முன்னரை விட அதிக எரிபொருள் தற்போது இறக்குமதி; கியூ வரிசை இன்னுமே முடிவுக்கு வராதிருப்பதில் மர்மம் என்ன? | தினகரன் வாரமஞ்சரி

முன்னரை விட அதிக எரிபொருள் தற்போது இறக்குமதி; கியூ வரிசை இன்னுமே முடிவுக்கு வராதிருப்பதில் மர்மம் என்ன?

பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய்மற்றும் சமையல் எரிவாயு போன்ற  எரிபொருட்களுக்கான தட்டுப்பாடு நாட்டில்தொடர்ந்தும் காணப்படுகிறது. இவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. டொலர் பற்றாக்குறை மற்றும் டொலரை கொள்வனவுசெய்வதற்குத் தேவையான இலங்கை ரூபா போதியளவு இல்லாமை காரணமாக எரிபொருட்களைப் போதியளவு இறக்குமதி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

அது மாத்திரமன்றி இலங்கை தற்போது கடன்களை மீளச்செலுத்த முடியாத வங்குரோத்து நிலைக்குச் சென்றுள்ளது என்று தரப்படுத்தல் நிறுவனங்கள் அறிவித்தமையால், எரிபொருள் இறக்குமதி உள்ளிட்டவற்றுக்கு சர்வதேச வங்கிகளில் கடனுறுதிக் கடிதத்தை வழங்கி அவற்றின் அடிப்படையில் இறக்குமதி செய்ய முடியாத நிலைமை ஏற்பட்டது.

இதனால் எரிபொருள் கப்பல்களுக்கு நேரடியாக டொலர்களைச் செலுத்தியே எரிபொருளையோ அல்லது எரிவாயுவையோ இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. ஒவ்வொரு முறை எரிபொருளை இறக்குமதி செய்வதற்குத் தேவையான டொலர்களைத் திரட்டுவதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சு கடுமையான பிரயத்தனம் எடுத்த வருகிறது.

தேவையான டொலர்களைத் திரட்டிக் கொடுத்தாலும் அவற்றைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான இலங்கை ரூபா பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடமோ, இலங்கை மின்சார சபையிடமோ அல்லது லிற்றோ நிறுவனத்திடமோ இல்லையென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க அண்மையில் பாராளுமன்றத்துக்குத் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான பின்னணியில் மாதமொன்றுக்கு எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கு ஏறத்தாழ 500மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுகிறது. இதனைத் திரட்டுவதற்கு கடுமையா சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருப்பதாக எரிசக்தி மின்வலு அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பெரும்பாலானவர்கள் தங்களது தேவைக்கு அதிகமாக சேகரிக்க முயற்சிப்பதால் எரிபொருளுக்கான கேள்வி அதிகரித்துள்ளது என்றும், தேவையற்ற விதத்தில் எரிபொருளை  சேமிக்க வேண்டாம் என்றும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சாதாரணமாக வாகனமொன்றின் எரிபொருள் தாங்கியில் அரைப் பங்கு மாத்திரம் நிரப்புபவர்கள் தற்பொழுது முழுமையாக நிரப்புவதால் சராசரியான எரிபொருள் பாவனையை விட அதிகமானளவு எரிபொருள் பயன்படுத்தப்படுகிறது.

இதனால் வழமையாகப் பெற்றுக் கொள்ளும் எரிபொருள் அளவு போதுமானதாக இல்லை. உதாரணமாக ஒரு கப்பலில் பெற்றுக் கொள்ளும் எரிபொருள் முன்னர் ஒரு வாரத்துக்குப் போதுமானதாக இருந்தால், இது தற்பொழுது ஒரு சில நாட்களிலேயே முடிந்து விடுகிறது. இதனாலேயே எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நெரிசல் காணப்படுவதாக அமைச்சர் குறிப்பிடுகிறார்.

