சி.வி: அரசியல் எழுத்திற்கு கிடைத்த பொக்கிஷம் | தினகரன் வாரமஞ்சரி

சி.வி: அரசியல் எழுத்திற்கு கிடைத்த பொக்கிஷம்

க.கைலாசபதி  தினகரனில் பிரதம ஆசிரியராக இருந்தபோதுதான்    சி.வி.வேலுப்பிள்ளையின் மலையக அரசியல் தலைவர்கள், தளபதிகள் பற்றிய  கட்டுரைத் தொடர் வெளியானது.  1958செப்டம்பர் மாதத்திலிருந்து   சி.வி.யின்  மலையக அரசியல் கட்டுரைகள் 1959ஏப்ரல் மாதம் வரை தினகரனில் தொடர்ந்து  வெளியாகின. முதலில் இக்கட்டுரைத் தொடர் கேலிச்சித்திரம் என்று  அறிமுகப்படுத்தப்பட்டு அப்துல் அசீஸ், எஸ்.தொண்டமான் ஆகியோர் பற்றிய  கட்டுரைகள் கேலிச்சித்திரமாகவே ஓவியர் யூனுஸின்  கேலிச்சித்திரத்துடன் வெளியாகின. அச்சித்திரங்கள் கேலிச்சித்திரங்களாக,  political  caricature/ cartoon என்ற பாணியில் அமைந்திருந்தன.   பின்னர் வெளியான  அரசியல் தலைவர்கள், தளபதிகளின் கட்டுரைகள் அவர்களின் புகைப்படங்களுடன்  வெளியாகின. கேலிச்சித்திரம் என்று அவை குறிக்கப்படாமல்  வாழ்க்கைச்சித்திரம், பேனாச்சித்திரம் என்றே குறிக்கப்பட்டன.   'மலைநாட்டுத் தமிழ்மக்கள் தலைவர்கள்' என்ற தலைப்பில் முக்கிய பெரும் மலையக  அரசியல் ஆளுமைகள் 13பேரினதும், 'மலைநாட்டுத் தமிழ் மக்களின் உரிமைப்போர்த்  தளபதிகள்' என்ற தலைப்பில் இரண்டாம் நிலைப்பட்ட- வளர்ந்துவரும் மலையக  அரசியல் ஆளுமைகள் 13பேரினதும் வாழ்க்கைச் சித்திரங்களை  சி.வி. சிறப்பாக எழுதியிருந்தார்.    மலையகத்தின் அரசியல் தளத்தில் இயங்கிய 26ஆளுமைகள் பற்றிய  சி.வி.வேலுப்பிள்ளையின் பதிவு ஆறு தசாப்தங்கள் கழித்து இன்று நூல்  வடிவம் பெறுவது ஈழத்து அரசியல் எழுத்திற்குக் கிடைத்திருக்கும் பெரும்  பொக்கிஷமாகும். மலையகத்தின் அரும்பெரும் ஆவணப்பதிவாளராக (chronicler)  சி.வி. ஈழத்து அரசியல் வரலாற்றில் நிலைபெறுகிறார். ஒவ்வொரு அரசியல்  தலைவரையும்  மிக நுட்பமாக அவதானித்து, அரிய தகவல்களுடன் அந்த அரசியல்  ஆளுமைகளின் உள்ளார்ந்த சாரத்தை, அங்கதச்சுவையுடன் அபூர்வமான எழுத்தில்  வடித்திருக்கிறார் சி.வி.  ஈழத்தில் நாம் காணும் அரசியல் தலைவர்கள் பற்றிய  வரலாறு என்பது  அத்தலைவர்களின் புகழ்ப்பரணி பாடுபவையாகவே அமைந்துள்ளன. ஒவ்வொரு அரசியல்  தலைவரையும் பற்றி சி.வி. எழுதும்போது, அவரின் நினைவுக்கிடங்கில்  குவிந்திருக்கும் கொள்ளைத் தகவல்கள் அவரது நியாயமான பரிசீலனைக்குத் துணை  நிற்கின்றன.

