மலையகத்தில் காணி உரிமையும் வேலை வாய்ப்பும் இளைஞர்களின் தன்னெழுச்சியை நாடி நிற்கிறது | தினகரன் வாரமஞ்சரி

மலையகத்தில் காணி உரிமையும் வேலை வாய்ப்பும் இளைஞர்களின் தன்னெழுச்சியை நாடி நிற்கிறது

இலங்கை வரலாற்றில் பெருமளவில் போராட்டங்களை நடாத்திய சமூகமாக மலையக சமூகமே காணப்படுகின்றது. இப்போராட்டங்கள் அனைத்துமே தொழில் சார்ந்த பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் வன்முறைகளுக்கு உட்படாத போராட்டங்கள். இவை யாவும் அஹிம்சை முறைமையை ஆதர்ஷமாக கொண்டிருந்தன. இதுதான் இதன் சிறப்பு.

அன்று இளைஞர்கள் தன்னெழுச்சிப் போராட்டங்களில் ஈடுபடவில்லை. மாறாக தமது தலைவர்களின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து ஒன்று திரண்டனர். தமது சக்தியை வெளிப்படுத்தினார்கள். ஆனால் இதே தலைமைகளின் தொலை நோக்கற்ற சில முடிவுகள் காரணமாக இளைஞர்களின் சக்தி மழுங்கடிக்கபடலாயின.

போராட்டங்கள் இரு வகைப்படும். ஒன்று உணர்வுபூர்வமானது. மற்றையது அறிவுபூர்வமானது. இந்த இரண்டு தன்மைகளையும் உள்வாங்கிக் கொண்டிருந்ததால்தான் பிரான்சியப் புரட்சியின் வெற்றி வரலாற்றுப் பதிவானது.

மலையக இளைஞர்களின் ஆக்கச் சக்தியை தமது அரசியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ள முற்படும் மலையகத் தலைமைகள் அவர்களை விட்டில்பூச்சிகளாக வைத்துக் கொள்வதிலேயே நாட்டம் கொண்டுள்ளனர்.

இதனை புரிந்துகொண்ட நிலையிலேயே 1970களில் இளைஞர்களின் ஆற்றலை அடையாளம் கண்டு சுடர்விடச் செய்யும் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட சில புத்திஜீவிகள் மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம், மலைய இளைஞர் முன்னணி போன்ற அமைப்புகளை உருவாக்கினர். கற்ற இளைஞர் சமூகத்தினர் இந்த இளைஞர்கள் பால் ஈர்க்கப்பட்டனர். இந்த மாற்றம் பிரபுத்துவ தொழிற்சங்க தலைமைகளுக்குப் பிடிக்காத சங்கதியானது. இதன் பின்னணியில் இரா. சிவலிங்கம் போன்ற செயற்பாட்டாளர்கள் சட்டச் சிக்கல்களுக்கு உட்படுத்தப்பட்டனர். சிலர் சிறை சென்றார்கள்.

எது எப்படியாயினும் பிற்காலத்தில் கணிசமான அளவு புத்திஜீவிகள் உருவாக இவர்களின் பங்களிப்பே பாரிய வகிபாகத்தினைக் கொண்டிருந்தது. இயக்கம் சார்புபட்ட இலக்கிய பயணம் பல புத்திஜீவிகளை அடையாளம் காட்ட உதவின. சிறுகதைகள் கட்டுரைகள், கவிதைகள், சமூகம் சார்பிலான தகவல்கள், செய்திகள் வெளிவரலாயின. ஒரு வகையில் இது அரசியல் பின்புலம் சாராத போதும் சில தொழிற்சங்க தலைமைகளுக்கு தலைவலியைத் தந்தன.

