கவிதை இயற்றுவதில் தமிழர்கள் மேல்நாட்டவரைப் பின்பற்றவில்லை | தினகரன் வாரமஞ்சரி

கவிதை இயற்றுவதில் தமிழர்கள் மேல்நாட்டவரைப் பின்பற்றவில்லை

சி.வி.வேலுப்பிள்ளையுடன் அமரர் பொன். பூலோகசிங்கம், டாக்டர். கனக  சுகுமார் (லண்டன்) ஆகியோர் 'சிரித்திரன்'  சஞ்சிகைக்காக எடுத்த பேட்டி  'தேன்பொழுது'  (1985) என்ற நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. சி.வி.வேலுப்பிள்ளை 1950களின் இறுதியில் எழுதிய 26கட்டுரைகளை மு. நித்தியானந்தன்,  எச். எச். விக்கிரமசிங்க ஆகியோர் தொகுத்து மலையக அரசியல் தலைமைகளும் தளபதிகளும் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளனர். இதன் வெளியீட்டு விழா ஜுன் மாதம் 11ம் திகதி லண்டனில் நடைபெறுகின்றது. இச் சந்தர்ப்பத்தில் சி.வியுடனான அந்த அரிய பேட்டி இங்கு மீள் பிரசுரமாகிறது.

மலையகம் தந்த எழுத்தாளர் ஆங்கில கவிஞர் அரசியல் பிரமுகர்  சி. வி. வேலுப்பிள்ளை. 

மலையகம் பெற்றெடுத்து ஈழத்தின் இலக்கிய உலகிற்கும் அரசியல் உலகிற்கும் உவந்தளித்த பெருமகன்   சி. வி. வேலுப்பிள்ளையாகும். தேயிலைத் தோட்டங்களால் சூழப்பெற்ற அவரது பாட்டனாரின் வட்டகொடை இல்லத்தில் அவர் சிறு பராயத்தில் வளர்க்கப்பட்டமையால் அவரது படைப்பு இலக்கியத்திற்கு அந்த சூழலும் மலையக மக்களது வாழ்க்கை போராட்டங்களும் கருப்பொருளாகின என்றே கூறவேண்டும். இவர் தனது ஆரம்பக் கல்வியை நுவரெலியா, புனித திரித்துவக் கல்லூரியிலும் உயர்கல்வியை கொழும்பு, நாலந்தா கல்லூரியிலும் பெற்றுக்கொண்டார்.

1947ஆம் ஆண்டு இவர் இலங்கை இந்திய காங்கிரசின் சார்பில் தலவாக்கலை பகுதி தொகுதியிலிருந்து மக்கள் பிரதிநிதியாக தெரிவு பெற்று பாராளுமன்ற உறுப்பினரானார். மலையக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திய முன்னோடி இலக்கிய கர்த்தாவான சி. வி.வேலுப்பிள்ளை  ஆங்கிலத்திலும் தமிழிலும் படைத்தளித்த கவிதைகளாயினும் சரி உரைநடை இலக்கியங்களாயினும் சரி காத்திரமான படைப்புகளாக மிளிர்கின்றன!

கே : இலக்கிய உலகில் உங்களுடைய பங்களிப்பு பற்றி எமக்கு எடுத்துக் கூற முடியுமா?

ப: என்னை ஒரு முதல்வரிசை எழுத்தாளன் என்று சொல்லமுடியாது. எனக்கு முன்னால் மலைநாட்டில் கவிதைகள் கட்டுரைகள் எழுதியவர்கள் உண்டு. 1935ஆம் ஆண்டு முதல் நான் இலக்கிய, சமூக சரித்திர சம்பந்தமான கட்டுரைகள், கவிதைகள், நடைச்சித்திரங்கள், சிறுகதைகள், நாவல்கள் எழுதியுள்ளேன். நான் எழுதிய முக்கியமான ஆங்கில கவிதைகள் வழிப்போக்கன் (Way farer) இலங்கைத் தேயிலைத் தோட்டத்திலே (In Ceylon's Tea Garden)  நூறாவது நாள் (Hundred days) இத்தோடு இலங்கை இந்திய ஆங்கில சஞ்சிகைகளுக்கு சில கவிதைகள் எழுதியுள்ளேன். உழைக்கப் பிறந்தவர்கள் (Way farer)  மலை நாட்டு மக்களின் வாழ்க்கை பற்றிய நடைச்சித்திரம். நான் எழுதிய நாவல்கள் 'வாழ்வற்ற வாழ்வு',  வீடற்றவன், பார்வதி, இனி பாடமாட்டேன் என்பனவாகும். இவற்றைவிட மலையக மக்களுடைய நாட்டுப் பாடல்களைத் தொகுத்து நூலாக (மாமன் மகளே) வெளியிட்டுள்ளேன்.

