கொரிய நாடுகளுக்கு இடையே போரை ஊக்குவிக்கிறதா அமெரிக்கா | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

கொரிய நாடுகளுக்கு இடையே போரை ஊக்குவிக்கிறதா அமெரிக்கா

கொரியக் குடாவில் 1942முதல் ஏற்பட்ட கொதிநிலை அரசியலானது தற்போதுவரை நீடிக்கிறது.    வட, தென் கொரியர்களது அரசியலை மையப்படுத்தி உலக வல்லரசுகள் அப்பிராந்தியத்தில் தமது ஆதிக்கப் போட்டியை மேற்கொண்டு வருகின்றனர். ஆரம்பத்தில் முன்னாள் சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்குமான போட்டி தற்போது சீனா மற்றும் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் அணுகுமுறையாக காணமுடிகிறது. முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் வடகொரியாவுடனான சமாதான முயற்சிகள் தோல்வியடைந்தமையும்   அதனை அடுத்து ஜோ பைடன் நிர்வாகம் மீளவும் வடகொரியாவுடன் முரண்பாடுடைய கொள்கையுடன் செயல்பட முனைவதுவும் பிராந்தியத்தில் போர்ப் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியாவின் ஏவுகணைப் பரிசோதனையை அடுத்து தென் கொரியாவுடன் அமெரிக்கா இணைந்து கொண்டு எட்டு ஏவுகணைகளை பரிசீலித்துள்ளது. இக்கட்டுரையும் வட-தென் கொரியர்களது ஏவுகணைப் பரிசோதனைகள் பிராந்திய ரீதியில் ஏற்படுத்தவுள்ள விளைவுகளை தேடுவதாக உள்ளது.

குவாட் நாடுகளின் 25-,26.05.2022நடைபெற்ற உச்சிமகாநாட்டுக்கு விஜயம் மேற்கொண்ட ஜோ பைடன் முதலில் ஆசிய நாடான தென்கொரியாவுக்கே வருகை தந்திருந்தார். அமெரிக்க ஜனாதிபதியின் முதல் ஆசிய விஜயம் தென் கொரியா மற்றும்  ஜப்பானை நோக்கியதாக அமைந்திருந்ததுடன் ஆசிய -பசுபிக் நாடுகளுடனான பொருளாதார உரையாடல் ஒன்றையும் முதன்மைப்படுத்தியிருந்தது. ஜனாதிபதி பைடனின் நகர்வு அமெரிக்காவின் அரசியல் பொருளாதார, இராணுவம்சார் வெளியுறவுக் கொள்கையினை கோடிட்டுக் காட்டுவதாக தெரிகிறது. அதாவது வளர்ச்சிக்கான இந்தோ,- பசுபிக் பொருளாதாரக் கட்டமைப்பினை (IPEF) (23ஆம் திகதி) ஜோ பைடன் ஜப்பானியத் தலைநகரான டோக்கியோவில் தொடக்கி வைத்தார். இப் பொருளாதார அமைப்பில் 13ஆசிய-, பசுபிக் நாடுகள் கலந்து கொண்டன. இந்த நாடுகளுடனான உறவை பலப்படுத்தும் விதத்தில் அமெரிக்க ஜனாதிபதியின் நடவடிக்கை அமைந்திருந்தது.பொருளாதார கட்டமைப்பின் பிரதான நோக்கம் அங்கத்துவ நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவை பலப்படுத்துதல்  டிஜிற்றல் வர்த்தகத்தை மேம்படுத்துதல், விநியோக உறவை பலப்படுத்துதல், புதுப்பிக்கதக்க சக்திவளத்தை பெருக்குதல் மற்றும் கட்டமைப்பு மாற்றத்தை ஏற்படுத்துதல் என்பனவாக  முன்வைக்கப்பட்டுள்ளன.

அப்போது தென்கொரிய- அமெரிக்க நெருக்கத்தை பலப்படுத்தும் விதத்தில் பல உடன்பாடுகள் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் எட்டப்பட்டது. தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக்-யோலும் அமெரிக்க ஜனாதிபதி பைடனும் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பொருளாதா தொடர்புகளை பேணுவதற்கான உடன்படிக்கைகளில் கையொப்பமிட்டனர். அதாவது இரு நாடுகளும் மூலோபாய போட்டியாளர்களுக்கான ஒத்துழைப்பு என்ற தொனிப் பொருளில் அவ்வுடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இரு நாட்டுக்குமான உறவு பலமானதாகவும் தசாப்தங்களைக் கடந்த நீண்ட வரலாற்றைக் கொண்ட நண்பர்கள் எனவும் அங்கு உரையாற்றும் போது பைடன் குறிப்பிட்டார். இரு நாடுகளுக்கும் இடையில் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார விடயங்களில் நெருக்கத்தை அதிகரிக்க உடன்பாடுகள் எட்டப்பட்டன. பரஸ்பரம் முதலீடுகளை ஊக்குவிப்பது தென் கொரியர்களுக்கான வேலைவாய்ப்பினை அதிகரிப்பது போன்ற விடயங்களில் இரு நாட்டுத் தலைவர்களும் உரையாடியனர். பாதுகாப்பைப் பொறுத்து இரு நாடுகளும் தொடர்ச்சியாக போர்ப் பயிற்சிகளை நிகழ்த்துவதென்றும் போர் ஒத்திகைகள் மேற்கொள்வதென்றும் முடிவாகியது.

