நிலைபேறான அபிவிருத்தியும் கறுப்புச் சந்தையும் | தினகரன் வாரமஞ்சரி

நிலைபேறான அபிவிருத்தியும் கறுப்புச் சந்தையும்

இலங்கையின் நிலவரத்தைப் பற்றிக் கொஞ்சம் ஆழமாக நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. ஒரு ஆண்டுக்கு முதல் நிலைபேறான அபிவிருத்தி (Sustainable development) என்று வாய்க்கு வாய் எல்லோருமே சொல்லிக் கொண்டு திரிந்தார்கள். அப்படிச் சொல்வதே ஒரு நாகரீகமாக (fashionably) இருந்தது. தேசிய அரங்கில் மட்டுமல்லாமல், மாவட்டங்கள், பிரதேசங்கள் என எங்கும் இதைப்பற்றிய உரையாடல்கள், கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள் எனப் பெரிய திருவிழா களைகட்டியிருந்தது. படித்தவர்கள், அதிகாரிகள், தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தோர், அரசியல்வாதிகள் – ஆட்சித்தரப்பினர் எல்லாம் ஒரு முகம் கொண்டு நிலைபேறான அபிவிருத்தி (Sustainable development) யில் நாட்டை வளர்த்தெடுப்போம் என்று உறுதியுரைத்தனர். இதற்காகப் பல கோடி பணம் செலவழிக்கப்பட்டது. பலருக்கு இது ஒரு நன்மதிப்பாகவும் பெரும் உழைப்பாகவும் இருந்தது.  

அப்பொழுது பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்றெல்லாம் சொல்லப்பட்டது. அல்லது அப்படிப் படம் காட்டப்பட்டது. தெரு முடுக்குகளில், கட்டிடங்களின் முன்னே, வாய்க்கால் கரைகளில், மின்பிறப்பாக்கிகளுக்கு அருகில், கோயில் வீதிகளில், சந்தை, சதுக்கங்களில் எல்லாம் “அபிவிருத்தியின் நாயகர்கள்” பல்லிழித்துக் கொண்டிருந்தனர். (அரசியல்வாதிகளின் படங்கள்). இன்னும் இந்த அபிவிருத்திக் “கட்டவுட்” களை நீங்கள் பார்க்க முடியும். (இதற்கான செலவு வேறு).  

இதைப்போல இந்தத் திட்டங்களைத் தொடக்க வைக்கவும் முடித்துத் திறந்து வைக்கவும் செய்யப்பட்ட செலவும் கொஞ்சமல்ல. அதற்கான ஆளணியும் நிர்வாக நேர ஒதுக்கீடும் கூட அளவுக்கு அதிகமானதே. இதிலே எந்த ஆட்சியினரும் விலக்கல்ல. ஏட்டிக்குப் போட்டியாக இதைச் செய்தனர். உண்மையில் இதெல்லாம் அபிவிருத்திச் செயற்பாடு என்பதை விட அரசியற் செயற்பாடு என்று சொல்வதே சரியாகும். இதை இங்கே ஏன் சொல்கிறோம் என்றால், இந்தச் சந்தர்ப்பத்திலாவது நாம் உண்மைகளை துணிச்சலோடு அறிந்து, ஏற்றுக் கொள்ள வேண்டும். கடந்த காலத் தவறுகளிலிருந்து நேர்மையான முறையில் பாடங்களைப் படித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே. அதாவது இன்றைய துயரங்களிலிருந்து, நெருக்கடிகளிலிருந்து மீட்சியடைவதற்காக.  

இப்படி நிலைபேறான அபிவிருத்தி (Sustainable development) யைப் பற்றிப் பேசியவர்களையும் அந்தத் திட்டங்களில் ஈடுபட்டவர்களையும் இப்பொழுது எங்குமே காணவில்லை. பொருளாதார நெருக்கடி வந்தவுடன், அடுத்த கட்டம் என்ன என்று சொல்ல வேண்டியவர்கள், இந்த நெருக்கடிக்குக் காரணம் என்ன என்று பேச வேண்டியவர்கள் காணாமலே போய் விட்டனர். குறைந்த பட்சமாக தங்களுடைய நிலைபேறான அபிவிருத்தி (Sustainable development)க்கு என்ன நேர்ந்தது என்பதைக் கூடப் பேசுவதற்கு அவர்கள் முன்வரவில்லை. தயாரில்லை. பதிலாக எங்கேயாவது ஒரு லீற்றர் பெற்றோலை இலகுவாகப் பெற்றுக் கொள்ளலாம். எங்கே மலிவான விலையில் பொருட்கள் கிடைக்கின்றன? அவற்றை வாங்கிச் சேமித்துக் கொள்ளலாம் என்று தங்கள் தனிப்பட்ட நலன்களைக் குறித்து மட்டுமே சிந்திப்பவர்களாகக் குறுகி விட்டனர். 