கே :ஆங்கில இலக்கியத்திற்கு அன்றும் இன்றும் இலங்கையில் பணிபுரிந்த இலக்கிய கர்த்தாக்களைப் பற்றிக் குறிப்பிட முடியுமா?

ப : ஆங்கில இலக்கியத்திற்குப் பணிபுரிந்த இலங்கையர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்களில் அதிமுக்கியமானவர்களாகப் பின்வருபவர்களைக் குறிப்பிடலாம். கலாயோகி ஆனந்த குமாரசுவாமி, லோரன்ஸ்,  சி.எம்.பெர்ணாண்டேர், கலாநிதி ஆர்.எஸ்.ஸ்பிட்டில்,  டாக்டர் லூசியன், டீ சில்வர் ஜே. விஜயதுங்கர் தம்பிமுத்து,  ஐசக் தம்பையா, அழகு சுப்பிரமணியம், புண்ணியகாந்தி விஜயநாயகர் ஆர்.ஆர். குரொசொட் தம்பையர் ஜேம்ஸ் குணவர்த்தனா, ரெவரன் எதிரிசிங்கர் டி.பி. தனபால் ஜே. பி. பொன்சேகர் எஸ், ஜி. கே. கிரவ்தர்,  ஹரிசன் பீரிஸ்,  வீரசூரிய ஆகியோரைக் குறிப்பிடலாம்.

கே: ஆங்கில புதுக்கவிதைக்கும் - தமிழ் புதுக்கவிதைக்கும் இடையே காணப்படும் வேறுபாடுகளை  எடுத்துரைக்க முடியுமா?

ப : ஆங்கில புதுக்கவிதைகளும் தமிழ் புதுக்கவிதைகளும் வெவ்வேறு நாகரீகத்தைச் சேர்ந்தவைகள். எனினும் ஆங்கில மொழியில் பல கீழ்நாட்டவர்கள் கவிதை எழுதுகிறார்கள். இந்தக் கவிதைகள் ஆங்கில கவிஞர்கள் எழுதும் கவிதைகளைப் போலல்லாமல் மொழி அமைப்பிலும் உட்கருத்திலும் வேற்றுமையாகத் தோன்றுகின்றன. எனவே இந்தியர் எழுதும் ஆங்கில  கவிதைகளுக்கு  Indo – Anglican poetry என்று பெயரிடப்பட்டிருக்கிறது என்ற போதிலும் தமிழில் எப்போது முதன் முதலாக புதுக்கவிதை தோன்றியது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். பாரதிதாசன், புதுமைப்பித்தன் போன்றவர்கள் எழுதிய புதுக்கவிதைகளை நான் வாசித்திருக்கிறேன். அக் கவிதைகளிலே ஆங்கில மணம் இல்லை. இப்போது தினகரன், வீரகேசரி, தினபதி ஆகிய வார சஞ்சிகைகளில் வெளிவரும் புதுக்கவிதைககளில் அநேகமாக நவீன ஆங்கில கவிதைகளின் சாயல் இருக்கிறது.

கே : இன்றைய பத்திரிகைகளையும், சஞ்சிகைகளையும் புதுக்கவிதைகள் பெருமளவில் ஆக்கிரமித்துள்ளன. இந்த நிலையில் சிறுகதைகள் சற்று ஒதுங்கி நின்று புதுக்கவிதைகளுக்கு வழிவிடுவது போலவும் ஒரு பிரமை ஏற்படுகிறது. இதுகுறித்து உங்களுடைய அபிப்பிராயம் என்ன?

