நெருக்கடி தீர்ப்பதற்கு தேசிய சபை அமைக்கும் யோசனையே சிறந்தது | தினகரன் வாரமஞ்சரி

நெருக்கடி தீர்ப்பதற்கு தேசிய சபை அமைக்கும் யோசனையே சிறந்தது

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடியைத் தீர்ப்பதற்கு தேசிய சபையை அமைப்பது என்ற யோசனையே சிறந்ததொன்றாகும் என முன்னாள் அமைச்சரும், ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார். எமக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கே: காலிமுகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது மே 09ஆம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவைத்தல் சம்பவங்கள் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் இடம்பெற்றுள்ளன. இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் முன்னிலை சோசலிசக் கட்சியின் மாணவர்கள், அநுராதபுரம் விவசாய பீடத்தின் ஜே.வி.பி உள்ளிட்ட கட்சியின் மாணவர்கள் குழுவினராலேயே எனது வீடு அலுவலகம் உள்ளிட்ட சொத்துகள் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. அனுராதபுரம் நகரின் வர்த்தக அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சங்தியின் உறுப்பினர்கள் மற்றும் சில வர்த்தகக் குழுவினரும் இதில் அடங்கியுள்ளனர். இதற்கு மேலதிகமாக அனுராதபுரம் மற்றும் புறநகர் பகுதிகளில் அரசியல் சார்பற்ற இளைஞர்கள் மற்றும் சில போதைக்கு அடிமையானவர்களும் இந்தக் கும்பல் தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

சில அரசியல் கட்சித் தலைவர்கள் இளைஞர்களைத் தவறாக வழிநடத்தி, தூண்டிவிட்டு, அனுராதபுரத்தில் உள்ள அரசாங்க அரசியல்வாதிகளின் வீடுகளை மே 5ஆம் திகதி முதலில் தாக்கி, பின்னர் மே 9ஆம் திகதி அவர்களது வீடுகளுக்கும் சொத்துக்களுக்கும் தீவைத்தனர். இது சில அரசியல் கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட திட்டமிட்ட கும்பல் தாக்குதலாகவே நான் பார்க்கிறேன்.

கே: பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்திய தாக்குதலின் விளைவே இவ்வாறான சம்பவங்கள் என சிலர் கூறுவதுடன், இதற்கு அரசாங்கம் முழுப்பொறுப்பேற்க வேண்டும் என சிலர் கருதுகின்றனர். இது பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்: அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக தீர்மானித்திருந்த நிலையில், அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்க மக்கள் அலரிமாளிகைக்கு வந்திருந்தனர். அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களை தூண்டிவிட சில அரசியல் தலைவர்கள் தலையிட்டமை வெளிப்படையாகும். அலரிமாளிகை மற்றும் காலிமுகத்திடலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நாங்கள் செய்த தவறாகவே நான் பார்க்கிறேன்.

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் குழுவொன்று தாக்குதல் நடத்த முயற்சித்ததால் இரு குழுக்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டது. அலரிமாளிகை கூட்டத்திற்கு மக்களை அழைத்து வந்த பேருந்துகள் மற்றும் வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டதுடன், அதில் கலந்து கொண்டவர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட சிலரால் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களுக்கு மனிதாபிமானமற்ற தண்டனை வழங்கப்பட்டது. முதலில் எங்கள் தரப்பில் தவறு நடந்திருந்தால், எங்கள் கட்சி ஆதரவாளர்கள் மீதான எதிர்த்தாக்குதல் அதை விட நூறு மடங்கு மோசமானது. உண்மையில், அலரிமாளிகை மற்றும் காலிமுகத்திடலுக்கு முன்னால் நடந்த சம்பவங்கள் அந்த இடங்களிலேயே முடிந்திருக்க வேண்டும். அந்தச் சம்பவங்களை சாக்காக வைத்து வன்முறைக் கும்பல் 70க்கும் மேற்பட்ட ஆளும் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் சொத்துக்களுக்கு தீவைத்துள்ளது.

மேலும், மாகாண அரசியல்வாதிகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் 600முதல் 700வீடுகளும் அழிக்கப்பட்டுள்ளன. அந்தக் கும்பல்களால் தாக்குதல்கள் நன்கு திட்டமிடப்பட்டுள்ளது என்பது மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது. ஜே.வி.பியின் சில தலைவர்கள், எல்லா இடங்களிலும் தாக்குதல்களை நடத்துவதற்கு விரைவாக செய்திகளை வழங்கியதாக சமூக ஊடகங்களில் கூறுவதை நாம் காண முடிந்தது.

