பலமடையும் இந்திய-வியட்நாம் பாதுகாப்பு நெருக்கடிக்குள்ளாகும் சீன-இந்திய உறவு? | தினகரன் வாரமஞ்சரி

பலமடையும் இந்திய-வியட்நாம் பாதுகாப்பு நெருக்கடிக்குள்ளாகும் சீன-இந்திய உறவு?

இந்தியாவின்  கிழக்கு நோக்கிய பார்வை எனும் கொள்கையை முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் காலம் முதல் இந்தியா கடைப்பிடித்து

வருகிறது. இந்தியாவின் ஆட்சியாளர்கள் அதனை பொருளதாதார நலனுக்கானதாகவும் சீனாவை எதிர்கொள்வதற்கானதாகவும் வடிவமைத்திருந்தனர். குறிப்பாக இந்தியா, தென் கிழக்காசியா மற்றும்கிழக்காசிய நாடுகளுடன் நெருக்கமான அரசியல் பொருளாதார, வர்த்தக, இராணுவ உறவை இதனூடாகஉருவாக்கியது. இது சீனாவின் இந்துசமுத்திரம் நோக்கிய முத்துமாலைத்திட்டத்திற்கு எதிரானதாக வடிவமைக்கப்பட்டாலும் இந்தியாவின் பொருளாதாரத்தில் பாரிய வாய்ப்புக்களை தந்த திட்டமாக அமைந்துள்ளது.

இதன் விளைவாக தென் கிழக்காசிய, கிழக்காசிய மற்றும் பசுபிக் விளிம்பு நாடுகளுடனான இந்தியாவின் பொருளாதார வர்த்தகம் வளர்ச்சியடைந்துள்ளது. அது மட்டுமல்ல இந்தியா தென் சீனக்கடல் விவகாரத்தில் சீனாவை எதிர்க்கும் நாடுகளுடன் நெருக்கமான உறவை வைத்துள்ளது. அதில் இராணுவ ரீதியான பரிமாற்றமும் உள்ளடங்குகிறது. குறிப்பாக இராணுவ ரீதியில் ஆயுத தளபாடங்கள், பயிற்சிகள், போர் ஒத்திகைகள் என பல விடயங்களை வியட்நாம் தாய்லாந்து பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுடன் இந்தியா மேற்கொண்டு வருகிறது. இக்கட்டுரையும் இந்திய பாதுகாப்பு அமைச்சரது வியட்நாம் விஜயம் ஏற்படுத்தியுள்ள விளைவுகளை தேடுவதாக அமையந்துள்ளது.

முதலாவது, இந்தியாவும் -வியட்நாமும் 15.06.2022இல் கூட்டு ஆவணம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளன. 2030ஆண்டிற்குள் இரு தரப்பு பாதுகாப்பு உறவுகளை பலப்படுத்தும் நோக்கில் அத்தகைய உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளன. அவ்வாறே இரு நாட்டு இராணுவத் தளங்களை பரஸ்பரம் பயன்படுத்திக் கொள்ளவும் ஆயுத தளபாடங்களை பழுதுபார்க்கவும் மீள் நிரப்புச் செய்யும் வாய்ப்பளிக்கும் விதத்தில் அவ்வுடன்படிக்கை இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வியட்நாம் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் பான் வான் ஜியாங் ஆகியோருக்கு இடையே இவ்வுடன்படிக்கை எட்டப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்குமான நெருக்கம் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புசார் நெருக்கம் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தின் உறுதித்தன்மைக்கு ஒரு முக்கிய காரணியாக அமையும் என இந்திய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

இரண்டாவது, வியட்நாமுடன் நீண்ட உறவை கொண்டுள்ள இந்தியா வியட்நாமின் இராணுவ ரீதியான ஒத்துழைப்பிற்கு முக்கியத்துவம் அளித்துவருகிறது. இராணுவ விடயங்களை கடந்து அரசியல் உரையாடல்களும் மூலோபாய உரையாடல்களும் இருநாட்டுக்கும் இடையில் 2022இல் நிகழ்ந்துள்ளது. இருநாட்டுக்குமான உரையாடலில் தென் மற்றும் கிழக்கு சீனக்கடல் சார்ந்தும் அதன் அமைதி சார்ந்தும் அதிக புரிதலும் உடன்பாடான உரையாடல்களும் நிகழ்ந்துள்ளன. வியட்நாமின் 1982ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமையத்தின் பிரகடனத்தின் பிரகாரம் கிழக்கு மற்றும் தென் சீனக்கடல் விவகாரத்தை கையாள வேண்டும் என்ற உலக நாடுகளுக்கான விண்ணப்பத்தை ஏற்றுள்ள இந்தியா, வியட்நாம்- சீன கடல் விவகாரம் சமாதான பூர்வமாக தீர்க்கப்பட வேண்டும் என்பதை முன்மொழிந்துள்ளது.

