எரிபொருள் பற்றாக்குறை உச்சநிலையில் உள்ளது; எதிர்வரும் நாட்களில் 05 வீதமான தனியார் பஸ்களே சேவையில் | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

எரிபொருள் பற்றாக்குறை உச்சநிலையில் உள்ளது; எதிர்வரும் நாட்களில் 05 வீதமான தனியார் பஸ்களே சேவையில்

எரிபொருள் பற்றாக்குறை உச்சநிலையில் உள்ளதால் தனியார் பஸ்கள் எதிர்வரும் நாட்களில் 5சதவீதமளவிலே சேவையில் ஈடுபடுத்தப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.  

கொழும்பில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  

அவர் மேலும் கூறியதாவது,..  

போக்குவரத்து சேவையில் பஸ்கள் தாராளமாக ஈடுப்படுத்தப்படவில்லை ஆனால் பஸ் கட்டணம் மாத்திரம் நியாயமற்ற வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன.பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மேலும் பாதிப்பிற்குள்ளாக்கும் வகையில் தற்போதைய பஸ் கட்டண திருத்தம் காணப்படுகிறது.  

நிறைவடைந்த 6மாத காலப்பகுதியில் மாத்திரம் எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பஸ் கட்டணம் ஐந்து முறை அதிகரிக்கப்பட்டன.  

வருடாந்த பஸ் கட்டண திருத்தத்தில் எரிபொருள் விலையேற்றம் குறித்து அவதானம் செலுத்தாமல் பஸ் கட்டண திருத்தத்தை மேற்கொண்டிருக்கலாம்.  

பஸ் கட்டணத்தை அதிகரிக்காமல் எரிபொருள் நிவாரணத்தை பெற்றுக்கொடுக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கை குறித்து போக்குவரத்து அமைச்சர் அவதானம் செலுத்தவில்லை.  

பொதுப்பயணிகள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகள் குறித்து அவர் அக்கறை கொள்ளவில்லை.  

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தனியார் பஸ்கள் நேற்று 8 சதவீதமளவில் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுப்படுத்தப்பட்டன.எதிர்வரும் நாட்களில் 5 சதவீதமளவில் தான் போக்குவரத்து நடவடிக்கையில் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுப்படுத்தப்படும் என்றார்.    

Comments