இடுக்கண் களையும் நல்லெண்ணம் கொண்டதே இந்தியாவின் நட்பு! | தினகரன் வாரமஞ்சரி

இடுக்கண் களையும் நல்லெண்ணம் கொண்டதே இந்தியாவின் நட்பு!

இலங்கையில் எரிபொருள் நெருக்கடி தற்போது ஆபத்தான கட்டத்தை நெருங்கி விட்டது. வாகன பாவனையாளர்களுக்கு போதுமான அளவு விநியோகிப்பதற்கென எந்தவொருஎரிபொருள் நிலையத்திலும் டீசல், பெற்றோல் தற்போது கைவசம் கிடையாது. நாட்டிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில்பெரும்பாலானவை மூடப்பட்ட நிலையில் கிடக்கின்றன.

எரிபொருள் நிலையத்துக்குள் எவரும் பிரவேசிக்க முடியாதவாறு அவற்றின் நுழைவாயிலுக்கு தடுப்பு நாடா கட்டப்பட்டுள்ளது. ஆனால் எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுக் கிடந்தாலும், வாகன உரிமையாளர்கள் ஏதோவொரு அசட்டுத்தனமான நம்பிக்கையில் தங்களது வாகனத்தை கியூவரிசையில் நிறுத்தி வைத்து விட்டு இரவுபகலாக வீதியில் காத்துக் கிடக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் அரசாங்கம் உண்மை நிலைவரத்தை மக்களுக்கு தெளிவாக எடுத்துக் கூறி விட்டது.

‘எரிபொருள் கையிருப்பைப் பொறுத்தவரை நாட்டின் நிலைமை கவலைக்குரியதாகவே உள்ளது. மக்கள் முடிந்தவரை பொறுமையாக இருப்பதைத் தவிர வேறு வழி கிடையாது. ஆனால் நாட்டின் அத்தியாவசிய சேவைகளை நாம் தடையின்றி முன்கொண்டு செல்ல வேண்டியுள்ளது. அதற்கான எரிபொருளை அரசாங்கம் கையிருப்பில் வைத்துள்ளது. எனவே மக்களின் பாவனைக்கான எரிபொருளைப் பெற்றுக் கொள்வதில் நிலவுகின்ற நெருக்கடியானது தவிர்க்க முடியாததாகும்’.

இதுவே அரசாங்கத்தின் இப்போதைய நிலைப்பாடு ஆகும். அதேசமயம் நாட்டின் உண்மை நிலைமையும் இதுதான். மக்களின் அன்றாட வாழ்வை இயக்குவது எரிபொருள்தான் என்பது இப்போதுதான் நன்கு புரிகின்றது.

அந்நிய செலாவணிக் கையிருப்பு தீர்ந்து போனதால் எமது நாடு மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளதென்பது உலகுக்கே தெரிந்த விடயமாகி விட்டது. இதில் ஒளிவுமறைவுக்கு இடமே இல்லை. இலங்கைக்கு இன்றைய இக்கட்டான தருணத்தில் கைகொடுத்து உதவுவதற்கு சில நாடுகள் முன்வந்துள்ளன. ஆனாலும் அந்நாடுகளின் உதவிகள் எமது நாட்டை வந்தடைவது எப்போது என்பதுதான் இன்றுள்ள பிரச்சினை!

இலங்கையின் நெருக்கடி பாரதூரமானது. வெளியுலகில் இருந்து வருகின்ற உதவிகளை எமது நாடு எந்நேரமும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது. உடனடியான உதவிகள்தான் இலங்கைக்குத் தேவையாக இருக்கின்றன. இந்த விடயத்தில் இந்தியாவை மட்டுமே இவ்வேளையில் குறிப்பிட்டுக் கூற வேண்டியிருக்கின்றது.

‘உடுக்கை இழந்தவன் கை போல் ஆங்கே, இடுக்கண் களைவதாம் நட்பு’ என்பது வள்ளுவப் பெருமானார் கூறியுள்ள வாசகம் ஆகும்.

அதாவது ‘ஒருவனின் உடை கீழே நழுவி விழுகின்ற வேளையில், அவனது கை எத்தனை விரைவாக செயற்பட்டு அந்த உடையை பற்றிக் கொள்கின்றதோ, அத்தனை வேகமாக நண்பனின் இடர் வேளையில் விரைந்து உதவுவதே உண்மை நட்பு ஆகும்’ என்பதே இக்குறளின் இலகுவான விளக்கம் ஆகும்.

மனிதனின் நெறியான வாழ்வுக்கு அரிய கருத்துகளை எழுத்து வடிவில் தந்து விட்டுச் சென்றுள்ள திருவள்ளுவப் பெருமான் உதித்த பூமி இந்தியா ஆகும். வள்ளுவப் பெருமானாரின் கூற்றுகளை நாம் நடைமுறையில் காண்பது போலவே இந்தியாவின் இன்றைய செயற்பாடுகள் அமைந்துள்ளன.

