தமிழ்க் கட்சிகள் தேசிய அரசியலிலும் ஈடுபட வேண்டும் | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

தமிழ்க் கட்சிகள் தேசிய அரசியலிலும் ஈடுபட வேண்டும்

'எமது யாழ். கூட்டத்துக்கு தமிழ்க்கட்சி பிரமுகர்கள் வருகை தந்திருந்தனர். அது வரவேற்கத்தக்கது. நாம் வடக்கை மையப்படுத்தி அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம்.' 

'தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நாம் ஆற்றியிருக்கும் உரைகளை தென்னிலங்கையில் வேறெந்த கட்சித் தலைவரும் ஆற்றியிருக்க மாட்டார். இன்றைய எனது பேச்சும் அவ்வாறானது தான். விஷயம் என்னவென்றால், எமது இச் செயற்பாடுகள் தமிழர்களைச் சென்றடைவதில்லை. நாம் அச்சமின்றி இனவாத அரசியலுக்கு எதிராகப் பேசி வருகின்றோம்.' 

'இந்தியாவுடன் மோதல் போக்கற்ற, இந்தியாவை பாதிக்கக் கூடிய அரசியல் மற்றும் பொருளாதார கொள்கைகள் அற்ற ஒரு வெளிநாட்டுக் கொள்கை அவசியம்' 

கேள்வி:−ஜே.வி.பி. மீதான விமர்சனங்களை வைக்கும் போது 1971, 89காலப்பகுதியை சிலர் நினைவுபடுத்துகிறார்கள். இதை எப்படிப் பார்க்கிறீர்கள்? இதை கறை படிந்த பக்கங்களாகக் கருதுகிறீர்களா? 

பதில்:−1971, - 88,89எழுச்சிகள் சும்மா நிகழ்ந்தவை அல்ல. அரசுகள் எங்களை அடக்கி வைக்க முயன்றன. அதனால் நாங்கள் ஆயுதம் ஏந்த வேண்டியதாயிற்று. எமது கட்சி 1978உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்டது. 81சர்வஜன வாக்ெகடுப்பில் பாராளுமன்றம் நீடிக்கப்படக்கூடாது என்று பிரசாரம் செய்தோம். 82ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டோம். நாங்கள் ஜனநாயக வழிமுறைகளைப் பின்பற்றி வந்த போதிலும் 83கலவரத்தின் பின்னர் எம் மீது குற்றம் சுமத்தப்பட்டு ஜே.வி.பியை ஜே.ஆர். அரசு தடைசெய்தது. நாங்கள் நீதிமன்றம் சென்றோம். எனினும் எம்மை வேட்டையாடுவது தொடர்ந்தது. எனவே நாமும் ஆயுதம் ஏந்த வேண்டியதாயிற்று. அரசுக்கும் எமக்கும் இடையிலான மோதல்களின் போது எமது தரப்பிலும் தவறுகள் நிகழ்ந்தன. இன்று இவை எல்லாம் நிகழ்ந்து 33வருடங்களாகிவிட்டன. ஆனால் ஜனநாயக வழிக்குத் திரும்பியுள்ள எம்மீது குற்றம் குறை கண்டு பிடிக்க முடியாத நிலையில் அரசியல் கட்சிகள் 33வருடங்களுக்கு முந்தைய விஷயங்களையே எமக்கு எதிராக முன்வைக்கின்றன. கடந்த 28வருடங்களில் நாங்கள் ஒரு கல்லைக்கூட எறிந்ததில்லை. ஆனால் இந்தக் கட்சிகளின் ஊழல்கள், அதிகார துஷ்பிரயோகங்கள் பற்றி நாம் எடுத்துக்கூறும் போது அவர்கள் பழைய கதைகளையே பேசுகிறார்கள். 

கேள்வி:−நானும் 1971காலத்துக்கு வருகிறேன். அப்போது போதிக்கப்பட்ட ஏழு வகுப்புகளில் ஐந்தாம் வகுப்பு பாடம் இந்திய விஸ்தரிப்பு வாதம் தொடர்பானது என்றும் மத்திய மலைநாட்டில் வசித்த இந்திய வம்சாவளியினர் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்ல எனவும் போதிக்கப்பட்டதாக அறிகிறோம். இது உண்மையா? மலையக தமிழர்கள் தொடர்பான ஜே.வி.பியின் நிலைப்பாடு என்ன? 