கட்டுரையின் ஒவ்வொரு வசனத்திலும் புதிய- அரிய- வேறெங்கும்  நாம் கேட்டிராத தகவல்கள் கட்டுரையின் செழுமைக்கு துணை சேர்க்கின்றன. ஒரு  கவிஞனின் சாணைக்கல்லில் வார்க்கப்பட்ட அரசியல் சொல்லோவியங்களாக அவை  மிளிர்கின்றன. ஓர் அரசியல் கட்டுரையை இத்துணை ரசனையோடு,  அங்கதம் பளிச்சிட, ஆழ்ந்த பகுப்பாய்வுடன் எழுதவல்ல பிறிதொரு எழுத்தாளனை  நாம் இங்கு கண்டதில்லை. இந்த அரசியல் கட்டுரைகள் மூலம் சி.வி. அரசியல்  எழுத்தின் உன்னதத்தைத் தொட்டிருக்கிறார்.  

  மலைநாட்டுத் தொழிற்சங்க வரலாற்றின் முன்னோடி கே.நடேசய்யரைப்பற்றி சி.வி.  எழுதும்போது, 'தொழிலாளர் எழுச்சியுற்று , உரிமையுடைய மக்களைப்போல்  தன்மானத்தோடு நடக்க, ஐயரவர்கள் கற்பித்தார் என்பதனை ஒருபொழுதும் அலட்சியம்  செய்யமுடியாது' என்று குறிப்பிடும் அதேவேளை, 'அவருக்கு  நல்ல ஆலோசனை கூறுவோர் இருக்கவில்லை. ஆமாம் போடுபவர்கள் மட்டுமே  இருந்தார்கள். அவருடைய ஸ்தாபனம் ஒரு திட்டவட்டமான கொள்கையுடையதல்ல. ஆனால்,  தான் மட்டும் தனியாய் நின்று நாடகத்தை நடத்தினார். அவருடைய சம்மேளனம், அவர்  ஏறிச் சென்ற அந்த ரதம் 1947ஆம் ஆண்டில் நொறுங்கிச் சிதைந்தது'  என்று துல்லியமான மதிப்பீட்டினை முன்வைக்கிறார். 

   ஜனாப்.அப்துல் அசீஸ் பற்றி சி.வி.எழுதுகையில்,  'அவர் இரண்டு  லட்சம் மக்களின் தலைவர்; ஆயினும் அவர் நெருக்கடியான தருணங்களில் இனித்தான்  முக்கிய முடிவுகள் செய்யவேண்டியவரா யிருக்கிறார். புதியவர்களைச் சுலபமாக  வசீகரிப்பவர்; ஆனால், அவர்களைத் தம்வசம் வைத்திருப்பதற்கு  கஷ்டப்படுவார்' என்று எழுதுகிறார். 

   எஸ்.தொண்டமான் பற்றி எழுதுகையில், 'தொண்டமான் அரிசிச் சோறு  அரைப்பங்குக்கும், தாழ்மையான தம்மைப்பற்றிய பத்திரிகைச் செய்திகள் என்னும்  உணவை மூன்றரைப்பங்கும் உண்டு வாழ்கிறாரென்பது  பொதுவான பேச்சாகும்' என்று  சி.வி.எழுதுவதை வேறு யார் எழுத முடியும்? 

   'தெளிந்த சிந்தையும் அன்பு உள்ளமும் வாழ்க்கையிலுள்ள சகல நல்லவற்றையும்  மேன்மையானவற்றையும் பயபக்தியுடன் போற்றும் மரியாதை உணர்ச்சியும் படைத்த  பண்பாட்டின் சிறந்த வாலிபத் தலைவரான  தேவராஜ் சமுதாயத்துக்கு ஒரு  பொக்கிஷம்' என்று சான்று தருகிறார் சி.வி. 

