தேர்தல் முறைமையில் நிலவும் குறைபாடுகள்; பாராளுமன்ற விசேட குழுவின் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு | தினகரன் வாரமஞ்சரி

தேர்தல் முறைமையில் நிலவும் குறைபாடுகள்; பாராளுமன்ற விசேட குழுவின் இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு

மாகாண சபைகளின் பதவிக் காலம் முடிவடைந்து பல வருடங்கள் கடந்துள்ள போதிலும், அதனை நடத்துவதற்கான பௌதிகச் சூழல் மாத்திரமன்றிசட்டரீதியான சூழலும் காணப்படவில்லை. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின்காலத்தில் மாகாணசபைத் தேர்தல்சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டபோதும், எல்லை நிர்ணய சபையின் அறிக்கை பாராளுமன்றத்தினால் ஏற்றுக் கொள்ளப்படாத காரணத்தினால்இச்சட்டமூலம் இன்னமும்முழுமையடையவில்லை.

இவ்வாறான நிலையிலேயே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் இதன் ஒரு அங்கமாக தற்பொழுது காணப்படும் தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமையில் காணப்படும் குறைபாடுகளை இனங்காண்பதற்கு பாராளுமன்ற விசேட குழுவொன்றை நியமித்திருந்தது.

அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையிலான இந்தக் குழுவில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், டக்ளஸ் தேவானந்தா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான பவித்ராதேவி வன்னிஆரச்சி, விமல் வீரவங்ச, அநுர திசாநாயக்க, கபீர் ஹாசீம், ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, மனோ கணேசன், எம்.ஏ. சுமந்திரன், எம்.யூ.எம். அலி சப்ரி, ஜீவன் தொண்டமான், மதுர விதானகே, சாகர காரியவசம் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

தேர்தல் சட்டங்கள் மற்றும் தேர்தல் முறைமை தொடர்பாக பொருத்தமான சீர்திருத்தங்களை அடையாளம் காண்பதும் தேவையான திருத்தங்களை பரிந்துரை செய்வதும் இக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பாகும். சுமார் ஒரு வருடத்துக்கு மேலாக இக்குழு பல தடவை கூடியிருந்தது. அது மாத்திரமன்றி இக்குழுவின் அறிக்கையை தயாரிப்பதற்கு விசேட நிபுணர்கள் குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருந்தது.

இந்தக் குழு பல்வேறு அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்கள் உள்ளிட்ட பலதரப்பினரின் கருத்துக்களைப் பெற்றுக் கொண்டு தனது இறுதி அறிக்கையைத் தயாரித்துள்ளது. இதனை அமைச்சர் தினேஷ் குணவர்தன கடந்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.

மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு கலப்பு முறையிலான தேர்தல் முறையை நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட பல பரிந்துரைகள் இதில் காணப்படுகின்றன. விகிதாசார முறை மற்றும் தொகுதிவாரி முறையை உள்ளடக்கிய கலப்புமுறை குறித்து இந்தக் குழுவில் விரிவாகக் கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்கள் நடைபெற்றிருந்தன. இது பற்றிய குழுவின் நிலைப்பாடு இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் குறித்துப் பிரஸ்தாபித்துள்ள இந்தக் குழு, தற்பொழுது காணப்படும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. புதிய எல்லை நிர்ணயம் மூலம் வட்டாரங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் ஊடாக அல்லது விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் பகுதியைக் குறைப்பதன் ஊடாக இதனைச் செய்ய முடியும் எனக் குழு தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களுக்கு தொகுதிவாரி முறையில் 60வீதமானவர்களும், எஞ்சிய 40வீதமானவர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், மாகாணசபைத் தேர்தல்கள் குறித்துச் சுட்டிக்காட்டியுள்ள இந்தக் குழு, இதற்கு முன்னர் இருந்த விகிதாசார முறையின் கீழ் தேர்தலை நடத்துவதற்கு குழு இணங்கியமையால், உள்ளூராட்சித் தேர்தலில் குறிப்பிடப்பட்ட விகிதாசரத்தின்படி தேவையான வரையறை நிர்ணயத்துடன் கூடிய கலப்புத் தேர்தல் முறைக்கான சட்டம் இயற்றப்படும் வரை விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ் மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்குப் பொருத்தமான சட்டத்தை இயற்றுமாறும் பரிந்துரைத்துள்ளது.

மாகாணசபைத் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு முன்மொழியப்பட்ட சட்டத்தை அமைச்சரவையின் அங்கீகாரத்திற்கு சமர்ப்பிக்குமாறும் குழுவின் பரிந்துரையில் மேலும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

பாராளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில் பாராளுமன்றத்துக்குத் தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 225ஆக அமைய வேண்டும் என்பதுடன், கலப்பு முறையில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும், தொகுதி வாரிமுறையில் 70விகிதமும், விகிதாசார முறையின் கீழ் 30விகிதமும் அல்லது தொகுதி வாரிமுறையின் கீழ் 65விகிதமும், 35வீதம் விகிதாசார முறையின் கீழும் அமைய வேண்டும் எனப் பாராளுமன்ற விசேட குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற அமைப்பில் ஏதேனும் மாற்றங்கள் செய்யப்பட்டால் அது சிறுபான்மையினத்தவரின் பிரதிநிதித்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என குழுவின் உறுப்பினர்கள் சிலர் சுட்டிக் காட்டியுள்ளனர்.

 

தேர்தலில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் முக்கியத்துவம் குறித்த பரிந்துரைகளும் இதில் உள்ளடங்கியுள்ளன. பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் கணிசமானளவு ஒதுக்கீட்டை வழங்குவது பற்றி குழு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் தற்பொழுது காணப்படும் பெண்களுக்கான 25வீத ஒதுக்கீட்டைக் குழு தொடர்வதற்கு வலிறுத்தியிருப்பதுடன், பரிந்துரைப் பட்டியலில் பெண்களுக்கு 25வீதம் ஒதுக்கீடு வழங்கப்படுவதும் அவசியமானது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசியப்பட்டியலில் உறுப்பினர்கள் நியமிக்கப்படும் போது ஒவ்வொரு மூன்று பேருக்கு ஒரு பெண் உறுப்பினர் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் காலத்தின் போது ஊடகங்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைமைகள் மற்றும் வழிகாட்டல்கள் குறித்தும் இங்கு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஊடகங்களின் மூலம் முன்னெடுக்கப்படும் தவறான பிரசாரங்களைக் கட்டுப்படுத்துவதற்குத் தற்பொழுது நடைமுறையில் காணப்படும் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது இவ்விதமிருக்க, தேர்தல்களுக்கு அதிக பணம் செலவுசெய்யப்படும் விடயம் குறித்தும் இக்குழுவில் பரந்துபட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. தற்பொழுது நடைமுறையில் காணப்படும் நிலைமைக்கு ஏற்ப பணம் படைத்த வேட்பாளர்கள் அல்லது அதிக பணத்தை தேர்தல் பிரசாரங்களுக்குப் பயன்படுத்தக் கூடியவர்கள் ஊடகங்களில் அதிக இடத்தைப் பெற்றுக் கொள்வதாகவும், இது போன்ற விடயங்கள் கட்டுப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் இக்குழுவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவின் அறிக்கை தற்பொழுது சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால் இது பற்றி பாராளுமன்றம் விவாதித்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

பி.ஹர்ஷன்

Comments