இந்திய வம்சாவளி மக்களின் நலனுக்காக தன்னலம் மறந்த கே.ஜி.எஸ். நாயர் | தினகரன் வாரமஞ்சரி

இந்திய வம்சாவளி மக்களின் நலனுக்காக தன்னலம் மறந்த கே.ஜி.எஸ். நாயர்

இலங்கை - இந்திய காங்கிரஸ் என்னும் பாரிய இயக்கம் இந்திய வம்சாவளி மக்களின் நலன்கருதி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என பெயர் சூட்டப்பட்டு நாளடைவில் பிற்போக்குவாதமும் முதலாளித்துவத்தைப் பாதுகாக்கும் செயற்பாடுகளும் தலைதூக்கியமையால் காங்கிரஸ் இரண்டாக பிளவுண்டு ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் என்னும் முற்போக்கு தொழிற்சங்கம் உதயமாகியது. அதன் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார் அமரர் கே.ஜி.எஸ். நாயர். 

1939ம் ஆண்டு ஜவஹர்லால் நேருவின் வருகையுடன் இங்கு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை - இந்தியன் காங்கிரஸ் மலையக பெருந்தோட்ட மக்களின் உரிமைகளுக்காக பிரிட்டிஷ் கம்பனிகளுடன் போராடியதோடு பாராளுமன்ற தேர்தலிலும் பங்குகொண்டு நுவரெலியா, கண்டி, பதுளை மாவட்டங்களில் உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் சக்தியைக் கொண்டிருந்தது.  

வெற்றியீட்டிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொழிலாளர் வர்க்கத்திற்காக குரல்கொடுத்த இடதுசாரிகளை ஆதரித்தமை காரணமாக இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமையைப் பறித்து பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை சூறையாடியது அன்றைய அரசு.  இந்நாட்டில் வாழும் இந்திய வம்சாவளி மக்கள் நாடற்றவர்களாக்கப்பட்டபோது இலங்கை பாராளுமன்றத்துக்கு முன்பாக மாபெரும் சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்தி காலிமுகத்திடலை போராட்ட புூமியாக புதிய பெயர் சூட்டியது காங்கிரஸ். இம் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்து நடாத்தியவர் அமரர் கே.ஜி.எஸ். நாயராகும்.  அன்றைய அரசு இச்சாத்வீக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தலைவர்களாகிய செளமியமூர்த்தி தொண்டமான், அப்துல் அஸீஸ், கே. இராஜலிங்கம் உட்பட பலரை பலவந்தமாகக் கடத்தி தொலைதூரங்களில் கொண்டுபோய் வீசியெறிந்தபோது துணிவுடன் அவர்களைப் பின்தொடர்ந்து மீண்டும் அவர்களை போராட்ட புூமியில் இணைத்தவர்கள் நாயரும் அவரது நண்பர் வி. பழனிச்சாமிப் பிள்ளையுமாகும். 

பெருந்தோட்ட தமிழ் மக்களை வெளியேற்றிவிட்டு சிங்கள கிராமவாசிகளை அங்கு குடியேற்றும் நேஸ்மியர் குடியேற்றத்திட்டம், நாகஸ்தன்னை தோட்டத்தின் பழம்பாசி பிரிவிலிருந்து மக்களை அகற்றிவிட்டு ‘சீபோத் குடியேற்றத்திட்டம்’ என திட்டங்களை டி.எஸ். சேனநாயகா அரசு மேற்கொண்டபோது வெடித்தது மாபெரும் உருளவள்ளி போராட்டம். கே.ஜி.எஸ்.நாயரால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் இதுவாகும். 

