்தனர். துரதிர்ஷ்டவசமாக இதுவரை எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்பதால் பலரும் அதிருப்தியிலேயே உள்ளனர்.

அதேநேரம், எரிபொருள் பிரச்சினை மோசமானநிலைக்குச் சென்று போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் கட்டத்தை அடைந்திருக்கும் சூழ்நிலையில் கூட அரசியல் கட்சிகள் தேசிய அரசாங்கத்தை அமைத்து தற்போதைய பிரச்சினைக்குத் தீர்வுகாண முன்வராவிட்டால் நாடு பாரிய சவாலுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படும். எனவே, தேசிய அரசாங்கம் தொடர்பான பேச்சுக்களை ஆரம்பித்துள்ள கட்சிகள் தமது சொந்த அரசியல் நலன்கள் குறித்து அக்கறை செலுத்தாது நாட்டு மக்களின் எதிர்காலம் பற்றி சிந்தித்து தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

மறுபக்கத்தில், அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தும் முயற்சிகளைத் தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. குறிப்பாக அரசியலமைப்பில் திருத்தங்களைக் கொண்டு வந்து பாராளுமன்றத்தைப் பலப்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த தனிநபர் சட்டமூலம் 21ஆவது அரசியலமைப்புத் திருத்தமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அது தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானமும் வழங்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்களை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை மாத்திரமன்றி சர்வஜன வாக்கெடுப்பின் அவசியத்தையும் உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேநேரம், அரசாங்கம் தயாரித்துள்ள 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச்சட்டமூலத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது மிக விரைவில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் அதிலுள்ள விடயங்கள் அரசியலமைப்புக்கு முரணாக அமையாவிட்டால் பாராளுமன்றத்தின் பெரும்பான்மையுடன் அதனை நிறைவேற்ற முடியும்.

சுயாதீன ஆணைக்குழுக்கள் மற்றும் பாராளுமன்றத்தைப் பலப்படுத்தும் பல்வேறு யோசனைகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இவற்றை நிறைவேற்றி அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் அதிகாரம் மீண்டும் அரசியல்வாதிகளிடமும் அரசியல் கட்சிகளிடமுமே காணப்படுகின்றது.

அரசியலமைப்புத் திருத்தம் மாத்திரமன்றி பாராளுமன்றத்தைப் பலப்படுத்தும் வகையில் குழு முறைமைகளை வலுப்படுத்தும் யோசனைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு, அரசாங்க நிதி பற்றிய குழு மற்றும் பொதுமனுக்கள் பற்றிய குழு ஆகியவற்றை பலப்படுத்தும் வகையில் பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளை திருத்தும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான பின்புலங்களை ஏற்படுத்தி அரசியல் ரீதியான ஸ்திரத்தன்மையை உருவாக்குவது தேவையான விடயம் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறான அடித்தளத்தை ஏற்படுத்துவதன் ஊடாகவே சர்வதேசத்தின் உதவியை இலகுவில் நாட முடியும் என்பதும் நிதர்சனம்.

சம்யுக்தன்

Comments