இந்திய ஆதரவுகளை களங்கப்படுத்தும் தென்னிலங்கை அரசியல் சக்திகள்! | தினகரன் வாரமஞ்சரி

இந்திய ஆதரவுகளை களங்கப்படுத்தும் தென்னிலங்கை அரசியல் சக்திகள்!

இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தீர்த்துவைப்பதில் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியஅரசாங்கம் பல்வேறு வழிகளிலும் தொடர்ந்தும் உதவிகளைவழங்கி வருகின்ற போதிலும், இந்தியாவின் நல்லெண்ணத்துக்குவிரோதமான கருத்துகளும் தென்னிலங்கை அரசியலில் ஆங்காங்கேவெளியிடப்பட்டு வருவதைக் காண முடிகின்றது.

கச்சதீவைக் கைப்பற்றிக் கொள்வதற்கு இந்தியா முயற்சித்து வருவதாக சமீபத்தில் தென்னிலங்கை அரசியலில் உருவான கருத்து தற்போது ஓரளவு தணிந்து விட்டது. ஆனால் அதன் பிறகு மற்றொரு பரபரப்பு புதிதாக உருவெடுத்துள்ளது.

இலங்கையின் எரிசக்தி திட்டம் தொடர்பில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழுத்தத்தின் பேரில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ செயற்பட்டதாக இலங்கை அதிகாரி ஒருவர் கூறியிருந்ததே அந்த சர்ச்சைக் கருத்தாகும். இக்கருத்து தொடர்பாக இந்தியாவின் அதானி குழுமம் அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. இலங்கையின் எரிசக்தி திட்டம் தொடர்பான சர்ச்சை விடயத்தில் தாம் அதிருப்தி அடைந்துள்ளதாக அதானி குழுமம் வருத்தம் தெரிவித்திருந்தது.

இலங்கையில் முதலீடு செய்வதன் தமது நோக்கம், அண்டை நாடுகளின் தேவைகளை நிவர்த்தி செய்வதாகும் என்றும் தற்போது எழுப்பப்பட்டுள்ள சர்ச்சை காரணமாக தாம் ஏமாற்றமடைந்துள்ளதாகவும் அதானி குழுமம் தெரிவித்திருந்தது.

மன்னார் காற்றாலை திட்டம் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் வெளியிட்டிருந்த கருத்தே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அதேசமயம் அக்கருத்தை தான் நிராகரிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ட்விட்டர் பதிவு ஒன்றின் ஊடாக தெரிவித்திருந்தார்.

எந்தவொரு நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ அதனை வழங்குவதற்கான அங்கீகாரத்தை தான் வழங்கவில்லை என ஜனாதிபதி கூறியுள்ளார்.

அதேசமயம் கோப் குழுவின் முன்னிலையில் தான் தெரிவித்த அக்கருத்தை வாபஸ் பெற்றுக் கொள்வதாக இலங்கை மின்சார சபையின் தலைவராகவிருந்த எம்.எம்.சீ.பேர்டினாண்டோ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

மின்சாரசபை சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில், அதன் வேலைப்பளு காரணமாக, உணவு உட்கொள்ளாமல் செயற்பட்டமையினால் ஏற்பட்ட மனஅழுத்தத்தில் தன்னால் அவ்வாறான கருத்து வெளியிடப்பட்டதாக பேர்டினாண்டோ கூறியிருந்தார்.

இந்தக் கருத்தை வாபஸ் பெறும் தமது நிலைப்பாட்டிற்கு ஜனாதிபதி, விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் அல்லது இந்திய தூதரகத்தினால் அழுத்தம் விடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.

1989மின்சாரச் சட்டத்தில் போட்டி ஏலத்தை நீக்கிய திருத்தத்தை பாராளுமன்றம் நிறைவேற்றிய ஒரு நாளுக்குப் பிறகு பொது விசாரணை நடைபெற்றது. அதானி ஒப்பந்தத்திற்கு இடமளிப்பதே திருத்தத்தை முன்வைப்பதற்கான முக்கிய காரணம் என்று எதிர்க்கட்சி குற்றம்சாட்டியது. 10மெகாவாட் திறனுக்கு அப்பாற்பட்ட திட்டங்கள் போட்டி ஏலம் மூலம் மட்டுமே நடைபெற வேண்டும் என்று எதிர்க்கட்சி கோரியது. இலங்கை மின்சாரச் சட்டத்தில் திருத்தங்கள் மசோதாவுக்கு ஆதரவாக 120பேரும் எதிராக 36பேரும் வாக்களித்தனர். 13எம்.பி.க்கள் வாக்கெடுப்பில் வாக்களிக்கவில்லை.

