பொது ஊடகங்களில் ஆபாச அரசியல் செய்வது அநாகரிகம் | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

பொது ஊடகங்களில் ஆபாச அரசியல் செய்வது அநாகரிகம்

இலங்கை மதங்களால் பண்பட்ட, செழுமை அடைந்த ஒரு நாடு. இலங்கைக்கென வளமான, பொருள் பொதிந்த ஒரு கலாசார வரலாறு உண்டு. அரசியலை அகற்றிவிட்டுப் பார்த்தால் இந்நாட்டில் எல்லாக் காலங்களிலும் அனைத்து மதத்தவர்களும் பேதங்களை கற்றுக் கொள்கின்ற மனப்பக்குவத்துடனுமே வாழ்ந்து வந்துள்ளார்கள். இலங்கையிலும் மன்னர் காலம் முதல் சாதி அமைப்பு இருந்து வந்துள்ள போதிலும் அது இந்தியா அளவுக்கு கொடூரமானதாக இருந்ததில்லை. இன்றைய இலங்கையில் சாதி எதற்கும் ஒரு முட்டுக்கட்டை அல்ல. 19ம் நூற்றாண்டில் கேரளப் பெண்கள் மார்பு கச்சை அணிவதற்கு தடை இருந்தது. அதை எதிர்த்து மார்பு சீலைப் போராட்டத்தை அப் பெண்கள் நடத்தி வெற்றிபெற வேண்டிய தேவை இருந்தது. இலங்கைப் பெண்கள் இவ்வாறான போராட்டங்களை - ஆண் அடக்குமுறையை எதிர்த்து - போராட வேண்டிய அவசியம் எழவில்லை. உரியவருக்கு உரிய சுதந்திரத்தை வழங்கும் பண்பு எமது கலாசாரத்தில் இயல்பாகவே ஊறிக்கிடந்தது.

இப் பண்பை கடுமையாக மீறும் ஒரு போக்கை அவ்வப்போது, குறிப்பாக இணைய தளங்களில், நாம் அவதானிக்க முடிகிறது. அச்சு ஊடகமும் இலந்திரனியல் ஊடகமும் மட்டும் இருந்த போது அவை செய்திகளையும், படங்களையும், காணொளிகளையும் கண்ணியமாகவே கையாண்டன.

தடியெடுத்தவன் தண்டல்காரன் என்பதைப் போல, எவர் வேண்டுமானாலும் செய்தி ஆசிரியராகலாம் என்ற நிலை இணைய தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் மிகை வருகையின் பின்னர் உருவானதும் வரைமுறையற்ற தனிமனித தாக்குதல்கள் மற்றும் கேவலமான சித்திரிப்புகள் அதிகமாகி வருகின்றன.

இதற்கான சமீபத்திய உதாரணம் இருனிகா பிரேமசந்திர. ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் முக்கிய உறுப்பினரான அவர் தன் கட்சிக்காகவும் தன் நியாயங்களுக்காகவும் ஆவேசமாக போராடக்கூடிய ஒரு பெண்மணியாகத் தன்னை வெளிப்படுத்தி வருபவர். இலங்கை பெண் அரசியல்வாதிகளான விவியன் குணவர்தன, குசுமா குணவர்தன, எட்ரின் மொள்ளமுரே, சீதா மொள்ளமுரே ஆகியோரை புரட்சி சிந்தனை கொண்ட முன்னோடி பெண் அரசியல்வாதிகள். அச்சமற்றவர்களாகவும் எதிர்த்து போராடக் கூடியவர்களாகவும் திகழ்ந்தார்கள். தற்போது அந்த வரிசையில் இருனிகாவை சொல்ல முடியும்.

சமீப காலமாக இப் பெண் அரசியல்வாதி தொடர் போராட்டங்களை ஆக்ரோஷமாக நடத்தி வருகிறார். கடந்த வாரம் அவர் பிரதமர் ரணில் இல்லத்துக்கு எதிரே ஆர்ப்பாட்டத்தில் இறங்கியிருந்தபோது இரும்புவேலி தடைகளைத் தாண்டிச் செல்ல முயன்றார். அப்போது பொலிஸாருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதத்துடன் கூடிய மோதல் இடம்பெற்றது. அப்போது அவரின் முந்தானை விலகியிருந்தது. இதெல்லாம் போராட்டத்தில் சகஜம். வினாடிக்கு வினாடி காட்சிகள் மாறும். இந்தக் காட்சிகளை படம் பிடித்து இணையத்தளத்தில் எவரோ பதிவேற்றம் செய்துவிட்டார்கள். அரசியல்வாதி என்ற வகையில் இருனிகா பிரேமச்சந்திரவை கொள்கை ரீதியாகவோ அல்லது அவரது போராட்ட வடிவத்தையோ விமர்சனம் செய்திருக்கலாம். பதிலாக, மூன்று குழந்தைகளின் தாயான அவரை பாலியல் ரீதியாக காட்சி வர்ணனை செய்வது மிகவும் கீழ்த்தரமான அரசியலாகவோ அல்லது எமக்கு தலை குனிவை ஏற்படுத்தக்கூடிய செயலாகவே தான் இதைப் பார்க்க வேண்டும். இது எமது ஒட்டுமொத்த கலாசார, பண்பாட்டு சீரழிவை பிரதிபலிப்பதாகக் கொள்ள முடியாது என்றாலும் அதைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதை இச் செயல் கோடிட்டு காட்டியிருக்கிறது.

இங்கே இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இந்த அவலம் வெளிப்பட்டதுமே பிரதமர் ரணில் விக்கிரசிங்க அதைக் கண்டித்தும் இருனிகாவின் தாய்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டார். இத்தனைக்கும் ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்தே இருனிகா அந்த ஆர்ப்பாட்டத்தை அவர் வீட்டுக்கு எதிரே ஆக்ரோஷமாக நடத்தியிருந்தார். பிரதமருக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினார். ஆனால் இருனிகாவின் தாய்மைக்கு கௌரவம் அளிக்கப்பட வேண்டும் என்று சொன்ன பிரதமர், மோதல்கள் கொள்கை ரீதியாக அமைய வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

பிரதமரின் இக் கூற்று கனவான் அரசியலுக்கு ஒரு பதச்சோறு. ஆபாச அரசியல் செய்வோர் கவனிக்க வேண்டிய விஷயம். சமூக ஊடகங்களில் எதை வெளியிட வேண்டும், தவிர்க்க வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்த சட்டங்கள் இல்லை என்பது உண்மையானாலும் கையில் கத்தி இருக்கிறது என்பதால் எதை வேண்டுமானாலும் வெட்டி எறியலாம் என எவரும் நினைக்கக் கூடாது. இருனிகா தன் மீது வீசப்பட்ட அவலத்தை தைரியமாகத் துடைத்தெறிந்து விட்டார். அதைச் செய்தவர்கள் தலைகுனிய, இருனிகாவே வெற்றி பெற்றவராகக் காட்சி தருகிறார். எனவே, சமூக ஊடகங்களை கண்ணியமாகக் கையாளப் பழகுவோம்.

Comments