திண்டாடித் தவிக்கும் நுவரெலியா மரக்கறி விவசாயிகள் | தினகரன் வாரமஞ்சரி

திண்டாடித் தவிக்கும் நுவரெலியா மரக்கறி விவசாயிகள்

நுவரெலியா மாவட்டத்தின் அனைத்து விவசாயிகளும் மரக்கறி வியாபாரிகளும் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். இந்நிலை தொடருமானால் மிக விரைவில் விவசாயிகள் தங்களுடைய தொழிலை கைவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விடலாம்.  

டீசல் தட்டுப்பாடு காரணமாக மரக்கறிகளை வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலை ஒருபுறமென்றால் மறுபுறத்தில் இரசாயன உரவகைகள் இல்லாமை காரணமாக தங்களுடைய உற்பத்திகளை சரியான முறையில் மேற்கொள்ள முடியாத நிலைமை. 

வழமையான நாட்களில் நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் இருந்து ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் கிலோ மரக்கறிகள் வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. ஆனால் தற்பொழுது அது 75000கிலோவாக குறைவடைந்துள்ளது.  

விவசாயிகள் பாதிப்பு  

நுவரெலியா மாவட்டத்தை பொறுத்தளவில் அதிகமானோர் விவசாயத்்தை நம்பியே வாழ்கிறார்கள். நுவரெலியா மாவட்டத்தில் விவசாயத்தின் மூலமாக பலரும் தமது வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். 

இரசாயன பசளை தடைவிதிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை விவசாயம் என்பது ஒரு பெரும் போராட்டமாகவே மாறிவிட்டது. விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகள் மற்றும் ஏனைய பொருட்கள் அனைத்தும் பாரிய அளவில் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விவசாய உற்பத்தி செலவினம் பல மடங்காக அதிகரித்துள்ளது.  

சில விவசாயிகள் விவசாயத்தை தொடர முடியாமல் தவித்து வருகின்றனர். ஒருசிலர் தங்களுடைய விவசாயத்தை முழுமையாக கைவிட்டுள்ளனர். இதன் காரணமாக பலருக்கும் தொழில் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. விவசாயத்தை நம்பியே வாழ்ந்தவர் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது. தற்பொழுது விவசாயத்திற்கான உற்பத்திச் செலவினம் எல்லா வழிகளிலும் அதிகரித்துள்ளமை இதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கின்றது. 

3000ரூபாவிற்கு கொள்வனவு செய்த இரசாயன உரங்கள் தற்பொழுது 30000ஆயிரம் ரூபா வரை அதிகரித்துள்ளது. அது மட்டுமல்லாமல் கிருமி நாசினிகள், களை கொல்லிகள், தொழிலாளர்களுக்கு வழங்குகின்ற நாளாந்த சம்பளம் இவை அனைத்தும் அதிகரித்துள்ளமை காரணமாக உற்பத்தி செலவினம் பல மடங்காக அதிகரித்துள்ளது.   அதே நேரத்தில் உற்பத்தி செய்கின்ற மரக்கறிகளை டீசல் தட்டுப்பாடு காரணமாக வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்ல முடியாத நிலைமை தொடர்கிறது.  

வியாபாரிகள் பாதிப்பு 

நுவரெலியாவில் இருந்து கொழும்பு, கேகாலை, களுத்துறை, நீர்கொழும்பு, தம்புள்ளை, பேருவளை, இரத்மலானை, ஏறாவுூர் கல்முனை உட்பட அனைத்து பகுதிகளுக்கும் மரக்கறி கொண்டு செல்லப்பட்டது. டீசல் இல்லாமை காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து வந்து செல்ல முடியாத நிலைமை. 

அத்துடன் இன்றைய நிலையில் மரக்கறிகளின் அதிகரித்த விலை காரணமாக வியாபாரிகள் தங்களுடைய முதலீட்டை அதிகரிக்க வேண்டியுள்ளது. முதலீட்டை அதிகரித்தாலும் அதற்கான இலாபத்தை பெற்றுக்கொள்வதில் நிச்சயமில்லை என்ற நிலை வர்த்தகர்களை பயமுறுத்துகிறது.  

இன்றைய நிலையில் மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன. லீக்ஸ் ஒரு கிலோ 140ரூபா, கரட் 270, பீட் 250, கோவா 140ரூபா, உருளைக்கிழங்கு 300ரூபா, தக்காளி 800ரூபா என்ற விலைக்கு விற்பனையாகிறது. இந்த அதிகரித்த விலை காரணமாக மரக்கறிகளின் கொள்வனவை பாவனையார்கள் வெகுவாக குறைத்திருக்கின்றார்கள். 