அல்கொல்ல தோட்ட பெண் தொழிலாளர்கள் கைகளில் வளையல் அணியக் கூடாதென விதிக்கப்பட்ட தடைக்கெதிராக கிளர்ந்த வளையல் போராட்டமும் நாயரின் தலைமையிலேயே நடைபெற்றது. தொண்டமான், அஸீஸ் ஆகியோருக்கு போராட்டக் களம் அமைத்துக் கொடுத்த தளபதியாக நாயர் விளங்கினார். இ.தொ.கா.வில் கூட்டுக் காரியதரிசியாக பதவி வகித்து பெரும் பணியாற்றிய அவர் ஜனநாயக தொழிலாளர் காங்கிரசின் பொதுச் செயலாளராக ஆற்றிய பணிகள் அளப்பரியன.  தோட்டப் பாடசாலைகளை அரசு பொறுப்பேற்க வேண்டுமென்றும் முதல் குரல் ஜனநாயக தொழிலாளர் காங்கிரசின் மகாநாட்டிலேயே எழுப்பப்பட்டது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம சம்பளம், பிரசவ சகாய நிதி, ஊழியர் சேமலாப நிதி, வருடாந்த போனஸ் என பெருந்தோட்ட தொழிலாளர்களின் நலன்கருதி மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் நாயரினதும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரசினதும் எழுகுரல்களேயாகும். 

பொதுவுடமைக் கொள்கையை தன்னகத்தே கொண்ட நாயர், கேரள மண்ணிலிருந்து தையற் கலைஞராக இங்கு வந்து எட்டியாந்தோட்டையில் தொழில்புரிந்தார். பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கொத்தடிமை வாழ்வுகண்டு மனம்புளுங்கி தொழிற்சங்கவாதியாக மாறியவர் இவர். மாதாந்த இருபத்தைந்து சத சந்தாப்பணத்தை வசூலிப்பதற்காக இரவு பகலாக மலையேறி கால்நடையாக பெருந்தோட்டங்களில் வலம்வந்த அவர் தனது குடும்பம் வறுமையில் வாடுவதையும் சித்திக்காதவராக தொழிலாளர் நலனுக்காக அப்பழுக்கற்ற பணியை மேற்கொண்டார். 

அனுபவத்தின் காரணமாக ஆங்கில மொழிப்புலமை பெற்ற நாயருடன் தோட்ட முதலாளிமார் வர்க்கம் வாதாட முடியாமல் திணறிய சம்பவங்கள் அனந்தம். 

களனி நதிப்பள்ளத்தாக்கில் பரந்து விரிந்த களனிவெளி மாவட்டத்தின் தலைவராக விளங்கிய நாயரும் சக தொழிற்சங்க ஊழியர்களும் வறுமையில் வாடா வண்ணம் அவர்களைப் பாதுகாத்தவர் நாயரின் நண்பர் அமரர் வி. பழனிச்சாமிப்பிள்ளையாகும்.

நாயர் நடாத்திய வளையல் போராட்டத்தின்போது வெள்ளைக்கார தோட்டத்துரையின் களுத்தைப் பிடித்து லயத்துக் கோடிச்சுவரில் சாத்திய துணிவுமிக்க பழனிச்சாமிப்பிள்ளையையும் நாயருடன் இணைந்தே போற்றலாம். 

இந்த இரு தளபதிகளும் நடாத்திய காலி முகத்திடல் சத்தியாக்கிரக போராட்டம் காரணமாகவே அமரர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தமிழ் காங்கிரசை விட்டு விலகி அகில இலங்கை தமிழரசுக் கட்சியை தோற்றுவித்தார்.

நாயரின் மறைவின்போது இரங்கலுரை நிகழ்த்திய தந்தை செல்வா; 'நாயரின் போராட்டமே என்னை புதிய பாதையில் இட்டது!' என்றார். 

தனக்காக வாழாது தொழிலாளர் வர்க்கத்துக்காக வாழ்ந்து மடிந்த அமரர் கே.ஜி.எஸ். நாயர் என்னும் கொட்டம்பள்ளி கோவிந்தன் செல்லப்பா நாயரை மனுதாரராகக் கொண்ட குடியுரிமை வழக்கு கொட்டம்பிள்ளை வழக்கு என இந்நாட்டு வரலாற்றில் இடம்பெற்றுவிட்டது.   

சி.கே. முருகேசு

Comments