ப : புதுக்கவிதைகளுக்கு வாரஇதழ்களில் போதியளவு இடம் ஒதுக்கப்படுகிறது என்பது உண்மைதான். ஆனால் சிறுகதை வேறு. கவிதை வேறு. எந்த நாட்டிலும் கவிதை வாசிக்கிறவர்கள் குறைவு. அத்தோடு வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களைக் கதைபோல் கவிதையில் சொல்ல முடியாது. சிறுகதை முற்றிலும் வேறுபட்டது. அதற்கு இலக்கியத்தில் தனிஇடம் உண்டு. எனவே சிறுகதை மங்கிப்போய்விடும் என்று சொல்வதற்கில்லை.

கே : கவிதை இயற்றுவதில் தமிழர்கள்  மேல்நாட்டவர்களைப் பின்பற்றவில்லை. கவிதை இலக்கியத்தைப் பொறுத்தவரை எமக்கென ஒர் தனியான பாரம்பரியம் உண்டு. ஆனால் சிறுகதை, நாவல் போன்ற ஆக்க இலக்கியங்களில் மேல்நாட்டவர்களைப் பின்பற்றியிருக்கிறோமே. இதற்கு காரணம் எதுவாக இருக்கலாம் என எண்ணுகிறீர்கள்?

ப : கவிதைகள் எழுதுவதில் தமிழர்கள் மேல் நாட்டைப் பின்பற்றவில்லை. காரணம் தமிழ்மொழியில் கவிதைகள் மிகமிகப் பழமையானவை. நமது அறிஞர்களின் சிந்தனைகள் எல்லாம் கவிதை வடிவில் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆங்கில இலக்கியத்தின் தாக்கம் தமிழ் இலக்கியத்துள் ஏற்பட்ட பின்னர் தான்; சிறுகதை, நாவல் போன்றவற்றைப் படைக்கத் தொடங்கினோம். எனினும் பஞ்சத்தந்திரக் கதைகள், விக்கிரமாதித்தன் கதை, மதனகாமராஜன் கதை, ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணிக் கதை போன்றவைகளே என்றோ ஏற்பட்டவை அல்லவா

கே :  முன்பு நீங்கள் 'கதை' என்னும் ஒர் தரமான சிறுகதைச் சஞ்சிகையைப் பிரசுரித்தீர்கள். அதற்குச் சிறந்த முறையில் ஒவியர் சக்தி பாலையாவும் படங்கள் வரைந்திருந்தார்கள். அப்படியொரு தரம்மிக்க சஞ்சிகையை நீங்கள் தொடர்ந்தும் பிரசுரிக்காமல் போனமைக்கு காரணம் என்ன?

ப : 'கதை' என்ற அந்தச் சஞ்சிகையை நடத்தமுடியாமல் போனமைக்கு பொருளாதார நெருக்கடியே காரணமாகும்.

கே: நீங்கள் மதிக்கும் மலையகம் தந்த இலக்கிய வாதிகள் யார் யார் எனக்கூறமுடியுமா?

ப :   சக்தி பாலையா, தலாத்து ஓயா  கே. கணேஷ் போன்றவர்கள் என்னுடைய சகாக்கள், சிருஷ்டி இலக்கியம், மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் பெரிதும் வெற்றி கண்டவர்கள் இவர்கள்.

கே: இலக்கியம் தான் எமது மூச்சு என்றிருந்த எத்தனையோ இலங்கையர்கள் வறுமையைத்தான் தழுவிக் கொண்டார்கள். மேல்நாட்டவர்களைப் போல் செல்வச் செழிப்பைக் காணவில்லையே. இந்த நிலைக்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்?

ப : நமது நாட்டிலும் இலக்கியத்தை தொழிலாகக் கொண்டு வாழ்வது சிரமமான காரியமாகும். உடலைக் காக்க ஒரு தொழிலும் அதன் மூலம் இலக்கியத்தை வளர்க்க உள்ளமும் தேவை. காலஞ்சென்ற லியஸ் மெக்னீஸ், அகிலன், முல்க்ராஜ் ஆனந்த் போன்ற பல எழுத்தாளர்களானாலும் எழுத்தை நம்பி வாழவில்லை. இலக்கியக் கர்த்தாக்கள் சுயமரியாதையோடு வாழவேண்டும் என்ற ஆசையுள்ளவர்கள். எனவே தமது வாழ்க்கை முறையை நன்றாக அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற அவர்களது போராட்டத்தில் அவர்களது இலக்கிய உணர்வு மங்கிப்போய்விடுகிறது.