அதானி குழுமம் குஜராத்தின் அஹமதாபாத்தை தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய பன்னாட்டு நிறுவனமாகும். இது 1988ஆம் ஆண்டில் கவுதம் அதானி என்பவரால், முதன்மை நிறுவனமாக அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் (முன்பு அதானி எக்ஸ்போர்ட்ஸ் லிமிடெட்) நிறுவப்பட்டது. இதன் தலைவராக கவுதம் அதானி உள்ளார். தொழிலதிபர் கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமத்திற்கு 500மெகாவாட் மின் திட்டத்தை வழங்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழுத்தம் கொடுத்ததாக கருத்துத் தெரவித்திருந்த பேர்டினாண்டோ பின்னர் தான் கூறியதை திரும்பப் பெற்றார். ஜனாதிபதியின் அலுவலகமும் இந்தக் குற்றச்சாட்டுகளை கடுமையாக மறுத்திருந்தது.

இந்திய தரப்பு உதவிகளை வழங்கி வருகின்ற போதிலும், இந்திய அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்தும் விதத்திலேயே இவ்வாறான கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

அதானி குழுமம் கடந்த சில வருடங்களாக இலங்கையில் தனது வணிகத்தை அதிகரித்து வருகிறது. இலங்கையில் மாத்திரமன்றி வேறு சில நாடுகளிலும் அதானி குழுமம் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.   

கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை 51சதவீத பங்குகளுடன் அபிவிருத்தி செய்வதற்கும் இயக்குவதற்கும் கடந்த ஆண்டு இந்நிறுவனம் ஒப்பந்தம் பெற்றது.

கடந்த மார்ச் மாதம் அதானி குழுமம் இரண்டு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின்திட்டங்களுக்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது. அதில் ஒன்று மன்னாரிலும் மற்றொன்று இலங்கையின் வடக்குப் பகுதியில் பூநகரியிலும் அமைக்கப்பட உள்ளன. இலங்கையின் இன்றைய மின்சார நெருக்கடியைப் பொறுத்தவரை சூரிய சக்தி மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க சக்திவளங்களை நாடுவதே சிறந்ததாகும் என்பதே நிபுணர்களின் கருத்தாகும்.

இலங்கையில் தற்போது மோசமான முறையில் எரிபொருள் பற்றாக்குறை நிலவுகின்றது. இந்தியா கடந்த ஜனவரி முதல் அண்டை நாடான இலங்கைக்கு கடனாகவும் பணப் பரிமாற்றங்கள் மற்றும் பிற வழிமுறைகள் மூலம் 3பில்லியன் அமெரிக்க டொலர் உதவியை வழங்கியுள்ளது.

இது ஒருபுறமிருக்க இலங்கை மின்சார சபையின் தலைவராகவிருந்த பேர்டினாண்டோ சர்ச்சைக் கருத்துக்குப் பின்னர் பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக் கருத்து தொடர்பில் இந்தியாவின் அதானி குழுமம் கருத்துத் தெரிவிக்கும் போது, “பெறுமதி மிக்க அயல்நாட்டின் தேவைகளை நிறைவேற்றுவதே எங்கள் முதலீட்டின் நோக்கம் ஆகும். பொறுப்புணர்வுள்ள பெருநிறுவனம் என்ற அடிப்படையில் எங்கள் தேசங்கள் எப்போதும் பகிர்ந்து கொண்டுள்ள இணைந்த செயற்பாட்டின் முக்கியமான அம்சமாக நாங்கள் இதனை கருதுகின்றோம்" எனக் குறிப்பிட்டிருந்தது.

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி உண்மையிலேயே மிகவும் மோசமான நிலைமைக்குச் சென்றுள்ளதென்பது வெளிப்படையான விடயமாகும். இந்தியாவின் உதவிகளை தொடர்ந்தும் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலைமையிலேயே இலங்கை தற்போது உள்ளது. இந்நிலையில் இந்தியாவின் மனிதாபிமான உதவிகளைக் கொச்சைப்படுத்தும் விதத்தில் தென்னிலங்கை அரசியலில் கருத்துகள் வெளியிடப்படுவது எவ்வித்திலும் உகந்ததல்ல.

எஸ்.சாரங்கன்

Comments