தமிழ்ப் பகுதிகளில் பறிபோகும் விவசாய காணிகள்; தடுத்து நிறுத்துமா வனத் திணைக்களம்? | தினகரன் வாரமஞ்சரி

தமிழ்ப் பகுதிகளில் பறிபோகும் விவசாய காணிகள்; தடுத்து நிறுத்துமா வனத் திணைக்களம்?

'தரிசாகக் கிடக்கும் காணிகளை எல்லாம் விவசாய பூமியாக்குங்கள் என்கிறது அரசு. வடக்கிலோ தமிழர் காணிகளை பற்றிப் பிடித்து காடாக வைத்திருக்க முனைகிறது வன பாதுகாப்பு திணைக்களம். பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழனாக அரசு!'

ஒரு நாட்டின் அபிவிருத்தி என்பது அந்நாட்டின் இறைமையை காப்பாற்றுகின்ற ஒரு விடயம் ஆகும். அபிவிருத்தி என்று பார்க்கின்ற போது நாட்டில் காணப்படும் அத்தனை துறைசார் விடயங்களையும் சம அளவில் அபிவிருத்தி செய்கின்ற போதே அந்நாடு முழுமையான அபிவிருத்தியை அடைகின்றது.  

முற்றத்து மல்லிகை மணம் வீசாதென்று கூறுவது போல சொந்த நாட்டில் தேவையான வளங்கள் குவிந்து கிடக்கும் தறுவாயில் அண்டை நாடுகளிடம் கையேந்துகின்ற நிலையை நாட்டின் தலைவர்கள் உருவாக்கிவிடுகிறார்கள்.  

தற்போது இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்தவர்களின் சிந்தனைகளில் மாற்றம் வராததன் காரணத்தாலேயே நாடு தற்போது அதள பாதாளத்தில் தள்ளப்பட்டுள்ளது.  

தனியே தமது அரசியல் நலன்கள் கட்சிசார் விடயங்கள் தனிப்பட்ட நலன்கள் என்பனவற்றுக்கும் பேரினவாத மாயைக்கும் முக்கியத்துவம் அளித்து வந்ததால் நாட்டின் வளர்ச்சி தொடர்பில் சிந்திப்பதற்கு அரச தலைவர்களுக்கு காலம் இடம்கொடுக்கவில்லை என்பதே உண்மை.  

கையிலிருக்கும் பூனையை தவறவிட்டு பூஸ் பூஸ் என்பது போல நாட்டில் இருக்கும் வளங்களை பயன்படுத்தாது அவற்றை மலடாக்கி ஏனைய நாடுகளின் காலடியில் தஞ்சம் புகுவதை இந் நாட்டு தலைவர்கள் பழக்கமாக்கிக் கொண்டுள்ளனர்.  

இங்குள்ள வளங்களை பிற நாடுகளுக்கு விற்பனை செய்வதையும், அவர்கள் இந் நாட்டு வளங்களை சுரண்டி தமது தேவைகளை கச்சிதமாக நிறைவேற்றிக் கொள்வதையும் உற்று நோக்கும் போது எம்மவர்கள் சொந்தக் காசில் சூனியம் வைப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது.  

நாட்டு வளங்களை குரங்கு அப்பத்தை பங்கிட்டுக்கொண்டதுபோல பங்கிடுவதைப் பார்க்கும் போது அதில் கிடைக்கும் வருவாயை ஏப்ப மிடுகின்ற தன்மையை நிறையவே பார்த்து விட்டோம்.  

ஏற்கனவே கூறியதைப் போன்று சிந்தனையில் அக்கறையற்ற பேரினவாத சக்திகள், தமிழர் தரப்பு மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இனவாத வெறியை, அரச அதிகாரிகளை பயன்படுத்தி தமிழர் பகுதிக்குள் தேவையான அளவிற்கு விதைத்துள்ளார்கள் என்பது நிதர்சனம்.  

வன பாதுகாப்புத் திணைக்களத்தை எடுத்துக்கொண்டால் அத் திணைக்களத்தில் கடமை புரியும் பணியாளர்கள் முற்று முழுதாக பெரும்பான்மை இனத்தவராகவே உள்ளனர்.  

