தடைப்பட்ட பயணம் | தினகரன் வாரமஞ்சரி

தடைப்பட்ட பயணம்

இவவாண்டு ஹஜ் தியாகத் திருநாள், காலண்டர் கணிப்பின்படி எதிர்வரும் 10ஆம் திகதி.  அதற்கு ஒரு கிழமை முன்னதாக இச்சிறப்புச் சிறுகதை இன்று (03) பிரசுரமாகிறது.  அதற்குக் காரணம் உண்டு. நல்லவை நடக்க எதிர்பார்க்கிறார் எழுத்தாளர்.

இந்தத் தடைப்பட்ட பயணம் பற்றிப் பதிவிட முன் -    நான் எங்கே வாழ்கிறேன். என்னைச் சுற்றி இருக்கும் பெரும்பாலான மக்கள் யார் யார் என்பதைத் தெரிவித்துவிட வேண்டியது கடமையாகிறது.

இலங்கையில் கிழக்குக் காத்தான்குடிக்கு அடுத்தபடியாக சனத்தொகை – அதுவும் முஸ்லிம் சமூகம் - அதிகமாக உள்ள பிரதேசம் கொழும்பு 10, மாளிகாவத்தை.

இங்கே நான் 'வந்தான் வரத்தா'னாக வந்து ஐம்பது ஆண்டுகள்.  அதிலிருந்து நான் ஏழை பாழைகளை சுற்றி சூழவே வாழ்கிறேன்.

இருப்பினும் கணிசமான பணக்கார வர்க்கத்தினரும் வதிவிடம் உள்ளவர்களே!

இந்த வகையில், குரும்பை விற்கும் குத்தூஸ் நாநா முதற்கொண்டு, வாகன உதிரிப்பாகங்கள் விற்று கை நிறைய காசுடன் புழங்கும் காஸிம் மரைக்காயர்  ஈறாக என்னுடன் ஊடாட்டமே!

காரணம், நான் ஊடகக்காரன் என்பது.

இந்தத் 'தடைப்பட்ட பயணம்' என்னையும் காஸிம் மரைக்காயரையும் சுற்றியதே!

சென்ற ஜூன் மாதத்தின் முதல் கிழமையில் ஒரு காலை இளம் பொழுதில், தமிழ் நாளேடுகள் நான்கையும், ஓர் ஆங்கில இதழையும் புரட்டி விட்டு முகநூல் (பேஸ்புக்) பக்கத்தையும் பார்த்தால் -

மலைநாட்டுத் தொழிலாள வர்க்கத்தைச் சார்ந்த பெண்மணியும், பிரபல சிறுகதை எழுத்தாளருமான பிரமீளா பிரதீபன் அவரது பக்கத்தில் பதிவிட்டிருந்தது பதை பதைக்கச் செய்தது.

அதைப் பிரதி எடுத்து அபிமானிகள் பார்வைக்கும் தருவது அவசியமாகிறது.

'தினமும் ஆயிரக்கணக்கான மாணவர்களை காண்கிறேன்.  அதில் சில நூறு பேரின் பசியையாவது கண்டும் காணாதது போல் தாண்டிச் செல்கிறேன்.

அவர்கள் தம் உணவின் அளவை சுருக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

வகுப்பறை பின்வரிசை மேசையில் சோர்ந்து தலைசாய்க்கும் மாணவர்களது எண்ணிக்கை நாளுக்குநாள் கூடிக்கொண்டே போகிறது.'

இப்படி, நம் மலைநாட்டுப் படைப்பாளி பிரமீளாவின் பதிவை முகநூலில் படித்து விட்டு, எதிரே பளிச்சிட்டுக் கொண்டிருந்த தொலைக்காட்சியில் உலகப் புகழ் 'அல்-ஜெஸீரா' செய்தி அலை வரிசை அறிக்கைகளை அவதானித்த பொழுது ஒன்று அதிரடியாகக் காதுகளில் அபிமானிகள் அறிவது அவசியம் அதையும்:

'சூடான், சோமாலியா, யேமன் நாடுகளில் கண்டிராத சோகத்தையும் அவலத்தையும் இலங்கையில் காணக்கூடியதாக இருக்கிறது.' என்ற தகவலை ஆஸ்திரேலிய ஏ.பீ.சி. நிவ்ஸ் சேனலுக்கு யுனிசெப் அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

என் நெஞ்சு கனத்தது. 

