''யாழில் பங்கீட்டு அட்டைக்கு எரிவாயு விநியோகம்'' ஏனைய பிரதேசங்களிலும் இதை பின்பற்றலாமே | தினகரன் வாரமஞ்சரி

''யாழில் பங்கீட்டு அட்டைக்கு எரிவாயு விநியோகம்'' ஏனைய பிரதேசங்களிலும் இதை பின்பற்றலாமே

நாட்டில்  ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பல அத்தியாவசிய பொருட்களுக்கு  பெரும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. குறிப்பாக எரிவாயுவுக்கான  தட்டுப்பாடு  பெருமளவில் காணப்படுகிறது.

நாடளாவிய ரீதியில்  எரிவாயுக்காக  மக்கள் நீண்ட வரிசைகளில்  காத்திருக்கின்றனர். நீண்ட  வரிசையில் காத்திருந்தும்  எரிவாயு கிடைக்காத  நிலையில் விரக்தியில் வீதிகளை  மறித்து ஆங்காங்கே போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.

எரிவாயுக்கான  விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் எரிவாயுவுக்கான  கேள்வி  குறையவில்லை. அதேவேளை விலையை அதிகரித்த நிறுவனங்களும் மக்களின் தேவைக்கு  ஏற்ப எரிவாயுவை விநியோகிக்க முடியாத நிலையில் உள்ளன.

நாடளாவிய  ரீதியில் எரிவாயுவுக்கான  பிரச்சினை காணப்படுகின்ற  போதிலும்  யாழ்ப்பாணத்திலும் கடந்த சில வாரங்களாக அதுபெரும் பிரச்சினையாக      உருவெடுத்துள்ளது.  ஏற்கனவே பொருட்களின்  விலையேற்றங்களால் மக்கள் நெருக்கடியில் காணப்படுவதனால், விரக்தி நிலையில்  உள்ளனர். அதனால் காத்திருப்பு, வரிசை, ஏமாற்றம் என்பவற்றால் நொந்து  போயுள்ளனர்.  கடந்த காலங்களை விட கடந்த  வாரமே  யாழ்ப்பாண மக்கள் கோபத்தின் உச்சிக்கு சென்று வீதி மாறியல்களில்  ஈடுபட்டனர். பொலிஸார் மக்களுடன் பேச்சுக்களில் ஈடுபட்டு மக்களை  சமரசப்படுத்தி வந்தனர்.

மக்களின் கோபம்,  பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் இவற்றினை சமாளிக்கும் முகமாக  யாழ்ப்பாண  மாவட்ட செயலர்  க. மகேசன் விரைந்து நடவடிக்கை எடுத்து , எரிபொருள்  பிரச்னைக்கு தீர்வு காணுவதற்கான  கலந்துடையாடல்களை , பிரதேச செயலர்கள் ,  அதிகாரிகள் மட்டத்தில்  நடாத்தி வரும் நிலையில், எரிவாயு  பிரச்சினையையை  தீர்க்கும் வகையில் பங்கீட்டு அட்டைக்கு எரிவாயு வழங்கும்  நடைமுறையை அமுல் படுத்தியுள்ளார்.

பங்கீட்டு அட்டைக்கு எரிவாயு வழங்கும் நடைமுறை  அமுல்

அது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட செயலர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளதாவது,  தற்போது  நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையில் மக்களது கேள்விக்கு குறைவான  சிலிண்டர்களே எமக்கு கிடைக்கப்பெறுவதனால்  சிலிண்டர்களை  சீரான முறையில் மற்றும் நியாயமான விலையில் மக்கள் பெற்றுக்கொள்வதற்கு  ஏதுவாக பின்வரும் பொறிமுறை ஊடாக எரிவாயு சிலிண்டர்களை எதிர்வரும்  காலங்களில் பகிர்ந்தளிப்பதற்கு  முடிவெடுக்கப்பட்டுள்ளது.

1. பொதுமக்களுக்கான வீட்டுப்பாவனை மக்களுக்கு விநியோகிக்கும் முறை:

கிராம  அலுவலர் பிரிவுகளுக்கென ஒதுக்கப்பட்ட விநியோகஸ்தர்களிடம், உரிய கிராம  மக்கள் தமது எரிவாயு சிலிண்டருக்கான பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். விநியோகஸ்தர்களும் மேற்படி விபரங்கள் தொடர்பான பதிவேடு ஒன்றினை பேணுதல் வேண்டும்

