உணவு நெருக்கடியை முறியடிக்கும் பசுமைப் புரட்சி நாட்டில் ஆரம்பம்! | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

உணவு நெருக்கடியை முறியடிக்கும் பசுமைப் புரட்சி நாட்டில் ஆரம்பம்!

நாட்டில் தற்பொழுது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து உணவுப்பற்றாக்குறை ஏற்படக் கூடிய ஆபத்து குறித்து பரவான எச்சரிக்கைகள்விடுக்கப்பட்டு வருகின்றன. இதுதொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியிருப்பதுடன், மக்கள் மத்தியிலும் உணவுப் பற்றாக்குறை தொடர்பானஅச்சம் தொற்றிக் கொண்டுள்ளது.

நீர்வளம், நிலவளம் நிறைந்த நாடாக இலங்கை காணப்பட்டாலும் உணவு உற்பத்தியில் தன்னிறைவு காணத் தவறியமையும், வெளிநாட்டு இறக்குமதியில் அதிகளவில் தங்கியிருந்தமையும் இந்த நிலைமைக்கான காரணங்களில் பிரதானமாக உள்ளது.

டொலர் பற்றாக்குறை காரணமாக போதியளவு அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத துர்ப்பாக்கிய நிலைமை நாட்டுக்கு தற்போது ஏற்பட்டுள்ளது. இவ்வாறான பின்னணியிலேயே அனைத்து வீடுகளிலும் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற வேலைத்திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

இலங்கையைப் பொறுத்த வரையில் அடிப்படையில் இது ஒரு விவசாய நாடு. எமது நாட்டில் பண்டைய காலம் தொடக்கம் பல சகாப்தங்களாக விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் பிரதான பயிர்ச்செய்கையாக நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.

ஆரம்பம் தொட்டு சரியான முறையில் நாம் திட்டமிட்டு பயிர்ச்செய்கையை மேற்கொண்டிருந்தால் தற்பொழுது அரசியில் தன்னிறைவு கண்டிருக்க முடியும். குறிப்பாக 1970களில் அப்போதைய சிறிமாவோ ஆட்சிக் காலத்தில் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும், அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் திறந்த பொருளாதாரக் கொள்கை காரணமாக விவசாய உற்பத்திகளில் காணப்பட்ட அக்கறை இறக்குமதிகளின் பக்கம் திரும்பியது. விவசாய உற்பத்திகளை மேற்கொள்வதை  பார்க்கிலும் குறைந்த செலவில் இறக்குமதிகளை மேற்கொள்ள முடியும் என்பதால் உணவுப் பொருட்களின் இறக்குமதி அதிகரித்தது. இந்த நிலைமையே தற்பொழுதும் காணப்படுகிறது.

விவசாயம் மீது மக்களுக்கு இருந்த அக்கறை திசைதிருப்பப்பட்டது. விவசாயத்தை தரம் குறைந்த தொழிலாக பலரும் நினைக்கும் மனோபாவம் வளரத் தொடங்கியது. அதன் பலாபலன்களை நாடு தற்போது அனுபவிக்கும் நிலைமை உருவாகியுள்ளது.

நாடு திறந்த பொருளாதாரக் கொள்கையைப் பின்பற்றியிருந்தாலும் உரிய விவசாயக் கொள்கையை கடைப்பிடிக்கத் தவறி விட்டது. அவ்வப்போது ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் விவசாயக் கொள்கையைக் கடைப்பிடித்திருந்தால் அரிசி மாத்திரமன்றி பல்வேறு உணவுப் பொருட்களில் நாம் தன்னிறைவு அடைந்திருக்கலாம். அது மாத்திரமன்றி நகரமயமாக்கல் அதிகரித்திருப்பதால் பாரம்பரியமாக விவசாயம் மேற்கொண்டுவந்த பல குடும்பங்களின் இளையோர் நகர்ப்புறங்களை நோக்கி வேலைக்குச் சென்றமையால் போதிய ஆளணி இன்றி பல விளைநிலங்கள் கைவிடப்பட்டு தரிசு நிலங்களாகி விட்டன. இது தவிரவும் பல காணிகள் நிரப்பப்பட்டு கட்டடங்கள் அமைக்கப்பட்டன. இதனால் உணவு உற்பத்திக்கான காணிகள் இழக்கப்பட்டன.

அதேவேளை, அவ்வப்போது ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களின் அரசியல்வாதிகள் விவசாயத்தை ஊக்குவிக்கும் திட்டங்களுக்குப் பதிலாக அதிக தரகுப் பணத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடிய வகையில் இறக்குமதியை ஊக்குவிப்பதற்கே நடவடிக்கை எடுத்தனர். அவ்வப்போது கண்துடைப்புக்காக விவசாயிகளை ஊக்குவிப்பதற்காக இறக்குமதிக்கான வரிகளை அதிகரிக்கின்றோம் என அறிவிக்கப்பட்டாலும், நீண்டகாலத்தில் இதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இவ்வாறான பின்னணியில் தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த போது நடைமுறைப்படுத்திய சேதனப் பசளைகளை ஊக்குவிக்கும் கொள்கைத் திட்டம் சரியான பலனைத் தராமை விவசாயத் துறையில் பின்னடைவை ஏற்படுத்தியது. பல தசாப்தங்களாக இரசாயனப் பசளைகள் பயன்படுத்தப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டது மாத்திரமன்றி, புற்றுநோய் போன்ற தொற்றா நோய்கள் மக்கள் மத்தியில் அதிகரித்தன.

