சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சியால் படுத்துவிட்ட மீன் வியாபாரம் | தினகரன் வாரமஞ்சரி

சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சியால் படுத்துவிட்ட மீன் வியாபாரம்

தற்போது  எமது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையைத் தொடர்ந்து, உள்ளுர் மற்றும்  வெளியூர் சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சியடைந்துள்ளதால், எமது மீன்  வியாபாரத் தொழிலிலும் பாரிய பின்னடைவைச் சந்தித்து வருவதாக, பெண் மீன்  வியாபாரியான திருமதி இனோக்கா சந்தமாலி செம்பலிங்கம் தெரிவித்துள்ளார்.

நாட்டில்  சுமூகமான நிலைமை நிலவிய காலப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை சிறந்த  முறையில் காணப்பட்டதால், அவ்வேளையில் ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு  அதிகளவில் மீன்களை ஏற்றுமதி செய்ததோடு மாத்திரமின்றி, ஒவ்வொரு  வீடுகளுக்கும்; சென்று அதிகளவில் மீன்களை நான் விற்பனை செய்து வந்தேன்.  ஆனால், தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக சுற்றுலாப் பயணிகளின் வருகை  வீழ்ச்சியடையத் தொடங்கியதைத் தொடர்ந்து, ஹோட்டல்கள் மற்றும் உணவக  உரிமையாளர்கள் எம்மிடம் மீன்களைக் குறைந்தளவிலேயே கொள்வனவு செய்து  வருகின்றார்கள்.

அது மாத்திரமின்றி, மின்வெட்டு இல்லாத காலத்தில்  தொகையாக மீன்களைக் கொள்வனவு செய்து வந்த வாடிக்கையாளர்களும், தற்போதைய  மின்வெட்டுக் காரணமாக தத்தமது தேவைக்கேற்ப அவ்வப்போது குறைந்தளவில் மீன்களை  என்னிடம் கொள்வனவு செய்து வருகின்றார்கள். மின்வெட்டுக் காரணமாக  குளிர்சாதனப்பெட்டியில்; மீன்களை அவர்களினால் பதப்படுத்தி வைக்க முடியாத  நிலைமை காணப்படுகின்றது.

தற்போது மேற்கொள்ளப்பட்டு  வரும் மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு ஆகியனவும் எனது தொழிலில்  பின்னடைவைச் சந்திப்பதற்கு ஏனைய காரணிகளாக அமைந்துள்ளதாகவும், அவர்  சுட்டிக்காட்டியுள்ளார். திருக்கோணமலை மாவட்டத்தின்  குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மிகவும் பின்தங்கிய கிராமமான  கல்லாறாவைச்; சேர்ந்த 34வயதுடைய இனோக்கா சந்தமாலி என்பவர், கடற்றொழில்  நடவடிக்கையில் ஈடுபட்டு வரும்  தனது கணவருக்கு ஒத்தாசையாக மீன் வியாபாரத்தை  கடந்த 8வருடங்களாக கவனித்து வருகின்றார்.

தனது மீன் வியாபாரத் தொழில்; பற்றியும், தனது குடும்ப நிலைமை பற்றியும் தினகரன் வாரமஞ்சரி வாசகர்களுடன் அவர் பகிர்ந்துகொள்கின்றார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது  குடும்பமானது, வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பமாகும். அவ்வாறான  குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு, 3ஆம் வகுப்பு வரையே பாடசாலைக் கல்வியைத்  தொடர முடிந்ததோடு, மேற்கொண்டு எனது கல்வியைத் தொடராத முடியாத நிலைமை  காணப்பட்டது.

பாடசாலைக் கல்வியை இடைநிறுத்திவிட்டு,  வீட்டில் ஒன்றியிருந்த நான், உரிய வயதில் கடற்றொழில் நடவடிக்கையில்  ஈடுபட்டு வரும் ஒருவருடன் திருமண பந்தத்தில் இணைந்தேன். இந்நிலையில்,  எமக்கு 3ஆண் பிள்ளைகள் உள்ளனர். மூத்த புதல்வர் தனது பாடசாலைக் கல்வியை  முடித்துவிட்டு தற்போது தொழில் பழகச்; செல்கின்றார். ஏனைய இரு பிள்ளைகளும்  பாடசாலைக் கல்வியைத் தொடர்கின்றார்கள் என்கின்றார் அவர்.

வறுமையில்  வாழும் எம்மிடம் கடற்றொழில் செய்வதற்கு சொந்தமாக மீன்பிடிப் படகோ அல்லது  மீன் வலையோ இல்லை. ஆகையால், எனது கணவர் மீனவ முதலாளி ஒருவருக்கு கீழேயே  வேலை செய்கின்றார். அம்முதலாளியின் படகில் எனது கணவர் கடலுக்குச்  சென்று  கரைவலை வீசி மீன்பிடியில்  ஈடுபடுகின்றார்.  இந்நிலையில், வலையில்  அகப்படும் மீன்களின் அளவைப் பொறுத்து, எனது கணவருக்கு ஒருபங்கு மீன்,  முதலாளியினால் பகிரப்படும். அவ்வாறு பகிரப்படும் மீன்களின் அளவைப்  பொறுத்து, அம்மீன்களை ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு கிடைக்கும்  வகையில், முதலாளியின் உதவியுடன் அவ்வப்போது நாம் கொழும்புக்கு லொறியில்  ஏற்றுமதி செய்து வந்திருந்ததோடு, எனது மீன் வியாபாரத்திற்கும் தேவையான  மீன்களை பெற்றுக்கொள்வேன். எனது மீன் வியாபாரத்தினாலும், மீன்  ஏற்றுமதியினாலும் கிடைக்கும் வருமானத்தில் எமது குடும்ப வாழ்வாதாரத்தைக்  கொண்டு செல்வோம்.

