எரிபொருள் பிரச்சினையை அடுத்த மாதத்திற்குள் சமாளித்து விடுவோம் | தினகரன் வாரமஞ்சரி

எரிபொருள் பிரச்சினையை அடுத்த மாதத்திற்குள் சமாளித்து விடுவோம்

இடைவிடாத அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இராஜினாமாவைத் தொடர்ந்து தனது எதிர்பாராத நியமனம் இடம்பெற்று ஒரு மாதத்திற்குப் பின்னர், விக்கிரம சிங்க அண்மையில் தனது கொழும்பு அலுவலகத்தில் இந்து பத்திரிகையுடன் உரையாடினார். அவர், ஆறு முறை பிரதமராக இருந்தவர். ஏறக்குறைய அரை நூற்றாண்டு கால அரசியல் வாழ்க்கையில் மிகவும் கடினமான காலங்களில் அவர் ஆச்சரியப்படத்தக்க விதத்தில் உற்சாகமாக இருந்தார். “இது பரபரப்பானது, இது ஒரு புதிய அனுபவம். வாரத்தில் எட்டு நாட்கள் வேலை செய்கிறேன்” என்று கூறிச் சிரித்தார்.

பொருளாதார மீட்சிக்கான தனது உடனடித் திட்டங்களை கோடிட்டுக் காட்டிய நிதி அமைச்சருமாக விளங்கும் பிரதமர், விரைவில் சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர்கள் மட்ட ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று கூறினார். “பின்னர் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்காக நாம் காத்திருக்க வேண்டும். நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான தெளிவான குறிப்பை அது கொடுக்கும். ஜூலைக்குள், இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தையும் கொண்டு வருவேன்,” எனவும் இலங்கை மேலும் வெளிநாட்டு உதவியை நாடும் என்றும் குறிப்பிட்டதுடன் “நன்கொடையாளர் மாநாடு” பற்றியும் கதைத்தார். அத்துடன் “இந்தியா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் அனைத்தும் ஒரே நிலைப்பாட்டை கொண்டிருப்பதை நாங்கள் உறுதி செய்ய வேண்டும்.” எனவும் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார் . இலங்கை “புவிசார் அரசியலின் மையத்தில் ” உள்ளது, என்றும் முக்கியமாக குவாட்மூலம் அதன் உறுப்பினர்களான இந்தியா, ஜப்பான் மற்றும் சீனா வழங்கும் உதவிபற்றி அவர் குறிப்பிட்டார்.

வெளிநாட்டு முதலீடு குறித்து கருத்து தெரிவித்த விக்கிரமசிங்க, அதானி குழுமத்தின் திட்டம் சர்ச்சையில் சிக்கிய போதிலும், அக் குழுமத்தின் பிரவேசத்தை அழுத்தமாக வரவேற்றார், இலங்கையின் வடபகுதியில் 500மில்லியன் டொலர் பெறுமதியான மீளப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு “அழுத்தம்” கொடுத்ததாக இலங்கையின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் பாராளுமன்றக் குழுவிடம் தெரிவித்திருந்தார் பின்னர் அந்த அதிகாரி தனது அறிக்கையை வாபஸ் பெற்றிருந்தார் .

“இந்திய அரசு உண்மையிலேயே ஆர்வமாக இருந்திருந்தால், பிரதமர் மோடி அல்லது அவரது அலுவலகம் இதைப் பற்றி என்னிடம் கூறியிருக்கும். அதை விரைவுபடுத்துமாறு எந்த கோரிக்கையும் என்னிடம் விடுக்கப்படவில்லை” என்று விக்கிரமசிங்க கூறியிருக்கிறார்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் இந்துப்பத்திரிகையின் நிருபர் மீரா ஸ்ரீநிவாசனுக்கு அளித்துள்ள பேட்டி வருமாறு;

கேள்வி: வரலாறு காணாத நெருக்கடிகளுக்கு மத்தியில் நீங்கள் பிரதமராக பொறுப்பேற்று ஒரு மாதத்திற்கும் மேலாகிறது. இதுவரை நீங்கள் மேற்கொண்ட முக்கியமான தலையீடுகள் என்ன?