அதேநேரம், இரசாயன உர இறக்குமதியில் பல்தேசிய நிறுவனங்கள் கொண்டுள்ள ஈடுபாடு காரணமாக இவற்றை ஊக்குவிக்கும் பிரசாரங்களை மேற்கொண்டன. இந்த நிலையில் திடீரென விதிக்கப்பட்ட இரசாயன உரத் தடையால் விவசாயிகள் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். இதனால் அவர்களின் விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள உணவு நெருக்கடிக்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது.

இரசாயன உரப் பாவனை கட்டுப்பாட்டை படிப்படியாக நீண்ட காலத் திட்டத்தின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும் என்பதே பலரதும் கருத்தாக இருக்கின்றது. சரியான நடைமுறை ஆய்வுகள் இன்றி கொண்டு வரப்பட்ட இந்தக் கொள்கை பல சிக்கல்களை உருவாக்கியிருந்தது. தமது இந்த முடிவு தவறானது என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும்   ஏற்றுக் கொண்டிருந்தார். நிலைமையைச் சரிசெய்யும் நோக்கில் இரசாயன உர இறக்குமதிக்கான அனுமதி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் எதிர்கால சந்ததியினரை கருத்தில் கொண்டு இரசாயன உரப் பயன்பாட்டைக் குறைத்து சேதனப் பசளைப் பயன்பாட்டை ஊக்குவிப்பது சிறந்த கொள்கையாக இருந்தாலும் நடைமுறையில் அதனை செயற்படுத்துவதில் தடைகள் காணப்பட்டன. இந்த நடைமுறையைப் படிப்படியாக செயற்படுத்தியிருந்தால் சிறந்த பலனைப் பெற்றிருக்க முடியும் என்பதுடன். குறுகிய காலத்தில் இதன் முழுமையான நன்மையைப் பெறுவது நடைமுறைச் சாத்தியமற்றதாகும்.

கொள்கை ரீதியில் எடுத்த தீர்மானத்தினால் ஏற்பட்ட விவசாய உற்பத்திப் பின்னடைவு ஒருபுறமிக்க, டொலர் பற்றாக்குறை மற்றும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்படுவதற்கான அபாயம் தோன்றியுள்ளது. இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

எதிர்வரும் டிசம்பர் மாதம் வரை தேவைக்கான அரிசி கையிருப்பில் உள்ளதாகவும், மக்கள் வீணாக அச்சம் கொள்ளத் தேவையில்லையெனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்திருக்கிறார்.

அது மாத்திரமன்றி உணவுப் பிரச்சினை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை விசேட கூட்டமொன்று நடைபெற்றது. அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் உணவுத் தட்டுப்பாட்டை தவிர்ப்பது குறித்து பல விடயங்கள் ஆராயப்பட்டன.

அதேவேளை, பாராளுமன்றத்தின் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவிலும் உணவு நெருக்கடி குறித்த விடயம் கலந்துரையாடப்பட்டது. நாட்டில் நிலவும் உணவுப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அனைத்து அமைச்சுக்களையும் ஒன்றிணைத்து உணவுப் பாதுகாப்புக்கான அமைச்சரவை உபகுழுவொன்றை அமைக்க வேண்டுமென அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) தீர்மானிக்கப்பட்டது.

தற்போதைய உணவு நெருக்கடியைச் சமாளிப்பதற்குப் பொறுப்பான அனைத்து நிறுவனங்களையும் ஒன்றிணைத்து, விரைவான முடிவுகளை எடுப்பதற்கும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பின்பற்றுவதற்கும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்கும் இந்தக் குழுவை அமைப்பது முக்கியம் என குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக் காட்டினர்.

இது இவ்விதமிருக்க, வீடுகளில் பயிர்ச் செய்கைகளை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் நோக்கிலும், தற்போதைய எரிபொருள் தட்டுப்பாட்டைக் கவனத்தில் கொண்டும் அரசாங்க ஊழியர்களுக்கு மேலதிகமாக ஒரு நாள் விடுமுறை வழங்கும் அமைச்சரவைப் பத்திரத்துக்கும் அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அரசாங்க ஊழியர்கள் மாத்திரமன்றி நாட்டில் உள்ள அனைத்து மக்களும் தமக்கு முடியுமானளவு உணவுப் பயிர்களை வளர்ப்பது அனைவருக்கும் நன்மை பயக்கும் விடயமாக அமையும்.

பி.ஹர்ஷன்

 

 

Comments