பாண்டிச்சேரி சரக்கு கப்பற்சேவை; மக்களின் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான ஒரு வழிவகை | தினகரன் வாரமஞ்சரி

பாண்டிச்சேரி சரக்கு கப்பற்சேவை; மக்களின் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான ஒரு வழிவகை

  • புலம்பெயர் தேசங்களில் வருகின்ற பொருளாதார உதவிகள் எமது மக்களை தாங்கிப் பிடிக்கின்றன என்பதை மறுக்க முடியாது. 
  • எமதி பகுதியிலுள்ள பல்லாயிரக்கணக்கான தரிசு நிலங்கள் சரியாக பயன்படுத்தப்படுமாயின் எமது மக்கள் பொருளாதார நெருக்கடிகளை இன்னும் இலகுவாக சமாளிக்க முடியும் 
  • வனப் பாதுகாப்பு மற்றும் வனவள ஜீவராசிகள் திணைக்களம் போன்றவற்றினால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்ற எமது மக்களின் விவசாய நிலங்களை விடுவிக்க நான் நடவடிக்கை எடுக்கின்றேன். 
  • தமிழக அரசின் உதவி வழங்கலில் சில அரசியல்வாதிகளின் தான்தோன்றித்தனமான தலையீடுகளினால் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும் தகவல்கள் உள்ளன. 
  • கச்சதீவு தொடர்பான ஒப்பந்தத்தால் இலங்கைக்கே பாதிப்பு.எவ்வாறான விடயங்களில் இணைந்து செயற்பட வேண்டும் என்பது தொடர்பாக தெளிவும் மக்களுக்கு இருக்க வேண்டும்.  
  • தேசிய ரீதியிலான நியாயமான கோரிக்கைகளுக்கு, வடக்கு கிழக்கு மக்களும் தங்களுடைய தார்மீக ஆதரவை வழங்குவார்களாயின் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான அந்நியோன்யமும் தேசிய நல்லிணக்கமும் வலுப்படும்
  • நியாயமற்ற கோரிக்கைகளுக்கு வடக்கு மக்கள் பங்களிக்காமல் விலகி இருப்பதனை இன ரீதியான அல்லது பிரதேச ரீதியான நிலைப்பாடாக கருதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

தற்போதைய நெருக்கடி நிலையில் பெரும்பாலான பொருட்கள் இந்தியாவில் இருந்தே கொண்டு வரப்படுகின்றன. இவ்வாறு எடுத்துவரப்படுகின்ற பொருட்களை பாண்டிச்சேரியில் இருந்து நேரடியாக காங்கேசன்துறைக்கு எடுத்து வந்தால் கணிசமானளவு போக்குவரத்துச் செலவை கட்டுப்படுத்த முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பேட்டியில் தற்போதைய பொருளாதார நெருக்கடியை வடக்கு வாழ் மக்கள் எவ்வாறு சமாளிக்கின்றனர் என விபரிக்கின்றார்...  

தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை வடக்கு வாழ் மக்கள் எவ்வாறு தாங்குகின்றனர்?தெற்கு மக்களைப் போன்று வடக்கில் பொருளாதார நெருக்கடி பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை என்று கருதலாமா? 

தென்னிலங்கை மக்களுடன் ஒப்பிடுகின்ற போது, குறிப்பாக நகர்ப்புறங்களுடன் ஒப்பிடுகின்ற போது வடக்கின் வாழ்கைமுறை சற்று வித்தியாசமானது. கடந்த காலங்களில் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் புலிகளினால் ஏற்படுத்தப்பட்ட பொருளாதார நெருக்கடிகளின் போது, மக்கள் தாமாக முயற்சித்து தம்மைச் சூழுவுள்ள வளங்களை பயன்படுத்தி தமது அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய அனுபவம் அந்தப் பகுதி மக்களுக்கு இருக்கின்றது. 

அதேபோன்று கடந்தகால யுத்தம் ஏற்படுத்திய விளைவு வடக்கு கிழக்கு மக்களில் கணிசமானளவினரை புலம்பெயர வைத்திருக்கின்றது. அவ்வாறு புலம்பெயர்ந்து சென்றவர்கள் நாட்டிலே வாழ்ந்து வருகின்ற தங்களுடைய உறவினர்களுக்கு பொருளாதார உதவிகளை வழங்கி வருகின்றனர். அவ்வாறான உதவிகளை தொடர்ந்தும் நம்பி இருப்பது ஆரோக்கியம் இல்லை என்றபோதிலும், புலம்பெயர் தேசங்களில் வருகின்ற பொருளாதார உதவிகள் எமது மக்களை தாங்கிப் பிடிக்கின்றன என்பதை மறுக்க முடியாது. 

