சேர் பொன் அருணாசலம் | தினகரன் வாரமஞ்சரி

சேர் பொன் அருணாசலம்

இலங்கையின் தேசிய வீரர்களில் முக்கியமானவர் சேர் பொன்னம்பலம் அருணாசலம். இவர் 1853ஆம் ஆண்டு செப்டெம்பர் 14ஆம் திகதி பிறந்தார். இவர் கொழும்பு றோயல் அக்கடமி (தற்போதைய றோயல் கல்லூரி) யில் தனது கல்வியைத் தொடர்ந்தார். இங்கு கல்வி கற்றபோது 1870இல் இராணி புலமைப்பரிசிலைப் பெற்று, லண்டன் கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் கிறைஸ்ட் கல்லூரியில் கலைமாணிப் பட்டம் பெற்றார்.

பொன்னம்பலம் அருணாசலம் இங்கிலாந்தில் பரிஸ்டர் ஆகவும் 1875ஏப்ரலில் சிவில் சேவை உத்தியோகத்தேர்வில் சித்தி பெற்ற முதல் இலங்கையராகவும் இலங்கை திரும்பினார். 1913ஆம் ஆண்டு வரை அரசாங்க சேவையில் பல்வேறு உயர் பதவிகளை வகித்தார். முதலில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் பணியாற்றிய இவர் கண்டி காவல்துறை நீதிமன்றத்திலும் தொடர்ந்து இலங்கையின் பல பகுதிகளிலுமுள்ள நீதிமன்றங்களிலும் அலுவலராகப் பணிபுரிந்தார். இவ்வனுபவம் காரணமாக மட்டக்களப்பில் மாவட்ட நீதிபதியாகக் கடமையாற்றும் சந்தர்ப்பமும் இவருக்குக் கிடைத்தது. இவ் அனுபவத்தைப் பயன்படுத்தி ‘சிவில் சட்டச் சுருக்கம்’ என்ற நூலை எழுதினார். 

மாவட்ட நீதிபதி பதவி வகித்த காலத்தில்தான் அப்போது தேசாதிபதியாக இருந்த சேர் ஆர்தர் கோர்டன் இவரைப் பதிவாளர் நாயகமாக (1888-1902) நியமித்தார்.

பல்வேறு நுணுக்கங்களுடனான குடிசன மதிப்பீட்டு முறையினை அறிமுகப்படுத்தினார். இப்பதவியை வகித்த காலத்திலேயே சட்ட சபையில் உத்தியோகப்பற்றற்ற உறுப்பினராகவும் விளங்கினார். 

1913ஆம் ஆண்டு தனது 60ஆவது வயதில் அருணாசலம் அரசாங்க சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். இவரது அரச சேவையைப் பாராட்டி ஐந்தாம் ஜோர்ஜ் மன்னர் பங்கிங்ஹாம் அரண்மனையில் வைத்து இவருக்கு சேர் பட்டம் வழங்கினர். இவர் 1924ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி தனது 71ஆவது வயதில் காலமானார்.

ஜே.பிரணவிந்த்
கொட்டகல

Comments