இலங்கைக்கு இலாபத்தைத் தராத சீனாவின் கடந்த கால முதலீடுகள்! | தினகரன் வாரமஞ்சரி

இலங்கைக்கு இலாபத்தைத் தராத சீனாவின் கடந்த கால முதலீடுகள்!

இலங்கைக்கு இந்தியா உதவிக்கரம் நீட்டுவது என்பது இது முதல் முறையல்ல; புதிதும் அல்ல. கடந்த 1971மற்றும் 1988ஆம் ஆண்டுகளில் ஜனதா விமுக்தி பெரமுன கிளர்ச்சியாளர்களின் போராட்டம், 2004ஆம் ஆண்டு சுனாமி, உள்நாட்டுப் போர், போருக்கு பிந்திய வடக்கு, கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி, புனரமைப்புஎன்றெல்லாம் இந்தியா இலங்கைக்கு தொடர்ந்து உதவி வந்துள்ளது. இந்தியாவின் உதவிகள் இன்றும் தொடர்கின்றன.

தீவு நாடான இலங்கையில் ஏற்படும் அரசியல், சமூக, பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு ஸ்திரத்தன்மை ஆகியவை தெற்கு ஆசிய பிராந்தியத்தை பாதிக்கும் பட்சத்தில், முதலில் பாதிக்கப்படுவது இந்தியாவாகத்தான் இருக்கும். அதனால்தான், இலங்கைக்குத் தேவையான மனிதாபிமான, பொருளாதார மற்றும் பாதுகாப்பு உதவிகளை இந்தியா அவ்வபோது உடனடியாக அளித்து வருகின்றது.

இந்தியா இவ்வளவு உதவிகளை செய்து வரும் போதிலும், சுதந்திரம் அடைந்த நாள் முதல் இலங்கை இந்தியாவை ஒரு அச்சுறுத்தலாகவே பார்ப்பதற்குக் காரணம் தென்னிலங்கையிலுள்ள இனவாத அரசியல் கட்சிகள் ஆகும். தென்னிலங்கை இனவாதிகள் தங்களது அரசியல் ஆதாயத்துக்காக இந்தியாவை விரோத நாடாகவே பெரும்பான்மை மக்கள் மத்தியில் காண்பித்து வருகின்றனர். வடக்கு, கிழக்கு தமிழர்களின் அபிலாஷைகளில் இந்தியா விசேட கரிசனை செலுத்தி வருவதனால் பெரும்பான்மை மக்கள் உள்ளங்களில் இந்தியா மீதான கசப்பு இன்னும் தொடரவே செய்கின்றது.

எனவே, இந்தியாவுக்கு விரோதமான ஏதாவதொரு மூன்றாவது நாட்டுடன் நெருக்கம் காட்டுவதன் மூலம் இந்தியாவை எதிர்க்க வேண்டுமென இனவாதிகள் விரும்புகின்றனர். அதனால்தான், இந்தியாவிடம் இருந்து உதவிகளைத் தொடர்ந்து பெற்று வரும் நிலையிலும் தென்னிலங்கை இனவாத கட்சிகள் இன்னமுமே இந்தியா மீது நெருக்கத்தைப் பேண முன்வரவில்லை.

ஆனால் சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் இந்தியாவைப் போல பிரதிபலன் கருதி உதவும் மனோநிலையில் இல்லை என்பதை நாம் முதலில் ஒப்புக் கொள்ள வேண்டும். இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் அதன் கடன் மறுகட்டமைப்புக்கு உதவுவதற்று சீனா இன்னுமே முன்வரவில்லை. ஆனால் சீனாவுக்கு மீளச் செலுத்த வேண்டிய கடன், அந்நிய செலாவணி கையிருப்பு குறைவு போன்ற நிலையிலும் கூட இலங்கைக்கு இந்தியா தொடர்ந்தும் உதவிகளை வழங்கி வருகின்றது.

பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ள இலங்கை, 2015ஆம் ஆண்டில் துறைமுக நகர் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. கடந்தாண்டு இயற்கை உரம் விநியோக திட்டத்தையும் ரத்து செய்தது. இந்த இரண்டு திட்டங்களுக்கும் இழப்பீடாக சீனாவுக்கு இலங்கை அரசு வழங்க வேண்டிய தொகை மிக அதிகமாகும்.

இது போன்று, இலங்கையில் முடிக்கப்படாத பல திட்டங்களில் சீனாவின் தலையீடு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. இத்திட்டங்கள் உரிய நேரத்தில் முடிந்தால் மட்டுமே இலங்கை சீரான பொருளாதார வளர்ச்சி காண முடியும். இதனால்தான், சீனாவுக்கு எதிரான எந்த நடவடிக்கையிலும் ஈடுபட இலங்கை அரசு தயக்கம் காட்டுகிறது என்பது பொதுவான அபிப்பிராயம்.