இலங்கையின் எரிபொருள் இறக்குமதியானது ஒப்பீட்டளவில் அதிகமானதாகவே காணப்படுகிறது. கடந்த பல வருடங்களாக இந்த நிலைமை நீடித்து வருகிறது. அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியுடன் ஒப்பிடுகையில் எரிபொருள் இறக்குமதிக்கான செலவு கூடுதலாக உள்ளது. கிடைக்கக் கூடிய தரவுகளின்படி, 2014மற்றும் 2018இற்கு இடையில், சராசரியாக ஆண்டுக்கு 3,269மில்லியன் அமெரிக்க டொலர் எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ளது.

அதேநேரம், அத்தியாவசியப் பொருட்களான உணவு. பானங்கள், பால் உற்பத்திப் பொருட்கள் மற்றும் மருந்துகள் உள்ளிட்டவற்றின் இறக்குமதிக்கு 3,394மில்லியன் அமெரிக்க டொலரும் செலவு செய்யப்பட்டுள்ளது.

இவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது எங்களுடைய எரிபொருள் செலவீனம் ஏனைய அனைத்தையும் இறக்குமதி செய்ய நாம் செலவழிக்கும் தொகையை விட அதிகமாகும். எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100அமெரிக்க டொலர்களாக அதிகரித்து வருவதால், நமது எரிபொருள் கட்டணம் தானாகவே இரட்டிப்பாகும்.

இலங்கையின் எரிபொருள் பாவனையில் வீதிப் போக்குவரத்திலேயே 63வீதமான எரிபொருள் பயன்படுத்தப்படுவதாக மொரட்டுவ பல்லைக்கழகத்தின் போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்துத் திணைக்களத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அமல் எஸ்.குமாரகே தெரிவித்தார்.

தற்பொழுது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் எரிபொருளுக்கான செலவைக் குறைப்பதற்கு வீதிப் போக்குவரத்துக்கான எரிபொருள் பாவனையை ஆகக் குறைந்தது 25வீதமாவது குறைக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், எரிபொருள் கொள்வனவு வீதம் அதிகமாக இருப்பதால் தொடர்ந்தும் அதற்கு மானியம் வழங்குவதில் எவ்வித பயனும் இல்லையென்றும், குறிப்பாக எரிபொருளில் அதிகமானளவு தனியாருக்கு சொந்தமான வாகனங்களுக்கே பயன்படுத்தப்படுவதாகவும்  அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

மற்றைய பொருட்களைப் போலல்லாமல், எரிபொருள் இறக்குமதியை கட்டுப்படுத்தவோ அல்லது பங்கிடவோ கூடாது. ஏனெனில் அது உற்பத்திக்கு அவசியமானது. உள்ளூர் விலைகள் உலக சந்தை விலைகளுடன் இணைக்கப்படுவதும் அவசியம். இருப்பினும், நுகர்வு ஊக்கமளிக்கும் மற்றும் மாற்றுப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் நியாயமான வரிக் கூறுகளுடன் இது செய்யப்பட வேண்டும்.

உற்பத்தித் திறனையோ வசதியையோ குறைக்காமல் குறைந்த எரிபொருள் பயன்பாட்டை மேம்படுத்த பல நாடுகள் இந்த வரியை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளன. இவற்றை முன்னுதாரணமாக எடுத்து இலங்கையிலும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அதேநேரம், கடந்த காலங்களில் வாகன இறக்குமதி அதிகரித்திருந்தமையும் எரிபொருள் தேவையைப் பன்மடங்கு அதிகரிக்கச் செய்துள்ளது. வாகன இறக்குமதியால் அந்நியச் செலாவணி நாட்டை விட்டுச் சென்றது மாத்திரமன்றி, வாகனங்களுக்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதற்காகவும் பெருந் தொகையான டொலர்களை நாம் இழக்க வேண்டி ஏற்பட்டது.

இதற்கும் அப்பால் சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பல தரப்பினருக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதிப் பத்திரம் வழங்குகிறது. இதனால் திறைசேரிக்குக் கிடைக்கும் வரி வருமானம் பெருமளவு இழக்கப்படுவது மாத்திரமன்றி, அவ்வாறு வழங்கப்படும் அனுமதிப் பத்திரத்தின் ஊடாக அதிகமான எரிபொருள் தேவையைக் கொண்ட வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவதால் எரிபொருளுக்கான கேள்வியும் அதிகமாகவே காணப்படுகிறது.