பதில்: பொருளாதாரத்திலேயே முக்கிய தலையீடு என்று நான் கூறுவேன். அடுத்த மாதத்திற்குள், எரிபொருள் பிரச்சினையை எம்மால் நிச்சயமாக சமாளிக்க முடியும். நாங்கள் உள்ளே வந்தபோது, அது ஒருங்கிணைக்கப்படவில்லை, இப்போது நாங்கள் அதை ஒருங்கிணைக்கிறோம். இந்திய கடன் உதவியை எங்களால் பயன்படுத்த முடிந்தது. நாங்கள் கொஞ்சம் பணத்தையும் காணக்கூடியதாக இருக்கிறது.

ஆனால் நான் சொன்னது போல், முன்னைய பதிவுகளை திரும்பிப் பார்த்தால், அடுத்த மூன்று வாரங்கள் கடினமானவையாக இருக்கும். அதனால்தான் பெட்ரோலுக்கான சில வரிசைகளைப் பார்க்கிறீர்கள். அதிர்ஷ்டவசமாக, டீசல் மற்றும் எரிவாயும் உடனடி பிரச்சினையாக இல்லை. நாங்கள் தடையில்லாத விநியோகத்தைப் பெற விரும்புகிறோம், அடுத்த மாதத்திற்குள் நாங்கள் அதைக் கையாள முடியும் என்று உணர்கிறோம்.

முக்கிய பிரச்சினை என்னவென்றால், தற்போது, ​​சாதாரண நுகர்வில் 50%மட்டுமே வழங்க முடியும். நாம் இப்போது முன்னுரிமையான விடயங்களைப் பற்றி முடிவு செய்ய வேண்டும். அதனால், மக்களுக்கு பிரச்சினை ஏற்பட்டுள்ளது. வரிசையில் நிற்கும் அவர்களின் விரக்தியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், எமக்குக் கிடைக்கும் எரிபொருளை சமாளிப்பதில் கவனமாக இருந்தால், சிறியளவில் கையிருப்பை வைத்துக் கொள்ளலாம்.

நிதி நிலைமையைப் பொறுத்தவரையில் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடலை தொடங்கியுள்ளோம். எங்களிடம் லசார்ட் மற்றும் கிளிபோர்ட் சான்ஸ் [நிதி மற்றும் சட்ட ஆலோசகர்கள்] உள்ளனர். விரைவில் நாணயநிதிய ஊழியர்கள்மட்ட ஒப்பந்தத்தை பூர்த்தி செய்ய முயற்சிக்கிறோம்.

பின்னர் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்காக காத்திருக்க வேண்டும். நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான தெளிவான குறிப்பை இது கொடுக்கும். ஜூலைக்குள், இடைக்கால பட்ஜெட்டையும் கொண்டு வருவேன். நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் ஜூலை மாதம் வர்த்தமானியில் வெளியிடப்படும். யாரும் அது தொடர்பாக நீதிமன்றத்திற்கு செல்லவில்லை என்றால், நிச்சயமாக மாத இறுதியில் நாம் அதை விவாதிக்க முடியும்.

சர்வதேச நாணய நிதியம் ஏற்றுக்கொண்டால், நாம் இடையீட்டு நிதியைப் பெறலாம். தற்போது இந்தியா மட்டுமே எங்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது.

சர்வதேச நாணய நிதியம் நீடித்த நிதிவசதியை அங்கீகரித்தவுடன், உலக வங்கி மற்றும் ஏனையவர்களிடமிருந்து சில இடையீட்டு நிதியைப் பெறலாம், மேலும் சில நாடுகளும் எமக்கு உதவும்.

கேள்வி: ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் ஏற்றுமதி வருமானம் சுமார் 915மில்லியன் டொலர்களாகவும், தொழிலாளர்கள் அனுப்பிய பணம் 250மில்லியன் டொலர்களாகவும் இருந்தது. இறக்குமதி 1.7மில்லியன் டொ லர்களாகும். கிடைக்கும் ஏற்றுமதி வருவாயில் அரசு எதற்கு முன்னுரிமை அளிக்கும் ?