பதில்:−அக்குற்றச்சாட்டு பொய்யானது. அந்தக் காலத்தில் திபெத் ஆக்கிரமிக்கப்பட்டது. கோவாவை இந்தியா கைப்பற்றியது. காஷ்மீரையும் இந்தியா தன் வசப்படுத்தியது. 77இல் ஜே.ஆர். ஜயவர்தன பதவிக்கு வந்தார். அவர் அமெரிக்க சார்பானவர். அதேசமயம் இந்தியா சோஷலிச நாடாக விளங்கியதால் எதிர்த் தரப்பில் நின்றது. எனவே இலங்கைக்கு அழுத்தம் தர வேண்டும் என இந்தியா விரும்பியது. இப்போது காலம் மாற பிராந்திய அரசியல் நிலைப்பாடுகளும் மாறிவிட்டன. இன்று அமெரிக்காவும் இந்தியாவும் ஓரணியில் நிற்கின்றன. அமெரிக்கா, பிரிட்டன், இந்தியா என்பன இந்தோ-பசுபிக் அமைப்பான குவாட்சில் அங்கம் வகிக்கின்றன. இன்றைய சூழலில் இந்தியாவைத் தவிர்த்து நாம் அரசியல் செய்யமுடியாது. இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி சமூகம் கடந்த ஐந்து தலைமுறைகளாக இந்நாட்டிலேயே வாழ்ந்து வருகிறது. இச் சமூகத்துக்காக நாம் எப்போதும் குரல் கொடுத்து வந்திருக்கிறோம். அச் சமூகம் சரிசமனாக சம உரிமைகளுடன் இங்கே வாழ வேண்டும் என்பதே எமது கொள்கை. நிலைப்பாடு. 

கேள்வி:−வடக்கு கிழக்கு அரசியல் உரிமைகள், 13ஆம் அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான ஜே.வி.பியின் கொள்கையை விரிவாக சொல்வீர்களா? தமிழர்களுக்கு ஜே.வி.பி மீது ஒரு சந்தேகம் உள்ளது. அதைக் களைய போதிய நடவடிக்ைக எடுத்ததாகத் தெரியவில்லை. ஜே.வி.பியில் தமிழ்ப் பிரிவு ஒன்றில்லை. தோழர் ராமலிங்கம் சந்திரசேகரரை வைத்திருக்கிறீர்கள், அவ்வளவுதான். 

பதில்:−13ம் அரசியலமைப்பு திருத்தம் பிரச்சினையைத் தீர்க்கவில்லையே! எனினும் இப்பிரச்சினைக்கு அரசியலமைப்பு ரீதியான ஒரு தீர்வு அவசியம் என நாம் கருதுகிறோம். அதேசமயம் இம் மக்களுக்கு ஒரு பொருளாதாரத் தீர்வு வழங்கப்படுவது அவசியம் என்பது எமது நிலைப்பாடு. இம் மக்களின் கல்வி, ஊட்டச்சத்து, வேலைவாய்ப்பு, புதிய தொழில்கள் என்பனவற்றில் உடனடியாக தீர்வு வேண்டும். ஏனெனில் பொருளாதார ரீயாக இம்மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். நீங்கள் சொன்ன மற்ற விஷயத்தில் உண்மை இருக்கவே செய்கிறது. நாம் ஆட்சிக்கு வருவதற்கும் அதை வைத்துக்கொள்வதற்கும் சிங்கள மக்களை மட்டும் அடிப்படையாக வைத்துக்கொள்ள முடியாது. அனைத்து சமூகங்களையும் ஒன்றிணைத்து கொண்டுதான் இதைச்செய்ய முடியும். 