அமெரிக்காவிற்கு எதிராக ஆயுதபலத்தில் நிகரான வளர்ச்சி கண்டுள்ள சீனா, உலகம் முழுவதையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வர நினைக்கிறது. இதனால், தனது ஆயுதபலத்தைக் கொண்டு முடிந்த வரை எல்லையை விரிவாக்கி வருகிறது. தென் சீனக் கடல் பகுதிக்கும் சொந்தம் கொண்டாடி வருகிறது.

தனது எல்லை விரிவாக்கத்திற்கு தொந்தரவாக இருக்கும் இந்தியாவையும் சீனா விரோதமாக நினைக்கிறது. அதனால் எல்லையில் உள்ள கிழக்கு லடாக் உள்பட உள்நாட்டு எல்லைப் பிரச்சினைகளை உருவாக்கி வருவதாக இந்தியா குற்றம் சாட்டி வருகின்றது. இந்தியாவின் அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், நேபாளம் உள்ளிட்ட நாடுகளுக்கு கடன் கொடுத்து மறைமுக நிகழ்ச்சித் திட்டத்தையும் சீனா முன்னெடுப்பதாக இந்தியா கருதுகின்றது.

உலகின் 2ஆவது மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட இந்தியா, அசுர வளர்ச்சி காணும் பொருளாதார நாடாக உருவெடுத்து வருகின்றது. உலக நாடுகளின் பார்வையில் இந்தியா மிகப் பெரிய பொருளாதார சந்தையாக கருதப்படுகிறது. இதுவும் சீனாவின் கண்களை உறுத்துவதால், இந்தியாவுக்கு தொடர்ந்து சிக்கல்கள் கொடுத்து வருவதாக இந்தியா எண்ணுகின்றது.

இதற்கான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த சீனா, இலங்கையில் தனது கால்தடத்தை வலுவாக பதிக்கத் தொடங்கியது என்றே சொல்லலாம். இலங்கைக்கு பெரும் தொகைக் கடன் கொடுக்க முன்வந்த சீனாவிடம், இலங்கை கடன்களை வாங்கிக் கொண்டது.

இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்ட சீனா, இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டத் தொடங்கியது. இருப்பினும், புதிய நண்பன் உதவ மாட்டான்; பழயை நண்பனே சிறந்தவன் என்ற அடிப்படையில் இந்த பொருளாதார நெருக்கடியில் இலங்கைக்கு இந்தியாவே பிரதிபலனற்ற உதவிகளை வழங்கி வருகின்றது.

ஆனால் மறுபுறத்தில் சீனாவின் கடன் வலையில் சிக்கியுள்ள 12இற்கும் அதிகமான ஆசியா மற்றும் ஆபிரிக்க நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன. கடனை மீளச் செலுத்துவது எவ்வாறென்பதே அந்த அச்சம் ஆகும்.

சீனா தனது 'பெல்ட் மற்றும் ரோ்' திட்டத்தின் வாயிலாக வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதாகக் கூறினாலும் ஏழ்மையில் இருக்கும் பல நாடுகளைக் கடன் வாயிலாகத் தனது கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது என்பதுதான் உண்மை.

இலங்கை நிலைமையை எடுத்துக் கொண்டால் அரசு சீனாவிடம் கடன் வாங்கிக் கட்டமைத்த திட்டங்கள் மூலம் மிகவும் குறைவான இலாபம் மட்டுமே அரசுக்குக் கிடைத்துள்ளது. மேலும் இத்திட்டங்களைத் தொடர்ந்து நிர்வாகம் செய்வதற்கும் அதிகப்படியான செலவுகள் ஆகும். இதன் காரணத்தால் இலங்கைக்குப் பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இலங்கையின் மொத்த கடனில் 10சதவீதம் சீனா உடையதாகும்.

இதனால் தற்போது சீனாவின் கடன் வலையில் சிக்கியதைத் தவிர இலங்கைக்கு வேறு பயன் இல்லை என்பதுதான் உண்மை. தற்போது இலங்கைக்கு எரிபொருள் முதல் உணவு பொருட்கள் வரையில் இந்தியா அனுப்பி வருகிறது. புதிய கடனுக்காக IMF அமைப்பிடம் தற்போது இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஆனால் இலங்கையின் நெருக்கடியான இத்தருணத்தில் சீனாவின் உதவிகள் குறிப்பிடும்படியாக இல்லை.

இலங்கையில் சீனாவின் திட்டங்கள் நினைத்தபடி இலாபத்தை அளிக்கவில்லை. இதனால் சீனா கடந்த சில வருடங்களாக எந்த முதலீட்டையும் செய்யவில்லை, ஆனால் கடன் சுமை மட்டும் இலங்கையின் தலையில் உள்ளதுதான் கவலைக்குரிய விடயம்.

எஸ்.சாரங்கன்

Comments