எனவே, நாட்டின் நீண்டகாலத் தேவையைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் உரிய திட்டங்களை வகுத்து எதிர்காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இது இவ்விதமிருக்க, மின்சார உற்பத்திக்கும் எரிபொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இலங்கை பல வளங்களைக் கொண்ட நாடாக இருக்கின்ற போதும், மின்சார உற்பத்திக்கு அனைத்து வளங்களும் பயன்படுத்தப்பட்டதாக  இல்லை.

ஆரம்ப காலத்தில் நீர்மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட்டன. அதன் பின்னர் நுரைச்சோலையில் அனல் மின்நிலையம் அமைக்கப்பட்டது. இது தவிரவும் எரிபொருளைக் கொண்டு செயற்படக் கூடிய மின்பிறப்பாக்கி நிலையங்களே அதிகம் காணப்படுகின்றன. இந்த நிலைமைக்கு இலங்கை மின்சார சபையும் பொறுப்புக் கூற வேண்டும்.

கடந்த காலங்களில் புதுப்பிக்கத்தக்க சக்திகளைக் கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான திட்டமுன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்த போதும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் தடையாகக் காணப்பட்டன. குறிப்பாக மின்சார சபையின் பொறியியலாளர்கள் தொழிற்சங்கம் இதற்கு பிரதான முட்டுக்கட்டையாக இருந்தது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டம் முன்மொழியப்பட்டு இதனை ஊக்குவிக்க குறைந்த வட்டியில் கடன் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. இருந்தபோதும் மின்சார சபையிடமிருந்து இதற்குப் போதிய ஒத்துழைப்பு வழங்கப்படவில்லை.

அது மாத்திரமன்றி மின்சாரத் தட்டுப்பாடு ஏற்பட்ட போது தனியார் நிறுவனங்களிடமிருந்த அவசர கொள்வனவுக்கான பரிந்துரைகளை அவர்கள் மேற்கொண்டனர். இதனைச் சற்று ஆழமாகப் பார்த்தால் தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் மின்சார சபையில் உள்ள பொறியியலாளர்களுக்கு மறைமுகமான தொடர்புகள் காணப்படுகின்றதா என்ற சந்தேகம் தோன்றுகின்றது.

அது மாத்திரமன்றி அவசர கொள்வனவின் போது விலைமனுக் கோரல் இல்லையென்பதால் தரகுப் பணமும் அவர்களுக்கு அதிகமாகக் கிடைக்கிறது என்ற குற்றச்சாட்டுகள் பலதரப்பாலும் சுமத்தப்படுகின்றன. இதனால் மாற்று வலுசக்தியைப் பயன்படுத்துவதில் அவர்கள் அக்கறை காண்பிக்கவில்லை என்கிறார்கள் நிபுணர்கள்.

புதுப்பிக்கத்தக்க சக்தி வலுவைப் பயன்படுத்தும் திட்டங்களை கொண்டு வருவதற்கு ஒவ்வொரு தடவையும் முயற்சித்த போதும் அதற்கு பல தடைகள் ஏற்படுத்தப்பட்டு தொழிற்சங்கப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறான நிலையில் கடந்த வாரம் இலங்கை மின்சாரம் (திருத்தச்) சட்டமூலம் திருத்தப்பட்டது. அதாவது இதுவரை காலமும் புதுப்பிக்கத்தக்க சக்தி (சோலார்) உற்பத்தியை மேற்கொள்வதற்கு கட்டுப்பாடு காணப்பட்டது.

இவ்வாறான நிலையில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட திருத்தத்துக்கு அமைய எந்தவொரு தனியார் முதலீட்டாளரும் தேவையானளவு மின்சாரத்தை உற்பத்தி செய்து வழங்க முடியும். இந்தத் திருத்தத்தின் மூலம் பல முதலீட்டாளர்கள் மின்சக்தித் துறையில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளன.

எனவே, நாட்டின் நீண்டகாலப் பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு கொள்கைகள் தயாரிக்கப்பட வேண்டியிருப்பதுடன், அரசியல்வாதிகள் மாத்திரமன்றி அரசாங்க அதிகாரிகளும் இதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவது அவசியமாகிறது.

சம்யுக்தன்

Comments