ஆரம்பத்தில் நாங்கள் சிங்கள சமூகத்தை அடிப்படையாக வைத்தே எமது அரசியலை ஆரம்பித்தோம். எனினும் நாங்கள் எவ்வளவுதான் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்திருந்தாலும் அது அவர்கள் மத்தியில் எடுபட்டதாகத் தெரியவில்லை. ஏனெனில் அவர்களின் சமூகம் சார்ந்த கட்சிகளுடன்தான் இணைந்திருக்க விரும்புகிறார்கள். எனினும் நாம் தமிழ் மக்களை அரவணைத்துத் தான் செல்லவேண்டும். எனவே நாம் வடக்கை மையப்படுத்திய அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்பட விரும்புகிறோம். எனவே தமிழ்க் கட்சிகளை நான் அழைக்கிறேன். இன்று எமது கூட்டத்துக்கு யாழ்ப்பாணத்தை மையப்படுத்திய கட்சித் தலைவர்கள் வருகை தந்திருந்தார்கள். மேலும் தமிழ்மக்களிடையே எமது செயற்பாடுகள் போதுமானதாக இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன். எனவே தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்பட நாம் விரும்புகிறோம். 

கேள்வி:−தமிழர் உரிமைகள் தொடர்பாக வெளிப்படையாகப் பேசினால் சிங்கள மக்களின் சந்தேகத்துக்கு ஆளாக நேரிடும் என்ற பயம் காரணமாகவே தமிழ் விவகாரங்கள் தொடர்பில் அடக்கி வாசிக்கிறீர்களா? 

பதில்:−அப்படியல்ல. நாங்கள் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பாக கதைக்கும் அளவுக்கு தென்னிலங்கையில் எவரும் தமிழர் பிரச்சினைகளை பேசுவதில்லை. இன்றைக்கு நான் ஆற்றிய உரையைப் போன்ற ஒரு உரையை தென்னிலங்கையில் எந்தத் தலைவரும் நிகழ்த்தியிருக்க மாட்டார். ஆனால் எமது இந்தச் செயற்பாடுகள் தமிழர்களை சென்றடைவதில்லை என்பதே இங்கே பிரச்சினை. நாம் அச்சமின்றி இனவாத அரசியலுக்கு எதிராக பேசி வருகிறோம். 

கேள்வி:−காணி, பொலிஸ், நீதிமன்ற அதிகாரங்களை அளித்தால் அது தனிநாட்டுக்கு வழிவகுக்கும் என்று உண்மையாகவே ஜே.வி.பி நம்புகிறதா? 

பதில்:−இன்னொரு நாட்டை இங்கே உருவாக்குவது சாத்தியமான விஷயம் அல்ல. நாம் இனங்களுக்கிடையில் இருக்கக்கூடிய சந்தேகங்களைக் களைய முனைய வேண்டும். ஆனால் நிர்வாக சிக்கல்கள் உள்ளன என்பது ஒப்புக்கொள்ளப்பட வேண்டியதே. இப்போது பாருங்கள், பாடசாலைகளை எடுத்துக்கொண்டால் நகர பாடசாலைகள் தம்மை தேசிய பாடசாலைகளாக அறிவிக்கும்படி கேட்டுக்கொள்வதைப் பார்க்க முடிகிறது. அதாவது மாகாண மட்ட நிர்வாகம் போதுமானதாக இல்லை. மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வருமானால் போதிய வசதிகளைப் பெற்றுக்ெகாள்ளலாம் என்ற எதிர்பார்ப்பே இக் கோரிக்ைகக்குக் காரணம். 

கேள்வி:−நாடு இந்த வங்குரோத்து நிலைக்கு வருவதற்கு தமிழர் பிரச்சினையை தீர்க்காது சிங்களக் கட்சிகள் வாக்குவங்கி அரசியலை தென்பகுதியில் நடத்தியது ஒரு பெரிய காரணம் என்பதை ஏற்றுக்ெகாள்கிறீர்களா? 