   சி.வி.  தீட்டிய மலையகத் தலைவர்களின் சித்திரத்தில் வந்து  சேர்ந்தவர்களில் இன்றும் எம்மிடையே வாழும் சீலராகத் தனித்துவம் பெறுகிறார்  பி.தேவராஜ் . 

   மலையக அரசியலைத் தொழிற்சங்க அரசியலிலிருந்து பிரித்துப்பார்க்க  முடியாது.மலையக சமுதாய உருவாக்கத்தில் தொழிற்சங்கங்களே அந்த மக்களின் காவல்  அரணாகத் திகழ் ந்திருக்கிறது. அவர்களின் தொழிற்களத்திலே நின்று அந்த  மக்களுடன் போராடியிருக்கிறது. தொழிற்சங்கங்களை அமைப்பதற்கான  போராட்டத்திலே இரண்டு இளஞ்சிங்கங்கள் தூக்குக்கயிறை முத்தமிட்டுள்ளன.  மலையக மக்களின் மீட்சிக்குக் குரல் கொடுத்த இப்பெருந்தகைகள் எல்லாரும் ஏதோ  ஒரு வகையில் தொழிலாளர் களோடும் தொழிற்சங்கங்களோடும்  அந்தரங்க சுத்தியோடு  உழைத்திருக்கிறார்கள். எளிமையோடு அந்த மக்களுடன்  வாழ்ந்திருக்கிறார்கள்.சி.வி. வடித்திருக்கும் அந்தப் பெரியார்களின்  வாழ்க்கை கனம் பண்ண வேண்டிய பெருமக்களின் வாழ்வாக நம் கண்முன்னே  விரிகிறது.   காந்தி, அம்பேத்கார், ராஜாஜி, பண்டிதர் நேரு, பெரியார் ஈ.வே .ரா,  ராஜேந்திர பிரசாத், பாலகங்காதர திலகர், பிபின் சந்திரபால், கமலாதேவி  சட்டோபாத்யாய, டாக்டர். ருக்மணி இலட்சுமிபதி, ஹரீந்திரநாத்  சட்டோபாத்யாய,  முஹம்மது அலி ஜின்னா, கஸ்தூரிரங்க ஐயங்கார், கல்கி, நீதியரசர்  சதாசிவ ஐயர், சி.எப்.அன்றூஸ்  போன்ற இந்திய சுதந்திரப் போராட்ட  வீரர்களுடனும் பெரியார்களுடனும் உறவு பூண்டிருந்த   பேராளுமைகளைக் கொண்ட அரசியல் தலைமை மலையகத்தில் வேரூன்றியிருந்தது என்பதை சி.வி.யின்  இந்த எழுத்துகள் இனங்காட்டுகின்றன. 