இந்த மனச்சங்கடத்தை அனுபவித்த இரண்டு நாளில் என்னைத்தேடி காஸிம் மரைக்காயர் முதலாளி வருகை !

'அஸ்ஸலாமு அலைக்கும்.  வந்தது என்னத்துக்கு எண்டா, இந்த வருசம் ஹஜ் ஓகேயாமே? நான் நிய்யத்து வச்சது கொரோனாவுக்கு முந்தி. சவூதி கோர்ணமேந்து ஆயிரத்து சொச்சம் விசா குடுக்குதாம்.  மெய்யாலுமா?'

'மெய்..  மெய்... பயணத்திற்கு நிய்யத்தா?'

'ஓ ! ஓ! ரெண்டு வருசத்திற்கு முந்தியே முஸ்லிம் டிபார்ட்மெண்டுக்கு எப்ளிகேசன் போட்டுட்டேன்.  இப்ப லிஸ்ட்ல பேரு இருக்குதாண்டு பாக்கத்தான் உங்கட ஹெல்புக்கு வந்தன்'.

'என் ஹெல்ப் தேவையே இல்லே.  டிபார்ட்மெண்ட் செலக்ட் பண்ணி இருக்கிற ஏஜன்சிமார் உங்களுக்கு உதவக் காத்திருக்கிறாங்க.... நான் இப்ப வெளியில போக ரெடியாகிக் கொண்டிருக்கிறேன் மரைக்கார்...'

மனிதரை உடனேயே வீட்டிலிருந்து அனுப்புவதில் குறியாக இருந்தேன்.

என் மன உளைச்சல், மன நிலை அப்படி. 

அதுவும் 'திரும்புகிற இடமெல்லாம்' 'இல்லை, இல்லை', 'பசி, பசி' என எங்கும் எதிரொலிக்கும் பொழுது காஸிம் மரைக்காயருக்கு உதவ ஆர்வம் ஏற்படவில்லை.

அவர் என்னைப் புரிந்தவர்.  உடனேயே, 'சரி...சரி... நானும் புறப்படுறன்.  பொறவு கோல் தாறன்' என்றவாறு விறுவிறுவென்று வெளியேற்றம்!

உண்மையில் என் பிறந்த மண்ணின் அன்றாட அவலங்கள் என்னைப் பாதித்திருந்தன.  எண்ண அலைகள் மிகவும் வித்தியாசமான பாதையில் ஓசையிட்டுக் கொண்டிருந்தன.

***

சென்ற ஜூன் 23ஆந் திகதி. வார இதழ் ஒன்றில் இப்படி செய்தி காணப்பட்டது:

இலங்கையிலிருந்து முதலாவது ஹஜ் குழு 28இல் சவூதி பயணம்.

ஜூலை 2இலும் 3இலும் யாத்திரிகர்கள் செல்வர்

968பேர் யாத்திரையைத் திணைக்களத்தில் உறுதி செய்துள்ளனர்.

இலங்கை யாத்திரீகர் ஒருவருக்கு ஹஜ்ஜூப் பயணக் கட்டணமாக, முகவர் நிலையங்கள் வழங்கும் சேவைகளுக்கு அமைவாக இருபது முதல் இருபத்தைந்து லட்சமாக அமையும்.

வழங்கப்பட்ட செய்தியில் உள்ள பணத்தொகை என்னைத் திடுக்கிட வைத்தது. 

55ஆண்டுகளுக்கு முன், 1967 –லில், விமானப்பயணக் கட்டணம் வெறும் 2484ரூபாய் மாத்திரமே!