இந்த இடத்தில் இன்னொரு விடயத்தினை சொல்ல வேண்டும். கடந்த காலத்தில் எமது பிரதேசத்தில் பலன்கொழிக்கும் பூமிகளாக இருந்த பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தற்போது தரிசு நிலங்களாக காணப்படுகின்றன. அதற்கு எமது மக்களின் புலம்பெயர்வும் ஒரு காரணமாகவும் பாதுகாப்புக் காரணங்களினால் பயன்படுத்தப்பட முடியாமல்போன காணிகள் இன்னுமொரு காரணமாகவும் இருக்கின்றது. அவ்வாறான நிலங்கள் மீண்டும் சரியாக பயன்படுத்தப்படுமாயின் எமது மக்கள் பொருளாதார நெருக்கடிகளை இன்னும் இலகுவாக சமாளிக்க முடியும்.  

வனப் பாதுகாப்பு மற்றும் வனவள ஜீவராசிகள் திணைக்களம் போன்றவற்றினால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்ற எமது மக்களின் விவசாய நிலங்களை விடுவித்து அவற்றை விவசாய நிலங்களாக மாற்றுவதற்காக தொடர் முயற்சிகளிலும் நாம் ஈடுபட்டு வருவதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். 

எவ்வாறாயினும், நகர்ப்புற நாகரீகத்தை நாடுகின்ற தற்போதைய தலைமுறையினரும், தொழில்நுட்ப மற்றும் இலத்திரனியல் முன்னேற்றத்தினைப் பயன்படுத்தி இலகு வாழ்க்ைக முறைக்குப் பழக்கப்பட்டிருகின்றவர்களும் எரிபொருள் தட்டுப்பாடு உட்பட்ட பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க தடுமாறி வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. 

தமிழக அரசு வழங்கிய நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாண மக்களை பாரபட்சமற்று சென்றடைந்திருக்கின்றதா? 

பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இலங்கை மக்களுக்கு உதவும் வகையிலேயே தமிழக மக்களினால் நிவாரண உதவிகள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அந்த அடிப்படையில் வடக்கு மாகாணத்திற்கும் கணிசமானளவு நிவாரணப் பொதிகள் பகிர்ந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கான பயனாளர்கள் மாவட்ட செயலகத்தின் ஊடாக அரச அதிகாரிகளினாலேயே தெரிவு செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் இந்த நிவாரண உதவிகள் கிடைத்திருப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லாவிட்டாலும், முன்னுரிமை அடிப்படையில் ஒரு பகுதியினருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கின்றன.  

அவற்றிலும் சில அரசியல்வாதிகளின் தான்தோன்றித்தனமான தலையீடுகளினால் சில இடங்களில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. 

கச்சதீவு இந்தியாவிற்கு நீண்டகாலக் குத்தகைக்கு வழங்கப்படவுள்ளதாக தெரவிக்கப்படுகின்றதே? 

இல்லை. கொள்கை ரீதியில் அவ்வாறான தீர்மானங்கள் எவையும் டெல்லி தரப்பினாலோ அல்லது கொழும்பு தரப்பினாலோ மேற்கொள்ளப்படவில்லை. அரசியல் நோக்கங்களுக்காக சில தமிழக அரசியல் தரப்புக்களினாலும், இலங்கையில் சுயலாப அரசியல்வாதிகள் சிலராலும் இந்த விடயம் ஊடகங்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது.  

உண்மையிலேயே, கச்சதீவு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் காரணமாக இலங்கைக்கே பாதிப்பு ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களே பாரிய பாதிப்பை சந்தித்துள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் காரணமாக பாரம்பரியமாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வந்த, மீன் படுக்கைகள் இழக்கப்பட்டிருக்கின்றன. 

யதார்த்தத்தினை புரிந்து கொள்ளாமல் கச்சதீவை இலங்கையிடம் கையளித்தமையினால் இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக இந்திய அரசியல்வாதிகளினால் சொல்லப்பட்டு வருவதுடன் தேவையற்ற குழப்பங்களும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. 

அவ்வாறு இந்தியாவிடம் கையளிக்கப்படுமானால், அது இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடிக்கு அங்கீகாரம் அளிப்பதாக அமையாதா? 

இல்லையே.. கச்சதீவை வழங்குவது தொடர்பாகவே யாரும் சிந்திக்கவில்லையே. இந்நிலையில் தேவையற்ற விடயங்கள் தொடர்பாக நாம் ஏன் சிந்திக்க வேண்டும். 