இலங்கை மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இவ்வேளையில் எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் விரைந்து வந்து உதவுகின்ற நாடு இந்தியாவாகவே உள்ளது. உணவு, எரிபொருள், விவசாயப் பசளைகள், மருந்துப் பொருட்கள் என்றெல்லாம் இவ்வேளையில் இந்தியா வாரி வழங்குகின்ற உதவிகள் எண்ணிலடங்காதவை ஆகும்.

இலங்கைக்கு இலகு முறையில் மீளச்செலுத்தக் கூடியதான கடனுதவிகளையும் இந்தியா பெருமளவில் வழங்கியுள்ளது. கொவிட் தொற்று வேளையில் தடுப்பூசிகளை உடனடியாகவே வழங்கி எமது நாட்டின் அச்சத்தைத் தணித்து உதவிய நாடு இந்தியா என்பதும் மறக்க முடியாத வரலாறாக இருக்கையில், இன்றைய பொருளாதார உதவிகளும் அவ்வாறானதுதான்.

இந்தியா இத்தனை உதவிகளை வழங்குகின்ற போதிலும் அதனைக் கொச்சைப்படுத்தும் வகையில் இலங்கையில் அரச எதிர்ப்பு சக்திகளும், சில ஊடகங்களும், இனவாத சக்திகளும் தொடர்ந்து செயற்பட்டு வருவதுதான் கவலைக்குரிய விடயம். ஆனாலும் இந்தியா இவ்வாறான ஆதாரமற்ற வீணான விமர்சனங்கள் குறித்து ஒருபோதும் அலட்டிக் கொண்டது கிடையாது. இந்தியாவின் உதவிகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன. தற்போது இலங்கைக்கு எரிபொருளை மேலும் வழங்குவதற்கான முயற்சிகள் இந்தியாவில் நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட அதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். இந்தியாவுடன் மிக நெருக்கமான நட்புறவைக் கொண்ட இலங்கையின் தூதுவராக மிலிந்த மொரகொட திகழ்கின்றார். இந்திய மத்திய அரசின் உயர்மட்டத் தலைவர்கள் பலருடன் நட்புறவு கொண்டவர் மிலிந்த.

அது மாத்திரமன்றி, இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடி வேளையில் இந்திய உதவிகளைப் பெற்றுக் கொள்வதில் மிலிந்த மொரகொட மேற்கொண்ட முயற்சிகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை ஆகும். அவரது முயற்சிகளின் பலாபலன்கள் இன்றைய வேளையில் மிகவும் அதிகம் எனலாம்.

எமது நாட்டின் இன்றைய எரிபொருள் நெருக்கடியைத் தணிப்பதிலும் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தற்போது பெருமுயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார். அதாவது இலங்கைக்குத் தேவையான எரிபொருட்களை பெற்றுக் கொள்வது தொடர்பில் இந்தியாவுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளன.

இலங்கை ரூபாவில் பணம் செலுத்தி இந்தியாவில் இருந்து எரிபொருள் பெறுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. இந்திய எரிபொருள் அமைச்சர் ஹர்திப் சிங் பூரியுடன் இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.

இந்தப் பேச்சுக்களின் பலனாக டீசல் அடங்கிய கப்பல் ஒன்றை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கு இந்தியா உடன்பட்டுள்ளதாக அறிய வருகிறது. இன்னும் ஒரு வார காலத்தில் இந்தக் கப்பல் இலங்கையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை பெற்றோல் அடங்கிய கப்பலொன்றை இலங்கைக்கு வரவழைப்பது தொடர்பாக சிங்கப்பூரூடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாகவும் மற்றொரு தகவல் தெரிவித்துள்ளது. இந்தக் கப்பலும் சில தினங்களில் நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவையெல்லாம் ஒருபுறமிருக்க இலங்கை அரசுக்கு முழுமையான ஆதரவு வழங்குவதில் இந்தியா உறுதியான நிலைப்பாட்டிலேயே உள்ளதென்பது இந்த உதவிகள் மூலம் தெளிவாகின்றது. இந்திய அரசாங்கத்தின் நிதி மற்றும் பெருநிறுவன விவகார அமைச்சர் நிர்மலா சீதாராமன், பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளும் விடயத்தில் இலங்கை அரசுக்கு இந்தியாவின் முழுமையான ஆதரவை கடந்த மே மாதத்தில் தெரிவித்திருந்தமையும் இவ்விடத்தில் சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும்.

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட கடந்த மாதம் புதுடெல்லியில் உள்ள நிதியமைச்சின் அலுவலகத்தில் நிர்மலா சீதாராமனைச் சந்தித்து இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

மே மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற இச்சந்திப்பின் போது, இலங்கைக்கான இந்தியாவின் ஆதரவு மற்றும் பெரும்போகத்தில் நெற்செய்கைக்குத் தேவையான 65,000மெற்றிக் தொன் யூரியாவின் அவசரத் தேவை என்பவை கருதி 55மில்லியன் அமெரிக்க டொலர் கடனாக இந்தியாவினால் ஒதுக்கப்பட்டமை குறித்து மிலிந்த மொரகொட மீண்டும் அமைச்சர் சீதாராமனுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.