விநியோகஸ்தர்களிடம்,  ஒரு வீட்டுக்கு ஒரு சிலிண்டர் என்ற முன்னுரிமை அடிப்படையில் பதிவு  மேற்கொள்ளப்படுவதனை கிராம அலுவலர்கள் உறுதிப்படுத்தல் வேண்டும். விநியோகஸ்தர்களுக்கு சிலிண்டர்கள் கிடைக்கப்பெற்றதும் பதிவு அடிப்படையில் அவர்களுக்கான விநியோகம் நடைபெறும். குறித்த நேரத்தில் பதிவு மேற்கொண்டோர் சமூகமளிக்காவிடின் பதிவு அடிப்படையில் அடுத்துள்ள பயனாளிக்கு விநியோகிக்கப்படும். விநியோகிக்கப்பட்ட   விபரம் பிரதேச செயலக மேற்பார்வையில் குடும்ப பங்கீட்டு அட்டையில் திகதி  குறிப்பிடப்பட்டு பதிவு செய்தல் கட்டாயமானது. சிலிண்டரை பெறவருபவர்  உரிய கிராம அலுவலர் பிரிவு,  பங்கீட்டு அட்டை, தேசிய அடையாள அட்டையுடன்  பங்கீட்டு அட்டையில் பெயருடைய அங்கத்தவராக இருத்தல் கட்டாயமானது.

விநியோகஸ்தர்களுக்கு விநியோகிக்கும் முறை:

1. தமக்கு  கிடைக்கப்பெறும் சிலிண்டர்களது எண்ணிக்கை அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச  செயலாளர்களுக்கு லிட்ரோ பிராந்திய முகாமையாளரால் வழங்கப்படும். கிடைக்கப்பெற்ற  எரிவாயு சிலிண்டர்களது எண்ணிக்கைக்கு அமைவாக விநியோகஸ்தர்களுக்கு  விநியோகிக்க வேண்டிய சிலிண்டர்களது எண்ணிக்கை பிரதேச செயலாளர்களால் விநியோக  நிறுவனத்திற்கு அறிவிக்கப்படும்.

அதன் அடிப்படையில் விநியோக நிறுவனத்தினர் முகவர்களுக்கு சிலிண்டர்களை விநியோகிப்பர். 2.  கைத்தொழில் நிலையங்கள், உணவுச்சாலைகள், வைத்தியசாலைகள் மற்றும் நலன்புரிச்  சேவை நிறுவனங்கள் (சிறுவர் / முதியோர் இல்லம்) ஆகியவற்றுக்கு வழமைபோல் விநியோகஸ்தர்களால் நேரடியாக விநியோகிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு ஒரு இலட்சம்  சிலிண்டர் தேவை

யாழ்ப்பாணத்தில்  ஒரு இலட்சத்து 10ஆயிரம்  எரிவாயு சிலிண்டர்கள் பாவனையில் உள்ளன எனவும்,  மாதாந்தம் சுமார் 60ஆயிரம் சிலிண்டர்கள் மீள் நிரப்பி விநியோகிக்க  வேண்டிய தேவை காணப்படுகின்றன எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால், யாழ்ப்பாணத்திற்கு தற்போது சுமார் 25ஆயிரத்திற்கும் குறைவான சிலிண்டர்களிலேயே எரிவாயு மீள் நிரப்பப்பட்டு வருகின்றது.  அதனாலேயே யாழில் பெருமளவில்  எரிவாயு தட்டுப்பாடு காணப்படுகின்றன.   யாழுக்கு  வரும் மிக குறைந்தளவான  எரிவாயு சிலிண்டர்களையும்  முன்னுரிமை அடிப்படையில்  உணவகங்கள் , ஹோட்டல்கள் , வைத்திய சாலைகள், உணவு உற்பத்தி நிறுவனங்கள் ,  கைத்தொழில் நிறுவனங்கள் என்பவற்றுக்கு வழங்கப்படுவதனால்  மக்களுக்கு சீரான  முறையில் எரிவாயுவை வழங்க முடியாத நிலைமை காணப்படுகிறது.  நாட்டில்  பொருளாதார ஸ்திர தன்மை ஏற்பட்டு, உற்பத்திகள் ஏற்றுமதிகள் அதிகரிப்பட்டு,  நாட்டுக்கு வருமானம் அதிகளவில் வரும் பட்சத்திலேயே  மக்களுக்கு சீரான  முறையில் எரிவாயுவை விநியோகிக்க முடியும். அது வரையில் எரிவாயு தட்டுப்பாடு  நிலவும் என யாழ்ப்பாண மாவட்ட செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

உணவகத்தை மூட முடியாத நிலை.