தமிழர் பகுதிக்குள் தமிழ் இளைஞர் யுவதிகளை கடமைக்கு அமர்த்த தவறியுள்ளமை நயவஞ்சகத் தனமே.  

அத்துடன் மெதுமெதுவாக தமிழர் வளங்களை சுரண்டுவதற்காக மிகச் சிறப்பாக கட்டமைக்கப்பட்ட ஒரு தனிப்படையாகவே வனப் பாதுகாப்பு திணைக்களத்தை தமிழ்ச் சமூகம் பார்க்கிறது.  

இந்த இடத்தில்தான் தமிழர் தரப்பு பலவீனப்பட்டுள்ளதை காண முடிகின்றது. அவர்களின் அம்புகளுக்கு இரையாகி அவர்களின் எண்ணங்களுக்கு வடிவம்கொடுக்கின்ற ஊடகமாக தமிழர்கள் மாறி, யானை தன் தலையிலே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்வதைப் போல தமிழர்களும் தம்மை தாமே அழித்துக்கொள்கின்றார்கள்.  

மிக தந்திரமாக திட்டமிட்டு தமிழர் வளங்களை, அவர்களை வைத்தே சூறையாடும் திட்டத்தில் அரச தரப்பு பாரிய வெற்றியைக் கண்டு வருகிறது.  

தமிழ்ப் பகுதி காடுகளில் காணப்படும் மர வளத்தை சூறையாடுவதை நாம் காண்கிறோம். இதற்கு சோரம் போகக் கூடிய தமிழர்களையே பயன்படுத்துகின்றனர்.  

திணைக்களத்தினரின் ஒத்தாசையுடன் காடுகளில் உள்ள மரங்கள் தேவைக்கேற்றாற் போல் வெட்டி விற்பனை செய்யப்படுவதை அவதானிக்க முடிகிறது.  

வேலியே பயிரை மேய்ந்தது போல வன வளத் திணைக்களத்தினரே செயற்படுவது வருந்தத்தக்க விடயமாகும்.  

காடுகள் அழிக்கப்படும் போது இப் பிரதேசத்துக்கான மழை வீழ்ச்சி பாதிக்கப்படுவதோடு சூழல் வெப்பமடைகிறது. சூழல் சமநிலை குழப்பமடைகிறது. இதனூடாக தமிழர்களின் விவசாய செயற்பாடுகளில் இடர்பாடு ஏற்படுகிறது. அவர்களின் தன்னிறைவு பொருளாதாரம் ஆட்டம் காண முடியும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  

அதிக மழை இல்லாது போவதும், அதிக வறட்சியால் பயிர் விளைச்சல் பாதிக்கப்படுவதும், பூச்சி மற்றும் நோய்களின் தாக்கங்கள் அதிகரிப்பதும் இதன் சங்கிலித் தொடர் விளைவுகளே.  

அது மட்டுமல்லாது அதிக வெப்பம் காரணமாக மண் வளத்தில் சிதைவு துரிதப்பட்டு உற்பத்தி திறனின் அளவும் குறைய வாய்ப்புள்ளது.  

இத்தோடு கரியமில வாயு அதிகரிப்பதால் உற்பத்தித் திறன் அதிகரித்து பயிர்கள் அதிக அளவு சத்துக்களை மண்ணிலிருந்து எடுத்துக் கொள்ளும். இதனால் மண்வளம் குறையலாம்.  

இது மட்டுமன்றி பூமி வெப்பமடைவதால் கொசுக்களின் வாழ்நாள் மற்றும் இனவிருத்தியின் அளவு அதிகரிப்பதன் காரணமாக, கொசு தொடர்பான நோய்கள் பரவும் வாய்ப்பு அதிகரிப்பதால் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதோடு இவை பொருளாதாரத்தில் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது.  

காட்டை அழிப்பதால் பக்டீரியா மற்றும் பூஞ்சைகள் வளர்வதற்கு உகந்த நிலை ஏற்படுவதோடு, விளைபொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களும் சேதமடைகின்றன. இதனால் உற்பத்தியின் அளவு குறைவடைவதோடு பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்துகின்றது.  