யுனிசெப் போன்ற மாபெரும் உலக மேம்பாட்டு அமைப்பு, சூடான், சோமாலியா, யேமன் நாடுகளின் பலதரப்பட்ட அவலங்களுடன் இலங்கையையும் சேர்த்திருக்கும் சமயத்தில், ஒரு மதக்கடமைக்கு ஆகும் செலவீனம் மலைப்பாக இருந்தது.

அதுவும், அந்த ஜூன் 23காலையில் தான், புகழ்பெற்ற அனைத்துலகத் தொலைக்காட்சி 'அல்-ஜெஸீரா' அந்தத் துன்பச் செய்தியைத் தெரிவித்திருந்தது.

ஐக்கிய நாடுகள் சபை கணக்கெடுப்பின்படி, உலக மக்களின் பட்டினி நிலை 500மில்லியன்கள்.

யா அல்லாஹ்!

'மில்லியன்' என்பது பத்து லட்சம்.  500என்பதைப் பத்தினால் பெருக்கிப் பார்த்தால்....?

தலைச்சுற்றல் எடுத்தது.

***

ஜூலை மாதம் 2ந் திகதி. முஸ்லிம் பிறைக் கணக்குப்படியும் இரண்டே! 10ஆம் பிறையில் ஹஜ் தியாகத் திருநாள்.

இன்றுள்ள இலங்கை சூழ்நிலையில் 'முஸ்லிம் சிறுபான்மைச் சமூகம் எப்படி ஹஜ் பெருநாளை எதிர்கொள்ளும் என்பதை கணிக்க என் பேனைக்குத் திராணியில்லை.  அதற்கும் ஊட்டச்சத்துக் குறைபாடு!

வாசல் அழைப்பு மணியோசை.

வந்து நின்றிருப்பது காஸிம் மரைக்காயரே!

'அஸ்ஸலாமு அலைக்கும் மரைக்காயர் நாளைக்கு 3ஆந் திகதி தானே ஹஜ் கடைசி விமானம். பயணம் சொல்லி சலாம் கொடுக்க வந்தீங்களா?

அவர் பதில் சொல்லாமல், 'மொதலில உங்கட பெரம்பு சாய்மானத்துல உக்கார அனுமதி தாங்கோ!' என்றார்.  உட்கார்ந்தும் விட்டார்.

'நான் கேக்கப்போற ஒரு கேள்விக்கு நீங்கதான் மறுமொழி சரியாச் சொல்லுவீங்க. யேமன் எண்டு ஒரு அறபு தேசம் இருக்குதா?'

'அது சவூதிக்கு அடுத்த வூடு!'

'பாத்தீங்களா, பாத்தீங்களா, எங்கடவன்களுக்கு சவூதியும், துபாயும், கட்டாரும்தான் தெரிஞ்ச கத்திரிக்காய்வள்! யேமன் தெரியாதவனுவள்'

மரைக்காரின் தொனி முற்றிலும் மாறிப்போனது திகைப்பைக் கொடுத்தது. 'மகிமையான மக்கமா நகரத்தின் ஜித்தா துறைமுகத்திலிருந்து ஆயிரத்துச் சொச்சம் கி.மீ. தூரம் தான். ஹஜ் காலத்தில் பல லட்சம் மக்கள் அல்லாஹ்வை நெனைச்சு,

'உனக்கு அடிபணிந்தோம் அல்லாஹ்.  உனக்கு அடி பணிந்தோம்' – என்ற தல்பியா ஓதல் முழக்கம் செய்யக்கோல இந்த யேமனிலும் எங்கட சிறீலங்காவிலையும் கேக்கிற சத்தம், 'யா அல்லா பசிக்குதே, யா அல்லா பசிக்குதே' என்ற ஒப்பாரிதானே....?'

 'போதும்... போதும்... நானும் டி.வி.யில பார்த்துப் போட்டுத்தான், உங்க கிட்ட சரி, பொழை செக் பண்ணினேன்'.

'இருக்கட்டும்.  நீங்க... ஹஜ் பயணக்காரர்.  யேமனைப் பற்றிப் பேசுற காரணம் என்ன?'

