நினைவுகளுக்குள் நீந்தும் மனசு | தினகரன் வாரமஞ்சரி

நினைவுகளுக்குள் நீந்தும் மனசு

நினைவுகளை

அள்ளி என் முழுதும்

பூசிக்கொள்கிறேன்

சில நினைவுகள்

எத்தனை அழகானது

ஒரு புத்தம் புது மலர்போல

அது ஓர் பனித்துளியின்

ஈரத்திற்கும் சமனானது

என்னை எனக்குள்ளே

தேடும்போதும்கூட

நினைவுகளின்

நதிகளிலேயே அலாதியாக

என்னை அள்ளிப்

பருகிக் கொள்கிறேன்

நினைவுகள்

வாழ்வின் நிழல்கள் மட்டுமல்ல

அவை காலத்தின்

அற்புதமான

பொக்கிஷங்கள்

சுவடுகள் என்பது

சுவர்க்கத்துப் பாதைபோல

பவித்ரமானது

நினைவுகள்

ஒரு ஜீவ நதி

அள்ள அள்ள

குறைவுபடாதது

நினைவுகள்

நிரம்பி வழியும்

விசித்திர சமுத்திரம்

தாயினதும்

தந்தையினதும்

கைபிடித்து

தத்தித் தத்தி

நடக்கிறது

அந்த நினைவுகள்

பாடசாலை

பை சுமந்து

பனி மலரில்

மனம் புதைத்துக் கிடக்கிறது

அந்த நினைவுகள்

புத்தகத்திற்குள்

மயிலிறகு வைத்து

பத்திரப்படுத்தி

அழகு பார்க்கிறது

அந்த நினைவுகள்

தொட்டிலிற்குள்ளிருந்து

தலை நீட்டி

எட்டிப்பார்க்கும்

குழந்தைத்தனமிக்கது

அந்த அழகிய நினைவுகள்

வெளிரிப்போகாத

மனதுடைய

கலப்படமற்ற

சின்ன வயது

நண்பனின்

அன்பை பிரித்துப்

படிக்கத்துடிக்கும்

அந்த நினைவுகள்

எங்கோ அலைந்து

எங்கேயெல்லாமோ

தேடி அநாதரவற்று அலைகிறது

சில நினைவுகள்

கற்புப் பறிபோனதை

சொல்லாமல் மறைக்கும்

கன்னிப் பெண்ணின்

மனமாய் சில

நினைவுகள்

பொத்தி வைத்த

மல்லிகை மொட்டாய்

சில நினைவுகள்

கிராமத்துப் பையனின்

அறுந்துபோன

பட்டமாய்

அந்தரத்தில்

சில நினைவுகள்

இன்னும்

சொல்ல முடியாமலே

சில நினைவுகள்

இப்படி எல்லோருக்குள்ளும்

பல நினைவுகள்


- இர்ஷாத் இமாமுதீன்

Comments