பதில்:−அதுவும் ஒரு காரணம்தான். ஒரு ஜனாதிபதி ஹம்பாந்தோட்டையில் இருந்து தெரிவானால் ஹம்பாந்தோட்டைப் பகுதியில் எல்லா அபிவிருத்தி பணிகளும் நடைபெறத் தொடங்குகின்றன. அவர் பொலன்னறுவையில் இருந்து தெரிவானால் அப்பகுதியெங்கும் அபிவிருத்தியாகிறது. ஒரு தேசிய அபிவிருத்திக்கு வேலைத்திட்டத்தின் கீழ் இவை நடைபெறுவது இல்லை. எனவே ஒரு தேசிய திட்டத்தின் கீழ் முழு நாட்டையும் ஒருங்கிணைத்து சகல பகுதிகளிலும் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதே சரியான தேசிய திட்டமிடலாகும். மாத்தறையில் இருந்து பஸ்களில் பணிக்கு வருகிறார்கள் ஹம்பாந்தோட்டைக்கு. ஏனெனில் அவர்கள் அரசியல் ரீதியாக பணிக்கு நியமிக்கப்பட்டவர்கள். இசுருபாயவுக்கு இரண்டு பஸ்கள் குளியாபிட்டியாவில் இருந்து வருகின்றன. ஏனெனில் குளியாபிட்டி தொகுதி அமைச்சர் அவர்களுக்கு கல்வி அமைச்சில் உத்தியோகம் வழங்கியிருக்கிறார். இலஞ்ச ஊழல் விவகாரங்களும் தவறான பொருளாதார திட்டங்களும், பெரிய கட்சிகளின் ஆட்சியதிகாரத்துக்கான போட்டா போட்டியுமே இந் நாட்டின் நிலைக்கு காரணம். 

கேள்வி:−இலங்கையின் இரு பிரதான கட்சிகளும் தமிழர்களுக்கு பொருளாதார அபிவிருத்தியே அவசியம், அரசியல் உரிமைகள் அல்ல என்று கூறிவருகின்றன. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? 

பதில்:−இந்த நாட்டில் அனைவரும் சமம் என்ற ஒரு மனப்பான்மை மக்களிடம் ஏற்படுத்தப்பட வேண்டும். எனவே மக்களிடையே அரசியல், சிவில் மற்றும் பொருளாதார உரிமைகள் நிலைநிறுத்தப்பட வேண்டும். கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் நான் தமிழன் என்பதால்தான் எனக்கு இந்த நிலை என நினைக்கலாம். ஆனால் அனுராதபுரம் மதவாச்சியை சேர்ந்தவர்களும் கிளிநொச்சிக்காரரின் பிரச்சினையையே எதிர்கொள்கின்றனர் என்பதே உண்மை. இங்கு நான் சம்பந்தன் ஐயாவின் உரையை நினைவுபடுத்த விரும்புகிறேன். நான் ஒரு இலங்கைக் குடிமகன் என்று உலகத்துக்கு உரக்கச் சொல்ல விரும்புகிறேன். ஆனால் இரண்டாவது குடிமகனாக இருக்க விரும்பவில்லை என்றார். அதுதான் விஷயம். எனவே நாட்டை அபிவிருத்திக்கு இட்டுச் செல்ல தேசிய ஒருமைப்பாடு மிக முக்கியம். 

கேள்வி:−இனி தமிழ் அரசியலுக்கு வருவோம். தமிழரின் அரசியலில் நீங்கள் காணும் பெரிய குறைபாடுகள் யாவை? எவற்றை அவர்கள் உடனடியாக கைவிட வேண்டும் அல்லது மாற்றிக்கொள்ள வேண்டும் எனக் கருதுகிறீர்கள்? 

பதில்:−வடக்கை மட்டும் மையப்படுத்தி அரசியல் செய்வதை விட்டுவிட்டு தேசிய அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைக்கிறேன். பாராளுமன்றத்தில் என்ன விஷயம் விவாதத்துக்கு வந்தாலும் தமிழ் உறுப்பினர்கள் வடக்கைப் பற்றியே பேசுகிறார்கள். அவர்கள் மைய அரசியல் நீரோட்டதில் கலந்துகொள்ள வேண்டும்.

