கொழும்பு நகர் பாடசாலைகள் நாளை முதல் ஒரு வாரத்துக்கு பூட்டு | Page 3 | தினகரன் வாரமஞ்சரி

கொழும்பு நகர் பாடசாலைகள் நாளை முதல் ஒரு வாரத்துக்கு பூட்டு

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி நிலையை கருத்திற் கொண்டு நாளை திங்கட்கிழமை முதல் எதிர்வரும் ஒருவார காலத்திற்கு கொழும்பு நகரிலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எதிர்நோக்கும் போக்குவரத்து தொடர்பான அசௌகரியங்களை கவனத்திற் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வியமைச்சின் செயலாளர் எம். என். ரணசிங்க தெரிவித்துள்ளார். 

அதேவேளை, போக்குவரத்து சிக்கல்கள் காணப்படாத நாட்டின் ஏனைய பிரதேச பாடசாலைகளை கல்வி நடவடிக்கைக்காக திறப்பது தொடர்பில் அந்தந்த பாடசாலைகளில் அதிபர்கள் உரிய தீர்மானத்தை மேற்கொள்ள முடியும் என்றும் கல்வியமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். 

அதேவேளை நகர்ப்புறங்களில் உள்ள பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்காக நாளை முதல் ஒரு வார காலத்திற்கு ஒன்லைன் மூலம் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றும் அதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அதேவேளை ஒன் லைன் மூலமான கற்பித்தல் நடைபெறும் பகல் வேளைகளில் மின் துண்டிப்பை மேற்கொள்ள வேண்டாமென பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அடுத்த வாரம் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை கல்வி அமைச்சின் அதிகாரிகள் கூடி மீளாய்வு ஒன்றை மேற்கொண்டதன் பின்னர் உரிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.(ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Comments