முகக்கவசங்கள் அணிவதை கைவிட்டுவிட வேண்டாம் | தினகரன் வாரமஞ்சரி

முகக்கவசங்கள் அணிவதை கைவிட்டுவிட வேண்டாம்

சுகாதார அமைச்சு கடந்த ஒன்பதாம் திகதி மிக முக்கியமான ஒரு அறிவிப்பை விடுத்தது. முகக் கவசம் அணிவது இனி கட்டாயமில்லை. பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை நோய்த் தடுப்பு முன் முயற்சியாக மேற்கொள்ளத் தேவையில்லை என்பதுதான் அந்த அறிவிப்பு.   
2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதி கொவிட் 19 பெருந்தொற்று நாடெங்கும் பரவிவிடக்கூடாதென்பதற்காக, நாடே முழு அடைப்பு செய்யப்பட்டது. அதன் பின்னர் முகக் கவசம், அன்டிஜன், பி.சி.ஆர், சடலங்கள் எரிப்பு, கொவிட்19 மரணம் கடுமையான விதிமுறைகளின் கீழ் நடத்தப்படுவது, வீட்டிலிருந்தே வேலை செய்தல் போன்ற புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. கூடவே வேலையிழப்பு, சம்பளக் குறைப்பு, இருப்பதைக் கொண்டு வாழப் பழகுதல் போன்றவற்றையும் மக்கள் எதிர்கொண்டனர். வீடுகளில் உறவினர்கள் ஒன்றுகூடல் மற்றும், விழாக்கள், திரையரங்குகள், திருமணங்கள் என்பனவும் நிறுத்தப்பட்டன. மக்கள் முற்றிலும் ஒரு புதிய வாழ்க்கையை வாழ வேண்டியதாயிற்று. நாம் அனுபவித்த அத்தனை அனுபவங்களையும் உலக நாடுகளும் எதிர்கொள்ள வேண்டியிருந்ததென்பது உலக வரலாற்றிலேயே முதல் தடவை என்பதும் ஒரு புதிய விடயம் தான்.  உலகம் பல பேரழிவு தொற்று நோய்களை சந்தித்திருக்கிறது. பல கோடிபேர் மரணித்துள்ளனர்.
 
ஆனால் இவ்வாறு ஒரு பெருந்தொற்று உலகெங்கும் ஒரே நேரத்தில் பரவி உலக பொருளாதாரத்தை முடக்கியது இதுவே முதல் தடவை. அத்தகைய பெருந்தொற்றிலிருந்து படிப்படியாக பல நாடுகள் தம்மை விடுத்துக் கொண்டுள்ளன. இலங்கையும் தன்னை பெருந்தொற்றிலிருந்து  விடுவித்துக் கொண்டிருக்கிறதென்ற மகிழ்ச்சிகரமான செய்தியாகவே சுகாதார அமைச்சின் இந்த அறிவிப்பை நாம் புரிந்து கொள்கிறோம்.  
 
மற்றொரு மகிழ்ச்சிகரமான விடயம் என்றால், முகக் கவசம் அணிவது கட்டாயமல்ல என்ற அறிவிப்பு வெளிவந்த பின்னரும் மக்கள் இன்றைக்கும் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை தொடர்கின்றனர் என்பதுதான், முகக்கவசம் அணிவதை நாம் உடனடியாகக் கைவிட்டுவிடக்கூடாது. ஏனெனில் கொவிட்19 அச்சுறுத்தலிலிருந்து விடுபடுவது வேறு எமது தனிப்பட்ட சுகாதார நலன்களை தொடர்ந்து பேணுவது வேறு என்பதை மக்கள் புரிந்து வைத்துள்ளார்களென்பது நிறைவு தருகிறது.  
முகக்கவசம் அணிவதால் கொவிட்19 தொற்றிலிருந்து நம்மையும் பிறரையும் காப்பாற்ற முடிந்ததென்பது நிரூபணமான ஒரு உண்மை. அடிக்கடி தடிமன், சளிச்சுரம், இருமல் என்பனவற்றால் இலட்சக்கணக்கான மக்கள் பீடிக்கப்படுவதும் அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதும் வழமையான ஒன்றுதான். பெருமளவு பணத்தை அரசு இதற்காக வருடா வருடம் செலவு செய்து வந்துள்ளது. முகக்கவசம் அணியத் தொடங்கிய பின்னர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் வெளிநோயாளர் பிரிவுகளில் பெருமளவு சனக் கூட்டம் குறைந்ததை அவதானிக்க முடிந்தது. ஆஸ்பத்திரி சென்றால் கொவிட்19 என்று பெயர் சூட்டி விடுவார்களோ என்ற அச்சமும் பல நோயாளர்கள் வெளிநோயாளர் பிரிவைத் தவிர்த்தமைக்கான மற்றொரு காரணம்.  
 
முகக்கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல் என்பன அடிக்கடி எம்மைப் பீடிக்கக் கூடிய சுவாசத் தொகுதி மற்றும் வயிறு தொடர்பான நோய்களிலிருந்து எம்மைக் காக்கும் என்பது தற்போது தெளிவாகி இருக்கிறது. எனவே நாம் இப்பொது சுகாதார பழக்க வழக்கங்களை தொடர்ந்தும், எமது சுகாதாரமான வாழ்க்கைக்காக கைகொள்ள வேண்டும். கொவிட்19 பெருந்தொற்று அபாயம் நீங்கி விட்டதென்பதால் இந்த எளிமையான சுகாதார வழிமுறைகளை கைவிட்டுவிடக் கூடாது.  
நோயை நீக்குவதென்பது நோய்க்கான காரணத்தை நீக்குவதன் மூலமே சாத்தியமென்பது பழந்தமிழர் வாக்கு, அதைச் செய்ததாலும், தடுப்பூசிகளைத் தவறாமல் ஏற்றிக் கொண்டதாலும் தான் எம்மால் பெருந்தொற்றிலிருந்து மட்டுமல்ல, பல நோய்களையும் தவிர்த்துக் கொள்ள முடிந்தது. பெருந்தொற்றின் போதும் தமிழ்ப் பேசும் சமூகம் முகக்கவசம் அணிதல், கைகளை கழுதவுதல் என்பனவற்றில் சிங்கள சமூகத்தின் அளவுக்கு அக்கறை கொண்டிருக்கவில்லையென்பதையும் இங்கே சொல்லி வைக்க விரும்புகிறோம். எனவே தமது சொந்த ஆரோக்கியத்தின் பேரில் இந்த எளிமையான சுகாதார நடைமுறைகளை தமிழ்பேசும் சமூகம் கைவிட்டுவிடக்கூடாது. 

Comments