இலங்கையின் பொருளாதாரத்தை புத்துயிர் பெற வைக்கும் நடவடிக்கையில் தனது அமைச்சின் பூரண ஒத்துழைப்பை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவிடம் தெரிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இக்கட்டான காலகட்டத்திற்குப் பின்னர் தனது மக்களின் ஆதரவுடன் இலங்கை விரைவில் மீண்டு வரும் என்று நம்பிக்கையும் தெரிவித்திருந்தாரென்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கென இந்தியன் ஒயில் கோர்ப்பரேஷனால் (IOC) வழங்கப்பட்ட 40,000மெட்ரிக் தொன் எரிபொருள் உட்பட சுமார் 200,000மெட்ரிக் தொன் அளவிலான எரிபொருளை இந்தியா இதுவரை வழங்கியுள்ளது.

இலங்கையில், நெருக்கடி நிலையைத் தீர்க்கவும், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் உதவுவதற்காக இந்தியா மேலும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு கடன் வழங்குவதாகவும் அறிவித்திருந்தது. அதோடு, 11,000மெட்ரிக் தொன் அரிசியை கொழும்புக்கு வழங்கியிருந்தது.

இவ்வாறிருக்கையில், இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்குத் தீர்வாக நான்கு எரிபொருள் கப்பல்களை கொள்வனவு செய்வது தொடர்பாகவே இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை ஆரம்பமாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொடவிற்கும் இந்தியாவின் பெற்றோலிய இயற்கை வாயு, வீடமைப்பு மற்றும் நகர அலுவல்கள் அமைச்சர் ஹர்திப் சிங் பூரிக்கும் இடையில் புதுடில்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது நான்கு எரிபொருள் கப்பல்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கே முயற்சி மேற்கொள்ளப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் உற்பத்தி, விநியோகம் மற்றும் பகிர்ந்தளிப்புத் தொடர்பில் இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்தும் மக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் குறித்தும் மிலிந்த மொரகொட இந்திய அமைச்சரிடம் தெளிவுபடுத்தியுள்ளார். எரிபொருள் இறக்குமதிக்காக கடனாக வழங்கப்பட்ட உதவிக்காக உயர்ஸ்தானிகர் இந்தியாவிற்கு நன்றி தெரிவித்தார்.

இலங்கைக்கு பெற்றோல் மற்றும் டீசலை விநியோகிப்பது தொடர்பில் இந்திய அமைச்சர் சாதகமான கருத்தை வெளியிட்டதாகவும் இந்தத் தீர்மானம் மிக்க சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்க இணங்கியதாகவும் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகம் அறிவித்துள்ளது. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் எரிபொருள் துறையின் ஒத்துழைப்பை விருத்தி செய்யக் கூடிய முறை குறித்தும் அங்கு கவனம் செலுத்தப்பட்டது. இரண்டு டீசல் கப்பல்களையும் இரண்டு பெற்றோல் கப்பல்களையும் கொள்வனவு செய்வதற்கும் அங்கு கவனம் செலுத்தப்பட்டது. இதில் டீசல் கப்பலை விரையில் இலங்கைக்கு அனுப்ப இந்தியா இணக்கம் தெரிவித்திருப்பதாக இலங்கை அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், இந்தக் கப்பல் நாட்டை வந்தடைய மேலும் ஒரு வார காலம் எடுக்கும்.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியைத் தீர்க்க, இந்தியாவின் ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்குமாறு இந்திய அரசிடம் உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட கோரிக்கை விடுத்துள்ளமையும் இவ்விடத்தில் சுட்டிக் காட்டப்பட வேண்டியதாகும். சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வேலைத்திட்டம் இறுதி செய்யப்படும் வரையில், இலங்கை எதிர்நோக்கும் நிதி நெருக்கடியை தணிக்க உதவுமாறு உயர்ஸ்தானிகர் இந்தியாவிடம் கோரியுள்ளார்.

இதேவேளை, "இந்தச் சூழலில், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் எரிபொருளுக்கான கடன்கள் மற்றும் கொடுப்பனவுகளின் இருப்பு போன்ற வடிவங்களில் இந்தியா வழங்கும் உதவிகளை அதிகரிப்பது மற்றும் மறுசீரமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அமைச்சரும் உயர்ஸ்தானிகரும் ஆராய்ந்தனர்" என்று இலங்கை தரப்பிலான அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பொருளாதார உரையாடலை நடத்துவதற்கான நிறுவப்பட்ட உத்தியோகபூர்வ நிலைப் பொறிமுறையானது தொடர வேண்டும் என்றும் இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இந்தியா இலங்கைக்கு 3பில்லியன் டொலர் மதிப்பிலான பொருளாதார உதவிகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எஸ்.சாரங்கன்

Comments