உண்மையில் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு இவர்களும் காரணம். இவர்களில் யார் ஒருவரேனும் இத்தகையதொரு பொருளாதாரப் பிரச்சினை இலங்கையில் ஏற்படும் என்று முன்னுணர்ந்து – முன்னறிந்து சொன்னதில்லை, எச்சரித்ததில்லை. அந்தளவுக்கு அறிவுப் புள்ளியில் இந்த விசயம் இவர்களுக்குத் தட்டுப்படவில்லை. சிரத்தை இருந்தால்தானே அதைக்குறித்த ஆய்வும் அறிதற் சிந்தனையும் இருக்கும்!  

ஆனால், இவர்கள் எல்லோரும் மிகத் தந்திரமாக ராஜபக்ஸ குடும்பத்தின் மீது பழியைச் சுமத்தி விட்டுத் தப்பி விடுகின்றனர். ராஜபக்ஸவினருக்கு நெருக்கடிகளிலும் தவறுகளிலும் பங்குண்டு என்பது மறுக்க முடியாதது. நாடே இதைப் பகிரங்கமாகப் பேசிக் கொண்டிருக்கிறது. அதற்காக மக்களுடன் சேர்ந்து தாமும் ராஜபக்ஸவினர் மீது பழியைச் சுமத்தி விட்டுத் தப்பித்து விட முடியாது இந்தப் பொருளாதாரத் துறையினர் மற்றும் பொருளாதார நிபுணர்கள்.  

ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கை இருக்கும் என்றார் மகிந்த ராஜபக்ஷ. போரை முடிவுக்குக் கொண்டு வந்து, துரித கதியில் உட்கட்டுமானங்களை (வீதி அபிவிருத்தி, குளங்கள், கால்வாய்கள் புனரமைப்பு, நாடு முழுவதற்குமான மின்சார விநியோகம், பாடசாலைகள், மருத்துவமனைகள் விருத்தி, பொது நோக்கு மண்டபங்கள் தொடக்கம் அரச பணிமனைகள் வரை அனைத்து நிர்மாணத்தையும்) விருத்தியாக்கியதோடு, நாட்டின் அபிவிருத்திக்கான அடிப்படை உருவாக்கப்பட்டதாக அவர் கருதியிருக்கலாம். ஆகவே அபிவிருத்திக்கான அடிப்படை உருவாக்கப்பட்டதால், துரித கதியில் நாடு சுய பொருளாதார விருத்தியை நோக்கி முன்னேறும் எனவும் அவர் கருதியிருக்கக் கூடும். இன்று “மகிந்த சிந்தனை” என்ற அந்தக் கருத்திட்டத்தை எடுத்து ஆராய்ந்தால் அதன் குறைபாடுகளும் நிறைவும் புரியும்.  

தேசிய பொருளாதாரக் கொள்கை ஒன்றை வரைந்து கொள்ளாமல், வகுத்துக் கொள்ளாமல் அரசியல் பிரகடனமாக அதனை வரையறுத்துக் கொண்டதன் வெளிப்பாடே அந்தச் சிந்தனை அடிபட்டுப் போனதற்குக் காரணமாகும். இதில் விமல் வீரவன்ச, பஸில் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு கூடுதல் பொறுப்புண்டு என்று சொல்லப்படுகிறது. இவர்களே அளவுக்கு அதிகமாக “மகிந்த சிந்தனை” பற்றிய விளம்பரங்களைச் செய்தவர்கள். அதில் மிஞ்சிய ஒரே லாபம் அல்லது நன்மை என்றால் அது இதுவரை செய்யப்பட்ட உட்கட்டுமான விருத்தியே. ஆனால் அதை மேலும் முன்னெடுக்கவோ தொடர்ந்து பராமரிக்கவோ முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வீதிகள் சேதமடைந்தால் அவற்றைப் புனரமைப்புச் செய்வதற்கு நிதியோ எரிபொருளோ இல்லை.  

