முடக்கத்துக்கு மத்தியிலும் ஒளிக் கீற்றுக்காக காத்திருக்கும் மக்கள் | தினகரன் வாரமஞ்சரி

முடக்கத்துக்கு மத்தியிலும் ஒளிக் கீற்றுக்காக காத்திருக்கும் மக்கள்

இலங்கையின் எரிபொருள்நெருக்கடி தீவிரமடைந்து அடுத்தகட்டங்களை நோக்கி நகர்கிறது.எரிபொருள் நிரப்பு நிலையங்களில்கையிருப்புகள் தீர்ந்துபோன பின்னரும்வாகனங்கள் அடுத்த எரிபொருள் பெளசர்கள் வருமட்டும் மிக நீண்ட வரிசைகளில் காத்து நிற்கின்றன. சிலவேளைகளில் நாட்கணக்கில் அவ்வாறு காத்திருக்க வேண்டியுள்ளது.

இவ்வாறான ஒரு நிலை லிபியா மற்றும் லெபனான் போன்ற நாடுகளில் ஏற்பட்டமையை சர்வதேச ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டின. இப்போது இலங்கை அவ்வாறான ஒரு தீவிர எரிபொருள் நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது. வரிசையில் நிற்கும் வாகனச் சாரதிகள் தமக்கிடையில் சில ஏற்பாடுகளைச் செய்து கொண்டு ஷிப்ட் அடிப்படையில் ஒருவர் வரிசையில் நிற்க மற்றவர் தத்தமது அலுவல்களை முடிக்கச் சென்றுவரும் நிலையை காண முடிகிறது. வேறுசிலர் வாகனங்களை வரிசையில் விட்டுவிட்டு தமது வேலைத்தலங்களுக்கு செல்வதையும் அவதானிக்க முடிகிறது. 

கையிருப்பில் உள்ள எரிபொருளைப் பகிர்ந்தளிக்க துறைசார்ந்த அமைச்சு மென்பொருள் ஒன்றை அறிமுகப்படுத்தி எந்தெந்த எரிபொருள் நிலையங்களுக்கு குறித்த நாளில் எரிபொருள் விநியோகம் நடைபெறும் என்பதை மக்களுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. ஆயினும் தொடர்ச்சியாக எரிபொருள் நிலையங்களுக்கு முன்னால் வாகனங்கள் காத்துக்கிடப்பதால் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் விநியோகிக்கப்படும் எரிபொருள் ஒருசில மணிநேரங்களிலேயே தீர்ந்து போவதால் தொடர்ந்தும் வரிசைகள் நீடிக்கின்றன.  

இப்போது நாட்டிலுள்ள பெரும்பாலான எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் கையிருப்புகள் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வாரம் இன்னுமொரு முப்பதாயிரம் பீப்பாய் எரிபொருளை இறக்குமதி செய்ய கடன் கடிதம் திறக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்வரும் வாரத்தில் அக்கப்பல் இலங்கைக்கு வரும் எனவும் கூறப்பட்டுள்ளது. 

எனினும் இத்தொகைகள் நாட்டின் எரிபொருள் கேள்வியை சமாளிப்பதற்கு எவ்வகையிலும் போதுமானதாக இருக்காது. போதியளவு டீசல் விநியோகிக்கப்படாத காரணத்தினால் தனியார் பேருந்து சேவைகள் முடங்கும் அபாய நிலை உருவாகியுள்ளது. தனிப்பட்ட வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்துவதற்கான செலவுகள் எகிறியுள்ள நிலையில் பேருந்துச் சேவைகளையும் ரயில் போக்குவரத்தையும் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  

இதனால் வங்காள தேசத்தில் பயணம் செய்வதைப்போன்று பயணிகள் ரயில் பெட்டிகளின் மேல் ஏறி பயணிக்கும் அவலத்தையும் காண முடிந்தது. இந்நிலையில் பொதுப் போக்குவரத்தும் முடங்குமாயின் நாடு இயல்பாகவே முடங்கிப்போகும் நிலை ஏற்படும்.  