இவ்வாறு காடுகள் அழிக்கப்படும் சந்தர்ப்பங்களில், மண்ணரிப்பும் இயல்பாகவே இடம்பெறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.  

இவை இவ்வாறு இருக்க, வனங்களை பாதுகாக்க வேண்டியவர்கள் பெறுமதியான மரங்களை தறித்து விற்பனை செய்யும் மாபியாக்களுடன் கை கோர்த்து நிற்பது பாம்பிற்கு பால் வார்ப்பதைப் போலுள்ளது.  

இவ்வாறான விடயங்களை தமிழர் பகுதிகளில் கட்டவிழ்த்து விடுவதால் தமிழர்களை கையேந்தும் நிலைக்கு தள்ளிவிடலாம் என்ற எதிர்பார்ப்பு இவர்களிடம் காணமுடிகிறது.  

அத்தோடு தமிழர்கள் காலாதி காலமாக செய்கைபண்ணி வந்த விவசாய காணிக்கள் நாட்டில் ஏற்பட்ட பல அனர்த்தங்களால், நீண்ட காலமாக செய்கை பண்ணப் படாமல் இன்று காடுகளாக மாறியுள்ளன.  

இவற்றை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் வனப் பாதுகாப்புத் திணைக்களம், அப் பகுதிகளை தமது ஆளுகைக்குட்பட்ட பகுதிகளாகக் கருதி எல்லைக் கற்களை நாட்டிக் கொள்வது தற்போதுள்ள பாரிய பிரச்சினையாக எழுந்துள்ளது.  

அத்தோடு மீள் காடு வளர்ப்பு என்ற திட்டத்தை இப் பகுதிகளில் குறித்த திணைக்களம் முன்னெடுக்க தவறியுள்ளமையும் பெரும் வருத்தமளிக்கின்ற சம்பவமாக மாறியுள்ளது.  

நீண்டகால அனர்த்தங்களால் உருக்குலைந்து போன தமிழர் பொருளாதாரம் மெல்ல மெல்ல தற்போது வளர்ச்சி கண்டுவரும் நிலையில், குறித்த பகுதிகளை மீள பயன்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.  

இதனால் அப் பகுதிகளை மீள் விவசாயத்திற்காக பயன்படுத்த முனைகின்ற போதே, வன பாதுகாப்புத் திணைக்களம், தமது பொறிக்குள் தமிழர்களை சிக்கவைத்து தமது நாடகத்தை அரங்கேற்றி வருகிறது.  

பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்களை தமிழர்களின் ஜீவனோபாய செயற்பாட்டிற்கு வழங்காது கோழி தன் குஞ்சைப் பாதுகாப்பது போல திணைக்களத்தினர் இறுக பற்றி வைத்திருப்பது தமிழர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது.  

உதாரணமாக வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கனகராயன்குளம் தெற்கு கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட குறிசுட்டகுளம் கிராமத்தை எடுத்துக் கொள்ளலாம். இங்கே பல வருடங்களாக மக்கள் விவசாயம் செய்து வந்துள்ளார்கள். நாட்டு சூழல் காரணமாக அதனையும் கைவிடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது உண்மையே.  

தற்போது விவசாய செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டிய தேவை ஏற்படவே, வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தினால் அப் பகுதியில் ஐந்து வருடங்களுக்கு முன்னதாக 63விவசாயிகளுக்கு அக் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.   இவை இப்படி இருக்கும் போது, அக் காணிகளுக்கான முழுமையான ஆவணங்களும் சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு அதிகார பூர்வமாக பிரதேச செயலகத்தினால் கையளிக்கப்பட்டுள்ளது.  

இருந்தும், அப் பகுதியை துப்பரவு செய்து தமது விவசாயத்தை மேற்கொள்வதற்கு வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினர் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர்.  

அப் பகுதியை வன பாதுகாப்பு திணைக்களத்தினர் தமக்கு உரித்தான பகுதியாக அறிவித்துள்ளதே தற்போதுள்ள பிரச்சினையாக உள்ளது.  