பதில்: அத்தியாவசிய இறக்குமதி மட்டுமே. ஏற்றுமதி வருவாய்க்கு மேலதிகமாக இந்தியா வழங்கிய கடன் வசதிகளையும் நாங்கள் பயன்படுத்துகிறோம், விவசாயம் மற்றும் சுகாதாரம் போன்ற பல்வேறு துறைகளுக்கு உதவும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இங்கு சில திட்டங்களுக்கு டொ லர்களில் அனுப்பப்படும் பணம், பயன்படுத்தப்படுகிறது. இந்த மூன்று வழிகளில் நாங்கள் சமாளிக்கின்றோம் .

கேள்வி: இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளைப் பற்றி நீங்கள் கதைத்தீர்கள், மேலும் அலுவலர் மட்டத்திலான ஒப்பந்தத்தை விரைவில் உறுதிசெய்வது தொடர்பாக எதிர்பார்ப்பதாக கூறினீர்கள். இந்திய உதவிக்கு கூடுதலாக [இந்த ஆண்டு மொத்தம் 3.5பில்லியன் டொலர்], நீங்கள் சீனா மற்றும் ஜப்பானின் உதவியை நாடியுள்ளீர்கள். இலங்கைக்கான உதவிக் கூட்டமைப்பை அமைப்பதில் குவாட் குழுமத்தை முன்னின்று நடத்துமாறு நீங்கள் வலியுறுத்தியுள்ளீர்கள். அவர்கள் அனைவரும் எவ்வாறு பதிலளிக்கிறார்கள்?

பதில்: குவாட் டில் இரண்டு பிரதான உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர், அதாவது இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவையாகும். உதவி வழங்குவதில் இந்தியா இதுவரை முன்னிலை வகித்து வருகிறது. நாங்கள் ஜப்பானுடன் தொடர்பு கொள்ளத் தொடங்கினோம், இதைப் பற்றி பேசுகிறோம், ஏனென்றால் உறவுகள் சில காலமாக மோசமாக உள்ளன. அதுமட்டுமின்றி, சீனாவும் எ ம்மிடம் வருகிறது.

இப்போது எங்களிடம் இரண்டு குவாட் உறுப்பினர்கள் மற்றும் ஒரே சுற்று ஒரேபாதை முன்முயற்சி உறுப்பினர் உள்ளனர். எங்களிடம் ஒரு பாரிஸ் கிளப் உறுப்பினர் உள்ளார் , அது ஜப்பான், மற்றும் இரண்டு பாரிஸ் கிளப் அல்லாத உறுப்பினர்களான, இந்தியா மற்றும் சீனா ஆகியன உள்ளன. எனவே நாம் புவிசார் அரசியலின் மையத்தில் இருக்கிறோம் [சிரிக்கிறார்].

இந்த கடினமான காலங்களில் இந்திய உதவி கைகொடுத்தது என்று நான் சொல்ல வேண்டும். கலாநிதி ஜெய்சங்கர் பாரா ளுமன்றக் குழுவைச் சந்தித்து, இந்தியா இலங்கைக்கு ஆதரவாக நிற்கிறது என்று கூறியுள்ளார்.

இந்துசமுத்திர மாநாட்டிற்காக நான் அவரை அபுதாபியில் சந்தித்தபோது கூட, நாங்கள் பிரச்சினை பற்றி கலந்துரையாடினோம், அந்த நேரத்தில், அவர் நிலைமை குறித்து கவலைப்பட்டார். இலங்கையில் எந்தவொரு கொந்தளிப்பையும் அவர் விரும்பவில்லை. மீண்டும், அவர் இங்கு வந்தபோது, ​​இலங்கைக்கு உதவ தாம் தயார் என்றார்.

நீங்கள் எங்களை மீட்டு விடுவிக்க வேண்டும் என்று அவரிடம் கூறினேன். அவர்கள் சில காலம் செயற்பட்டுள்ளதுடன், நிதி அமைச்சரும் பெரும் உதவியாக இருந்துள்ளார். இந்த நேரத்தில் அவர்கள் இருவரும், மற்றும் பிரதமரும் உண்மையில் எங்களுக்கு உதவியுள்ளனர்

கேள்வி: 3.5பில்லியன் டொலர்களைத் தவிர, இந்தியாவிடம் இருந்து மேலும் உதவியை எதிர்பார்க்கிறீர்களா?