உண்மையில் “அபிவிருத்தி” என்ற பெயரில் நடந்ததெல்லாம் உட்கட்டுமானம் (Infrastructure) மட்டுமே. இது அபிவிருத்திக்கான ஆரம்பச் செயற்பாடு. அடித்தளம். இதைச் சிலர் முன்பு குறிப்பிட்டபோது மறுத்து வாதாடியோருண்டு. அந்தளவுக்குத்தான் அவர்களுடைய பொருளாதாரம் குறித்த, அபிவிருத்தியைக் குறித்த புரிதல் இருந்தது.  

நாம் அவர்களிடம் இப்பொழுது கேட்கலாம், “எங்கே நீங்கள் குறிப்பிட்ட அந்த அபிவிருத்தியெல்லாம்? அவற்றுக்கு என்ன நடந்தது?” என்று. “ஒரு வருடம் தாக்குப் பிடிக்க முடியாமல் எல்லாமே வெட்ட வெளியாகி விட்டதே. கையறு நிலையில், இன்று வந்து நிற்கிறோம். அந்தரம் அவசரத்துக்கு ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்க்கே வக்கற்ற நிலை ஏன் வந்தது? ” என.  

திருவிழாக்காலத்தில் இரவில் கவர்ச்சியாக ஒளிரும் காப்பு, சீப்பு, கண்ணாடி மாளிகை காலையில் படுத்து விடுவதை போல எல்லாமே வெளிறிப்போய் விட்டன. தேசியப் பொருளாதாரக் கொள்கையின் அடிப்படையில் சுயபொருளாதார விருத்தியை நோக்கிக் கட்டம் கட்டமாக இலங்கை நகர்ந்திருக்குமானால், இன்றைய கையறு நிலை வந்திருக்காது.  

 அனைத்தையும் வெளியிலிருந்தே இறக்குமதி செய்ய வேண்டும் என்ற தங்கு நிலைப் பொருளாதாரத்தை (தரகுப் பொருளாதாரத்தை) தொடர்ந்தும் பின்பற்றியதால், இன்று அந்நியச் செலாவணிக்கான தட்டுப்பாடு வந்தவுடன் அனைத்தும் படுத்து விட்டன. இதைச் சரியாகக் கணிப்பிடத் தவறியதன் விளைவே, நிலைபேறான அபிவிருத்தி (Sustainable development) என்ற சொல் நம்மைப் பார்த்துப் பல்லிழிக்கிறது.  

 உண்மையில் நிலைபேறான அபிவிருத்தி (Sustainable development) என்ற கருத்திட்டம் (Concept) உலகளாவிய அளவில் பேசப்பட்ட ஒன்று. 2000த்தில் புதிய மிலேனியத்துடன் கவனமெடுக்கப்பட்ட இந்தக் கருதுகோள், முதற்கட்டமாக 2015இல் ஒரு எல்லையை அடையும் எனவும் 2030இல் இதன் இறுதி இலக்கை அடையும் எனவும் பேசப்பட்டது. சில நாடுகள் இந்த இலக்கை நோக்கி நகர்கின்றன. ஆனால், இலங்கையோ பின்னோக்கி வீழ்ந்துள்ளது. அது தன்னுடைய நிலையான தேசிய வருவாயை – உற்பத்திக் கூறுகளை இழந்ததன் விளைவே இது. இதை இந்தச் சந்தர்ப்பத்திலேனும் புரிந்து கொள்ளவில்லை என்றால் நாட்டுக்கு மீட்சியில்லை. நாட்டுக்கு மீட்சியில்லை என்றால் நமக்கும் மீட்சியில்லை.

ஆனால், இதைப் பலரும் புரிந்து கொள்வதில்லை. நாட்டுக்கு என்ன பிரச்சினையாவது வரலாம் போகலாம்.

நமக்கென்ன என்றவாறே பலரும் சிந்திக்கிறார்கள், செயற்படுகிறார்கள். இதனால்தான் நாடு இந்தளவுக்குச் சீரழிந்தது.  

 ஒரு சிறிய உதாரணம், வெளிப்பரப்பில் எரிபொருள் இல்லை. ஆனால் உள்ளூரில் தாராளமாக உண்டு. விலைதான் மூன்று நான்கு மடங்கு உயர்வு. ஒரு லீற்றர் பெற்றோலின் விலை 3000/= வரை போகிறது. நன்றாகக் கவனிக்கவும் 300இல்லை. 3000/=. டீசல் லீற்றர் ஒன்று, 800/= க்கு மேல். பல இடங்களிலும் எரிபொருள் மாஃபியாக்கள் உருவாகி விட்டனர். பதுக்கல்காரர் தாராளமாக உள்ளனர். கறுப்புச் சந்தைப் பொறிமுறையில் வெற்றிகரமாக அணிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன.  