மலையகத்தின் விடிவு பற்றி மட்டுமே விலைவாரியாக பேசிக்கொண்டிருந்த மலையகக் கட்சிகள் அதற்கான வேலைத்திட்டங்களை கொண்டிருக்கவில்லை. மேலும் இளைஞர்களின் பங்களிப்பு வாக்களிப்பதில் மட்டும் இருந்தால் போதும் என்ற நியதி உருவாக்கம் பெற்றது. இளைஞர்கள் எழுச்சிப் பெற்றால் அது தமது இருப்புக்கு ஆப்பு வைத்துவிடும் என்னும் அச்சம் மலையகத் தலைமைகளுக்கு இன்னும் இருக்கவே செய்கின்றது.

200வருடகால வரலாறு கொண்ட பெருந்தோட்டத் தொழிற்துறை சாராத, சார விரும்பாத இளைஞர்களே இன்று மலையகத்தில் அதிகம். இதனால் வேலையில்லாப் பிரச்சினை தலைவிரித்தாடுகின்றது. கொழும்பு போன்ற பல இடங்களில் தொழில்புரிந்து வந்த பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கோவிட் தொற்று காரணமாக தோட்டங்களுக்கே வந்து சேர்ந்தார்கள். தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலமைகளால் மீண்டும் பழைய வேலைகளுக்குத் திரும்ப முடியாதவர்களாக இருக்கின்றார்கள். தவிர இனி இங்கேயே தங்கி ஏதாவது தொழில் செய்வதே புத்திசாலித்தனமானது என்ற பல இளைஞர்கள் தீர்மானித்துவிட்டார்கள்.

இதனால் மலையகத்தில் வேலை வாய்ப்புக்கான அவசரத் தேவை இன்று ஏற்பட்டுள்ளது. ஆனால் துரதிர்ஸ்டவசமாக இதற்கான வேலைத்திட்டங்கள் எதுவுமே சங்க அரசியலில் இல்லை. கம்பனி தரப்பிடம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதற்கும் இல்லை. அரசாங்கத்திடமும் இல்லவே இல்லை. அதனால்தான் விவசாயம் செய்தாவது ஜீவனோபாயத்துக்கு வழிதேட மலையக இளைஞர்கள் தயாராகி விட்டார்கள். எனவேதான் பெருந்தோட்டத் தரிசு காணிகளைப் பகிர்ந்தளிக்கும்போது மலையக இளைஞர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என்னும் கோரிக்கை வலுப்பெறுகின்றது. இது தவிர்க்க முடியாத சங்கதி.

பெருந்தோட்ட சமூகம் தமது தேவைகளுக்காகவும் உரிமைகளுக்காகவும் அஹிம்சை வழியில் போராடுவதற்கே பழக்கப்பட்டிருப்பது நல்லதொரு விடயம். இதனை பலவீனம் என்று எண்ணுவது தவறு. இதேநேரம் இந்த இளைஞர்களின் சக்தியை கூட்டிணைப்பதற்கு எந்தவொரு அமைப்பு ரீதியிலான செயற்பாடுகளும் இல்லாதிருப்பது பெருங்குறைபாடேயாகும். ஆனால் அதற்கான அவசியம் இருக்கவே செய்கிறது.

மலையக இளைஞர்களைப் பற்றி பேசும்போது சுமார் 12வருடங்களாக சிறைகளில் அரசியல் கைதிகளாக அடைப்பட்டுக் கிடக்கும் பெருந்தோட்ட இளைஞர் பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது. இவர்களில் பலர் குற்றவாளிகள் என குறிப்பிடப்படாமலே சிறைவாசம் அனுபவிக்கின்றனர். அடையாள அட்டை இல்லாத ஒரே காரணத்துக்காக கூட இவ்வாறு சிறைபட்டுள்ளவர்களும் இருப்பதாக தகவல்கள் இருக்கின்றன. சிறுசிறு குற்றம் மற்றும் சந்தேகம் காரணமாகக் கூட சிலர் சிறையில் இருக்கின்றார்கள். பொதுவாக குறைவான எண்ணிக்கையானோரே இவ்வாறு தண்டனை அனுபவித்தாலும் அவர்களும் மனிதர்களே. குற்றஞ்செய்யாவிட்டால் விடுதலை செய்யப்பட்டு சாராசரி மனித வாழ்க்கைக்கு திரும்புவதற்கு இவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டியதே மனிதாபிமானம்.