பதில்: எரிபொருளுக்காக கூடுதலாக 500மில்லியன் டொ லர் உதவி கிடைக்கும் என நம்புகிறோம்.

கேள்வி: இலங்கைக்கான இந்தியாவின் உதவியைகுறிப்பிடத்தக்க வகையில், சீனா பாராட்டியுள்ளதுடன், இலங்கைக்கு உதவ இந்தியா மற்றும் சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளது. அண்மையில் கொழும்பில் உள்ள சீன மற்றும் அமெரிக்க தூதுவர்கள் சந்தித்து கலந்துரையாடியதை நாம் பார்த்தோம். சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முயற்சியை ஆதரிக்க சீனா தயாராக இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?

பதில்: அவர்கள் நிச்சயமாக செய்வார்கள் என்று நினைக்கிறேன். அவர்களுடன் பேசுவோம். ஜப்பான், சீனா மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் சில சமயங்களில் ஒன்றுடனொன்று பேசும் என்று நம்புகிறேன். இந்தியாவின் பங்களிப்பை சீனா அங்கீகரித்துள்ளது. இது நல்லதொரு ஆரம்பம் என்று நான் நினைக்கிறேன், ஆனால் விவாதிப்பதற்கு இன்னும் பல விட யங்கள் இருக்கும்.

கேள்வி: நீங்கள் முன்வைத்துள்ள பொறிமுறைகளில் ஒன்று, புதிய வரி விதிப்பு முறையுடன் கூடிய புதிய வரவு செலவுத்திட்டமாகும் . அதிகரித்த ‘வ ற்’ போன்ற சில திருத்தங்கள் ஏற்கனவே வந்துள்ளன. இலங்கை அதிகளவுக்கு நேரடி வரி விதிப்புக்கு செல்வதை பார்க்கிறீர்களா?

பதில்: ஆம், அதிக நேரடி வரி விதிப்புக்கு செல்வோம். நாட்டில் சமத்துவமின்மை அதிகரித்து வருவதால் அதைச் செய்ய வேண்டும். பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும். பல துறைகளில் செலவுகளை குறைக்க வேண்டும். அதிக வட்டி வீதங்களை செலுத்துவதற்காக பணத்தைச் சேமிக்கிறோம். நான் சமூக நலத்துறையில் 200பில்லியனுக்கும் மேல் முதலீடு செய்ய விரும்புகிறேன்.

வரிவிதிப்பு மற்றும் பலவற்றில் வேறு சில சட்டங்களையும் கொண்டு வருவோம். இது ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இருக்கும். அதன்பிறகு நவம்பர் மாதம் புதிய பட்ஜெட் தாக்கல் செய்கிறோம். ஆக, ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை, அனைத்து பொருளாதார விட யங்களும்சிலசமயம் 2023-ன் முற்பகுதியில் விவாதிக்கப்படும், ஆய்வு செய்யப்படும்.

கேள்வி: சமத்துவமின்மை அதிகரித்து வருவதால், சமூக நலனுக்காக சில வளங்களைத் திசை திருப்பிவிட திட்டமிட்டுள்ளீர்கள். உலகளாவிய சமூக நலனில், குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரத்தில் இலங்கை எங்கள் பிராந்தியத்தில் ஒரு பெருமைக்குரிய பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. இப்போது இலக்கு சமூக பாதுகாப்பு பற்றி பேசப்படுகிறது, நீங்கள் எப்படி இரண்டையும் சமரசம் செய்வீர்கள்?

பதில்: இலக்கு என்பது ஏழைகளை இலக்காகக் கொண்ட திட்டங்கள். நலத்திட்டங்கள் சிலவற்றை, தகுதியற்றவர்களும் பெறுகிறாரகள்.பெறுநர்களாக இருக்க தகுதியற்ற நபர்களை நீக்குவதன் மூலம் பணத்தைச் சேமிக்கலாம்.

