தெரு | தினகரன் வாரமஞ்சரி

தெரு

பனிப்புகார்க் காலை  

தவளைகள் கத்தும்

மலர்களைக் கொய்து

முகர்ந்து மூச்சிழுத்த

புழுதிமண் தினங்கள்

மீளவும் ஜனிக்குமா?

“அம்மா! இவர்கள் ஏன் வண்டிகளில் வந்து நாய்களைப் பிடிக்கின்றனர்?”.

“நாய்களை வீடுகளுக்குள் வைத்திருக்க வேண்டுமாம். இதனால்தான் வீதிகளில் திரியும் நாய்களைப் பிடிக்கின்றனர். இவர்கள் நாய்பிடிகாரர்கள்”

“இந்த நாய்களைக் கொண்டுபோய் இவர்கள் வளர்ப்பார்களா?”

“இல்லை. கொல்வார்கள்!”

வீதிகளில் பிடிபட்ட நாய்கள் பலவற்றினது ஈனக்குரல்கள் என் காதுகளை அதிர வைக்கின்றன.

 எனது பள்ளிக் காலங்களிலே கடல் பெருக்கெடுத்த காலங்களிலே நாம் கவலை கொண்டதில்லை. வாத்துகள்போலத் தண்ணீரில் நீந்துவதும், காகிதப் படகுகள் செய்து விடுவதும், கடல் எக்கரையிலிருந்தோ அள்ளிவந்த குப்பைகளுக்குள் பொக்கிஷங்களைத் தேடுவதும், மீன்களைப் பிடித்துத் தகர டப்பாக்களுக்குள் இருக்கச் செய்து அவற்றினது   அசைவுகளைப் பார்த்து மகிழ்வதும் சுவையானவை... தெருவை நினைக்கும் போது, அதற்கு அருகேயுள்ள கடல் நினைவுகள் என்னைக் கிள்ளுகின்றன...

தெருவும் தெருக்களும்.

“நீங்கள் ஏன் என்னிடம் ஒருபோதுமே உங்கள் தேசம் பற்றியும் உங்களது இளமை வாழ்வு பற்றியும் பேசுவதில்லை?”

குளிர் நிலத்தில் எனக்கு அறிமுகமான சிவப்புக் குமரி ஒருத்தி கேட்கின்றாள்.

“இழந்து போன தேசம் பற்றி நினைக்கும் போதும், இந்தத் தேசத்தில் நான் கழித்த இளமை வாழ்வை அசைபோடும் போதும் என்னை இனம்புரியாத கவலை கவ்வுகின்றது - என்னிடம் எனது தேசம் பற்றியும், என்னைப் பற்றியும் கேட்காதே!”

“இன்று எனது வீட்டுக்கு வரலாமே!”

“எனது மனது சற்றே குழம்பிப் போயுள்ளது. தனிமையில் இருக்க விரும்புகின்றேன்.”

பாரிஸ் நெடுஞ்சாலையொன்றில் நானும் அவளும் பிரிந்து கொள்கின்றோம்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் வியட்நாமிய உணவகம் ஒன்றிலே களவாக நான் வேலை செய்தேன். அங்கே நான்தான் கோப்பை கழுவும் மெஷின். கழுவுதல், வடியவிடல், துடைத்தல், அடுக்குதல் யாவும் நானாகிய மெஷினுக்கு இடப்பட்ட கருமங்கள். இரவு இரண்டு மணிக்குத்தான் எனது கருமங்கள் முடியும். முடிந்தபின் வெளியே வந்தால்...

சுரங்க ரயில் இருக்காது. இரவு பஸ்கள் சில இருந்தாலும் நான் வாழும் இடம்வரை செல்லாது. ரக்ஸி செல்லவும் வசதியில்லை. எனவே தெருக்களில் அலைந்தேன்...

 தெருக்களுக்குப் பல அர்த்தங்கள் உள்ளன. பகலிலே எமக்குப் பயத்தையூட்டாத தெருக்கள் இரவிலே எமக்குப் பயத்தையூட்டலாம்.

இரவு எனக்கு உவப்பான போதும் நிர்ப்பந்திக்கப்பட்ட இரவுகளில் நான் பயந்து நடுங்கியதுண்டு. எது எப்படியோ பாரிஸ் போன்ற பெரிய தலைநகர்களில் இரவுகளிலே விழிப்பாகத்தான் இருக்க வேண்டும்.