மூன்றாவது, இரு நாட்டுக்குமான உறவானது மூலோபாய ரீதியில் சீனாவை கையாளுவதாகவே அமைந்துள்ளது. அதற்கான தந்திரோபாயங்களையே இரு நாடுகளும் தமக்கிடையேயான உறவின் மூலம் ஏற்படுத்திக் கொள்ள முனைகின்றன. குறிப்பாக சீனாவின் இந்து சமுத்திரம் நோக்கிய நகர்வுக்கு பதிலளிக்கும் விதத்தில் தென் சீனக்கடல் மற்றும் கிழக்கு சீனக் கடலில் இந்தியாவின் கப்பல்களையும் போர் ஒத்திகைகளையும் மேற்கொள்வதன் மூலம் தடுக்க  முடியுமென இந்தியா கணிப்பிட்டு செயல்படுகிறது. ஏறக்குறைய சீனா இந்தியாவை தனது நட்பு நாடுகிளின் துறைமுகங்களாலும் தரைவழிப் போக்குவரத்தாலும் சுற்றி வளைத்துள்ளதாகவே உள்ளது. பாகிஸ்தானின் குவாடர் துறைமுகம் முதல் மலாக்கா நீரிணை வரை கடலாலும் பாகிஸ்தான் கராச்சி நகர் முதல் அமைக்கப்பட்ட ஹெறஹெராம் நெருஞ்சாலை ஊடான தீபெத் வரையான  தரை வழியாக இந்தியாவை சீனா சுற்றிவளைத்துள்ளதாகவே காணப்படுகிறது. இதற்கு பதிலாகவே கிழக்கு நோக்கிய பார்வையை இந்தியா வடிவமைத்தது. அதற்குள் அரசியலை மட்டுமன்றி பொருளாதாரத்தையும் இராணுவத்தையும் கலாசார உறவையும் இந்தியா உள்ளடக்கியிருந்தமை கவனத்திற்குரியதாகும். அதன் ஓரங்கமாகவே வியட்நாம்- இந்திய உறவு அமைந்துள்ளது.

நான்காவது, சமகாலத்தில் இந்தியாவின் இந்துசமுத்திரம் சார்ந்தும் சீனாவின் தென் மற்றும் கிழக்கு சீனக் கடல் சார்ந்துமே முதன்மைப்படுத்தப்படுகிறது. உலக வர்த்தகத்திலும் கப்பல் போக்குவரத்திலும் முதன்மையான கடல்களாக விளங்கும் இரு கடல்களும் இந்தோ- பசுபிக் பிராத்தியத்திற்குள் அமைந்துள்ளன. அதனாலேயே இரு கடல் பகுதியும் சார்ந்தும் அதிக முக்கியத்துவம் உடையதாகவும் மூலோபாய ரீதியில் தனித்துவம் வாய்ந்ததாகவும் அமைந்துள்ளன. இந்தியாவின் அணுகுமுறையைக் காட்டிலும் வியட்நாமின் அணுகுமுறை விசேடமாதானதாக அமைந்துள்ளது. குறிப்பாக இந்தியாவூடாக சர்வதேச மட்டத்தில் தென் சீன மற்றும் கிழக்கு சீன கடல் விவகாரத்தை கையாளுவதே பிரதான நோக்கமாக வியட்நாம் கொண்டுள்ளது. அதே நேரம் இந்திய இராணுவ உறவை வலுப்படுத்துவதன் மூலம் பிராந்திய பாதுகாப்பினையும் ஒத்துழைப்பினையும் அதிகப்படுத்த முடியுமென வியட்நாம் கருதுகிறது. இரு நாட்டுக்குமான தந்திரோபாய ரீதியில் இராணு வலிமையை அதிகரிப்பது அவசியமானதென   வியட்நாம் பாதுகாப்பு அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஐந்தாவது, இந்தியாவைப் பொறுத்தவரை ரஷ்ய-, உக்ரைன் போருக்கு பின்னர் எழுந்துள்ள நெருக்கடியை கையாளுவதும் சீனாவுக்கு எதிரான சக்திகளுடன் உறவைப் பலப்படுத்துவதும் அவசியமானதாகவே தெரிகிறது. குறிப்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் இந்தோ-பசுபிக் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு சார்ந்தே அதிக விடயங்களை ஊடகங்களுக்கு பரிமாறியுள்ளார். எனவே இந்தோ-பசுபிக் என்ற பிராந்திய சமுத்திரம் சார்ந்தே வியட்நாம் உறவை இந்தியா கட்டமைக்க முனைகிறது. அது மட்டுமன்றி இந்தியாவின் ஆயுத தளபாடங்களும் கடற்படை ஒத்திகைகளும் வியட்நாமுடன் தொடர்ச்சியானதாக மேற்கொண்டு வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையில் கடல் சார்ந்து அதிக உடன்பாடுகள் கடந்த காலத்தில் எட்டப்பட்டுள்ளன. குறிப்பாக எண்ணெய் ஆய்வு நீர் மீள்சுளர்ச்சிக்கான கருத்திட்டங்கள் கடல்பாதுகாப்பு ஒத்துழைப்புக்கள் என தென் மற்றும் கிழக்கு சீனக்கடலை மையப்படுத்தி நிகழ்ந்துவருகிறது.