அதனடிப்படையிலேயே 06.06.2022அன்று அதிகாலை அடுத்தடுத்து தென் கொரியாவின் கிழக்கு கடற்கரைப் பிரதேசத்தில்  8ஏவுகணைகளை ஏவி பரிசோதனையை அமெரிக்க -தென் கொரியக் கூட்டு மேற்கொண்டது. அதே நேரம் 05.06 2022அன்று வடகொரியா அமெரிக்க- தென்கொரிய கூட்டுப் பயிற்சி நிகழ்ந்து கொண்டிருந்த போது ஜப்பானியக் கடல் பகுதியை அண்டிய பிரதேசத்தில் எட்டு குறுந்தூர ஏவுகணைப் பரிசோதனையை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். வடகொரியாவின் ஏவுகணைப் பரிசோதனைக்கு பதிலடியாகவே தாம் எட்டு ஏவுகணைகளை பரிசோதித்ததாக தென் கொரிய பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு வட-தென் கொரியா ஏவுகணைப் பரிசோதனைப் போட்டியானது கொரியக் குடாவின் அமைதியை பாதிப்பதுடன் போர் ஒன்றுக்கான நகர்வுகளைத் தூண்டுவதாகவே தெரிகிறது. அதனை விரிவாக நோக்குவது அவசியமானது.

முதலாவது, தற்போதைய தென்கொரியாவின் ஜனாதிபதி தீவிர போக்குடையவராகவும் மேற்குலகுடனான உறவைக் அதிகம் விரும்புபவராகவும் காணப்படுகின்றார். குறிப்பாக வடகொரியாவுக்கு எதிராக தென் கொரியாவின் இராணுவ பலத்தை விருத்தி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தை அதிகம் கொண்டுள்ளவர் என்பது கவனத்திற்குரியதாகும். அதனால் தென் கொரியாவின் இராணுவபலம் அதிகரிக்கும் முயற்சியில் அவரது நடவடிக்கைகள் அனைத்தும் குவிந்துள்ளது. இது வட கொரியாவுடனான போரை தீவிரப்படுத்துவதுடன் கொரியக் குடாவில் மீளவும் ஒரு போருக்கான வாய்ப்புக்களை அதிகரிக்க கூடியதாக அமையும். ஏற்கனவே வடகொரிய ஜனாதிபதியின் அணுகுமுறைகள்  தீவிர நோக்கமுடையதாக அமைந்திருப்பது போருக்கான வாய்ப்பினை அதிகப்படுத்தும்.

இரண்டாவது, வடகொரியாவின் அணுவாயுதப் பலத்தை எதிர்கொள்ளும் விதத்தில் தென் கொரியாவும் அணுவாயுதத்தை உருவாக்க முயலுமாக அமையுமாயின் போர் என்பது ஆபத்தானதாகவே மாறுவதற்குரிய சூழலை கொண்டிருக்கும். இரண்டாம் உலக போருக்கு பின்பு அணுவாயுதத்தில் பாரிய தாக்குதல்கள் இல்லாத நிலையில் மீளவும் அதற்கான வாய்ப்பினை இப்பிராந்தியத்தில் ஏற்படுத்தக் கூடியதாக தென் கொரிய- அமெரிக்க நெருக்கமும் இராணுவ ரீதியான மூலோபாயமும் ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது.

மூன்றாவது, வடகொரியாவால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றான ஜப்பான் காணப்படுகிறது. ஆனால் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் காலத்தில் ஜப்பானிய அரசியலமைப்பில் இராணுவம் தொடர்பில் பின்பற்றிய தடைகளை நீக்கியுள்ளது. ஏறக்குறைய ஜப்பான் இராணுவ அமைப்புக்களையும் ஆயுத தளபாடங்களையும் தனது பாதுகாப்புக்கு வைத்திருக்கவும் ஆயுத தளபாடங்களை உற்பத்தி செய்யவும் கொள்வனவு செய்யவும் காணப்பட்ட தடை தகர்ந்துள்ளது. இரண்டாம் உலக போருக்குள் ஓரங்கமாக விளங்கிய ஜப்பானை கட்டுப்படுத்த அமெரிக்கா மேற்கொண்ட உத்திகளை நீக்கியிருப்பதென்பது அப்பிராந்தியத்தில் இராணுவ மயமாக்கத்திற்கான வாய்ப்பினை அதிகரிக்க வழியமைத்துள்ளது. அதாவது ஜப்பானையும் தென்கொரியாவையும் இராணுவ மயப்படுத்துவதன் மூலம் வடகொரியா மட்டுமல்ல சீனா மற்றும் இப்பிராந்தியத்தின் அமைதியை பலவீனப்படுத்தி கொதிநிலையை ஏற்படுத்த அமெரிக்க முயல்வதனையே அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