அதேவேளை  எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவகத்தில் உணவைத் தயாரித்து வழங்க முடியாத  நிலையில் தான் காணப்படுகின்ற  போதிலும் உணவகத்தினை   மூட முடியாத நிலையில்  உள்ளதாக  உணவக உரிமையாளர் ஒருவர் கவலையுடன் தெரிவித்தார்.  எரிவாயு  இல்லாததன் காரணமாக தான் உணவு தயாரிக்க முடியாததால், ஒரு நாள்  உணவகத்தினை  மூடி விட்டு வீட்டில் இருந்த போது, எனக்கு கடன் தந்தவர்கள்,  வங்கி கடன் பணம் வசூலிப்பவர்கள் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு எங்கே  என வினாவி  வீடு வரை வந்து நேரில் பார்த்து விட்டு சென்றனர்.  அவர்களிடம்  என் மேல் அவ்வளவு அக்கறையா? என கேட்ட போது, இல்லை உங்கள் உணவகம் மூடி  இருந்தது, நாங்கள் நினைத்தோம் உணவகத்தினை  மூடி விட்டு நீங்கள் தலைமறைவாகி  விட்டீர்களோ என, அதனால் தான் சந்தேகப்பட்டு உங்களை பார்க்க வந்தோம்  என்றார்கள்.  அவர்கள் அவ்வாறு சொன்ன பின்னர்  அன்றைய தினம் மாலையே நான் உணவகத்தினை   திறந்தேன். உணவகத்திற்கு வருவோரிடம்  உணவு இல்லை என கூறி என் சோகத்தையும் கூறி வருகிறேன் என்றார் யாழில் உள்ள  உணவாக உரிமையாளர் ஒருவர்.

கறுப்பு சந்தையில் 20ஆயிரம் ரூபாய்.

இதேவேளை கறுப்பு சந்தைகளில் எரிவாயு சுமார் 15ஆயிரம்  முதல் 20ஆயிரம் ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றது.  சில  எரிவாயு விற்பனை முகவர்கள், தமது வாடிக்கையாளர்களிடம் வெற்று எரிவாயு  சிலிண்டர்களையும்  பணத்தினையும் பெற்றுக்கொண்டு எரிவாயு   சிலிண்டர்களின்  ஒழுங்கின் அடிப்படையில் தருவதாக வாக்குறுதி வழங்குகின்றனர்.  அவற்றினை நம்பி வாடிக்கையாளர்கள் அவர்களிடம் வெற்று சிலிண்டர்களை கொடுப்பதுடன் , அதற்கான பணத்தினையும் வழங்குகின்றார்கள்.  வாடிக்கையாளர்களிடம்  வெற்று சிலிண்டர்களை பெற்றுக்கொள்ளும் முகவர்கள் அவற்றை கொண்டு மீள்  நிரப்பட்ட   சிலிண்டர்களை விநியோகஸ்தர்களிடம்  இருந்து பெற்றுக்கொள்கின்றனர்.  ஆனால் அதனை வாடிக்கையார்களிடம் கொடுக்காது  கறுப்பு சந்தையில் இரண்டு, மூன்று மடங்கு விலையில் விற்கின்றனர்.

வெற்று  சிலிண்டர்களை கொடுத்த வாடிக்கையாளர்கள் தமக்கான சிலிண்டர்களை கேட்கும்  போது , தமக்கு இன்னமும் சிலிண்டர் வரவில்லை. வந்ததும் தருகின்றோம் என அவர்களை ஏமாற்றி வருகின்றனர்.  இந்நிலையில்  யாழ்.மாவட்ட செயலக ஏற்பாட்டில் இனிவரும் காலங்களில் பிரதேச செயலகங்கள்  ஊடாக கிராம சேவையாளரின் கண்காணிப்பின் கீழ் பங்கீட்டு அட்டைக்கு எரிவாயு  சிலிண்டர் விநியோகம் நடைபெறவுள்ளது.  அதனால் முகவர்களிடம் வெற்று சிலிண்டர்களை கொடுத்து வைத்திருப்பவர்களை அவற்றினை மீள பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

யுத்த காலத்தை விட நெருக்கடியான நிலையில் மக்கள்.

யுத்தத்தினால்  30வருடங்களுக்கு மேலாக பாதிக்கப்பட்ட மக்கள் யுத்தம் முடிவடைந்த பின்னர்  மெல்ல மெல்ல மீண்டு வந்தனர். தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார  நெருக்கடி மீண்டும் அந்த மக்களை யுத்த கால பாதிப்பை விட மோசமான  பாதிப்புக்கு கொண்டு சென்றுள்ளது.  நாட்டில்  ஒரு பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்பட்டு பொருட்களுக்கான தட்டுப்பாடு நீங்கும் பட்சத்திலையே  மக்களின் வரிசை யுகம் இல்லாமல் போகும். அதன்  பின்னரே மக்கள் இயல்பு  வாழ்க்கைக்கு  திரும்ப முடியும். அதற்கான ஒரு  நம்பிக்கை ஒளிக்கீற்று தென்படுகின்றதா  எனக் காத்திருக்கின்றனர்.

மயூரப்பிரியன்

Comments