   சர்.பொன் அருணாசலம், தியாகராஜன் செட்டியார், சத்தியவாகீஸ்வர ஐயர்,  சர்.ஜேம்ஸ் பீரிஸ்,லாரி முத்துகிருஷ்ணா, டாக்டர் சரவணமுத்து போன்ற  பெருந்தகைகளுடனும் சேர்ந்து உழைத்த மலையக அரசியலின் முற்போக்குப் பாங்கினை  இந்நூல் வலியுறுத்துகிறது. அந்த அரசியலின்  பன்னிற மணிக்கலவை   செழுமையானது. அந்த அரசியலில் ஆழ்ந்தவர்கள் நேர்மையானவர்களாக   இருந்திருக்கிறார்கள். ஏழை எளிய மக்களின் சுபீட்சமே தங்கள் பணியின் இலக்காக  வரித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கொண்டிருந்த  தொடர்புப்பின்னல்  ஆச்சரியமூட்டுகிறது. பெருமைப்படத்தக்க அரசியல் பாரம்பரியத்தை  அவர்கள் மலையகத்திற்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள்.  அத்தகைய செழுமையான அரசியல் பாரம்பரியத்தை எழுத்திலே வடித்த மலையகத்தின்  பெருங் கவிஞர் சி.வி. வேலுப்பிள்ளைக்கு மலையகம்  நன்றிக்கடன் பட்டிருக்கிறது.இத்தகைய ஒரு அற்புதமான பதிவை அவரைப்போன்ற ஒருவரே  சாதித்திருக்கமுடியும்.  ஒவ்வொரு கட்டுரையிலும் ஒவ்வொரு வசனத்திலும் பொருள் பொதிந்த கருத்துகளை,  தகவல்களை, புதிய செய்திகளை அவர் வாரி இறைத்துச் செல்கிறார்.  இந்தக்கட்டுரைகள் 1958/1959இல் எழுதப்பட்டு, இன்று 63ஆண்டுகளுக்குப்பின்  நூல் வடிவம் பெறுகிறது என்பது, நமது அரும்பெரும் இலக்கியப் பொக்கிஷங்களைப்  பேணுவதில் நாம் காட்டும் அசிரத்தையைக் காட்டுகிறது. மலையக மக்களின்  அரசியல் தலைவர்கள் குறித்த கட்டுரைத் தொடரை எழுத சி.வி.யை ஊக்குவித்து, தினகரனில் அதனைத் தொடராக வெளியிட்டு ஒரு சமூகத்தின் பாரிய  தேவையை நிறைவு செய்த பேராசிரியர் க.கைலாசபதி க்கு நாம் நன்றி  கூறுதல் தகும்.  

   ஜோன் மலையகத் தலைவர்களில் புத்தம் புதிய சிந்தனைகளால் ஒளியூட்டிய  முன்னோடியாகத் தெரிகிறார்.

சி.வி. எழுதியிருக்கும் மலையக அரசியல்  தலைவர்களின் வரலாறு மலையகத் தொழிலாளர்களின் தொழிற்சங்க வரலாற்றின் பல  கட்டங்களுக்கூடாக பயணிக்கிறது. சுதந்திரத்திற்கு முற்பட்டகாலத்தில்  ஜோர்ஜ் மோத்தா, பெரி சுந்தரம், ஐ.எக்ஸ்.பெரேரா போன்ற ஆளுமைகளின்  தலைமைப்பண்பு பற்றி துல்லியமான மதிப்பீட்டைத் தருகிறார் சி.வி. 

1948ஆம் ஆண்டு மலையகத் தமிழர்களின்பிரஜாவுரிமையை மறுக்கும் சட்டம்  கொண்டுவரப்பட்டபோது, சுதந்திர இலங்கையில் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறும்  சட்டவாக்கத்திற்கெதிராக முதல் அரசியல் போராட்டம் மலையகத்திலிருந்துதான்  எழுந்தது.  1948ஆம் வருடத்திலிருந்து தொடர்ச்சியாக வந்த மூன்று ஆண்டுகள் சமீப காலச் சரித்திரத்திலே காரிருள் சூழ்ந்த காலம் என்கிறார் சி.வி.     

தொழிற்சங்கங்களில் உழைத்த தலைவர்களை சி.வி.மிக உயர்ந்த இடத்தில்  வைத்துப்போற்றினார். இறுதிவரை  தொழிற்சங்கவாதியாகவே  வாழ்ந்து மறைந்த  சி.வி.அவர்களுக்கே அந்த போராட்ட அணியின் பெருமையும் வலிமையையும்  தெரிந்திருக்கிறது.  

மலையக அரசியல் வரலாற்றை அறிய விரும்பும் யாரும் சி.வி.எழுதிய இந்த வரலாற்றுப் புதையலைக் கடந்து போக முடியாது. 

இன்றைய  மலையக அரசியல் தலைவர்கள் பற்றிய மதிப்பீட்டைத் தருவதற்கு ஒரு சி.வி. இல்லை என்ற ஏக்கம் இந்த நூலை வாசித்து முடிக்கையில் எழவே  செய்கிறது.          

மு.நித்தியானந்தன்

Comments