சிலவேளைகளில் வலையில் ஒரு மீனும்  அகப்படாத சந்தர்ப்பங்களும் எமக்கு ஏற்பட்டிருந்தன. அவ்வாறான வேளைகளில்  வருமானமின்றி மிகவும் கஷ்டப்படுவோம்; என்கின்றார் அவர். எமது  வாழ்வாதாரத்திற்கான வருமானத்தை ஈட்டும் வகையில், எனது கணவருக்கு  ஒத்தாசையாக தினமும் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் நான், ஒரு குடும்பப்  பெண்ணாக இருக்கும் நிலையில் கூட, தினமும் அதிகாலையில் எழுந்து வீட்டு  வேலைகளைக் கவனித்துவிட்டு மீன் வியாபாரத்திற்கு செல்வேன். காலை 6.00  மணிக்கு எனது வீட்டிலிருந்து ரி.வி.எஸ் மோட்டார் சைக்கிளில் மீன்களுடன்  புறப்படும் நான், ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று மீன்களை விற்பனை  செய்துவிட்டு 8.30மணிக்கு எனது வீடு திரும்புவேன்.  இதன் பின்னர் எஞ்சியிருக்கும் எனது வீட்டுக் கடமைகளைக் கவனிப்பேன் என்கின்றார் அவர்.

கணவாய்,  நண்டு, இறால், திருக்கை உள்ளிட்ட சகல வகையான மீன்களையும் நான்;  வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்து வருகின்றேன். கணவாய், நண்டு, இறால்  போன்றவை அதன் பருவகாலத்தில் மாத்திரமே கிடைக்கும்.

நாட்டில்  சுமூகமான நிலைமை நிலவிய காலப்பகுதியில் கூட, அன்றறைக்கு கடற்றொழிலுக்கு  எனது கணவர் செல்லும் பட்சத்தில் மாத்திரமே எமது வாழ்வாதாரத்திற்கான  வருமானம் கிடைக்கும் என்கின்றார் அவர்.

இவ்வாறாக எமது  தொழில் மற்றும் குடும்பச்; செலவை சமாளித்து வருகையில், தற்போது எமது  நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையானது, எமது மீன்; வியாபாரத்திலும் பாரிய  பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதோடு, வருமானமும் குன்றியுள்ளது.  அதாவது,  தற்போதைய எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் எரிபொருளின் விலையேற்றம், காரணமாக  மீனவர்கள் கடற்றொழிலுக்குச் செல்வது குறைந்துள்ளதால், அவர்கள் மீன்களை  பிடிப்பதும் குறைவாகவுள்ளது. இச்சூழ்நிலையானது எமது மீன் வியாபார ஏற்றுமதி  மற்றும் எனது மீன் வியாபாரத்திலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

எரிபொருள்  விலையேற்றத்தை முன்வைத்து நாம் சற்றுக் கூடிய விலைக்கு மீன்களை விற்பனை  செய்யும்போது, அதனை வாங்குவோர் குறைவாகவுள்ளார்கள்.

இந்நிலையில்,  எஞ்சிய மீன்களை கருவாடாக்கி விற்பனை செய்கின்றேன். மீன்களைக்  கருவாடாக்குவதற்கு எமக்கு நேரம் விரையமாகுவதோடு, செலவும் ஏற்படுகின்றது.  அத்தோடு, கருவாடும்  அதிக நிறையை பிடிக்கின்றது. இதனால் கருவாட்டு  விற்பனையில் எமக்கு நட்டமே காணப்படுகின்றது என்கின்றார் அவர்.

என்னிடம்  பலதரப்பட்டவர்களும் மீன்களைக் கொள்வனவு செய்யும்  பட்சத்தில்  வாடிக்கையாளர்களையும் தக்க வைத்துக்கொண்டு, பிரச்சினைகளையும்  சமாளித்துக்கொண்டு, மீன் வியாபாரத் தொழிலை ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு செய்து  வருகின்றேன் என்கின்றார் அவர்.

மீன் வியாபாரத் தொழிலை   ஆண்கள் செய்யும் தொழில், பெண்கள் செய்யும் தொழில் என்று நான் பிரித்துப்  பார்க்கவில்லை. எனது குறிக்கோளானது, சுய கௌரவத்தோடு ஆண்களுக்கு நிகராக  நானும்; தொழில் செய்ய வேண்டுமென்பதேயாகும்.  இதுவே எனது குடும்பத்துடன் சுய  கௌரவத்தோடு வாழ வழிவகுக்கின்றது. ஆகவே, என்னைப் போன்ற ஏனைய பெண்களும்  தொழில்களில் வேறுபாடு காட்டாதீர்கள். ஆண்களுக்கு நிகரான தொழில்களை  உங்களினால் செய்ய முடியுமென்றால், நீங்கள் அத்தொழிலை செய்யுங்கள் என்றே  நான் கூறுகின்றேன். உங்களுக்கு வெற்றி கிட்டும் என்கின்றார் அவர்.

எனது  கணவரின் கடற்றொழில் நடவடிக்கைக்காக மீன்பிடிப் படகு மற்றும் மீன் வலையை  கொள்வனவு செய்து, எனது மீன் வியாபாரத்தை பெருப்பிக்க வேண்டுமென்பதே எனது  தற்போதைய எதிர்பார்ப்பாகும். அத்தோடு பாடசாலைக் கல்வியைத்  தொடர்ந்துகொண்டிருக்கும் எனது இரு பிள்ளைகளையும் கல்வியில் முன்னேற்ற  வேண்டும். இவையே தற்போது என் கண் முன்னால் காணப்படும் இருபெரும்  சவால்களாகும் என்கின்றார் அவர்.

ஆர்.சுகந்தினி

Comments