தெற்கில் அரசியல் நெருக்கடிகள் ஏற்படுகின்ற போதெல்லாம் தமக்கும் அதற்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லாதது போன்று வடக்கு மக்கள் நடந்துகொள்கின்றார்களே? 

கடந்த காலங்களில் வடக்கிலும் தெற்கிலும் இருந்த சுயலாப அரசியல்வாதிகள் காலத்திற்கு காலம் தங்களுடைய அரசியல் நலன்களுக்காக மக்கள் மத்தியில் இனரீதியான நஞ்சுகளை விதைத்து வடக்கு மக்களுக்கும் தெற்கு மக்களுக்கும் இடையில் உள ரீதியான இடைவெளியை ஏற்படுத்தி வைத்திருக்கின்றார்கள். 

இதனை பின்னர் பிரபாகரனும், பிரபாகரனுக்கு வக்காலத்து வாங்குகின்ற தரப்பினரும் வளர்த்தெடுத்தனர் - வளர்க்கும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபடுகின்றனர். 

இந்த இடைவெளிதான் எமது மக்களின் நியாயமான அபிலாசைகளைக்கூட தென்னிலங்கை மக்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்ற நிலைமையையும், தென்னிலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற தேசிய ரீதியான வேலைத் திட்டங்களையும் வடக்கு மக்கள் தமக்கு எதிரான தீர்மானமாக நோக்குகின்ற சூழலும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது. 

இந்த நிலைமை மாற்றமடையாத வரையில் எமது மக்களின் அபிலாசைகளையோ அல்லது உரிமைகளையோ பெற்றுக்கொள்ள முடியாது. எனவேதான், இரண்டு தரப்புக்களுடையேயும் தேசிய நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதை நான் வலியுறுத்தி வருகின்றேன். 

வலியுறுத்துவது மாத்திரமன்றி, கடந்த 30வருடங்களுக்கு மேலாக தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படுத்துவதற்கான வேலைத் திட்டங்களிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றேன். எனது முயற்சிக்கு அரசியல் பரப்பில் கணிசமானளவு வெற்றியும் கிடைத்திருக்கின்றது. எனினும் மக்கள் மத்தியிலான தேசிய நல்லிணக்கம் என்பது மேலும் கணிசமானளவு முன்னேற வேண்டும் என்பதே என்னுடைய கணிப்பாக இருக்கின்றது.  

இந்த இடைவெளியே வடக்கும் தெற்கும் இணைந்து பொதுவான கோரிக்கையை முன்வைத்து போராட்டங்களை முன்னெடுக்க முடியாமைக்கு காரணமாக இருக்கின்றனது. 

இதுவொரு புறமிருக்க, எவ்வாறான விடயங்களில் இணைந்து செயற்பட வேண்டும் என்பது தொடர்பான தெளிவும் மக்களுக்கு இருக்க வேண்டும். நாடு என்ற அடிப்படையில் தேசிய ரீதியில் நியாயமான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு போராட்டங்கள் நடத்தப்படுமாயின், அவற்றிற்கு வடக்கு கிழக்கு மக்களும் தங்களுடைய தார்மீக ஆதரவை வழங்குவார்களாயின் வடக்கிற்கும் தெற்கிற்கும் இடையிலான அந்நியோன்ய பரிமாற்றங்கள் அதிகரித்து தேசிய நல்லிணக்கத்தினை வலுப்படுத்துவதாகவும் இருக்கும். 

ஆனால், அரசியல் நோக்கங்களுக்காக நியாமற்ற கோரிக்கைகளை முன்வைத்து தெற்கில் மேற்கொள்கின்ற போராட்டங்களுக்கு வடக்கு கிழக்கு மக்கள் ஆதரவளிப்பாளர்களாயின் பாதகமான விளைவுகளையே ஏற்படுத்தும். 

தற்போது பொருளாதார நெருக்கடிகளை காரணமாக முன்னிறுத்தி தெற்கில் போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடிகளில் இருந்து நாட்டை மீட்க வேண்டிய கடமை தற்போதைய அரசாங்த்திற்கு இருக்கின்றது என்பதை நான் மறுக்கவில்லை. அதேபோன்று, தற்போதைய அரசாங்கத்தின் சில தீர்மானங்களும் பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணமாக அமைந்து விட்டன என்பதை எமது ஜனாதிபதியே வெளிப்படையாக தெரிவித்திருக்கின்றார். 