 வியட்நாமிய உணவகத்தை விட்டு வெளியே வந்தவுடன்... இவ்வீதியில் உள்ள பஸ்ராண்டில் போய் நான் வாழ்வதற்கும் வாழ்வு என்று பெயர் கொடுக்கலாமா? என்றபடி யோசித்துக் கொண்டிருப்பேன்.

எனது உழைப்பைச் சுரண்டுபவன்... எனது முதலாளி பற்றியே குறிப்பிடுகின்றேன். நான் உணவகத்தை விட்டுப் போனதும் அன்றைய தினத்தில் தனக்குக் கிடைத்த இலாபம் எதுவெனப் பார்த்து விட்டு வாகனத்தில் போய் விடுவான். அவனதும், அவனது பிள்ளைகளதும், பிள்ளைகளின் பிள்ளைகளதும் எதிர்கால இருப்பிற்காகப் பிழியப்படும் நான் மட்டும் தெருவில், எந்தப் பாதுகாப்பும் இல்லாமல்... இதுவும் ஒரு வாழ்க்கையா?

 காலை எப்போது வரும் எனப் பஸ்ராண்டில் காத்திருக்கும் என் முன் பஸ்களைக் காட்டிலும் பொலிஸ் வாகனங்களே தம்மை நிறுத்திக் கொள்ளும். என்னை எனது இருப்பிடம்வரை கொண்டு செல்வதற்காக அல்ல. உத்தியோகபூர்வமாக நான் பிரான்ஸில் வாழ்வதற்கான பத்திரங்கள் அனைத்தும் உள்ளனவா என்பதைப் பரிசோதிப்பதற்காகவே,

 இந்த விசாரிப்புகள், பரிசோதிப்புகள் யாவும் எனக்குத் தொல்லையாகவே பட்டதால் நடந்து நடந்து இரவினைக் கழிப்பெதன முடிவெடுத்தேன்.

நான் நடந்து சென்ற வழிகளில் வீடற்றோர்,  மாடிக்கட்டடங்களின் முகப்புகளிலே கம்பளிப் போர்வைகளால் உடலை மூடியபடி குறட்டை விட்டனர். ‘வைன் கேஸ்கள்’ என ஒதுக்கிவிடப்பட்ட குடிகாரர்கள் குடித்துக் கொண்டும் புலம்பியபடியும் இருந்தனர். ஸ்பிறே பெயின்றினால் வெள்ளைச் சுவர்களில் எவருக்குமே விளங்கமுடியாத ஓர் வரிவடிவத்தில் எதனையோ எழுதிக் கொண்டிருந்த ‘ஸ்கின்ஹெட்கள்’ எனப்படும் மொட்டம் தலையர்களைக் கண்டேன். நான் விபசாரிகளையும் கண்டேன்.

 இரவிலும் விழித்திருக்கும் புனித டேனிஸ் வீதி. தூங்காமல் உடலை விற்கக் காத்திருக்கும் விபசாரிகள், மைபூசிய விழிகளில் களைப்பு, குடிபோதையின் மிகவும் நாகரிகமான மினுக்கம், உதடுகளில் சிகெரட்…

  வா! வா!! எனக் கொஞ்சும் பரிதாபக் கோலம். வாடிக்கையாளர்களோடு பேரம் பேசுகையில் ஏற்படும் சண்டைகள்... இந்தப் புத்திரிகள் என்ன பாவம் செய்தனரோ தமது ஆன்மாவை இறுக மூடி உடலை வருவோர் போவோரிடம் எல்லாம் விற்பதற்கு? ஓர் ஆவேச உணர்வுடன்தான் நான் இந்த வீதிக்குள் நடந்ததுண்டு.

 இப்பொழுது நான் இரவுகளை வீதிகளில் நிர்ப்பந்த காரணமாகச் செலவழிப்பதில்லை. ஆனாலும் புனித டேனிஸ் வீதிக்கு அவ்வப்போது செல்வதுண்டு.

நிச்சயமாகப் பேரம் செய்வதற்கு அல்ல. மனித உடல்கள் சிதையும் கொடூரம் முடிவிற்கு வந்துவிட்டதா என்பதைப் பார்ப்பதற்காகவே.

 பல ஆண்டுகளின் பின்னர் நான் புனித டேனிஸ் வீதிக்குச் சென்றேன். நான் அப்போது கண்ட பெண்களில் சிலர் இப்போதும் நின்றார்கள். இவர்களிடம் முதுமை தெரிகின்றது. சிலர் கொழுத்துள்ளனர்.