அரசியல் கைதிகள் என்னும் அடையாளத்தின் கீழ் இவர்கள் சிறையில் வாடும் நிலையில் இவர்களின் விடுதலை குறித்து மலையக அரசியல் பிரதிநிதிகள் போதிய கரிசனை காட்டுவதாகத் தெரியவில்லை. இப்பிரச்சினை அரசியல் ரீதியாக கையாளப்பட வேண்டியதே. யுத்தம் நிறைவடைந்து ஏறக்குறைய 13வருடங்களாகி விட்ட போதிலும் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் உரிய முன்னகர்வுகள் இடம்பெயர்வதாகத் தெரியவில்லை. இப்பிரச்சினை சட்டரீதிக்கு அப்பால் அரசியல் அழுத்தம் காரணமாகவே தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவதாக பலரும் அபிப்பிராயப்படுகின்றார்கள்.

இதேநேரம் மலையக இளைஞர்களின் மெளனத்தை மலையகத் தலைமைகள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வாளாவிருக்கக் கூடாது. எந்தவொரு சமூகத்தினதும் அரண்களாக இளைஞர் சக்தியே மிளிர்கின்றது. இதனை புரிந்துக்கொள்ள வேண்டிய கடப்பாடு மலையக இளைஞர்களுக்கு உண்டு. எனவேதான் அவர்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டங்கள் தேவையாயுள்ளன. பெருந்தோட்டப் பிரதேசங்களை மையப்படுத்தி தொழில் பேட்டைகள் ஏற்படுத்தப்பட வேண்டியது முக்கியம். விவசாயம், சுயதொழில் முயற்சிகளுக்கான ஊக்குவிப்பு ஏற்பாடுகள் செய்வது அவசியமானது. இதற்கான காணிகள் இவர்களுக்கு பெற்றுத்தரப்பட வேண்டும்.

இன்றும்கூட இச்சமூகம் நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தருவதில் பங்களிப்பு வழங்கவே செய்கிறது. ஆனால் அதற்கான அங்கீகாரமோ, கெளரவமோ கிடைப்பது தான் இல்லை. இந்த பின்புலத்தை மாற்றியமைக்கக்கூடிய வல்லமை ஒன்றுபட்ட இளைஞர்கள் வசமே இருக்கின்றது. இளைஞர்கள் சமூக உணர்வுடன் அரசியலில் தம்மை இணைத்துக் கொள்வதே உசிதமானது. அதேநேரம் பரம்பரை பழக்க தோஷத்தாலோ, கவர்ச்சியினாலோ தனிமனித ஆராதனைக்கு இடம் கொடுத்து அடிவருடியாகி விடக்கூடாது.

தோட்ட மக்களின் சம்பள பிரச்சினைக்காக மலையக இளைஞர்கள் தலைநகரில் நடாத்திய தன்னெழுச்சிப் போராட்டம் நாட்டையே திரும்பிப் பார்க்க வைத்தது. இதை ஞாபகத்தில் வைத்துக்கொள்வது நல்லது. ஆனால் பெருந்தோட்ட இளைஞர்களில் பலர் தமது குடும்ப நலனோடு நின்று விடுவது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. சமூகப் பார்வைக்கு அப்பால் சுயநல சிந்தனையோடு முடங்கிப் போனால் அவர்களைப் பயன்படுத்தி அரசியல் செய்யும் சக்திகளுக்கு அதிக வசதியாகப் போய்விடும். இது சமூக மாற்றத்துக்கு நல்லதல்ல.

பன். பாலா

 

Comments