அதற்காக, பொருளாதார நெருக்கடிகளுக்கு தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளே முழுமையான பொறுப்பு என்ற குற்றச்சாட்டினையும் ஏற்றுக்கொள்ள முடியாது. சிறீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் உள்ளூர் உற்பத்தி பொருளாதாரத்தை வளர்க்கும் நோக்கில் மேற்கொண்ட நடவடிக்கையை விமர்சித்து, 1977ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் அறிமுகப்படுத்திய பொருளாதாரக் கொள்கையும், பின்னர் தொடர்ச்சியாக அரசாங்கங்கள் மேற்கொண்ட தீர்மானங்களும் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு காரணமாக இருக்கின்றன. 

இவ்வாறான நிலையில், தற்போதைய அரசு ஆட்சியில் இருப்பதன் காரணமாகவே பொருளாதார நெருக்கடிகளுக்கு நாடு முகங்கொடுத்துள்ளது என்பது போன்று, போராட்டம் நடத்துவதை அரசியல் நோக்கம் கொண்ட செயற்பாடுகளாகவே கருதவேண்டியுள்ளது. அவ்வாறான நியாயமற்ற கோரிக்கைகளுக்கு வடக்கு மக்கள் பங்களிக்காமல் விலகி இருப்பதனை இன ரீதியான அல்லது பிரதேச ரீதியான நிலைப்பாடாக கருதுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

எரிபொருள் விலையதிகரிப்பு – தட்டுப்பாடு காரணமாக வடக்கு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அவற்றை தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி..? 

எரிபொருள் விலையதிகரிப்பு என்பது சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் சம்பந்தப்பட்டது. குறிப்பிட்ட அளவிற்கு மேல் அரசாங்கத்தினால் சர்வதேச ரீதியில் ஏற்படுகின்ற விலையதிகரிப்புக்களை தாங்கிக் கொள்ள முடியாதுள்ளது.  

அதேபோன்று, அண்மைக்காலமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு நாடாளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை என்ற அடிப்படையில், வடக்கு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தட்டுப்பாட்டினை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. பல்வேறு தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதைவிட கடற்றொழிலாளரகள் மற்றும் விவசாயிகளுக்கு தேவையான எரிபொருளை வழங்கும் நோக்கோடு இந்தியாவிடம் இருந்து சுமார் 3இலட்சம் பரல்களில் மண்ணெண்ணெய் எடுத்து வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

அதைவிட, பாண்டிச்சேரியில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்திற்கு டீசல் மண்ணெண்ணை போன்ற எரிபொருட்களை கொண்டு வருவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றேன். குறித்த சரக்குப் படகு சேவைக்கான அனுமதிகளை உரிய தரப்புக்கள் வழங்கியிருக்கின்ற போதிலும், பொருத்தமான முதலீட்டாளர்கள் மூலம் எரிபொருட்கள் உட்பட வடக்கு மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை கொண்டு வருதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. விரைவில் வடக்கு மக்களுக்கு தேவையான எரிபொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் என்று நம்புகின்றேன். 

இந்தியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையிலான சரக்கு படகு போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்படவிருப்பதாக சொல்கின்றீர்கள். தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்க்க எந்தவகையில் இது உதவும் என்று கருதுகின்றீர்கள்? 

தற்போதைய நெருக்கடி நிலையில் பெரும்பாலான பொருட்கள் இந்தியாவில் இருந்தே கொண்டு வரப்படுகின்றது. அவை இந்தியாவில் இருந்து பருத்தித்துறை, திருகோணமலை, காலி போன்ற பிரதேசங்களை கடந்து கொழும்பிற்கு கொண்டு வரப்படுகின்றது. பின்னர், வடக்கிற்கு தேவையானவற்றை பாரவூர்திகள் அல்லது புகையிரதம் மூலமாக வடக்கு எடுத்து வருகின்றோம்.  

இவ்வாறு எடுத்துவரப்படுகின்ற பொருட்களை பாண்டிச்சேரியில் இருந்து நேரடியாக காங்கேசன்துறைக்கு எடுத்து வருவோமாயின் கணிசமானளவு போக்குவரத்துச் செலவை கட்டுப்படுத்த முடியும். அத்துடன் நியாயமான விலையில் தேவையானளவு பொருட்களை கிடைக்கச் செய்ய முடியும். இது எமது மக்கள் எதிர்கொள்ளுகின்ற பொருளாதார நெருக்கடிகளை சமாளிப்பதற்கான ஒரு வழிவகையாக அமையும் என்று நம்புகின்றேன்.  

பி.வீரசிங்கம்  

Comments