எனவே மரக்கறிகளின் விற்பனையும் வெகுவாக குறைவடைந்துள்ளது. இதன் காரணமாக சிறு வியாபாரிகள் இந்த தொழிலை செய்ய முடியாத நிலை. ஒரு சிறிய வியாபாரி கடந்த காலங்களில் 50ஆயிரம் ரூபாவை முதலீடு செய்திருந்தால் தற்பொழுது இரண்டு இலட்சம் ரூபா தேவைப்படுகின்றது. ஆனால் அந்தளவிற்கு இலாபத்தை பெற்றுக்கொள்வதில் உத்தரவாதமில்லை.  

இதன் காரணமாக பல சிறிய வியாபாரிகள் மரக்கறி விற்பனையில் இருந்து ஒதுங்கியுள்ளனர். அவர்களுடைய குடும்பங்களின் வருமானம் கேள்விக்குறியாகியுள்ளது. 

அதேபோல போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்ட லொறிகள் டீசல் பற்றாக்குறை காரணமாக தங்களுடைய சேவைகளை இடைநிறுத்தியுள்ளன. இதன் காரணமாக சாரதி தொழிலை நம்பியிருந்தவர்கள் தொழில் இழந்துள்ளனர்.  

இந்த நிலைமை தொடருமாக இருந்தால் நுவரெலியா மாவட்டத்தில் பாரிய பொருளாதார பின்னடைவை சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்படும். அதே நேரத்தில் நாடு புூராகவும் இயங்குகின்ற பொருளாதார மத்திய நிலையங்களும் ஏறக்குறைய மூடப்பட்ட நிலையில் உள்ளன. அங்கு தொழில் செய்தவர்கள் அனைவரும் பெரும்பாதிப்பை சந்தித்துள்ளனர். 

மேலும் சுற்றுலாத்துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்பும் இந்த மரக்கறி வியாபாரம் பாதிப்படைவதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அதற்கு காரணம் பல உல்லாச விடுதிகள் சுற்றுலா பிரயாணிகள் இல்லாமையால் அவை மூடப்பட்டுள்ளன. அங்கு தொழில் புரிந்தவர்களின் நிலைமையும் பாதிப்படைந்துள்ளது. 

எனவே மிகவிரைவாக விவசாயிகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் எதிர்காலம் இன்னும் மோசமாக அமையலாம். தற்பொழுது ஏற்பட்டு பொருளாதார பிரச்சினை காரணமாக இந்த நிலைமை இன்னும் மோசமடைந்தால் பலரும் உண்ண உனவின்றி மிகவும் மேசமான ஒரு நிலைமை ஏற்படலாம். இதனை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு தேவையான இரசாயன உரவகைகளையும் கிருமி நாசினி உட்பட ஏனைய தேவைகளையும் புூர்த்தி செய்ய முடியுமாக இருந்தால் நிச்சயமாக உணவு பற்றாக்குறையை நிவர்த்தி செய்து கொள்ள முடியும். 

அனைத்து வளங்களையும் நாம் கையில் வைத்துக் கொண்டும் கடந்த காலங்களில் பல தேவையில்லாத மரக்கறிகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தோம். அதனை அதிகரிப்பதற்கு எந்தவிதமான நடவடிக்கையையும் யாரும் மேற்கொள்ளவில்லை.  

நுவரெலியா மாவட்டத்தை பொறுத்த அளவில் இங்கே அதிகமானவர்கள் விவசாயத்தையும் தேயிலையையுமே நம்பியிருப்பவர்கள்.

தேயிலையும் தற்பொழுது பாதிப்பை சந்தித்து வருகின்றது. இது தொடர்பாக விரைவாக தீர்மானங்களை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை. 

மேலும் விவசாயத் திணைக்களத்து அலுவலகங்களிலும் சரியான தகவல்கள், புள்ளிவிபரங்கள் இல்லை. அவர்களிடம் எந்த தகவலை கேட்டாலும் அதனை புள்ளிவிபரங்களுடன் பெற்றுக்கொள்ள முடியாது. இதற்குக் காரணம். அவர்களின் மந்த நிலையிலான செயற்பாடுகளே.  விவசாய திணைக்களம் ஒரு திறமையான நிறுவனமாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். அப்படி செய்தால் மாத்திரமே இந்த விவசாயத்தில் காணப்படும் பின்னடைவை தடுத்து நிறுத்த முடியும். 

நுவரெலிய விவசாயிகள் மிகவும் திறமையானவர்கள். அவர்களை அழைத்து கலந்துரையாடினாலே அவர்களிடம் இருந்து பல தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும். அதன் மூலமாக நல்ல பல திட்டங்களை செயற்படுத்த முடியும். இதனை கடந்த காலங்களில் திட்டமிட்டு செயற்படுத்தியிருந்தால் இன்றைய நிலைமை ஏற்பட்டிருக்காது.   

நூரளை தியாகு

Comments