புத்தளத்திலிருந்து மரவள்ளி ஏற்றிவந்த ஆட்டோவுடன் பஸ் மோதி கோர விபத்து | தினகரன் வாரமஞ்சரி

புத்தளத்திலிருந்து மரவள்ளி ஏற்றிவந்த ஆட்டோவுடன் பஸ் மோதி கோர விபத்து

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியில் (17) நள்ளிரவு இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.  

புத்தளம் நூர்நகர் பகுதியைச் சேர்ந்த 57வயதான முஹம்மது சமூன் மற்றும் அவரது 12வயதான மகன் முஹம்மது ஹமாஸ் ஆகிய இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.  

புத்தளத்திலிருந்து கொழும்பை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி ஒன்றும், கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த தனியார் பயணிகள் பஸ்சொன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.  

இதன்போது முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற தந்தையும், பின்னால் அமர்ந்திருந்த 12வயதுடைய மகனும் படுகாயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற நபர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.  

அத்துடன், முச்சக்கர வண்டியின் பின்னால் இருந்த 12வயதான சிறுவன் ஆபத்தான நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட போதிலும், நேற்று (18) காலை அந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.  

உயிரிழந்த தந்தை மற்றும் மகன் ஆகியோரது சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையின் பிரேத அறையில் மைவக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.  

இந்த விபத்தில் முச்சக்கர வண்டியின் முன் பக்கம் முழுமையாக சேதமடைந்துள்ளது. விபத்துடன் தொடர்புரைடய தனியார் பஸ்ஸின் சாரதி , விபத்தை ஏற்படுத்திவிட்டு அவ்விடத்தில் இருந்து தப்பிச் சென்று பொலிஸில் சரணடைந்துள்ளார். அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

விபத்துச் சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகைள மேற்கொண்டு வருகின்றனர்.  

விற்பனை செய்யும் நோக்கில் ஒருதொகை மரவள்ளிக் கிழங்குகளை ஏற்றிக்கொண்டு புத்தளத்திலிருந்து கொழும்புக்கு சென்ற போதே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மேற்படி இருவரும் இந்த பாரிய அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கற்பிட்டி தினகரன் விஷேட, புத்தளம் தினகரன் நிருபர்கள்  

Comments