எனினும் இப்போது சில தமிழ் உறுப்பினர்கள், உதாரணத்துக்கு சாணக்கியன், தேசிய அரசியல் பற்றியும் பேசுகிறார்கள். தமிழ் மக்கள் பற்றி மட்டும் பேசும்போது என்ன நடக்கிறது என்றால் பிராந்திய அரசியல் மட்டும் பேசுபவர்கள் என்று சிங்கள சமூகம் நினைத்து விடுகிறது. எவ்வளவுதான் வடக்கை மையப்படுத்தி அரசியல் செய்தாலும் தேசிய அரசியலை மையப்படுத்தி மேற்கொள்ளப்படும் அரசியலே முக்கியமானதாகக் கருதப்படும். தமிழ்க் கட்சிகள் தமது மத்தியில் காணப்பும் பிளவுகளை மறந்து ஒன்றுபட்டு தென்னிலங்கையின் முற்போக்கு சந்திகளுடன் ஒன்றுபட்டு இனவாத அரசியலுக்கு எதிரான அரசியல் செய்யமுன்வரவேண்டும் என்று விரும்புகிறேன். எவ்வளவு தான் வடக்கு அரசியல் செய்தாலும் தேசிய அரசியலில் பங்களிப்பு செய்யாவிட்டால் பிரயோசனம் இல்லை. 

கேள்வி:−அடுத்த தேர்தலில் ஆட்சி அமைக்க முடியாவிட்டால், எதிர்க்கட்சியாக வரக்கூடிய வாய்ப்பு உள்ளதாகச் சொல்கின்றார்கள்.. எனவே கேட்கிறேன், உங்கள் ஆட்சி கம்யூனிசமா, ஜனநாயக சோஷலிஸமா அல்லது முதலாளித்துவ நாடுகளுடன் ஒத்துப்போகக்கூடிய ஒரு கலப்பு பொருளாதாரக் கொள்கையா? 

பதில்:−இப்போது உலகில் எந்தவொரு நாடும் அப்படிக் கருதுவதில்லை. ஒவ்வொரு நாடும் தமது மக்களின் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி பற்றியே நினைத்து செயல்படுகின்றன. இரண்டாவது உலக யுத்தத்தின் பின்னர் அமெரிக்க சார்பு, ரஷ்ய சார்பு என இரண்டு முகாம்கள் காணப்பட்டன. 1990களில் சோவியத் யூனியன் சிதறியது. அதன் பின்னர் அமெரிக்க அணி மட்டுமே காணப்பட்டது. இப்போது அந்த நிலை இல்லை. சீனா, இந்தியா, ஜப்பான், ரஷ்யா, அமெரிக்கா என பல அரசியல் சக்திகள் காணப்படுகின்றன. எனவே எமது வெளிநாட்டுக் கொள்கை எந்தவொரு வெளிநாட்டு அரசியல் சக்திகளுக்கு அடிபணியாமல் இருப்பதாகவே அமையும். மஹிந்த ராஜபக்‌ஷ சீன அரசியல் ஆளுமைக்குள் அனாவசியமாக தஞ்சமடைந்தது தவறாகப் போனது. அதனால் இந்தியா இலங்கைக்கு அழுத்தம் தர ஆரம்பித்தது. எனவே பக்கம் சாராததாக எமது வெளிநாட்டுக் கொள்கை அமையும். அதேசமயம் இந்தியாவைப் பாதிக்காத அரசியல் பொருளாதார கொள்கைகளை நாம் கைக்கொண்டாக வேண்டும். இந்தியாவுடன் மோதல் போக்கு கொண்ட அரசியலையோ பொருளாதாரக் கொள்கைகளையோ இலங்கை கொண்டிருக்கக்கூடாது. 

கேள்வி:−மதவாதமும், இனாவாதமும் தான் இந்நாட்டின் பெரிய பிரச்சினை. இடதுசாரியாக இருந்தாலும்கூட உங்களுக்கு தமிழ் வராது. பெரும்பாலான சிங்களவர்களுக்கு தமிழ், தமிழ் கலாசாரம், தமிழர் பிரச்சினை என்பது பற்றி எதுவுமே தெரிவதில்லை. இந்த இனவாதத்தையும் மதவாதத்தையும் அரசியலில் இருந்து ஒழிப்பது சத்தியமா? 