'நல்ல கேள்விதான் கேட்டீங்க சீதேவி! இந்த யேமன் பசி தானே எங்கட நாட்டிலையும். ஏண்ட ஹஜ் பயணத்துக்கு அடுத்தடுத்த வூட்டுக் காரவங்களுக்கு ஸலாம் சொல்றது கடமை எண்டு, ஸக்கியா தங்கச்சி, நஃலா மாமி, ஜெஹரா உம்மா, எண்டு போனா சுப்ஹாநல்லாஹ் குஞ்சுகுளுவானுவளுமா புள்ளயல் தரையில் சுருண்டு கெடக்குதுவுள்.  விசாரிச்சா சரியான சாப்பாடு இல்லாம மந்த போசனையாம்.'

'இண்டைக்குத்தான் தெரியுமா உங்களுக்கு? ஒவ்வொரு பத்து குடும்பத்துக்கும் ஏழு குடும்பத்துல பசியும் பட்டினியுந்தான்.  சரி, மரைக்கார், நீங்க பயணக்காரர். 

டைம் வேஸ்ட் பண்ணப்படாது.  சலாம் கொடுத்துக் கொள்வோம்.'

'சலாமா? நான் பயணம் வச்சாத் தானே சலாம்? கென்சல்! கென்சல்!' அவர் குரலில் உறுதி தெரிந்தது.

நான் நன்றாகவே திடுக்கிட்டுத் திகைத்தே போனேன்.

'ஓ.... ஓ... பயணம் கென்சல். அதச் சொல்லத்தான் வந்தன்.  எங்கட ஸ்ரீலங்காவில பசி பட்டினி எண்ட பேச்சு இருக்கப்படாது. ஒவ்வொருத்தரும் ஏண்ட அளவுக்கு உண்ணக் குடுத்து உசிர்களை காப்பாத்த ஓணும்!.  ஒரு கணக்கு போடுங்க... பேனாவையும் பேப்பரையும் கையில எடுங்க..'

நான் மெய்சிலிர்த்தவனாக .... பேசவே தோன்றாமல்....

'என் ஹஜ் பயணச்செலவு 25லட்சம். இந்தத் தொகைக்கு பெருநாளைக்கு மொதல்நாள் அரிசி, சீனி, மாவு எண்டு எல்லா அயிட்டங்களும்.  மறுநாள் தொழுகை முடிஞ்சி குர்பான் இறைச்சி!'

நான் சுதாரித்துக் கொண்டவனாக உடனேயே, ஜெட் வேகத்தில் இப்படி எழுதிக் கொடுத்தேன்:

5000ரூபாப் பெறுமதியில் உணவுப் பொருட்களும், குர்பான் இறைச்சி முக்கால் கிலோவும் 500பேருக்கு வழங்கலாம்.

'நல்லது.... நல்லது... தடைப்பட்ட ஹஜ் எனக்கு அடுத்த வருசம் அல்லாஹ் நாடினால்... இன்ஷா அல்லாஹ்'.

காஸிம் மரைக்காயர், வாசல் படிகளில் இறங்கிக் கொண்டிருந்தார்.

'மஸ்ஜித்கள் - சமூக மத்தியத் தலங்களாக இயங்குமாக இருந்திருந்தால், அவற்றின் நிர்வாகிகள் சமூகத்தை மையமாகக் கொண்டு இயங்கி இருந்தால், இவ்வாறான வாழ்க்கை நெருக்கடிகளின் போது அவற்றின் 'மஹல்லா' எனப்படும் பிரதேசங்களில் யாரும் 'பசி'யுடன் படுக்கைக்குச் செல்ல மாட்டார்கள்.

பன்னூலாசிரியர், கவிஞர், ஒலிபரப்பாளர் அஷ்ரஃப் ஷிஹாப்தீன் - முகநூலில் பதிவு. – நன்றி.

இக்கதையில் இடம்பெற்றுள்ள ஊடகத் தகவல்கள் அனைத்தையும் திரட்டி உதவியவர், கலைஞர், கவிஞர் எம்.எஸ். அப்துல் லத்தீஃப். - நன்றி.

Comments