கார்மேகத்தின் வாழ்வினை எழுத்தில் பதிவு செய்தமை​ ஈழத்தின் முன்னோடி இலக்கியச் செயற்பாடாகும்' | தினகரன் வாரமஞ்சரி

கார்மேகத்தின் வாழ்வினை எழுத்தில் பதிவு செய்தமை​ ஈழத்தின் முன்னோடி இலக்கியச் செயற்பாடாகும்'

'எழுத்தையே  தொழிலாக,  வாழ்வாகக்  கொண்ட  பத்திரிகையாளர்கள் நமது சமூகத்தில் கவனிப்பாரற்றுப் போய்விடுகிறார்கள். அவர்களது வாழ்க்கையைப் போற்றுவார் யாருமில்லை. இந்நிலையில் இலங்கையில் தமிழ் பத்திரிகையொன்றிலும், தமிழகத்தின் தினமணியிலும் ஆசிரியர்பீடத்தை அணி செய்த எஸ்.எம்.கார்மேகத்தின் வாழ்வினை எழுத்தினில் பதிவு செய்த முயற்சி ஈழத்தின் முன்னோடி இலக்கியச் செயற்பாடாகும்.

'பத்திரிகையாளர்  எஸ்.எம்.கார்மேகம் -வாழ்வும் பணியும்' என்ற நூலினைத் தொகுத்து வழங்கியிருக்கும் எச்.எச்.விக்கிரமசிங்கவின் பணி, 'காலம் போற்றும் சிறந்த பணியாகும்' என்று மலையக ஆய்வாளர் மு.நித்தியானந்தன் லண்டன் வெம்பிளி தமிழ் நிலையத்தில் சென்ற ஜூன் 26ஆம் திகதி நடைபெற்ற புத்தகக் கண்காட்சியின் நூல் வெளியீட்டு அரங்கில் பத்திரிகையாளர்  எஸ்.எம்.கார்மேகம் - வாழ்வும் பணியும் இரண்டாம் பதிப்பினை வெளியிட்டு, உரையாற்றிய போது தெரிவித்தார்.

'வெறும்  சம்பளத்திற்காக வேலை பார்க்கும் தொழிலாகக் கருதாமல், தனது பணியை ஆத்மார்த்தமாக செய்து, மலையக இலக்கியத்திற்கு வளம் சேர்த்த கார்மேகத்தை அறிந்த, அவரோடு பணியாற்றிய பல பத்திரிகையாளர்களையும், மேலும் பல ஆளுமைகளையும் இனங்கண்டு இந்நூலைத் தொகுத்து வழங்கியமை விக்கிரமசிங்கவின் சிறந்த தொடர்பு வட்டத்தினையும், எடுத்துக்கொண்ட பணியினைத் திறம்பட முடிக்கும் ஆற்றலையும் புலப்படுத்துகிறது' என்று அவர் மேலும் பேசுகையில் தெரிவித்தார்.

'கண்டி மன்னர்கள்', 'ஈழத்தமிழர் எழுச்சி', 'ஒரு நாளிதழின் நெடும் பயணம்' ஆகிய நூல்களையும் எழுதிய ஆய்வாளராகவும் எனது தந்தை திகழ்ந்தார். பத்திரிகைப்பணியிலும் பொது வாழ்விலும் முழு நேரத்தைச் செலவிட்டாலும் குடும்ப உறவினையும் பண்போடும் பாசத்தோடும் அரவணைத்துச் செல்லும் ஒருவராக அவர் எங்கள் நெஞ்சில் என்றும் குடியிருப்பார்' என்று அவுஸ்திரேலியாவில் வாழும் கார்மேகத்தின் புதல்வி கனகா கணேஷ் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் 'எனது தந்தை பத்திரிகையாளர் கார்மேகத்தின் பத்திரிகை சாதனைகளை ஆவணப்படுத்தும் முகமாக 'வாழ்வும் பணியும்' என்ற இந்த நூலின் இரண்டாம் பதிப்பு கடந்த ஜூன் 11ம் திகதி லண்டன் மலையக இலக்கிய மாநாட்டில் மு.நித்தியானந்தன் விமர்சன உரை நிகழ்த்தியது எங்களுக்கு பெருமை தரும் நிகழ்வாகும்.