நான்காவது, கடந்த காலங்களில் மேற்காசியாவை துடைத்தழித்த அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் இந்தோ-, பசுபிக் அல்லது ஆசிய,- பசுபிக் என்ற கட்டமைப்பின் மூலம் கிழக்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளை நோக்கி அத்தகைய துடைத்தழிப்பை ஆரம்பித்துள்ளன. இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் ஒக்கினாவா மற்றும் குவாம் தீவுகளில் தரையிறக்கப்பட்டுள்ள அமெரிக்க   இராணுவத்தின் தளங்களை பாதுகாப்பதற்கும் ஏனைய பசுபிக் தீவுகளில் உள்ள அமெரிக்க நலன்களைப் பாதுகாப்பதற்குமான நகர்வாகவே அமெரிக்க நடவடிக்கைகள் காணப்படுகின்றன. வடகொரியா, சீனா, ரஷ்யாவின் எழுச்சியால் இப்பிராந்தியத்தில் அமெரிக்க  நலன்கள் பாதிப்படைவதுடன் இப்பிராந்தியம் வலுவான பொருளாதாரக் கட்டுமானத்தை உடைய பிராந்தியமாக உள்ளது. எனவே அதனை கையாளுவதும் அமெரிக்காவுக்கு ஏற்ப பயன்படுத்துவதுமே அமெரிக்க நிர்வாகத்தின் நோக்கமாகவுள்ளது.

ஐந்தாவது, தென் கொரியா-,அமெரிக்க உறவினை மையப்படுத்தி வடகொரியாவை நெருக்கடிக்கு உள்ளாக்குவது மட்டுமன்றி தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்குள் முழுமையான போர் ஒன்றினை உருவாக்குவதன் மூலம் சினா மற்றும் ரஷ்யாவின் இருப்பினை பலவீனப்படுத்தி அமெரிக்காவும் மேற்குலகமும் தமது இருப்பினை தக்கவைக்க முனைவதாகவே தெரிகிறது. தென்கொரிய வடகொரிய போர் ஒன்று சாத்தியப்படுமாயின் அமெரிக்காவின் தென் சீனக்கடல் மீதான நலன்கள் இலகுவில் பாதுகாக்கப்படும். ஏனெனில் வடகொரியப-தென் கொரியப் போர் சீனாவின் பிரசின்னத்தை மட்டுமல்ல பிராந்திய பொருளாதார வளர்ச்சியை பாதிக்கச் செய்துவிடும். இது சினாவின் பொருளாதாரத்தை பாரியளவில் பாதிக்கும். இது அமெரிக்காவுக்காக தென் கொரியா போரிடும் நிலையை உருவாக்க வழிவகுக்கும். இது இன்னோர் உக்ரைனாக தென் கொரியாவை மாற்றுவதாகவே அமையும். சீன- ரஷ்ய நட்பு நாடான வடகொரியாவை போருக்குள் இழுப்பதென்பது அந்நாடுகளது ஏனைய நகர்வுகளை தகர்ப்பதற்கு அடிப்படையாக அமைந்துவிடும் என அமெரிக்கா கருதுகிறது. எனவே ரஷ்ய- உக்ரையின் போர் அமெரிக்காவுக்கு வாய்ப்பான சூழலை ஏற்படுத்தியுள்ளது.  ரஷ்யாவை உக்ரையின் வீழ்த்திவிடும் என்ற நிலையில் அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் செயல்பட்டவருகின்றனர். அவ்வாறே சீனாவுக்கும் ஒரு நெருக்கடியான போரை உருவாக்குவது அமெரிக்காவுக்கும் மேற்குக்கும் அவசியமானதாக உள்ளது. சீனா தைவான் போரைத் தவிர்த்தாலும் வடகொரிய- – தென்கொரியப் போரை ஊக்குவிப்பதன் மூலம் சீனாவின் போருக்கான நுழைவை உறுதிப்படுத்தலாம் என்பதே தென்கொரியாவுடனான அமெரிக்க போர் ஒத்திகையும் ஏவுகணைப் பரிசோதனைகளும் உணர்த்துகிறது.  எதுவாயினும் அமெரிக்காவுக்கு இன்னோர் டீபை போர் ஆசியாவுக்குள் தேவையாக உள்ளது. தற்போது ஆசியாவின் தென் மற்றும் தென் கிழக்குப் பிராந்தியம் அமெரிக்காவின் போர்க் கொள்கை வலையமாக மாறியுள்ளது.

கலாநிதி
கே. ரீ. கணேசலிங்கம்
யாழ். பல்கலைக்கழகம்

Comments