எதிர்வரும் வாரம் பாடசாலைகள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு ஒன்லைன் மூலம் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் எரிபொருள் நெருக்கடியைக் கையாளப் போதுமான நிதி இல்லாமையே இந்த நிலை தொடரக் காரணம்.  

இந்தியக் கடனுதவியின் கீழ் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான நிதி தீர்ந்து போயுள்ள நிலையில் அடுத்துவரும் வாரங்களில் எரிபொருள் தேவையை எவ்வாறு நாடு சமாளிக்கப்போகிறது என்பது தெரியவில்லை. எண்ணெய் வளமிக்க வளைகுடா நாடுகளிடம் உதவிபெறவேண்டும் என்று இப்போது யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.  

அரசாங்கத்திலுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் மேற்படி நாடுகளுடன் உதவி பற்றிப் பேசலாம். ஆயினும் இந்த நாட்டின் முஸ்லிம்கள் கடந்த காலங்களில் எதிர்நோக்கிய பிரச்சினைகள் குறித்து அந்த நாடுகள் நிச்சயம் அறிந்திருக்கும். எனவே இந்த முயற்சி எந்தளவு தூரம் வெற்றியளிக்கும் என்பதை இப்போதே கூறமுடியாது.  

இலங்கைக்கு ஐக்கிய அமெரிக்காவின் ஆதரவு எப்போதும் உண்டு என அந்நாடு கூறியுள்ளதுடன் சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றுடன் இலங்கை மேற்கொள்ளும் தொழில்நுட்ப ரீதியான விடயங்களைக் கையாள ஆறு மில்லியன் டொலர்களை நிதி உதவியாக வழங்கியுள்ளது. இவற்றை எரிபொருள் நெருக்கடிக்குப் பயன்படுத்த முடியாது.  

இலங்கையின் தற்போதைய நெருக்கடிகள் மத்தியிலே ஓரளவுக்கேனும் சுமுக நிலையை ஏற்படுத்த வேண்டுமாயின் குறைந்த பட்சம் 5அல்லது 6பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவை. இத்தகைய ஒரு பெருந்தொகையை இப்போது இலங்கையால் நிச்சயமாகத் திரட்ட முடியாது. எனவே நட்பு நாடுகளிடம் கடன் வாங்கித்தான் அன்றாட வாழ்க்கையை தொடர வேண்டியிருக்கும்.  

இப்படியொரு நிலை வரப்போகிறது என்று 2014ஆம் ஆண்டிலிருந்தே இலங்கையின் பொருளியல் அறிஞர்கள் அரசாங்கத்தை எச்சரித்திருந்தனர். 2019ஆட்சி மாற்றத்தின் பின்னர் கடன் தரமிடல் நிறுவனங்கள் தொடர்ச்சியாகவே இலங்கையின் கடன் நிலைபேறுடையதாக இல்லை என்று எச்சரிக்கை விடுத்து தொடர்ந்து தரமிறக்கம் செய்து வந்தன. ஒவ்வொரு தடவை தரமிறக்கம் செய்யபோதும் அரசாங்கம் அதனைக்கடுமையாக எதிர்த்ததேயன்றி அந்த எச்சரிக்கையின் பாரதூரத்தன்மையை சற்றேனும் கவனத்திற் கொள்ளவில்லை.  

இப்போது வங்குரோத்து நிலையை அடைந்த பின்னர் உலக சந்தையில் கடன்பெற முடியாத நிலையில் நாடுகளிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. நிச்சயமாக இந்த நிலைமை எதிர்பாராத உள்நாட்டு வெளிநாட்டு அதிர்ச்சிகளால் உருவாகியதல்ல. முன்கூட்டியே முன்னெச்சரிக்கை சமிக்ஞைகள் விடுக்கப்பட்டபோது அவற்றையெல்லாம் விட்டேத்தியாக ஒதுக்கிவிட்டு அதிகாரத் தடிப்புடன் செயற்பட்ட அரசியல்வாதிகளினதும் அதிகாரிகளினதும் அஞ்ஞானத்தால் விளைந்த ஒன்றாகும்.  