இன்று லண்டன் புத்தக கண்காட்சியில் என்னையும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள செய்து கௌரவித்ததை எனது பாக்கியமாகவே கருதுகிறேன். ஏற்பாட்டாளருக்கும் எனது நன்றிகள். இந்நூலில் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்ரமணியன் முன்னுரையும், தினக்குரல் வார வெளியீட்டின் முன்னாள் பிரதம ஆசிரியர் பாரதி இராஜ நாயகம் அணிந்துரையும் தந்துள்ளனர்.

உள்ளடக்கமாக எனது தந்தையுடன் 1960முதல் தொடக்கம் பழகிய நண்பர்கள் உடன் பணியாற்றியவர்கள் உட்பட 46பேரின் அரிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. எனது தந்தையைப் பற்றிய இந்நூலிற்கான ஆக்கங்களை கேட்டவுடனேயே அவரவது பரபரப்பான பணிகளுக்கிடையில் சிரமேற்கொண்டு எழுதி கொடுத்ததை  நன்றியுடன் நினைவு கூருகிறேன்.

இந்நூலில்  மு.நித்தியானந்தனும் என் தந்தையை பற்றிய காத்திரமான கட்டுரையை எழுதித் தந்துள்ளார். அவருக்கும் எனது நன்றிகளை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்கள் தந்தையைப் பற்றி  எங்களுக்கே  தெரியாத  நிறைய  விடயங்கள் நாங்கள் ஆவணப்படுத்த மிக உதவியாக இருந்தது அவர்களது ஆக்கங்களே.

மேலும் 'நினைவினில் வாழும் இனிய தந்தை' என்ற தலைப்பில் எனது கட்டுரையும் இந்நூலில் இடம் பெற்றுள்ளது.

இந்நூலின் முதற் பதிப்பு 2018ஆம் ஆண்டு நிறைவடைந்த நிலையில் கம்போடிய உலக தமிழர் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும் இலங்கை மலையக முன்னணி தலைவருமான  வே. இராதா கிருஷ்ணன் தலைமையிலும் பின்பு புதுடில்லி பிரவாசி பாரதீய யுக கேந்திரா நிலையத்தில் கோபியோ அமைப்பின் சர்வதேச மாநாட்டில்  மலேசிய தலைவர் செல்வராஜ் தலைமையிலும் வெளியீடு செய்யப்பட்டது.

எனது தந்தை கார்மேகத்தின் பணிகளும் சேவைகளும் காற்றோடு கலந்து  கரைந்து விடா வண்ணம் அவர் பற்றிய தகவல்களை தகுந்தவர்கள் மூலம் கட்டுரை வடிவில் ஆக்கங்களாக சேகரித்து ஆவணப்படுத்தி ஒரு புத்ததகமாக பதிப்பித்து அதனை மேலும் அலங்கரிக்கும் வண்ணம் வெளியீடு செய்து எங்கள் கரங்களில் தவழ வைத்த பெருமை எச்.எச். விக்கிரமசிங்கவை மட்டுமே  சாரும்.

என் தந்தை கார்மேகம் மறைந்து 17வருடங்களுக்கு மேல் ஆகி விட்ட போதிலும் அவர் அனைவராலும் இன்றும் நினைவு கூரப்படுகின்றார் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்றார்.

பேராதனைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் எம்.எம்.ஜெயசீலன் மீள்பிரசுரம் செய்த கோ.நடேசய்யர் எழுதிய 'இலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் கடமைகளும் உரிமைகளும்' என்ற நூலை பதிப்பித்து வெளியிட்டமையைப் பாராட்டி மு.நித்தியானந்தன் உரையாற்றினார்.

இவ்விரு நூல்களையும் இவ் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக விருந்தினராக கலந்து கொண்ட எச்.எச்.விக்கிரமசிங்க இ.பத்மநாப ஐயருக்கு வழங்கி கௌரவித்தார்.

தொகுப்பு
லிங்கநகர்
சண்முகநாதன் கணேஷ்

Comments