கியூவரிசையின் பின்னணியில் மறைந்துள்ள முறைகேடுகள்! | Page 4 | தினகரன் வாரமஞ்சரி

கியூவரிசையின் பின்னணியில் மறைந்துள்ள முறைகேடுகள்!

சமையல் எரிவாயு மற்றும் பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் போன்ற எரிபொருட்களுக்கான கியூவரிசை இன்னுமே முடிவுக்கு வந்தபாடாக இல்லை. பெற்றோல் நிலையங்களுக்கும், சமையல் எரிவாயு விற்பனை நிலையங்களுக்கும் முன்பாக மக்கள் நாட்கணக்கில் காத்துக் கிடக்கின்றார்கள். சலிப்பும் வெறுப்பும் எல்லை கடந்துவிட்ட நிலையில், ஏதோவொரு நம்பிக்கையில் அவர்கள் இவ்வாறு தவம் கிடக்கின்றார்கள்.

எரிபொருள் நிலையங்களின் முன்னால் இருந்து சில கிலோமீற்றர் தூரம் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டுள்ளன. அதே போன்று எரிவாயு நிலையங்களுக்கு முன்பாக ஆயிரக்கணக்கான சிலிண்டர்கள் வரிசையில் வைக்கப்பட்டு, இரும்புச் சங்கிலியால் ஒன்றாகப் பிணைக்கப்பட்ட நிலையில் உள்ளன. அவை வாரக்கணக்கில் இவ்வாறு அங்கே வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. அவை திருட்டுப் போய் விடலாமென்பதால் உரிமையாளர்கள் இரவிரவாக அவ்வப்போது அங்கே வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர்.

எரிபொருளுக்கான இப்போராட்டம் முற்றாக முடிவுக்கு வருவது எப்போது? இன்றைய நாளில் மக்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் எழுகின்ற ஏக்கம் நிறைந்த வினா இதுதான்! எரிபொருள் ஏற்றிய கப்பல்கள் சமீப காலமாக ஏராளமாக நாட்டுக்கு வந்துள்ளன. முன்னைய காலங்களைப் பார்க்கிலும் அதிகமான எரிபொருள் நாட்டுக்கு வந்து சேர்ந்துள்ளது. ஆனாலும் எரிபொருளுக்கான பற்றாக்குறை இன்னுமே நீங்குவதாக இல்லை.

ஒவ்வொரு கப்பலும் நாட்டுக்கு வருகின்ற வேளையிலும், எரிபொருள் தட்டுப்பாடு நீங்கி விடுமென்று செய்திகள் வருகின்றன. மக்கள் மனதில் நம்பிக்கையும் நிம்மதியும் பிறக்கின்றது. ஆனால் எத்தனை கப்பல்கள் நாட்டுக்கு வந்தாலும் எரிபொருள் கியூவரிசையும், தட்டுப்பாடும் நீங்கிவிடப் போவதில்லை என்பது மட்டும் உறுதியாகத் தெரிகின்றது.

இன்று நிலவுகின்ற எரிபொருள் பற்றாக்குறையின் பின்னணியில் ஏதோவொரு மர்மம் உள்ளதாக சந்தேகிக்கத் தோன்றுகின்றது. முன்னைய காலங்களை விட அதிக தொகை எரிபொருள் நாட்டுக்குள் விநியோகத்துக்கென அனுப்பப்படுவதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறிருக்கையில் அன்றைய காலத்தில் இல்லாத எரிபொருள் தட்டுப்பாடு இன்றைய காலத்தில் நிலவுவது ஏன் என்ற வினா மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாமல் எழுகின்றது.

இந்த சந்தேகத்துக்கு மேலும் வலுவூட்டுவதைப் போன்று பலவிதமான சம்பவங்கள் ஆதாரத்துடன் வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன. பெருந்தொகையாக பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் ஆகியவை நாட்டில் ஆங்காங்கே அன்றாடம் கைப்பற்றப்படுகின்றன. ஒரு இடத்தில் மீட்கப்படுகின்ற எரிபொருள் அந்தக் கிராமத்தின் தேவைக்கே போதுமானதாகத் தெரிகின்றது. அதேபோன்று இரு தினங்களுக்கு முன்னர் தனிநபர் ஒருவரின் வீட்டில் இருந்து எரிவாயு நிரப்பப்பட்ட நிலையில் 50இற்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

எரிபொருள் நிலையங்களில் கியூவரிசையில் காத்து நின்று பெற்றோல் பெற்றுக் கொண்டு அதனை ஐந்து மடங்கு விலைக்கு விற்பனை செய்யும் வியாபாரத்தில் ஏராளமானோர் இன்று ஈடுபட்டு வருவதாக ஆதாரங்களுடன் தகவல்கள் வருகின்றன. இதன் காரணமாக எரிபொருள் நிலையங்களில் பெற்றோலுக்கான கியூவரிசையானது என்றும் முடிவின்றித் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது.

இவ்வாறு வியாபார நோக்கத்தில் ஏராளமானோர் ஈடுபடுவதனால், தங்களது சொந்தத் தேவைக்கென நியாயமான முறையில் பெற்றோலைப் பெற்றுக் கொள்ள முடியாமல் பலர் உள்ளதையும் காண முடிகின்றது.

உண்மையில் இது அநீதியும், குற்றமும் ஆகும். அப்பாவிகள் பாதிக்கப்படுவதற்கு இடமளிக்கலாகாது. இத்தகைய முறைகேட்டுக்கு எவ்வாறாவது உடனடியாக முடிவு கட்டப்பட வேண்டும். இல்லையேல் கியூவரிசை என்பதே நிரந்தரமாகி விடுமென்பதே உண்மை!

Comments