கே : நீங்கள் இலக்கியவாதியாகவிருக்கின்ற அதே சமயத்தில் ஒர் அரசியல்வாதியாகவும் இருக்கிறீர்கள். உலகில் சமாதானம் நிலவ எழுத்தாளர்களின் பங்களிப்பு எத்தகையது என நினைக்கிறீர்கள்?

ப : உலகத்தில் சமாதானம் நிலவ வேண்டுமானால் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எடுத்துச் சொல்ல வேண்டும். இதை அவசரப்பட்டோ அல்லது பதட்டப்பட்டோ சொல்லக்கூடாது. அநீதியைத் தாங்குவதற்கு வச்சிரம் போன்ற உள்ளம் தேவை. சுழல் துப்பாக்கியிலிருந்து வெளிப்படும் தோட்டக்கள் போன்ற வார்த்தைகள் வேண்டும். பிரான்ஸ் தேசத்து லூயி அரகன், ரஷ்ய நாட்டு மக்கியாவஸ்கி, பிலிப்பைன்ஸ் தேசத்து ஜோஸ்ரிசால், சில்லி நாட்டைச்சேர்ந்த பப்லோ நிருடா போன்றோரின் எழுத்துக்கள் உலக மனச்சாட்சியைத் தொட்டன. புதுமைப் பித்தனின் கதைகள், பாரதியார் பாடல்கள் சமூகத்திலுள்ள அநீதிகளை தீர்க்கும் சஞ்சீவிகள் அல்லவா!

கே : சிங்கள மக்களுடைய இலக்கிய ஈடுபாடு மிகவும் பிரத்தியட்சமாகக் காணப்படும் அதே நேரத்தில் தமிழ் மக்களுக்கு அத்தகைய அளவில் ஆர்வம் காணப்படாதுள்ளமைக்கான காரணம் என்ன என நினைக்கிறீர்கள்;?

ப : சிங்கள மக்கள் மத்தியில் பணப்புழக்கம் இருக்கிறது. எனவே ஒருவர் ஆகக் குறைந்தது ஒரு பத்திரிகையாவது வாங்கி வாசிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. புதிதாக வெளிவரும் பிரசுரங்களையும் வாங்கிப் படிக்கிறார்கள். அவர்கள் மத்தியில் தரமான சிறுகதை, நாவல் எழுதும் எழுத்தாளர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு சிங்களத் தேசிய பத்திரிகைகளும் உற்சாகமளிக்கின்றன. ஜனநாயகத்தில் முதலிடமும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆங்கிலப்பத்திரிகைகளும் அவர்களுக்கு ஆதரவு அளிக்கின்றன. எம்மைப் பொறுத்தவரை ஆர்வம் இருக்கிறது. எமது உள்ளத்தில் எழும் குமுறல்களை அறிந்து அவற்றை மக்களுக்கு எடுத்துக் கூறக்கூடிய ஆற்றல் மிக்க எழுத்தளார்களும் இருக்கிறார்கள். இன்று நமது இளைஞர்களின் சிந்தனைகளை அரசியல் காரணிகளாலும் வெளிச்சக்திகளின் காரணமாகவும் சிதறிக்கிடக்கின்றன. ஒரு புது இலக்கியம் வளர்வதற்கு இந்நிலை சாதகமானது என்றே நான் கருதுகின்றேன். இந்த நிலையை நமது இளைஞர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கே : தமிழ்ச் சினிமாவும் தமிழ்ச் சஞ்சிகைகளும் மலையக மக்களின் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றி எடுத்துக் கூறமுடியுமா?

ப: இன்று மலைநாட்டில் காணப்படும் மாற்றங்களுக்குப் பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் திரைப்பாடல்களும் காரணம் என்று கூறமுடியும் என்றே நான் கருதுகின்றேன்.

தொகுப்பு:
எச். எச். விக்கிரமசிங்க

Comments