அதேபோன்று பிரபல நடிகை ஒருவர் பொதுஜன பெரமுன அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீவைக்குமாறு பேஸ்புக்கில் கருத்துத் தெரிவித்திருந்தார். அரசியல்வாதிகளின் வீடுகளை அழித்தவர்கள் மற்றும் ஆதரவாளர்களைத் தாக்கியவர்கள் இப்போதும் அவர்கள் செய்ததை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர்.

தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் பற்றி அவர்கள் பேசுவதில்லை. ஊடகங்களும் அரசியல்வாதிகளும் கூட அந்தப் கும்பல்களின் தாக்குதல்கள் பற்றி பேசுவதில்லை அது மிகவும் தவறானது. நாங்கள் செய்த தவறை நாங்களும் ஒப்புக் கொள்கிறோம். ஆனால், எமது ஆதரவாளர்களைத் தாக்கி எமது அரசியல்வாதிகளின் சொத்துகளை அழித்தவர்கள் செய்த தவறு அதை விடப் பாரதூரமானது.

கே: காலிமுகத்திடலில் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் வீடுகள் மற்றும் சொத்துகளை அழித்த ஏனைய கும்பல்களின் தாக்குதல்களை தடுக்க பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என பாராளுமன்றத்தில் கூட கவலை தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி என்ன கூறுகின்றீர்கள்?

பதில்: நமது நாட்டில் ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினரும், பொலிஸ்துறையினரும் உள்ளனர். நாட்டின் மற்றும் அதன் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அவர்கள் உள்ளனர். காலிமுகத்திடலில் தாக்குதலைத் தடுத்திருந்தால் அந்த அழிவு தடுக்கப்பட்டிருக்கும். போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட அழிவுகளைப் பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் தடுத்திருக்க வேண்டும்.

முப்படை மற்றும் பொலிஸ்துறையினரின் சம்பளம் வரி செலுத்துவோரின் பணத்தில் இருந்து வழங்கப்படுகிறது. எனவே, அரசியல்வாதிகளின் வீடுகள் மற்றும் சொத்துகளுக்கு ஏற்படும் அழிவைத் தடுக்கும் பிரதான பொறுப்பு அவர்களுக்கு இருந்தது. பில்லியன்கணக்கான சேதங்கள் ஏற்பட்டுள்ளன, மேலும் அந்தப் பேரழிவைத் தடுக்கும் திறன் பாதுகாப்புப் படையினருக்கு இருந்தது. இருப்பினும், பல்வேறு காரணங்களால் அது நடக்கவில்லை. அந்தத் தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததற்கு பாதுகாப்புத் தரப்பினர் பொறுப்பேற்க வேண்டும் என்றும் நான் பாராளுமன்றத்தில் கூறினேன். இதே நிலை நீடித்தால், நாடு கடும் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்படும்.

இறுதியாக கம்போடியா, லெபனான், ஈராக் மற்றும் லிபியா போன்ற நாடுகளில் ஏற்பட்ட இதே போன்ற சூழ்நிலைகளுக்கு இது வழிவகுக்கும். எனவே, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்புப் படையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதுகாப்புப் படையினர் எப்போதும் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும். நீதித்துறையும் சுதந்திரமாக இருக்க வேண்டும். உண்மையில் உலகில் சர்வாதிகார ஆட்சியாளர்கள்தான் போராட்டங்கள் மூலம் மக்களால் விரட்டியடிக்கப்பட்டனர். பெரும்பாலான ஜனநாயக நாடுகளில் இது நடக்கவில்லை. எனவே, 6.9மில்லியன் மக்கள் ஆணையினால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை 24மணி நேரத்திற்குள் நீக்க முடியாது. ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டு வரப்பட்டால், அது பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும்.

தற்போதைய ஜனாதிபதி இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவியில் இருக்க வேண்டும். எனவே, இந்த நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்றால், குறைந்தது இரண்டு ஆண்டுகள் ஆகும். அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஜனாதிபதி பதவி விலகவில்லை என்றால் அவரை பலவந்தமாக பதவி நீக்கம் செய்ய முடியாது.