இதைப்பற்றிப் பகிரங்கமாக எல்லோருக்குமே தெரியும். ஆனாலும் யாரும் – எந்தத் தரப்பும் நடவடிக்கை எடுக்கவில்லை. பதிலாக கூடுதல் விலையைக் கொடுத்துப் பொருட்களைப் பெற்றுக் கொள்கிறார்கள். இது எவ்வளவு தவறு என்று சிந்திக்கவில்லை. எப்படியாவது தங்களுடைய தேவை நிறைவேறினால் சரி என்று மட்டுமே சிந்திக்கிறார்கள்.  

இது ஏன்? அப்படியென்றால் இந்தத் தவறை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்களா? 

இந்த எரிபொருள் எங்கே இருந்து வந்தது? இவர்கள் தனியாகக் கப்பலில் இருந்து விசேடமாக இறக்கினார்களா? அல்லது இவர்களுக்கு அரசாங்கமோ பிற அனுமதிக்கப்பட்ட தரப்புகளோ விசேடமாக எரிபொருளை வழங்கினவா? 

இல்லை. இல்லவே இல்லை. 

அத்தனை எரிபொருள் மாஃபியாக்களும் (அடி) ஆட்களை வைத்தும் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் சிறப்புச் சலுகை அடிப்படையிலும் அதிகமாகப் பெற்றுப் பதுக்கினர். இரவு பகலாக தெருவிலே, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கால்கடுக்க, மனம் கொதிக்க நிற்கும்போதுதான் சனங்களின் எதிர்ப்பையும் விமர்சனத்தையும் கடந்து இதை இந்தப் பதுக்கல்காரர் வெட்கமின்றி, தயக்கமின்றிச் செய்தனர். (இவர்கள்தான் இனப்பற்றைப் பற்றியும் நீதியைப் பற்றியும் ஒடுக்குமுறையைப் பற்றியும் விடுதலையைப் பற்றியும் அதிகமாகக் கதைக்கின்றவர்கள் அப்படி நடிப்பவர்கள்)  

இதை எந்த அரசியல்வாதிகளும் தடுக்க முற்படவில்லை. தெருவிலே நாட்கணக்காகச் சனங்கள் நிற்கும்போது அந்தப் பக்கமாக எந்த அரசியல் பிரமுகரும் எட்டிப் பார்க்கக் கூட இல்லை. ஆனால், தேர்தல் என்று வந்து விட்டால் வீடு வீடாக, தெருத்தெருவாக இந்தப் “பிச்சைகள்” வாக்குப் பிச்சை கேட்டு அலைவார்கள்.  

இப்பொழுது பதுக்கிய எரிபொருட்களெல்லாம் ரகசிய ஏஜென்டுகள் மூலமாக விற்கப்படுகிறது.  

இதைக் கண்டும் காணாமல் இருக்கின்றன அரசியற் தரப்புகள். அரச நிர்வாகத் தரப்பு.பொலிஸ் மற்றும் படைத்துறை உள்பட பொறுப்பான பலவும்.  

அதாவது “எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. கறுப்புச் சந்தை திறக்கப்பட்டுள்ளது.”  

இவ்வளவு பெரிய அரசியற் போராட்டங்கள், மாற்றங்கள் எல்லாம் நடந்த மண்ணில், தேசத்தில் மிகப்பெரிய அர்ப்பணிப்பைச் செய்த சமூகத்தில் நடக்கின்ற காரியங்களைப் பார்த்தீர்களா? இந்த அயோக்கியத்தனத்துக்கு என்ன பெயர்? இதற்கு என்ன மதிப்பு? இதற்கு என்ன நடவடிக்கை? இவர்களைச் சமூகம் தண்டிக்காமல் விட முடியுமா? மக்கள் திரண்டு இந்தப் பதுக்கலை மீட்கவோ முறியடிக்கவோ வேண்டாமா?  

நிலைபேறான அபிவிருத்தி (Sustainable development) என்பது என்ன என முதலில் நம்முடைய சிந்தனையில் தெளிவுற வேண்டும். அதற்குப் பிறகே அனைத்தும்.

கருணாகரன்

Comments