கேள்வி: சர்வதேச நாணய நிதியத்துடனான த பேச்சுவார்த்தையில் இலங்கைக்கு போதுமான அளவுக்கு பேரம் பேசும் சக்தி உள்ளது என்று கூறுவீர்களா?

பதில்: முன்னைய காலங்களிலிருந்து தற்போதைய காலம் வேறுபட்டதாகும், இருப்பினும், நீங்கள் முதலில் நிலைமையைப் பார்த்து, என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்தால், உங்கள் பேரம் பேசும் சக்தி உங்களிடம் உள்ளது. அதுவே உங்கள் பேரம் பேசும் சக்தியாக மாறும். என்ன நடக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்துவிட்டீர்கள், நீங்கள் சரியான பாதையில் செல்கிறீர்கள் என்று அர்த்தம். நீங்கள் நாணய நிதியத் துடன் விடயங்களை கையாளும் போது அது உங்கள் நிலைப்பாட்டை வலுப்படுத்துகிறது.

இரண்டாவதாக, சிக்கனம் பற்றி என்னிடம் கேட்டீர்கள். ஆம், சிக்கனம் இருக்க வேண்டும், ஆனால் அது ஒரு குறுகிய காலத்தில் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், இதன் மூலம் 2024க்குள் நாம் நகர் வதற்கு தொடங்கலாம். 2023ஒரு கடினமான ஆண்டாக இருக்கும், ஏனென்றால் நாம் ஒரு முன்னேற்றத்தை ஏற்படுத்தும்போது , ​​உலகளாவிய நிகர தேசிய உற்பத்தி இப்போது 2.9%ஆகக் குறைந்துள்ளது. உக்ரைன் போர் மற்றும் மேற்கு நாடுகளில் உள்ள பணவீக்கம், சீனாவில் உள்ள பிரச்சினைகள் காரணமாக இது இன்னும் குறையுமா என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை.

கேள்வி: கடந்த ஆண்டு இரசாயன உரத் தடையின் தாக்கம் உள்நாட்டு உற்பத்தியில் ஏற்படுத்திய பாதிப்பு என்ன?

பதில்: உக்ரைன் நெருக்கடி மற்றும் உலகளாவிய உணவு நெருக்கடிகள் காரணமாக பெரும்பாலான நாடுகள் உணவை ஏற்றுமதி செய்யாது என்பதால், உணவுப் பற்றாக்குறை இருக்கும் என்ற அடிப்படையில் நாங்கள் இப்போது உள்நாட்டு உற்பத்தியைப் பார்க்கிறோம். எனவே நாம் அடிப்படை உணவுப் பொருட்களில் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யும் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தைக் கொண்டிருப்போம். அரிசி கிடைக்காவிட்டால், பயறு மற்றும் பலவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மக்களுக்குத் தேவையான குறைந்தபட்ச கலோரிகள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும், மேலும் அதற்கான வசதி இல்லாதவர்களுக்கு உணவளிக்க வேண்டும். எனவே, இது 336உள்ளூராட்சிப் பிரிவுகளுக்கு பரவலாக்கப்பட்டு, நாங்கள் தொடங்கவிருக்கும் போராட்டமாகும்.

கேள்வி: நெருக்கடிக்கு அதன்பதிலின் ஒரு பகுதியாக, சக்தி போன்ற பல்வேறு முக்கியமான துறைகளில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை இலங்கை நாடுகிறது. அதானி குழுமம் இந்தத் துறையில் நுழைவது சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது, சர்வதேச கேள்விமனுக்கோரல் முறை இல்லாத நிலையில், அவர்கள் எப்படி உள்ளே நுழைந்தார்கள் என்று இலங்கையில் பலர்கேட்கிறார்கள். இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது நாட்டைப் பாதிக்காதா?