கோரேணா கொள்ளை நோய், உக்ரைனிய யுத்தம் போன்றன நிலைமையை மோசமாக்க உதவினவேயன்றி அவை மூலக்காரணிகளல்ல. இப்போது IMF இன் உதவிகள் வருவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம் பெற்று வந்தபோதும் பணம் வந்துசேர இன்னும் காலமெடுக்கும். அதுவரை எப்படி இலங்கை நாட்களைக் கடத்தப்போகிறது பணத்தை எவ்வாறு தேடப் போகிறது என்பதே இப்போதுள்ள முக்கியமான கேள்வி. மறுபுறம் IMF நிதியுதவிகள் வழங்கினாலும் அவை இலங்கையின் நெருக்கடிகளைத் தீர்க்கப்போதுமானவையல்ல. மாறாக கடன் தரமிடல் நிறுவனங்கள் இலங்கையின் நிலைமையைத் தரமுயர்த்த அது உதவும். அதற்கு முன்னால் இலங்கை ஏற்கெனவே பெற்றுள்ள கடன்களை எவ்வாறு மீளச்செலுத்தப் போகிறது என்ற பொறி முறையை இலங்கை கூறவேண்டும் அதனை IMF ஏற்றுக் கொள்ளவேண்டும். அதற்கு இலங்கைக்குக் கடன் கொடுத்துள்ளவர்களும் ஒத்துக்கொள்ள வேண்டும். 

இவையெல்லாம் நடந்து முடிய மாதக்கணக்காகும். அதுவரையில் என்ன நடக்கப்போகிறது? இந்திய நிதி மற்றும் பொருளுதவிகள் உரியகாலத்தில் கிடைத்தபடியினால் இவ்வளவுகாலமும் சமாளிக்க முடிந்தது. ஆனால் இவையும் மீளச் செலுத்தப்பட வேண்டிய கடன்களே.  

இலங்கையின் பொருளாதாரம் மீட்சி பெறவேண்டுமாயின் மூன்று விடயங்களில் மீட்சி பெற வேண்டும். ஒன்று, இலங்கையின் சுற்றுலாத்துறை வழமைக்குத் திரும்ப வேண்டும் இரண்டு, வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களின் பண அனுப்பல்கள் அதிகரிக்க வேண்டும். மூன்று, இலங்கைக்குள் வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவில் உள்வரவேண்டும்.  

கொவிட் நோய் நிலைமைகள் கட்டுப்பட்டுள்ள போதிலும் எரிபொருள் நெருக்கடிகள் காரணமாக நாடு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்குள் கவர்வது கடினம். ஓய்வு தேடி வருபவர்கள் இங்குள்ள கஷ்டங்களைக் கண்டு ரசிக்கப்போவதில்லை. மறுபுறம் ஆட்சிமாற்றம் ஏற்படும் வரை இலங்கைக்குப் பணம் அனுப்பப் போவதில்லை என வெளிநாடுகளில் வாழும் பெரும்பான்மை இன இலங்கையர்கள் வெளிப்படையாக அறிவித்துள்ளனர். சிறுபான்மைச் சமூகத்தினர் மதில்மேல் பூனைகளாக உள்ளனர்.  

பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி சின்னாபின்னப்பட்டு சீரழியும் ஒரு நாட்டில் அதற்குக் காரணமானவர்கள் அதிகாரத்தில் இருக்கும் வரை வெளிநாட்டு முதலீடுகள் நாட்டுக்குள் வரப்போவதில்லை. இலங்கையின் வழமையான நட்பு நாடுகள் எல்லாமே உதவத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளன. ஆனால் பைசா எதுவும் நகரவில்லை. கூட்டிக் கழித்துப்பார்க்கும் போது எல்லோருமே ஏதோ ஒரு சம்பவத்திற்காகக் காத்திருப்பதாகத் தோன்றுகிறது. அது நிகழாதவரையில் எதுவும் நடக்கப்போவதில்லை.

கலாநிதி
எம்.கணேசமூர்த்தி
பொருளியல்துறை,
கொழும்பு பல்கலைக்கழகம்

Comments