பேரம் பேசிவிட்டு ஓரம் கட்டுபவர்களைப் படுதூஷணத்தால் துவம்சம் செய்து அனுப்பும் மதாளித்த முலைகளைக் கொண்ட அந்த லத்தீன் அமெரிக்க செம்புத்திரியைக் காணவில்லை.

 இத்தாலிய மெல்லியடையாள். இன்றும் தனது இடையை பெல்ட்டில் இறுக்கக்கட்டி, வழமையைக் காட்டிலும் மெல்லியதாக்கியபடி... அகோர முகம் கொண்ட அந்தக் கிழவி இன்னமும் தனது அகோர முகத்துடன்.

ஹோலண்டில் நண்பர் ஒருவரைச் சந்தித்தேன்.

 “நீங்கள் நிறைய விஷயங்களை வாசிப்பவர். எழுதுவதற்கான அனுபவங்களும். விஷயங்களும் உங்களிடம் உள்ளன. ஏதாவது ஒரு வெளியீட்டுக்குத் தொடர்ச்சியாக எழுதலாமே?”

“நீங்கள் சொல்வது உண்மைதான்”என்றார்.

இருவரும் இலக்கியம்,  மனித இருத்தல் பற்றி மிகவும் பண்பாகவே பிரஸ்தாபிக்கின்றோம்.

 நான் மீண்டும் பாரிஸுக்கு வருகின்றேன்.

 வீதிகளில் கழிக்க வேண்டிய இரவுகளைத் தனது வீட்டில் கழிக்கலாமெனச் சொன்ன ஓர் இனியவளின் வீட்டில்.

 ஆழ்ந்த நினைவுகளில் நான் யாழ்ப்பாணம் போகின்றேன்....

தெரு...

  யாழ்ப்பாணத்தில் நான் கண்ட தெருக்கள் பல என் முன்னால் படமாகும் போது, படம் காட்டிய ராணி தியேட்டரும் படமாக வருகின்றது. வீதியில் ஓடிய அந்தப் படம்.

  அவள் ஓர் விபசாரியாகப் பிறக்கவில்லை. ஆனால் ஓர் விபசாரியாகவே எனக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டவள். அவள் ஓர் அழகிய பெண். நான் காற்சட்டை போட்டுத் திரிந்த காலத்திலே அவள் தனது சட்டையைக் கிழித்து வீதியில் நின்றவள். அவள் விசரியா? இல்லை.

 கைகொடுக்க யாருமே இல்லாது போனதால் வீதிக்கு வந்தவள்.

“நீங்கள் சொல்வது உண்மையா?”

 டென்ஹாக் சிவப்பு விளக்கு வீதிகளின் கண்ணாடிப் பெட்டிகளைப் பார்த்து முடித்து வெளியே வந்து தண்டவாளக் கரையால் நடந்து கொண்டிருந்த போது நண்பர் கேட்கின்றார்.

“இது உண்மைதான். அவளை நான் பல தடவைகள் கண்டதுண்டு. அவள் மீது எனக்கு இரக்கம்.

பரிவு, அன்பு யாவுமே இருந்தன. ராணி தியேட்டர் மூலையில் உடலைச் சுருட்டிக் கொண்டு  கிடந்த அவள் என்னைக் கண்டு ‘தம்பி!’  என இதமாக அழைத்தவள்.

அவளது முகம் எனக்குத் தெரியாது. அவள் இப்பொழுது உயிருடன் உள்ளாளா என்பதும் எனக்குத் தெரியாது. அவளது பெயரும் தெரியாது. ஆனால் நான் தற்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் ‘நிலாவின் கதை’ குறுநாவலை அவளுக்குத்தான் சமர்ப்பணம் செய்யப்  போகின்றேன்.”

“உங்களை அவள் நன்கு பாதித்து விட்டாள் போலும்”

“ஆம்”

டென்ஹாக் மறைகின்றது. பாரிஸ் வருகின்றது.

“நாங்கள் வீடற்றவர்கள். வீதிகளில்தான் வாழ்கின்றோம். எங்களது வாழ்விற்காக La rue  (வீதி) என்ற இந்தச் சஞ்சிகையை விற்கின்றோம். 10பிராங் மட்டுமே. வாங்குகின்றீர்களா?” என இரண்டு பிரஞ்சுப் பெண்கள் கேட்கின்றனர்.

அவர்களிடம் ஒரு வீதியை வாங்கிக் கொண்டு நான் நடக்கின்றேன்.

க.கலாமோகன்

Comments