பதில்: அதானி குழுமம் தற்போது எ மக்கு தேவையான 500மில்லியன் டொ லர்களை கொண்டு வந்துள்ளது. முதலீட்டாளர்கள் வருவதற்கு இது ஒரு நல்ல அறிகுறியாகும். மீளப் புதுப்பிக்கத்தக்க சக்தி, காற்றாலை மின்சாரம் ஆகியவற்றுக்கான இலங்கையின் சாத்தியபாடு பாரியது. இங்கு வரும் அனைத்து பெரிய நிறுவனங்களும் அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியாது என்று நினைக்கிறேன். இது நாட்டின் பல பகுதிகளில் இது உள்ளது. மன்னாரின் நன்மை என்னவென்றால், நீங்கள் இந்தியாவிற்கும் வழங்கலாம். எனவே, அதானி வருவதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

கேள்வி: யாழ் குடாநாட்டில் மூன்று தீவுகளில் இடம்பெறவிருக்கும் மீளப் புதுப்பிக்கத்தக்க சக்தி திட்டங்கள் பற்றி?

பதில்: முன்னர், ஆசிய அபிவிருத்தி வங்கி ஆதரவு மூலம் சீனா ஒப்பந்தத்தை வென்றது, ஆனால் இந்தியாவின் தெற்கு கடற்கரைக்கு அண்மித்தததாக சீன திட்டம் இருப்பது குறித்து கவலைகள் எழுந்ததையடுத்து, அதே திட்டத்தை செயற் படுத்த இலங்கை அரசாங்கம் இப்போது இந்தியாவுடன் இணைந்துள்ளது.

கேள்வி: சீனா தனது திட்டம் கைவிடப்பட்டதற்கு ஏமாற்றம் தெரிவித்துள்ளது. எனவே இந்த முதலீடுகளுக்கு ஒரு புவிசார் அரசியல் பரிமாணம் இருக்கிறது, இல்லையா?

பதில்: அது சர்ச்சைக்குரியதாக இருந்தது, ஆனால் அரசாங்கம் இப்போது இந்திய அரசாங்கத்துடன் [திட்டம்] இது குறித்து முன்னேற்றம் கண்டுள்ளது. நான் அங்கு இல்லாததால் அதைப் பற்றி பேச முடியாது. இவை உணர்திறன் வாய்ந்தவை என்பதுடன் கவனமாகக் கையாள வேண்டிய பிரச்சினைகள்.

கேள்வி: அச்சுறுத்தும் பொருளாதார நெருக்கடியைத் தவிர, அரசாங்கம் நம்பகத்தன்மை தொடர்பாக கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கிறது, ஜனாதிபதி, நீங்கள், மற்றும் இந்த அரசாங்கத்திற்கு எதிராக பொது மக்களின் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. நெருக்கடியைச் சமாளிக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் போது, ​​பொது மக்கள் மத்தியில் அரசாங்கம் எப்படி நம்பிக்கையை மீட்டெடுக்கும்?

பதில்: முதலாவதாக, 21வது திருத்தம் அனைத்துக் கட்சிகளாலும், அரசாங்கத்தாலும், வெளியிலும் விவாதிக்கப்பட்டு, அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டது.

கேள்வி: பொது மக்களின் பார்வையில் அரசியல் நம்பகத்தன்மை எப்படியிருக்கிறது?

பதில்: அதுவே அரசியல் நம்பகத்தன்மையை கட்டியெழுப்புவதற்கான முதல் படியாக இருக்கும். இரண்டாவதாக, பாராளுமன்றத்தில் குழு முறைமைகள் குறித்து சில முன்மொழிவுகளை முன்வைத்துள்ளேன். அவற்றை முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்துள்ளேன். அந்த அறிக்கை வந்தவுடன் பாராளுமன்றத்தில் விவாதித்து திருத்தங்களைச் செய்வோம். எனவே இது ஒருபடிப்படியான செயற்பாடு, ஆனால் இவை இரண்டும் பெரியதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். மேலும் அவர்கள் செய்யும் செயல்களில் வெளிப்படைத்தன்மையுடன் இருக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டுள்ளோம்.

கேள்வி: பொருளாதாரத்தை ஒழுங்கமைக்க முக்கியமான தருணத்தில் நீங்கள் கொண்டு வரப்பட்டீர்கள். ஜனாதிபதி மற்றும் ஆளும் கட்சியின் அரசியல் ஆதரவு உங்களுக்கு உள்ளதா? உதாரணமாக, பாராளுமன்றத்தில் துணை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது உங்கள் முன்மொழிவுக்கு கட்சியின் ஆதரவு இல்லை.