எனினும், பிரதமரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரலாம். இல்லையெனில், நம்பிக்கையில்லாப் பிரேரணையைப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றலாம். அதனால்தான் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தாமாக முன்வந்து பதவி விலகினார். தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க பெரும்பான்மையான பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வேறு சில அரசியல் கட்சிகளின் சம்மதத்துடன் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நாம் அனைவரும் அறிந்தவரையில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல சர்வதேச உறவுகளைக் கொண்டுள்ளார் மற்றும் சர்வதேச சமூகத்துடன் நெருக்கமாகப் பணியாற்றுகிறார். பிரதமர் தனது கடந்த கால தவறுகளைத் திருத்திக் கொண்டு முன்னோக்கி நகர்கிறார் என்பது வெளிப்படை. அது அவருடைய நடத்தை மற்றும் வேலைத்திட்டத்தின் மூலம் தெளிவாகத் தெரிகிறது. பிரதமர் தனது பணியை சரியாக நிறைவேற்றுவார் என அனைவரும் நம்புகிறோம். நாம் கவனமாக முன்னோக்கிச் சென்றால், பொருளாதாரத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தவும், தற்போதைய சிக்கலான சூழ்நிலையில் இருந்து நாட்டை மீட்டெடுக்கவும் முடியும்.

கே: பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது குறித்து கவலைகள் எழுந்தபோது, பாராளுமன்றத்தின்  பிரதிசபாநாயகராக எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் ரோகினி குமாரி விஜேரத்னவை தெரிவு செய்யாததற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்தனர். இந்த விஷயத்தில் கட்சித் தலைவர்களால் ஏன் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை?

பதில்: ஆளும் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். பின்னர் பிரதிசபாநாயகராகப் பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த அஜித் ராஜபக்ஷவை நிறுத்த இணக்கம் காணப்பட்டது. கட்சித் தலைவர்கள் கூட்டங்களில் நான் கலந்து கொள்வதில்லை. பிரதி சபாநாயகர் பதவிக்கு பெண் வேட்பாளரை நியமிக்க கட்சித் தலைவர்கள் ஏகமனதாக முடிவெடுத்திருந்தால், நாட்டிற்கு நல்ல முன்மாதிரியை வழங்கியிருப்போம். இருப்பினும், அந்த வாய்ப்பை இழந்தோம், அதற்காக நான் வருந்துகிறேன்.

கே: அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தற்போது 109பாராளுமன்ற உறுப்பினர்களாக குறைந்துள்ளதாகவும் பாராளுமன்ற பிரதிசபாநாயகரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பின் போது அது தெளிவாகக் காணப்பட்டதாகவும் பிரதான எதிர்க்கட்சி விமர்சிக்கி றது. இது பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்: ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க விமான நிலையத்திலிருந்து நாடு திரும்பியதைத் தொடர்ந்து பாராளுமன்றத்திற்கு வரத் தாமதமானதால் அவரால் வாக்களிக்க முடியவில்லை. மேலும், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஆகியோரும் கலந்து கொள்ளவில்லை. மேலும் ஆறு ஆளும் கட்சி உறுப்பினர்களில் சிலர் உடல்நிலை சரியில்லாததாலும், சிலர் வெளிநாடு சென்றிருப்பதாலும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. அனைவரும் வந்திருந்தால் 117வாக்குகளை எளிதாகப் பெற்றிருக்க முடியும். எவ்வாறாயினும், புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமருக்குத் தேவையான 113வாக்குகளை நாம் காட்ட முடியும். அதேபோன்று, ஜனாதிபதிக்கு எதிரான அதிருப்திப் பிரேரணை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட போது, பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆதரவை வழங்கியிருப்பார்கள். எவ்வாறாயினும், அது நடக்கவில்லை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு எதிராக 119வாக்குகள் கிடைக்கப் பெற்றதுடன், ஆதரவாக 68வாக்குகளே கிடைத்தன. அந்தப் பிரேரணையை தோற்கடிப்பதன் மூலம் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை மேலும் பலப்படுத்த முடிந்தது.

கே: நாடு எதிர்நோக்கும்                                                           தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேசிய சபையொன்றை அமைக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது விசேட அறிக்கையில் கோரிக்கை விடுத்திருந்தார். இது பற்றி என்ன கூறுகின்றீர்கள்?

பதில்: தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண தேசிய சபை அல்லது நஷனல் கவுன்சில் அமைப்பது நல்லதொரு நடவடிக்கையாக அமையும்.

அனைத்துக் கட்சித் தலைவர்களும் கைகோர்த்து அத்தகைய சபையை உருவாக்கினால், யாராலும் மற்றவர்களை நோக்கி விரல் நீட்டி விமர்சிக்க முடியாது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இங்கு அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி உள்ளது. எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்ற முயற்சி செய்கிறார்கள். நாங்களும் எதிர்க்கட்சியில் இருந்த போது அதைத்தான் செய்தோம். தேசிய கவுன்சில் அமைக்கப்பட்டால், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அதில் பங்குதாரர்களாக மாறலாம். அப்போது அவர்கள் நாட்டுக்குத் தேவையான தேசியக் கொள்கையை வகுக்க முடியும்.

அர்ஜூன்

Comments