பதில்:−நிச்சயமாக ஒழிக்கப்பட வேண்டும். இனவாதம் என்பது இலங்கையில் ஒரு அரசியல். சிங்கள இனவாதத்தைப் போல தமிழ் இனவாதமும் காணப்படுகிறது. தென்னிலங்கை அரசியல் இனவாதத்துடன் கூடியது. அதுபோலவே இன ஒற்றுமை என்பதும் ஒரு அரசியல்தான். அதையே நாம் விரும்புகிறோம். அடுத்த தலைமுறைக்காக நாம் இனங்களை ஒன்றிணைக்க வேண்டும். ஏனெனில் இனங்களிடையே எவ்வளவு பிரச்சினைகள் காணப்பட்டாலும் எதிர்காலத்துக்காக நாம் ஒன்றிணையத்தான் வேண்டும். எனக்கு தமிழ் மொழி தெரிந்திருந்தால் நல்லதுதான். ஆனால் இந்த வயதின் பின்னர் தமிழை தெரிந்துகொள்வதென்பது.... 

கேள்வி:−புலம்பெயர்த் தமிழர் சமூகம் - டயஸ்போராவுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன? அவர்களை ஏன் இலங்கையின் அபிவிருத்திக்கு பயன்படுத்தக்கூடாது? 

பதில்:−இலங்கையில் ஒரு தனிநாடு உருவாகும் என்று எவரும் இனி நினைக்கக்கூடாது. இலங்கையில் இருந்து வெளியேறி வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் அந்தந்த நாடுகளில் இரண்டாம் பிரஜைகளே. ஆனால் இலங்கை அவர்களின் தாய்நாடு. டயஸ்போராவுக்கு இந்நாட்டை அபிவிருத்தி செய்வதில் பெரிய பங்களிப்பு உள்ளது. ஆனால் இனவாத அரசியல் இங்கு இருக்கும் வரை அவர்கள் இங்கு வரவோ, முதலீடு செய்யவோ முன்வர மாட்டார்கள். எனவே அத்தகைய சூழலை இங்கே உருவாக்க வேண்டும். 

கேள்வி:−வன பாதுகாப்பு திணைக்களமும் தொல்லியல் திணைக்களமும் தமிழ்ப் பகுதிகளில் இனவாதத்தோடு செயல்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? 

பதில்:−தொல்லியல் என்பது எமது வரலாற்றைப் பேசும் ஓர் துறை. தொல்லியல் எச்சங்கள் மற்றும் சின்னங்கள் காப்பாற்றப்பட வேண்டும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இங்கே தொல்லியல் என்பது இந்து தொல்லியல், பௌத்த தொல்லியல் சிங்கள, தமிழ் தொல்லியல் என்று பார்க்கப்படுகிறதுதான் இங்கு பிரச்சினை.

கேள்வி:−இலங்கை அரசியலில் மதத்தின் வகிப்பாகம் எவ்வாறு இருக்க வேண்டும்?

பதில்:−இலங்கை அரசியலில் இருந்து மதம் அகற்றப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. ஏனெனில் மனிதனின் அகத் தேவைகளை பூர்த்தி செய்வது மதத்தின் வேலை. மனிதனின் புறத் தேவைகளை கவனிப்பதே அரசியலின் வேலை. இவை இரண்டும் வெவ்வேறானவை என்பது எமது கருத்து.

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தை எடுத்துக் கொண்டால், அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும். 2013ஆம் ஆண்டு நான் சிறைச்சாலைக்கு சென்றிருந்தபோது 1996ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட ஒரு கைதியை சந்தித்தேன். அவர் செய்த குற்றம் விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருந்தமையே. அந்த அடையாள அட்டையில் கையெழுத்திட்டிருந்தவர் தயா மாஸ்டர். என்ன நடந்திருக்கிறது என்றால் கையெழுத்திட்டிருந்த தயா மாஸ்டர் வெளியே இருக்க அட்டையை வைத்திருந்தவர் உள்ளே இருக்கிறார்! இது என்ன நியாயம்?

பேட்டி கண்டவர்
சுமித்தி தங்கராசா

Comments