பதில்: என்னைப் பொறுத்தமட்டில், மே மாதம் 9ஆம் திகதி, பின்வரிசை எம்.பி.க்கள் சிலர் நான் பிரதமராக வேண்டும் என்று விரும்பினர் [மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்த பின்னர்]. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால் வேண்டாம் என்று கூறினேன். இதனையடுத்து, ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என நிபந்தனை விதித்த போது, ​​ஜனாதிபதி சரத் பொன்சேகாவை (எதிர்க்கட்சி எம்.பி.) அழைத்தார். பின்னர் ஆளுங்கட்சி எம்.பி.க்கள் சென்று என்னை ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்திருந்தனர். ஜனாதிபதி உங்களை அழைத்தால், அங்கு செல்லுங்கள், வேண்டாம் என்று சொல்லாதீர்கள் என்று என்னிடம் சொன்னார்கள்.

பின்னர் ஜனாதிபதி என்னை அழைத்தார், நான் சென்று அவரை சந்தித்தேன். நிலைமை தீவிரமாக இருந்தது, யாராவது பொறுப்பேற்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் நான் உள்ளே வரும்போது சில பின்வரிசை உறுப்பினர்களின் ஆதரவு எனக்கு இருந்தது.

அதன்பிறகு, ஆதரவு பெருகி, ஜனாதிபதியும் கட்சியும் எனக்கு ஆதரவளித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடையேயும், ஐக்கியமக்கள் சக்தியில் உள்ள சிலரிடமும் கூட, மீண்டும் போராடத் தொடங்குவதற்கு முன், குழப்பத்தில் இருந்து நாட்டை மீட்டெடுக்க ஒன்றிணைய வேண்டும் என்பதற்கு அங்கீகாரம் உள்ளது.

மேலும் பிரதி சபாநாயகரின் விடயத்தில் ஆளும் கட்சி எம்.பி.க்களுக்கு எனது பிரேரணை பற்றி தெரியாது தெரிந்திருந்தால் ஆதரவாக இருந்திருப்பார்கள்

கேள்வி: எனவே, உங்களுக்கு போதுமான அரசியல் ஆதரவு இருப்பதாக நீங்கள் உறுதியாக நம்புகிறீர்கள்.

பதில்: சரி, நான் எப்படியாவது சமாளிப்பேன் [சிரிக்கிறார்]. வேறு யாரும் இல்லாததால் நான் இங்கு வந்தேன். வேறு யாரும் [வேலைக்காக] வர முடியாத அளவுக்கு நிலைமை தற்போது மோசமாக உள்ளது.

கேள்வி: இந்த எதிர்பாராத பணி உங்கள் அரசியல் வாய்ப்புகளை மாற்றிவிட்டதா? 2020பொதுத் தேர்தலில் உங்கள் கட்சி அழிக்கப்பட்டது, நீங்கள் தோல்வியடைந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தனி பாராளுமன்ற உறுப்பினராக தேசியப்பட்டியல் மூலம் வந்தீர்கள். உங்கள் அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டதாகத் தோன்றியது.

பதில்: நான் ஒரு சவாலை ஏற்றுக்கொண்டேன், அது எங்கு முடிகிறது என்று பார்ப்போம். எனது கட்சியில் நான் மட்டுமே உறுப்பினராக இருப்பது பலவீனம் அல்ல என்றும் நினைத்தேன். எதிர்க்கட்சி அல்லது அரசாங்கத்தில் இருக்கும் யாருடனும் இணங்கிப் போகலாம் [சிரிக்கிறார்]. நீங்கள் யாருக்கும் அச்சுறுத்தலாக இருக்க மாட்டீர்கள். உங்களிடம் ஐந்து பேர் இருந்தால், நீங்கள் ஒருவருக்கு அச்சுறுத்தலாக இருந்திருப்பீர்கள், ஆனால் நீங்கள் ஒரு உறுப்பினராக இருக்கும்போது, ​​நீங்கள் யாருக்கும் அச்சுறுத்தலாக இல்லை, உங்களால் பணிகளைத் தொடர முடியும்.

 

Comments