இது தொடர்பில் அப் பகுதிக்கான பிரதேச செயலாளர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் என பல தரப்பட்டவர்களிடமும் அம் மக்கள் முறையிட்டும் இதற்கான தீர்வு எட்டா கனியாகவே காணப்படுகிறது.  

தற்போதுள்ள நாட்டு நிலையை கருத்திற்கொண்டால் அரசு தரிசு காணிகளை விவசாயத்துக்கு பயன்படுத்துங்கள் என்று உற்சாகமூட்டுகிறது. வனவள திணைக்களமோ சட்டம் பேசிக் கொண்டிருக்கிறது.  

இவ்வாறு தமிழர் பிரதேசமெங்கும் தமது காய்களை மிகச் சிறப்பாக நகர்த்தி இனவாத சக்திகள் வெற்றி கண்டு வருகிறது.  

நாடு குட்டிச் சுவராய்ப் போனதே இனவாதத்தால் என்பதே உண்மையானாலும் இச் சக்திகள் அதை விடுவதாக இல்லை.  

இவ்வாறு வடக்கைப் பொறுத்தவரையில் பல இடங்களில் இவ்வாறான செயற்பாடுகள் மிக துல்லியமாக முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறு தமிழர் வளங்களை முடக்கும் போது அவர்கள் சுயமாக தமது தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை தோன்றுகிறது. இதன் மூலம் தமிழர் தரப்பின் மீண்டெழும் முயற்சிகளை தடுப்பதாகவும் தொடர்ச்சியான பொருளாதார முன்னேற்றத்தை அமிழ்ப்பதாகவுமே அரச இயந்திரத்தின் செயற்பாடுகள் காணப்படுகின்றது.  

இதனால் வடக்கில் நெல் உற்பத்தி மற்றும் சேனைப் பயிர்ச் செய்கை போன்றவற்றின் உற்பத்தி வீழ்ச்சி கண்டிருப்பது பெரும் சாபக் கேடாக மாறியுள்ளது.  

இவ்வாறான நிலையில் சுதந்திரமாக தாம் வாழ்ந்த பூமியில் தமது விவசாய செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாத கையறு நிலைக்குள் தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளதை காண முடிகின்றது.  

இதே போன்று ஆற்றுப்படுகைகளில் மணல் மாபியாக்களை உருவாக்கி மணல் கொள்ளைகளும் கட்டுப்படுத்த முடியாதளவிற்கு தலைவிரித்தாடத் தொடங்கியுள்ளது.  

இதற்கு காவல்துறையினரும் வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினரோடு சேர்ந்து கை கோர்த்துள்ளதாக மக்கள் கருதுகின்றனர்.  

இவ்வாறான குற்றச் செயல்கள் இடம்பெறும் சந்தர்ப்பங்களில் அவற்றை சம்பந்தப்பட்டவர்களுக்கு பொது மக்கள் தெரியப்படுத்தும் போது,குறித்த மாபியாக்களிடம் தகவலாளிகள் தொடர்பான விவரங்களை கசியவிட்டு இரு தரப்பையும் மோதவிட்டு வேடிக்கை பார்க்கின்ற நிகழ்வும் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றது.   இதனால் தமிழர்களிடையே குரோதத்தையும் ஒற்றுமையின்மையும் வளர்ப்பதோடு, வன்முறைகளையும் தூண்டி, தொடர்ந்தும் குற்றச் செயலில் ஈடுபடுவதற்கு வழிகாட்டியாக இனவாத இயந்திரம் செயற்பட்டுக் கொண்டிருப்பதையும் காண்கிறோம்.   வனத்தை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் அதை அழிப்பதோடு மட்டுமல்லாமல், விவசாய செயற்பாட்டை சீர்குலைப்பதன் மூலம் தமிழர் தரப்பில் பொருளாதார சிதைப்பை வன பாதுகாப்புத் திணைக்களம் முன்னெடுத்து வருவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.  

பல தசாப்தங்களாக தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட கொடிய யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர், தற்போது அவர்களின் வளங்களை சுரண்டி அவர்களை இயங்கு நிலையிருந்து பின் தள்ளிவைக்கும் முயற்சியாகவே இவற்றை பார்க்கிறோம்.  

வவுனியூர் சஜீவன்

Comments