ஆறாவது, பொருளாதார அடிப்படையில் நோக்கினால் இரு நாட்டுக்குமான உறவைக் கடந்து ஆசீயான் அமைப்பு சார்ந்து இந்தியாவின் பங்களிப்பு அதிகமானதாகவே உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை ஆசியான் நாடுகளை நோக்கி தனது சந்தையை விஸ்தரிப்பதும் பொருளாதார ரீதியில் நெருக்கமான உறவை உருவாக்குவதுமே பிரதான நோக்கமாக அமைந்துள்ளது. வியட்நாம் மட்டுமல்ல கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளுடனான பொருளாதா உறவிலேயே இந்தியாவின் பொருளாதார எழுச்சி முக்கியத்துவம் பெற்றது. ஆசிய உற்பத்திகள் ஆசியாவுக்குள்ளேயே அதிக நிலைத்திருப்பையும் ஆயுளையும் கொண்டிருக்கும் என்ற எண்ணத்தைக் கடந்து சந்தைத் தன்மையைப் பேணும் என்பதையும் உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

எனவே இரு நாடுகளுகளுக்குமிடையிலான நட்புறவானது மீளவும் சீன- இந்திய முரண்பாட்டை வலுவாக்குமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ரஷ்ய- உக்ரைன் போருக்கு பின்னர் சீனா-     இந்தியா -ரஷ்யா மேற்கு நாடுகளுக்கு எதிராக மட்டுமல்ல தமக்கிடையேயும் நெருக்கமான உறவை ஏற்படுத்திவருவதைக் காணமுடிகிறது.

இதற்கான நகர்வுகளை இந்தியா- வியட்நாம் உறவு பாதிக்குமாக அமைந்தால் அது மேற்குலகத்திற்கு இலாபகாரமானதாகவே அமையும். அதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே தெரிகிறது. காரணம் இலங்கையிலும் சீன, -அமெரிக்க நட்பு பலமானதாக அமைந்திருப்பதுடன் இரு தூதுவர்களும் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை எட்டும் விதத்தில் கூட்டாக செயல்பட தீர்மானித்தமை நிகழ்ந்துள்ளது. அவ்வாறே வியட்நாம் -இந்திய பாதுகாப்ப உறவு வலுவானதாக காணப்படுகிறது. எப்போதும் உலக அரசியலானது ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தே காணப்படும். ஆனால் தற்போதைய சூழலானது நலன்களால் கட்டமைக்கப்பட்டிருப்பதனால், அது இடம்மாறி அமையவும் மீள கட்டமைக்கப்படவும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது. எதுவானாலும் வியட்நாம்- இந்திய உறவு மூலோபாய ரீதியில் சீனாவுக்கு எதிரானதாகவே காணப்படுகிறது.

கலாநிதி
கே.ரீ.கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments