யுக தர்மம்: இலங்கை தமிழ் நவீன நாடகத் துறையின் முன்னோடி முயற்சி! | தினகரன் வாரமஞ்சரி

யுக தர்மம்: இலங்கை தமிழ் நவீன நாடகத் துறையின் முன்னோடி முயற்சி!

1970கள் மற்றும் 1980கள் சிங்கள மேடை நாடகங்களில் இடதுசாரி கலைஞர்களின் ஆதிக்கம் அதிகமாய் நிலவி வந்த கால கட்டம். ஒரு விதத்தில் அதனை சிங்கள அரங்கக் கலைகளின் பொற்காலம் என்றும் சொல்லலாம். சுகதபால சில்வாவின் ‘துன்ன துனு கமுவே’, ஆர்.ஆர். சமரக்கோனின் ‘களனி பாலம’, சோமலதா சுபசிங்கவின் ‘விகுர்த்தி’ போன்ற நாடகங்கள் இலங்கை சமூகத்தில் அப்பொழுது எழுச்சியடைந்து கொண்டு வந்த முக்கியமான சில பிரச்சினைகளை பேசு பொருளாகக் கொண்டிருந்தன. ஒரு நாடகத்துக்கு இருக்க வேண்டிய அத்தியாவசியமான கலையம்சங்களை சமரசம் செய்து கொள்ளாமலேயே அவை பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்களைக் கவர்ந்திழுத்த நாடகங்களாக இருந்து வந்தன. அதேபோல ஜேர்மன், ரஷ்ய நாடகங்களின் தழுவல்களும் சிங்கள நாடக ரசிகர்களின் பெரு விருப்புக்குரிய மேடை நிகழ்வுகளாக இருந்து வந்தன. Bertolt Brecht இன் ‘The Caucusian Chalk Circle’ நாடகத்தைத் தழுவி ஹென்றி ஜயசேன தயாரித்த ‘ஹுணுவட்டயே கதாவ’, Aleksvi Arbuzov வின் ‘Irkutsk Story’ நாடகத்தைத் தழுவி ரஞ்சித் தர்மகீர்த்தி தயாரித்த ‘அங்காரா கங்க களா பசீ’ (அங்காரா நதி பெருக்கெடுத்தோடுகிறது) போன்ற மொழியாக்க நாடகங்கள் 1980கள் நெடுகிலும் சிங்கள ரசிகர்கள் விரும்பி ரசித்த படைப்புக்கள்.

ஒரு விதத்தில் அவற்றை இசை நாடகங்கள் என்றும் சொல்லலாம். குறிப்பிட்டுச் சொல்லும்படியான விஷேசம் மொழிபெயர்ப்புகள் என்ற உணர்வு பார்வையாளர்களிடம் ஏற்படாத விதத்தில் இந்நாடகங்கள் மேடையில் நிகழ்த்தி காட்டப்பட்ட கலை நேர்த்தி, பாத்திரங்கள் பேசிய வெகுஜன சிங்கள மொழி, மூன்று தலைமுறை சிங்கள ரசிகர்கள் மீண்டும் மீண்டும் விரும்பிக் கேட்டு, மனனம் செய்து, இன்றும் பரவசத்துடன் பாடிக் காட்டும் அவற்றின் பாடல்கள். அந்நாடகங்களின் பாத்திரங்களில் பெரும்பாலானவை சிங்கள பொதுப் பிரக்ஞையில் வேரூன்றியிருப்பவை. அந்த பின்புலத்தைக் கருத்திற் கொண்டே அண்மையில் பிரதம மந்திரி தனது பாராளுமன்ற உரையொன்றில் ‘ஹுணுவட்டயே கதாவ’ கதாநாயகி கரூஷாவின் பாத்திரத்துடன் தன்னை ஒப்பிட்டுக் காட்டியிருந்தார். இந்த மாற்றத்தை இலங்கை தமிழ் நாடக மேடைக்குக் கொண்டு வந்தவர் க. பாலேந்திரா. அப்பொழுது அவர் இலங்கை மின்சார சபையில் பொறியியலாளராக பணிபுரிந்து வந்தார். தகவல் யுகம் இன்னமும் உருவாகியிருக்கவில்லை. எந்தவொரு புதிய விடயம் தொடர்பாக தெரிந்து கொள்ள வேண்டுமானாலும் நூல் நிலையங்களில் அலைந்து கடும் முயற்சிகளுக்குப் பின்னரேயே அது தொடர்பான தகவல்களை சேகரிக்க முடியும். அந்த அனுபவத்தை இப்படி பதிவு செய்கிறார் பாலேந்திரா:“மொரட்டுவை (கட்டுபெத்த) பல்கலைக்கழகத்தில் நான் பொறியியல் துறை மாணவனாக இருந்த பொழுது பிரபல நாடக நெறியாளர் ஹென்றி ஜயசேன நெறிப்படுத்திய ஜேர்மன் நாடக ஆசிரியர் பேர்டோல்ட் ப்ரெக்டின் ‘The Caucusian Chalk Circle’ (ஹுணுவட்டயே கதாவ) நாடகத்தை கொழும்பில் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. தீவிரமான நாடகத் தேடலில் நான் ஈடுபட்டிருந்த காலமது. அந்த நாடகம் என்னில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

அதன் தயாரிப்பு என்னை பிரமிக்க வைத்தது. ப்ரெக்டின் நாடகமொன்றை தமிழில் செய்ய விரும்பினேன். கொழும்பில் பிரிட்டிஷ் கவுன்சில், அமெரிக்கன் சென்டர் போன்ற நூல் நிலையங்களில் அவருடைய நாடக நூல்களைத் தேட ஆரம்பித்தேன். ‘The Exception and the Rule’ நாடகத்தின் ஆங்கிலப் பிரதி 1979இல் கண்ணில் பட்டது.” இந்நாடகத்தை ‘யுக தர்மம்’ என்ற பெயரில் பாலேந்திரா தமிழில் உருவாக்கினார். அது முதலில் 1979டிசம்பர் மாதம் தமிழ் அவைக்காற்று கலைக் கழகத்தின் சார்பில் யாழ்ப்பாணத்தில் மேடையேற்றப்பட்டது.

பங்கேற்ற நடிகர்கள் அனைவரும் மொரட்டுவை பல்கலைக்கழக மாணவர்கள். அதன் பின்னர் 1982வரையில் அந்நாடகம் இலங்கையின் பல்வேறு இடங்களில் 28தடவைகள் மேடையேற்றப்பட்டது. தமிழ் நாடகப் பிரியர்களுக்கு பிரமிப்பையும், இன்ப அதிர்ச்சியையும் ஊட்டிய ஒரு ‘Visual Treat’.‘நாட்டவரே, உங்களுக்கு நல்ல கதை சொல்ல வந்தோம் நீண்ட ஒரு பயணத்தில் நடந்த கதை சொல்ல வந்தோம் சுரண்டும் ஒருவரதும், சுரண்டப்படும் இருவரதும் நீண்ட பயணத்தில் நடந்த கதை சொல்ல வந்தோம்’ என்ற பாடல் வரிகளுடன் ஆரம்பமாகிறது ‘யுக தர்மம்’. ச.வாசுதேவனின் கவித்துவமான மொழியாக்கம். உரையாடல்களிலும் பார்க்க பாடல்களுக்கூடாக காட்சிகள் நகர்த்திச்செல்லப்படுகின்றன. ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் நடிகர்கள் பார்வையாளர்களுடன் நேரடியாக உரையாடுகிறார்கள். இது ப்ரெக்டின் ‘கற்பித்தல் வகை நாடகம்’ ஒன்றாகக் கருதப்பட்டது. 1930களில் ஜேர்மனி நெடுகிலும் பயணித்த நாடகக் குழுவினர் பாடசாலைகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் சென்று மாணவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் சோசலிச விழுமியங்களைப் போதிக்கும் நோக்கத்துடன் இந்நாடகத்தை அரங்கேற்றினார்கள். நவீன முதலாளித்துவ சமூகம் அடிப்படை மனித மாண்புகளை எவ்வாறு சிதைத்து, சீர்குலைக்கிறது என்பது நாடகத்தின் கரு. ஆபத்துக்கள் நிறைந்த கொடிய பாலைவனம் ஒன்றுக்கு ஊடாக மூவர் மேற்கொள்ளும் ஒரு பயணம்.

பொருளீட்டும் நோக்கத்துடன் அந்த நீண்ட பயணத்தில் பங்கேற்கும் பேராசை பிடித்த வியாபாரி. அவனுடைய சாமான்களைத் தூக்கிச் செல்லும் கூலித் தொழிலாளி; மற்றும் ஒரு வழிகாட்டி. இவர்களுக்கிடையிலான பரஸ்பர சந்தேகம், அச்சம் மற்றும் பதற்றங்கள் சூழ்ந்த தருணங்கள் பயணம் நெடுகிலும் வியாபாரியின் கொடூரமான சித்திரவதைகளை எதிர்கொள்கின்றான் கூலித் தொழிலாளி. ஒரு கட்டத்தில் வியாபாரியிடமிருந்த தண்ணீர் முழுவதும் தீர்ந்து விடுகிறது. அவன் தாகத்தில் தவிப்பதைப் பார்த்து கூலித் தொழிலாளியின் மனம் இரங்குகிறது. மனிதநேய உணர்வு மேலிட, தன்னிடமிருக்கும் தண்ணீரை வியாபாரிக்கு கொடுப்பதற்காக நீட்டுகிறான் கூலித் தொழிலாளி. அவன் தன்னை கொல்ல வருவதாக தவறுதலாக புரிந்து கொண்ட வியாபாரி தொழிலாளியை கொலை செய்து விடுகின்றாரன். வழக்கு விசாரணைக்கு வருகின்றது. பிரதிவாதி தரப்பில் முன்வைக்கப்படும் வாதம், வியாபாரியின் துன்பத்தை பார்த்து சகிக்க முடியாமல் அக்கூலித் தொழிலாளி மனித நேயத்துடன் அவனுக்கு தன்னிடமிருந்த தண்ணீரை கொடுப்பதற்காக நீட்டினான் என்பது.ஆனால், அந்த வாதத்தை ஏற்க மறுக்கிறது நீதிமன்றம். பயணம் நெடுகிலும் தன்னை துன்புறுத்தி, சித்திரவதை செய்து வந்த அந்த வியாபாரியின் மீது தொழிலாளிக்கு எந்த விதத்திலும் மனிதநேய உணர்வு தோன்ற முடியாதென்றும், அப்படியான சூழ்நிலையில் ஒருவனுக்குத் தோன்றும் மனித நேயம் விதிவிலக்கானது என்றும் சொல்கிறது.

எனவே, தண்ணீர் போத்தலை நீட்டிய கூலித் தொழிலாளியின் சைகையை, அவன் தன்னை கொல்ல வருவதாக வியாபாரி தவறாகப் புரிந்து கொண்டது நியாயமானது, என்றும் அப்படியான ஒரு இக்கட்டான தருணத்தில் ஒருவர் மற்றவர் மீது மனித நேயம் காட்டுவார் என எதிர்பார்க்க முடியாதென்றும், அதனால் வியாபாரி தற்காப்பு நோக்கில் கூலித் தொழிலாளியை கொலை செய்ததில் எவ்வித தவறுமில்லை என்றும் தீர்ப்பளிக்கிறது. “யுக தர்மத்தை மாற்றுவது சாத்தியமில்லை எனில் வழமை இதுவாகும்' வழக்கமும் இதுவாகும்' இதுவோ யுக தர்மம்' இதுவோ யுக தர்மம்' இல்லை என்பீரேல் புது விதி செய்யுங்கள்' புது விதி செய்யுங்கள்' “ என அதில் பங்கேற்ற நடிகர்கள் அனைவரும் பார்வையாளர்களை பார்த்து வலுவான வித்த்தில் குரலெழுப்புவதுடன் நிறைவுறுகிறது ‘யுக தர்மம்’.1980களின் நடுப் பகுதியில் பாலேந்திரா – ஆனந்தராணி தம்பதி இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்த பின்னரும் தமது நாடகச் செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகிறார்கள்.

1988 – 1998காலப் பிரிவில் இந்நாடகம் லண்டன், பாரிஸ் போன்ற ஐரோப்பிய நகரங்களிலும் கனடாவிலும் பல தடவைகள் மேடையேற்றப்பட்டது. 1998இல் சிறுவர்களைக் கொண்டு ‘ஒரு பயணத்தின் கதை’ என்ற பெயரில் ‘யுக தர்மத்தின்’ ஒரு புதிய தயாரிப்பையும் பாலேந்திரா மேடையேற்றினார். யுக தர்மம் தவிர ‘கண்ணாடி வார்ப்புக்கள்’, ‘ஒரு பாலை வீடு’, ‘முகமில்லாத மனிதர்கள்’ மற்றும் ‘துக்ளக்’ போன்ற பல முக்கிய ஐரோப்பிய, இந்திய நாடகங்களையும் தமிழ் மேடைக்குக் கொண்டு வந்தவர் பாலேந்திரா. ரூபவாஹினியில் முதன் முதலில் ஒளிபரப்பப்பட்ட தமிழ் நாடகம் ‘கண்ணாடி வார்ப்புக்கள்’ (பி. விக்னேஸ்வரன் 1982இல் தயாரித்தது). ஈழத்து நவீன தமிழ் நாடகத்துறைக்கு கிட்டத்தட்ட 45வருட காலமாக தயாரிப்பாளராக, நெறியாளராக, நடிகராக, அரங்கியல் துறை மாணவர்களின் ஆசானாக கனகரத்தினம் பாலேந்திரா வழங்கி வந்திருக்கும் பங்களிப்பு உரிய விதத்தில் பதிவு செய்யப்பட வேண்டும்; அவருடைய கலைப் பணிக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படுதல் வேண்டும்.

எம்.எல்.எம். மன்சூர்

Comments