நீல் ஆம்ஸ்ட்ரோங் | தினகரன் வாரமஞ்சரி

நீல் ஆம்ஸ்ட்ரோங்

நீல் ஆர்ம்ஸ்ட்ராங் 1930ம் ஆண்டில் ஒகஸ்ட் 5ஆம் திகதி   பிறந்தார். அவரது தந்தை ஒடிட்டராக பணி புரிந்தார். தனது ஆறாவது வயதில் தந்தையுடன் முதல் வான் வெளி பயணத்தை மேற்கொண்டார். 1950ம் ஆண்டு கொரியாவுடனான யுத்தத்தின்போது அமெரிக்க கடற்படை ஜெட் வீரராக கடமை புரிந்தார். 1962ம் ஆண்டு நாசாவுடன் இணைந்தார்.

1969ம் ஆண்டு ஜூலை மாதம் 20ம் திகதி நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் கொலின்ஸ் ஆகியோருடன் சென்ற அமெரிக்காவின் அப்பல்லோ விண்கலம் சந்திரனுக்கு மறுபக்கத்தில் இருக்கும்போது, 'ஈகிள்' என்ற சந்திரக் கூறு, கொலம்பியாவிலிருந்து பிரிந்தது. கொலின்ஸ் கொலம்பியாவிலேயே இருக்க, ஆம்ஸ்ட்ராங்கையும், ஆல்ட்ரினையும் சுமந்து கொண்டு ஈகிள் நிலாவின் மேற்பரப்பை நோக்கி இறங்கியது. நீல் ஆம்ஸ்ட்ராங் (நியூயோர்க் நேரப்படி) இரவு 10.50மணிக்கு சந்திரனில் இறங்கினார். நிலவில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதன் என்ற பெருமையை நீல் ஆம்ஸ்ட்ராங் பெற்றார்.

அவரது சக விண்வெளி ஆராய்ச்சியாளர் எட்வின் ஆல்ட்ரினும் 2மணிநேரம் 31நிமிடங்கள் சந்திரனில் நடந்து, மாதிரி உருவங்களை சேகரித்தல், சில படிவ ஆராய்ச்சிகள் செய்தல் என்பவற்றுடன் தம்மை புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர். சந்திரனில் நீல் ஆம்ஸ்ட்ராங் கூறிய கூற்று- ஒரு மனிதனைப் பொறுத்த அளவில் இது ஒரு சிறிய காலடி, மனித இனத்துக்கு ஒரு பாரிய பாய்ச்சல். அப்பல்லோ 11பயணத் திட்டமே சந்திரனிலிறங்கிய முதல் ஆளேற்றிய இறக்கமாகும்.

இது அப்பல்லோ திட்டத்தில் 5வது ஆளேற்றிய பயணத் திட்டம். ஜான் எப். கென்னடி தலைமையிலான அமெரிக்க அரசு மேற்கொண்ட இந்த வியப்புக்குரிய பயணம் அமெரிக்கர்களை விண்வெளித்துறையில் தனியிடத்தில் அமர வைத்தது. அறிவியல் துறையின் வளர்ச்சியி்ல் சாதனைக்குரிய மைல் கல் இந்த நிகழ்ச்சி என்றாலும் கூட, சோவியத் யூனியனுக்குப் போட்டியாக உருவானதே நிலவுப் பயணம் என்பதே நிஜம். இது ஒரு வரலாற்று நிகழ்வாக காணப்பட்டாலும் கூட இந்த நிகழ்வு பற்றியும் பல்வேறு விமர்சனங்களும், சந்தேகங்களும் வெளிவரத்தான் செய்தன.

அப்பல்லோ திட்டம் என்பது 1961-1972வரை, ஐக்கிய அமெரிக்காவினால் நடைமுறைப்படுத்தப்பட்ட, ஒரு தொடரான மனித விண்வெளித் திட்டமாகும். இது, 1960களுக்குள் ஒரு மனிதனைச் சந்திரனில் இறக்கிப் பாதுகாப்பாகப் பூமிக்குத் திருப்பிக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. 1969ல் அப்பல்லோ 11திட்டத்தின் மூலம், இந்த நோக்கம் நிறைவேறியது. சந்திரனில், பாதம் பதித்த முதல் மனிதனால் மேற்கொள்ளப்பட்ட அறிவியல் ஆய்வுகளை தொடர்வதற்காக இத்திட்டம், 1970களின் முற்பகுதி வரை நீட்டிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அப்பல்லோ திட்டத்தில் சில சறுக்கல்கள் ஏற்பட்டன. 3விண்வெளி வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் நாசா இத்திட்டம் குறித்து மறு பரிசீலனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனால் அப்பல்லோ 11விண்கலம், 1969ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி 39ஏ ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டு நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின், மைக்கேல் கொலின்ஸ் ஆகிய மூன்று அமெரிக்க விண்வெளி வீரர்களுடன் பயணத்தைத் தொடங்கியது. சந்திரனை அடைந்த அப்பல்லோவின் கட்டுப்பாட்டு ஓடத்தில் மைக்கேல் கொலின்ஸ் தங்கிக் கொள்ள, முதலி்ல் நிலவில் காலடி எடுத்து வைத்தார் நீல் ஆம்ஸ்ட்ரோங். அவரைத் தொடர்ந்து 19நிமிடங்கள் கழித்து நிலவில் இறங்கினார் எட்வின் ஆல்ட்ரின். நான்கு நாள் நிலவுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு பெருமை பொங்க பூமிக்குத் திரும்பியது அப்பல்லோ. உலகமே வியந்து போய் நின்ற நேரம் அது. அந்த தருணம் குறித்து எட்வின் ஆல்ட்ரின் கூறுகையில், மிகப் பெரிய நிகழ்வு அது. பெருமைக்குரிய தருணம் அது என்றார். நிலவுப் பயணத்தை முடித்துக் கொண்டு ஜூலை 20, 1969திரும்புவதற்கு முன்பு நிலவில் எட்வின் ஆல்ட்ரினும், நீல் ஆம்ஸ்ட்ராங்கும் அமெரிக்க கொடியை நாட்டினர். அப்போது அவரது சாதனையை உலகம் முழுவதிலும் இருந்து 5கோடியே 28லட்சம் மக்கள் கண்டுகளித்து பரவசம் அடைந்தனர்.

நீல் ஆம்ஸ்ட்ராங் "நாசா" விண்வெளி மையத்தில் அதிகாரியாக பணி புரிந்து வந்தார். சின்சினாட்டி பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக இருந்தார். கடந்த நவம்பர் மாதம் அமெரிக்காவின் மிக உயரிய சிவிலியன் விருதான காங்கிரஸின் தங்க பதக்கத்தை பெற்றார். சந்திரனில் காலடி வைத்த முதல் மனிதர் எனும் பெருமைக்குரிய உலகப் புகழ்பெற்ற விண்வெளி வீரர் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் 82வயதில் 25.08.2012அன்று காலமானார்.

என். வினோமதிவதனி,
லுனுகலை பஸார்

Comments